சமையல்! சமையல்! (22/01/2020)

வாழைப்பழ பூரி,  ஸ்வீட்கார்ன் பாலக் கட்லெட்,  மசாலா பர்கர்,  சப்பாத்தி நூடுல்ஸ் 

வாழைப்பழ பூரி

தேவையானவை:
 வாழைப் பழம் - 2
 ஏலக்காய் பொடி - அரை தேக்கரண்டி
 சர்க்கரை - 2 தேக்கரண்டி
 தயிர் - ஒரு தேக்கரண்டி
 கோதுமை மாவு - ஒன்றரை கிண்ணம்
 சீரகம் - அரை தேக்கரண்டி
 சமையல் சோடா - கால் தேக்கரண்டி
 எண்ணெய் - தேவைக்கேற்ப
 செய்முறை: மிக்ஸி ஜாரில் வாழைப்பழத் துண்டுகள், ஏலக்காய்ப் பொடி, சர்க்கரை, தயிர் சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ளவும். கிண்ணத்தில் கோதுமை மாவு, சீரகம் சேர்த்து கலக்கவும். பிறகு, வாழைப்பழ கலவையை அத்துடன் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்திற்கு நன்றாகப் பிசைந்துக் கொள்ளவும். இதனை அரை மணி நேரம் ஊறவிட்டுப் பிறகு, சிறிய உருண்டைகளாக எடுத்துக் கொள்ளவும். இந்த உருண்டைகளை பூரி பதத்திற்கு விரித்துக் கொள்ளவும். வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும், பூரிகளை ஒவ்வொன்றாகவிட்டு பொரித்து எடுக்கவும். சுவையான வாழைப்பழ பூரி தயார்.
 
 ஸ்வீட்கார்ன் பாலக் கட்லெட்

தேவையானவை:
 பாலக் கீரை - ஒரு கட்டு
 வேகவைத்த ஸ்வீட் கார்ன் - ஒரு கிண்ணம்
 உருளைக்கிழங்கு - 2
 பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் - 1
 பொடியாக நறுக்கிய இஞ்சி - ஒரு துண்டு
 மிளகாய்த்தூள் - ஒரு தேக்கரண்டி
 மல்லித்தூள் - 1 தேக்கரண்டி
 சீரகத்தூள் - 1 தேக்கரண்டி
 சாட் மசாலா - 2 தேக்கரண்டி
 பிரெட் க்ரம்ப்ஸ் - 5 தேக்கரண்டி
 எண்ணெய் - தேவைக்கேற்ப
 உப்பு - தேவைக்கேற்ப
 செய்முறை: வாணலியில் சிறிது தண்ணீர்விட்டு பாலக்கீரையை வேக வைத்து எடுத்து மீண்டும் தண்ணீரில் அலசி எடுத்து துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். பின்னர், வேக வைத்த சோளத்தை மிக்ஸி ஜாரில் போட்டு கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும். அத்துடன், பாலக்கீரையையும் சேர்த்து அரைத்துக் கொள்ளவும். பின்னர், ஒரு கிண்ணத்தில் மசித்த உருளைக்கிழங்கு, பச்சை மிளகாய், இஞ்சி, மிளகாய்த்தூள், மல்லித்தூள், சீரகத்தூள், சாட் மசாலா, உப்பு, அரைத்து வைத்த விழுது சேர்த்து நன்றாக பிசைந்து கொள்ளவும். பின்னர், பிரெட் க்ரம்ஸ் சேர்த்து பிசைந்து பிரிட்ஜில் சுமார் 20 நிமிடங்கள் வைக்கவும். பிறகு, சிறிய உருண்டைகளாக எடுத்து வடைபோல் தட்டிக் கொண்டு மீண்டும் பிரிட்ஜில் 10 நிமிடங்கள் வைக்கவும். பிறகு, வாணலியில் எண்ணெய்விட்டு சூடானதும், தட்டி வைத்த கட்லட்டை பொரித்து எடுக்கவும். சுவையான ஸ்வீட் கார்ன் பாலக் கட்லெட் தயார்.
 
 மசாலா பர்கர்

தேவையானவை:
 பர்கர் பன் - 2
 வெங்காயம் - 1
 குடை மிளகாய் - 1
 தக்காளி - 2
 பன்னீர் - 250 கிராம்
 சீஸ் - 1 கிண்ணம்
 வெண்ணெய் - சிறிதளவு
 பூண்டு - கால் கிண்ணம்
 இஞ்சி - கால் கிண்ணம்
 சாட் மசாலா- தேவைக்கேற்ப
 கொத்துமல்லித்தழை - சிறிது
 உப்பு- தேவைக்கேற்ப
 செய்முறை: வாணலியியை அடுப்பில் வைத்து வெண்ணெய்யைச் சேர்த்து உருக்கியதும், பொடியாக நறுக்கிய வெங்காயம், இஞ்சி,பூண்டு விழுது சேர்த்து வதக்கவும். பிறகு, பொடியாக நறுக்கிய குடை மிளகாய், தக்காளி, சாட் மசாலா, உப்பு சேர்த்து கலந்து பச்சை வாசனை போகும்வரை வதக்கவும். தொடர்ந்து, பன்னீர் துண்டுகள், சீஸ் துருவல், உப்பு, கொத்துமல்லித் தழை சேர்த்து கிளறி கிரேவி பதம் வந்ததும் இறக்கவும். தற்போது பன்னை எடுத்து இரண்டாக வெட்டி மசாலாவை அதில் வைத்து மூடவும். மசாலா பர்கர் ரெடி.
 
 சப்பாத்தி நூடுல்ஸ்

தேவையானவை:
 சப்பாத்தி - 3
 சோயா சாஸ் - ஒரு தேக்கரண்டி
 தக்காளி சாஸ் - ஒரு தேக்கரண்டி
 நறுக்கிய குடை மிளகாய் - ஒரு கிண்ணம்
 பெரிய வெங்காயம் - ஒன்று
 இஞ்சி பூண்டு விழுது - ஒரு தேக்கரண்டி
 செஷ்வான் மசால் - 5 தேக்கரண்டி
 உப்பு - தேவைக்கேற்ப
 செய்முறை: முதலில் ஒரு சப்பாத்தியை எடுத்து உருட்டி சிறிய துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும். தற்போது சப்பாத்தி காண்பதற்கு நூடுல்ஸ் போன்று இருக்கும். வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய்விட்டு சூடானதும் நீளவாக்கில் நறுக்கிய வெங்காயம் சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும். பிறகு, இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். பொடியாக நறுக்கிய குடை மிளகாய், செஷ்வான் மசால், உப்பு சேர்த்து நன்றாக வதக்கவும்.
 பின்னர், தக்காளி சாஸ், சோயா சாஸ் சேர்த்து கிளறி வேகவிடவும். குடைமிளகாய் வெந்ததும் நறுக்கிய சப்பாத்தி சேர்த்து கிளறவும். சுவையான சப்பாத்தி நூடுல்ஸ் தயார்.
 - கலைச்செல்வி
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com