பிரமிப்பையும் மலைப்பையும் ஏற்படுத்திய காந்தியம்! சித்ரா பாலசுப்ரமணியம்

சூரியனுக்குக் கீழே இருக்கும் எதைப்பற்றிக் கேட்டாலும் அது குறித்து இவருக்கு சில தகவல்கள் தெரிந்திருக்கும்.
பிரமிப்பையும் மலைப்பையும் ஏற்படுத்திய காந்தியம்! சித்ரா பாலசுப்ரமணியம்

சூரியனுக்குக் கீழே இருக்கும் எதைப்பற்றிக் கேட்டாலும் அது குறித்து இவருக்கு சில தகவல்கள் தெரிந்திருக்கும். தமிழறிந்த பெண்மணி. பேராசிரியராகத் தன் வாழ்வைத் தொடங்கியவர். தொலைக்காட்சியில், வானொலியில் இவரது குரலுக்கும் நிகழ்ச்சிகளுக்கும் கற்றோர் இடையே பெரும் வரவேற்பு உண்டு. காந்தியம் சார்ந்த இவரின் உழைப்பு "காந்தி 150' என்கிற தொலைக்காட்சி தொடர் மூலம் வெளிப்பட்டது.
 சித்ரா பாலசுப்ரமணியத்தைச் சந்திப்போம்:
 உங்களது பின்புலம் பற்றி...
 மிகச் சாதாரண நடுத்தர வர்க்கக் குடும்பத்தில் பிறந்தேன். கல்லூரிப்படிப்பு என்பது கனவு. அதை அடைந்து விட்டது வாழ்க்கை மனோரதம் நிறைவேறிவிட்டது போன்ற மகிழ்ச்சி. ஆனாலும் அடுத்தடுத்து இறைவனின் கருணை முதுகலை படிக்கவும், அதன்பின் ஆராய்ச்சிப் படிப்புக்கும் என்னை இட்டுச் சென்றது. கல்லூரியில் படிக்கும் பொழுது அதற்கான கட்டணம் கட்டுவதே பெற்றோருக்கு நாம் தரும் இன்னல் என்பதான சூழல்தான் இருந்தது. ஆனாலும் சின்ன சின்ன வேலைகளை செய்து பணம் சம்பாதித்து அதிலே படித்தேன். முதுகலை படிப்பில் நல்ல மதிப்பெண்களோடு பல்கலைக்கழகத்தின் முதல் மாணவியாகத் தேர்வாகி இருந்தேன். அதில் கிடைத்த பரிசுப்பணம் அடுத்த மேற்படிப்புக்கு உறுதுணையாக இருந்தது.
 உங்களுக்கு வாசிப்பில் இவ்வளவு ஈடுபாடு வந்தது எப்போது?
 சிறுவயதில் அது இயல்பாகவே அமைந்துவிட்டது. விவரம் தெரிந்த நாளில் இருந்தே கையில் கிடைக்கும் அத்தனை காகிதங்களையும் படித்துவிட்டுத்தான் வைப்பேன். பொட்டலம் கட்டி வரும் பேப்பர்களைக் கூட விட்டு வைத்ததில்லை. விடுமுறை நாள்களில் முதலில் என் தகப்பனார் எனக்கு சில புத்தகங்களை வாங்கித் தந்தார். அவற்றையெல்லாம் மிக வேகமாக ஓரிரு நாட்களில் படித்து முடித்துவிடுவேன். அதன்பின் அவர் அலுவலகம் செல்லும் பொழுது என்னை பொது நூலகத்தில் விட்டுவிட்டு செல்வார். நூலகம் மூடும் வரை அங்குதான் இருப்பேன். நூலகத்தில் இருக்கும் நூல்களைப் பார்க்கும் பொழுது அவை அத்தனையையும் படித்து முடித்து விட வேண்டும் என்ற வேகம் பள்ளி நாட்களிலேயே எனக்கு இருந்தது. வேலை கிடைத்து எம். ஓ. பி வைஷ்ணவா கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றிய பொழுது மாணவர்களோடு உரையாடுவதற்கும் என்னை எப்போதும் அப்டேட் ஆக வைத்துக் கொள்வதற்கும் படித்துக் கொண்டே இருந்தேன். அதுதான் எனக்கு அடையாளமாக பின்னாளில் ஏற்பட்டுவிட்டது.
 தமிழ், ஆங்கிலம், ஹிந்தி, தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளைக் கற்றுக் கொண்டிருக்கிறேன். இன்னும் புதிய மொழிகளை கற்கும் முயற்சியில் இருக்கிறேன். நடனம் முறையாக கற்றுக் கொண்டேன். ஆனால் எதிலுமே உச்சம் தொடும் அளவுக்கு பொருளாதாரப் பின்னணி ஒத்துழைக்கவில்லை. நாடகக் கலையிலும் ஆர்வம் இருந்தது. பல்கலைக்கழகத்தில் படித்துக் கொண்டிருந்த பொழுது கூத்துக் கலையில் தேர்ந்த ஆசிரியர்களிடம் பெற்ற பயிற்சியும் உண்டு. அதுகுறித்த நிகழ்ச்சிகளிலும் நாடகங்களிலும் பங்கெடுத்திருக்கிறேன். நாடக அரங்கில் எதையேனும் சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் இருக்கிறது.
 வாசிப்பு இன்றைய இளைஞர்களிடையே எப்படி இருப்பதாக நினைக்கிறீர்கள் ?
 வீட்டில் பெரியவர்களிடம் படிக்கும் பழக்கம் இருந்தால் பிள்ளைகளுக்கு தானாகவே அந்தப் பழக்கம் வந்துவிடும். கல்லூரிகளிலும் பள்ளிக்கூடங்களிலும் ஆசிரியர்கள் எப்படி அமைகிறார்கள் என்பதைப் பொருத்து வாசிப்புப் பழக்கம் ஏற்படும். ஆசிரியர்கள் மாணவர்கள் மனதை எளிதில் தொட்டு விடக்கூடிய ஆற்றலும் வாய்ப்பும் உள்ளவர்கள். புத்தகத்தைப் பற்றி ஆசிரியர் பேசும் பொழுது அது மாணவனை கிளர்ந்தெழச் செய்யும். அவனுக்குள்ளும் ஓர் உந்துதலை அது ஏற்படுத்தும். புத்தகத்தை ஆர்வத்தோடு ஒரு முறை கையில் எடுத்து விட்டால் அந்த மாணவர்கள் அதன்பிறகு வாசிப்புப் பழக்கத்துக்குள் வந்துவிடுகிறார்கள். புத்தகங்களை நோக்கி அவர்களை மடைமாற்ற வேண்டிய பொறுப்பும் ஆசிரியர்களிடம் இருப்பதாகவே நான் நினைக்கிறேன்.
 சமூக வலைதளங்களில் இலக்கியமும் இளைஞர்களும் எப்படி இருக்கிறார்கள்?
 சமூக வலைத்தளம் இருபுறமும் கூரான கத்திக்கு சமம். அங்கே பல்வகைப்பட்ட மனிதர்களையும் பார்க்கிறோம். ஆனால் தகவல்களைப் பெறுவதற்கு மிகச் சிறந்த வழியாக சமூக வலைதளம் இருக்கிறது. ஏதேனும் ஒரு புத்தகத்தைப் பற்றி நாம் தகவல்களை பெற விரும்பினால் அதுகுறித்த தகவல்களைப் பலர் நமக்கு தெரிவிக்க முன்வருகிறார்கள். இலக்கியம் சார்ந்தும் சமூகம் சார்ந்தும் பல அரிய தகவல்களை பெறுவதற்கு சமூகவலைதளம் உதவுகிறது. அவ்வளவு தகவல்களோடு இளைஞர்கள் இருக்கிறார்கள் எந்த ஒரு கருத்தாக்கம் பற்றியும் தெளிவான தரவுகளோடு பதிவிடக் கூடிய இளைஞர்கள் அதிக அளவில் இருக்கிறார்கள் காந்தியம் சார்ந்த என்னுடைய ஆராய்ச்சியிலும் கூட இதனை நான் உணர்ந்திருக்கிறேன்.
 இலக்கிய மேடைகளுக்கு எப்படி வந்தீர்கள்?
 ஒரு தனியார் ரேடியோவில் தொடர்ந்து இலக்கிய நூல்கள் பற்றிய நிகழ்ச்சி. ஒவ்வொரு வாரமும் ஒரு புத்தகத்தை எடுத்துக்கொண்டு அதற்கான திறனாய்வை செய்வதுதான் இந்த நிகழ்ச்சியின் நோக்கம். இந்த முயற்சிதான் இலக்கிய உலகில் நான் விரும்பிய அடையாளத்தைத் தந்தது. இந்த நிகழ்ச்சியிலிருந்து தான் இலக்கிய மேடைகளில் புத்தக அறிமுக உரைகளுக்காக அழைக்கப்பட்டேன். தொடர்ந்து அத்தகைய வாய்ப்புகள் இப்போதும் வந்து கொண்டே இருக்கின்றன.
 உங்களுக்கு காந்தியத்தின் மீது ஆர்வம் வந்தது எப்படி?
 ஆரம்பகாலத்தில் காந்தியம் என்பதில் பெரிய ஈடுபாடு இருந்ததில்லை. இடதுசாரிகளின் காந்தி தொடர்பான புத்தகங்களையும் வாசித்திருக்கிறேன். சிறிது காலம் தடை செய்யப்பட்டிருந்த கோட்சேவின் வாக்குமூலம் என்ற புத்தகத்தைக் கூட படித்திருந்தேன். 20 தொகுப்புகளைக் கொண்ட "காந்தி' புத்தகத்தை கவிஞர் யுகபாரதி எனக்கு அளித்தார். காந்தியை நேரடியாகப் புரிந்து கொள்வதற்கும் அவரைக் குறித்தான ஒரு பிம்பத்தைத் தெளிவாகத் தெரிந்து கொள்வதற்கும் இந்தத் தொகுப்பு எனக்கு உதவியது. அதைப் படித்தபின் எனக்குள் மாற்றம் ஏற்பட்டது.
 காந்தியின் 150-ஆவது ஆண்டில் அவரது நினைவை போற்றுவதில் உங்களின் பங்களிப்பு ...
 தினமொரு காந்திய சிந்தனை அதற்கான சின்னச்சின்ன கட்டுரைகளை எழுதினேன். அதன்பின் காந்திய ஆளுமைகள், அதாவது காந்தியத்தை பின்பற்றி தன் வாழ்க்கையை அமைத்துக் கொண்டவர்கள் அதற்காகக் கற்பனை செய்து பார்க்க முடியாத பல தியாகங்களைச் செய்த காந்திய அன்பர்களை சந்தித்து அவர்களோடு உரையாடினேன்.
 இந்தியா முழுவதும், உலகின் பல பகுதிகளிலும் வாழ்ந்து வருவோர், முன்னர் வாழ்ந்தவர்கள் என்று பலரைப் பற்றிய தகவல்களையும் திரட்டும் பணியை மேற்கொண்டேன். இன்றைக்கும் காந்தியம் வேரூன்றி இந்த மண்ணில் வாழ்கிறது என்ற உண்மை புலப்பட்டது. இன்னும் எத்தனை நூற்றாண்டுகள் கடந்தாலும் காந்தியம் வாழும் என்பதை இந்த ஆராய்ச்சி எனக்குக் காட்டியது. இந்த எண்ணம் சன்னதம் வந்ததைப் போல என்னை இந்தப் பணியில் வேகமாக செயல்பட வைத்தது.
 காந்தியம் தொடர்பாக எவ்வளவு புத்தகங்களை தேடி பிடித்தீர்கள்?
 "காந்தி 150' என்ற நிகழ்ச்சியை தொலைக்காட்சியில் தொடர் நிகழ்ச்சியாக நடத்த வாய்ப்பு வந்த பொழுது இன்னும் அதிகமாக காந்தியை தெரிந்து கொள்ள வேண்டும் என்று தொடர்ந்து பல மொழிகளில் காந்தி தொடர்பான புத்தகங்களைத் தேடத் தொடங்கினேன். காந்தியை பற்றிய 250-க்கும் மேற்பட்ட புத்தகங்களை படித்து முடித்திருக்கிறேன். இன்னும் ஏராளமான எண்ணிலடங்காத புத்தகங்கள் காந்தியைப் பற்றி இருக்கின்றன எனும் தகவல் பிரமிப்பையும் மலைப்பையும் ஏற்படுத்துகிறது. காந்தி தொடர்பாக எழுதப்பட்ட புத்தகங்களை சேகரித்தால் லட்சக்கணக்கில் இருக்கலாம். இத்தனை தூரம் மக்களைக் கவர்ந்த தலைவர் ஒருவரை இதுவரை உலகம் சந்திக்கவில்லை. அவரது சிந்தனைகளை படிக்கப்படிக்க காந்தியம் என்ற கருத்தாக்கம் மனதில் இன்னும் வலுப்பெறுகிறது. இன்னுமின்னும் அவற்றைத் தேடிப் போவதற்கான உத்வேகம் மேலோங்குகிறது.
 உதாரணமாக, "உரிமைகீதம்' என்று காந்தி மறைந்தபோது எழுதப்பட்ட அருமையான புத்தகம் எங்கெங்கோ தேடியும் கிடைக்கவில்லை ஆனால் அது தெருவோரத்தில் பழைய புத்தகங்களை விற்றுக்கொண்டிருந்த ஒரு முதியவரிடம் கிடைத்தது. இப்படி எத்தனையோ அனுபவங்கள் இந்த முயற்சியில் உண்டு. எத்தனை புத்தகங்களைக் கண்டடைந்தேனோ அதே அளவுக்கான நல்ல மனிதர்களையும் சென்றடைந்தேன்.
 காந்தியம் பற்றிய உங்கள் தொடர் சொற்பொழிவுகள் பற்றி ...
 காந்தி ஸ்டடி சென்டர் ஒவ்வொரு புதன்கிழமையும் சொற்பொழிவுக்கு ஏற்பாடு செய்து தொடர்ந்து நடத்தி வருகிறது. பல சொற்பொழிவுகளை நானும் தந்திருக்கிறேன். காந்தி எழுதிய கடிதங்கள் குறித்து ஒரு சொற்பொழிவைத் தந்திருக்கிறேன். அது எனக்கு மனதுக்கு மிக நெருக்கமானது.
 இந்தியாவிலேயே தமிழகத்திற்குதான் காந்தி அதிகமாக பயணம் செய்தது. தமிழ் மக்களிடத்தில் அவருக்கிருந்த அபிமானம் தென்னாப்பிரிக்காவில் காந்தி வாழ்ந்த காலத்தில் தொடங்கி இறுதிவரை தொடர்ந்திருக்கிறது என்பதை அறிந்தபோது பெருமிதமாக இருந்தது. தமிழ் மக்கள் அவரை ஏற்றுக் கொண்ட விதமும் மெய்சிலிர்க்க செய்தது. அதை எல்லாம் உலகுக்கு நம்மால் இயன்றவரை சொல்லிவிடவேண்டும் என்ற எண்ணமும் தோன்றியது. அதை மனதில் கொண்டு சில சொற்பொழிவுகளையும் தந்திருக்கிறேன்.
 வாழ்க்கையில் இன்னும் இதைச் செய்யவேண்டும் இதை சாதித்து விட வேண்டும் என்று நீங்கள் கருதுவது?
 "தமிழ்நாட்டில் காந்தி' என்ற புத்தகத்தில் காந்தியடிகளே சிலரை அடையாளப்படுத்தி எழுதி இருக்கிறார். அதைத் தொடர்ந்து அது போன்றவர்களை சந்திக்க வேண்டும் என்ற ஆவல் இருக்கிறது. காலமும் இறைவனும் அதற்கான வாய்ப்பை எனக்குத் தருவார்கள் என்று நம்புகிறேன்.
 - கோதை ஜோதிலட்சுமி
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com