தாயான பிறகு தங்கம் வென்றவர்!

2017-ஆம் ஆண்டு தன்னுடைய 33-ஆவது வயதில் குடும்பத்தலைவியான லிபாஸ் சாதிக், பத்தாண்டுகளுக்கு முன் பயிற்சிப் பெற்று திருமணமான காரணத்தால் கைவிட்ட பவர் லிப்ட்டிங் பயிற்சியை
தாயான பிறகு தங்கம் வென்றவர்!

2017-ஆம் ஆண்டு தன்னுடைய 33-ஆவது வயதில் குடும்பத்தலைவியான லிபாஸ் சாதிக், பத்தாண்டுகளுக்கு முன் பயிற்சிப் பெற்று திருமணமான காரணத்தால் கைவிட்ட பவர் லிப்ட்டிங் பயிற்சியை மீண்டும் தொடங்குவதென தீர்மானித்தார். ஆனால் அவர் நினைத்ததை போல் அவ்வளவு சுலபமாக பயிற்சி பெற முடியவில்லை. ஆசியன் பவர்லிப்ட்டிங் சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்க வேண்டுமென்பதுதான் லிபாஸின் குறிக்கோளாக இருந்தது.
 பெரும்பாலான விளையாட்டு வீரர்கள், இவரது வயதில் போட்டியில் பங்கேற்பதை தவிர்த்து விடுவார்கள். ஆனால் லிபாஸ் மன உறுதியுடன் ஆசியன் சாம்பியன்ஷிப் போட்டியில் கலந்து கொள்ள வேண்டுமென்பதற்காக, தினமும் இரண்டரை மணிநேரம் பயிற்சி பெறுவதற்கு கத்தார் நாட்டில் பிரபலமான பவர்லிப்ட்டர் பயிற்சியாளர் ஒருவரை அமர்த்திக் கொண்டார். கொச்சியில் உள்ள மண்டல விளையாட்டு மையத்தில் பயிற்சி பெறத் தொடங்கினார். இவரது முயற்சி வீண் போகவில்லை. அந்த ஆண்டு மாவட்டம் மற்றும் மாநில அளவில் நடந்த பவர்லிப்ட்டிங் போட்டிகளில் வெற்றிப் பெற்ற லிபாஸ், தேசிய அளவில் பங்கேற்கும் தகுதி பெற்றார்.
 பின்னர் கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் கஜகஸ்த்தான் நாட்டில் நடந்த ஆசியன் பவர்லிப்ட்டிங் போட்டியில் இந்தியா சார்பில் சென்ற குழுவில் இடம்பெற்ற லிபாஸ், ஸ்ருவாட் என்ற பிரிவு போட்டியில் பங்கேற்று தங்கம் வென்றுள்ளார். அந்தப் போட்டியில் கலந்து கொண்டவர்களிலேயே திருமணமாகி வெற்றி பெற்ற ஒரே பெண் இவர்தான்.
 பவர்லிப்ட்டிங் போட்டிக்கும், வெயிட்லிப்ட்டிங் போட்டிக்கும் வித்தியாசம் உண்டு. பவர்லிப்ட்டிங் உலக மற்றும் ஆசிய சாம்பியன்ஷிப் போட்டியாக நடத்தப்படுவதாகும். ஒலிம்பிக்ஸ் போட்டிகளில் இது சேர்க்கப்படுவதில்லை. வெயிட் லிப்ட்டிங் மட்டுமே இடம் பெறும். வெயிட் லிப்ட்டிங் போட்டியில் பளு தூக்கும்போது ஒரு காலை முன் வைத்து ஒரு காலை பின் வைத்து பாலன்ஸ் செய்து பளுவை தூக்கி மார்பின் மீது வைத்து பின்னர் தோள்களுக்கு மேலே தூக்குவார்கள். பவர் லிப்ட்டிங் போட்டிகளில் ஒரே மூச்சில் எடையை தூக்கி தோள்களுக்கு மேலே தாங்கி பிடிக்க வேண்டும். மேலும் இந்தப் போட்டியில் ஸ்குவாட், டெட்லிப்ட் மற்றும் பெஞ்ச் பிரஸ் என மூன்று பிரிவுகள் உண்டு. அனைத்து பிரிவுகளுக்குமாக சேர்த்து 425 கிலோ எடைவரை தூக்க வேண்டும். ஸ்குவாட் பிரிவில் 155 கிலோ எடையைத் தூக்கிய லிபாஸ் தங்கம் வென்றுள்ளார்.

இரு பெண் குழந்தைகளுக்கு தாயான லிபாஸ், ஏற்கெனவே 220 கிலோ எடையை தூக்கி அனுபவம் பெற்றிருந்தாலும், இந்த முறை 155 கிலோ எடை தூக்கும்போது சற்று தயக்கமாக இருந்ததாம்.
 எனக்குள் எங்கிருந்தோ வந்த சக்தியும், வலிமையும் ஒரே மூச்சில் எடையைத் தூக்க வைத்து தங்கம் பெற வைத்தது என்கிறார். மற்றப் பிரிவில் பங்கேற்றபோது டெட்லிப்ட் பிரிவில் எடையை தூக்கமுடியாமல் கீழேவிழுந்து காயமேற்பட்டதாம். ஏற்கெனவே பெற்ற தங்கம் இவரை சமாதானப்படுத்தியதோடு வலியையும் மறக்கச் செய்துள்ளது.
 "இந்த முயற்சிக்கு உறுதுணையாக இருந்தவர்கள் என்னுடைய கணவர் சாதிக் மற்றும் இருபெண்கள் ஹன்னா பாத்திமா, ரெடாமினால் ஆகியோரே காரணம் விளையாட்டுத்துறையைப் பற்றி என் பெண்களுக்கு அதிகம் தெரியாது என்றாலும், கஜகஸ்தானில் நான் தங்கம் பெற்ற தகவலை அறிந்து துள்ளிகுதித்து நடனமாடி தங்கள் மகிழ்ச்சியைத் தெரிவித்தனர். ஆசியன் பவர்லிப்ட்டிங் போட்டியில் வெற்றி பெற்றதால் , இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் உலக அளவில் நடைபெறவுள்ள போட்டியில் கலந்து கொள்ளும் வாய்ப்பு எனக்கு கிடைத்துள்ளது'' என்கிறார் லிபாஸ்.
 - அ.குமார்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com