பொதுமுடக்கம் புது அனுபவம்: வீணை காயத்ரி

""மார்ச் கடைசியில பெங்களூரு போக வேண்டியது ஏப்ரல் 1-ஆம் தேதி புது வீடு கிரகப்பிரவேசம் நடத்துறதா இருந்தோம்.
பொதுமுடக்கம் புது அனுபவம்:  வீணை காயத்ரி


""மார்ச் கடைசியில பெங்களூரு போக வேண்டியது ஏப்ரல் 1-ஆம் தேதி புது வீடு கிரகப்பிரவேசம் நடத்துறதா இருந்தோம். கரோனா பொதுமுடக்கத்தால் சென்னையில மாட்டிகிட்டோம். எப்போ பெங்களூரு போவோம்னு தெரியல. இப்படியொரு பொது முடக்கத்தை இதுவரை பார்த்ததில்லை. புது அனுபவமா இருக்கு. அதே நேரத்துல பயமாவும் இருக்கு. ஒவ்வொருத்தரும் கரோனாவை பத்தி நிறைய சொல்றாங்க. கண்ணுக்கு தெரியாத கிருமி. எதுக்கும் கட்டுப்படல. காய்கறி வாங்கினா கூட மஞ்சள் தண்ணியில அலசணும்னு சொல்றாங்க. எதுவுமே புரியல.'' நமது வீட்டில் உள்ளவர் போன்று யதார்த்தமாகப் பேசத் தொடங்குகிறார் வீணை காயத்ரி. இசைத்துறையில் இமயம் தொட்டவர். அவருடன் ஒரு மினி உரையாடல்:

இந்த பொதுமுடக்கம் உங்களுக்குள் ஏற்படுத்திய தாக்கம் என்ன?

ஏராளமான தாக்கங்கள் ஏற்படுத்தியிருக்கிறது. நைட் ஆனா சரியா தூக்கம் வர்றதில்லை. பல சிந்தனைகள். சென்னையில் கணவர் என்னுடன் இருக்கிறார். எனக்கு இரண்டு குழந்தைகள். மூத்தமகள் பெங்களுரூவில் இருக்கிறார். இரண்டாவது மகள் வெளிநாட்டில் பணியாற்றுகிறார். பேத்திகளை மிகவும் தேடுகிறேன். எப்போது அவர்களைப் பார்க்கப் போகிறேன் என்று ஏங்காத பொழுது இல்லை. இப்போ சூழ்நிலை மாறிட்டே வருது. நாளைக்கு என்ன நடக்கும்னு தெரியல. எல்லா கவலைகளையும் மறந்து என்னுடைய பூஜையும், வீணையும் தான் ஆத்ம ஆனந்தத்தைத் தருகிறது.

பரபரப்பில்லாத இந்த பொழுதுகள் பற்றி?

2011-ஆம் ஆண்டு முதல் 2016 தமிழ்நாடு இசை மற்றும் கவின் கலை பல்கலைக்கழகத்தின் துணை வேந்தராக பணியாற்றினேன். 2017- ஆம் ஆண்டிற்குப் பிறகு பணிகள் அதிகமில்லை. ஆனால் என் அம்மாவாக நினைக்கும் ஜெயலலிதாவின் மறைவு எனக்குள் ஏற்படுத்திய தாக்கங்கள் ஏராளம். திடீர்னு இப்படி ஒரு நிலைமை அவர்களுக்கு வரும்னு நினைச்சுக் கூடப் பார்க்கல. இப்போதும் அந்த வலி இருந்துகொண்டே தான் இருக்கிறது. ஜீரணிக்க முடியல. அவர் ஆட்சியில இருக்கும் போது மகாலட்சுமி கடாட்சம் இருந்தது.

பல ஆண்டுகளுக்குப் பிறகு 2018- ஆம் ஆண்டு மீண்டும் வீணை வாசிக்க ஆரம்பித்தேன். சங்கீதம் தெரிஞ்சவுங்க மேடை ஏறணும்னு விதி ஏதுவும் கிடையாது. சங்கீதத்தில் கச்சேரி என்ற எல்லை கிடையாது. இப்போது மனதிற்கு நிம்மதி தருவது பூஜை, தியானம், வீணை மட்டும் தான். மேலும் என்னுடைய 9 வயதிலிருந்து பார்க்காத மேடைகள் இல்லை. இனி ஆன்மிகம் தான் என்னுடைய தேடலாக இருக்கும்.

ஜெயலலிதாவுடன் ஏற்பட்ட மறக்க முடியாத அனுபவம்?

மூன்று விழாக்களில் அவங்களைப் பார்த்திருக்கேன். அவங்களும் என்னைக் கவனிச்சிருக்காங்க. நான் கர்நாடக இசை வாசித்துக் கொண்டு இருப்பேன். அவங்க நிகழ்ச்சிக்கு வந்த உடனே, அவங்க நடிச்ச படத்தில் உள்ள, "ஒரு நாள் யாரோ', "ஆயிரம் நிலவே வா',"ஆயிரம் ஆசை' பாடல்களை வாசிக்க ஆரம்பிச்சுடுவேன். 20 ஆண்டுகளுக்கு முன்பு, ஒரு பேட்டியின் போது அம்மாகிட்ட, யார் வீணை வாசிப்புப் பிடிக்கும் என கேட்டப்போ, என் பேரை சொல்லியிருக்காங்க. இதைவிட என்ன பெரிய பாக்கியம் எனக்கு வேணும் சொல்லுங்க.

இசைத்துறையின் தற்போதைய நிலைப்பற்றி?

2009-2010 ஆம் ஆண்டிலிருந்து கச்சேரிகளில் வாசிப்பதை நிறுத்திவிட்டேன். இப்போது தொழில் நுட்பத்தின் ஆதிக்கம் அதிகமாக உள்ளது. முகநூலில் வாசிக்கும் கச்சேரியை நேரடியாகப் பார்க்கலாம். நிறைய சபாக்கள். நிறையப் பேர் பாடுறாங்க. என்னுடைய மனதிற்கு நிறைய விஷயங்கள் சரியாகப்படவில்லை. ஒதுங்கியிருக்கிறேன்.

இது போன்ற கடினமான சூழ்நிலையில் இசைத்துறையைத் தொழிலாகக் கொண்டவர்கள் மிகவும் கஷ்டப்படுகிறார்கள். இசையால் பெயர் புகழ் மட்டும் போதும் என்று இருப்பவர்களுக்கு எந்த பிரச்னையும் இல்லை. இசையை நம்பி இருப்பவர்களின் நிலை மோசமாக இருக்கிறது என்று நினைக்கும்போது வருத்தமாக உள்ளது. அவர்களுக்கு அரசு உதவி செய்தால் நன்றாக இருக்கும்.

இசைத்துறையில் தொழில்நுட்பத்தின் வளர்ச்சியை எப்படிப் பார்க்கிறீர்கள்?

நல்ல விஷயமாகத்தான் பார்க்கிறேன். இப்போது கூட என்னுடைய நேரத்தை பெரும்பாலும் இசை தான் ஆக்கிரமித்துள்ளது. காலையில் எழுந்து வீட்டில் சமையல் வேலை முடித்துவிட்டு பூஜை, யோகா என என்னுடைய கடமைகளை செய்த பிறகு வீணை வாசிக்கிறேன். தனிமையில் வீணை வாசிப்பது அத்தனை ஆனந்தமாக உள்ளது. மேலும் த்ஹள்ம்ண்ய்ங் ள்ற்ழ்ண்ய்ஞ்ள் என்ற பெயரில் பிளாக் ஒன்றில் என்னுடைய அனுபவங்களைப் பதிவேற்றி வருகிறேன்.

வீணையில் இப்போது நிறைய வகைகள் வந்துவிட்டன. வீணையின் உண்மையான நாதம் என்ன என்பதை ஆய்வு செய்து பிளாகில் பதிவேற்றி இருக்கிறேன். ஜோதிடம் தெரியும். திருமணம் போன்ற விசேஷங்கள் பற்றி நண்பர்கள் கேட்பார்கள் பார்த்து சொல்வேன்.

இப்போதைய பொழுதுபோக்கு நான் பல்கலைக்கழகத்தில் பணியாற்றிய போது மாணவனாக வீணை கற்றுக் கொண்ட ஜெகன்சாஸ் உதவியுடன் கரோகி பாடல் மிக்சிங் செய்து பதிவேற்றியிருக்கிறேன். ரஹ்மானின் "முன்பே வா' பாடலும், என்னுடைய பள்ளிக்காலத்தில் எனக்குப் பிடித்த பாடல்களை கரோகி செய்து பதிவேற்றி இருக்கிறேன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com