தடுக்காதீர்கள்... குழந்தைகளை!

கரோனா பொது முடக்க காலத்தில் எல்லாரும் வீட்டுக்குள்ளேயே முடங்கி இருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுவிட்டது.
தடுக்காதீர்கள்... குழந்தைகளை!


கரோனா பொது முடக்க காலத்தில் எல்லாரும் வீட்டுக்குள்ளேயே முடங்கி இருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுவிட்டது. குழந்தைகளுக்கோ கரோனாவைப் பற்றி கவலையில்லை. "வீட்டுக்குள்ளேயாவது, முடங்கியிருப்பதாவது' என்று தலைகீழாக நின்று அடம்பிடிப்பார்கள். குழந்தைகளிடம் பெரியவர்கள் எப்படி நடந்து கொள்ள வேண்டும்? குழந்தைகளின் அறிவு, மன வளர்ச்சிக்கு என்ன செய்ய வேண்டும்?

விவரிக்கிறார் குழந்தைகள், மாணவர்களுக்கான மனநல ஆலோசகர் வெற்றிச்செல்வி:

""குழந்தைகளைச் சமாளிப்பது இக்காலத்தில் பெற்றோருக்கு ரொம்பவும் கஷ்டமாக இருக்கிறது. காரணம், குழந்தைகள் நம்மைவிட அறிவாளிகளாக இருக்கிறார்கள். அவர்களின் அறிவாற்றலுக்கு ஈடுகொடுத்து அவர்களைச் சமாளிப்பது பெரியவர்களுக்கு ரொம்ப ரொம்ப கஷ்டம். எதற்கெடுத்தாலும் குழந்தைகள் கத்துகிறார்கள்; அழுகிறார்கள்; அடம்பிடிக்கிறார்கள் என்று சொல்லக் கூடாது. அப்படியிருப்பதுதான் குழந்தைகளின் இயல்பு. குழந்தைகளுக்கு இயல்பிலேயே நிறைய கற்பனையாற்றல் உள்ளது. படைப்புத்திறன் உள்ளது. எனவே அவர்களிடம் "இதைச் செய்வது தவறு, இதைச் செய்யக் கூடாது' என்று எதிர்மறையாகச் சொல்லக் கூடாது. இதை இப்படிச் செய்தால் நன்றாக இருக்கும் என்று நேர்மறையாகப் பேச வேண்டும்.

குழந்தைகளின் கற்பனைத் திறனைப் பற்றி ஒரு கதை உள்ளது. 30 குழந்தைகளையும், 30 பெரியவர்களையும் ஓர் அறையில் வைத்துப் பூட்டிவிட்டார்கள். வெளியுலகத் தொடர்புக்கு செல்பேசி எதுவும் அவர்களிடம் தரப்படவில்லை. அறையை விட்டு எப்படி வெளியே செல்வீர்கள்? என்ற கேள்விக்குப் பெரியவர்களிடம் இருந்து, "கதவை உடைப்பது, ஜன்னலை உடைப்பது' என்பன போன்ற ஒன்றிரண்டு பதில்களே வந்தன. ஆனால் குழந்தைகளிடமிருந்தோ நூற்றுக்கும் மேற்பட்ட பதில்கள்.

"அந்த அறையில் கதவே இல்லை. ஜன்னல்களில் கதவு, கம்பி என்று எந்தத் தடுப்பும் இல்லை; அதனால் ஈஸியாக வெளியே போய்விடுவேன்' என்பன போன்ற பதில்கள் வந்தன. சில குழந்தைகள், "நான் சூப்பர் மேன், ஸ்பைடர் மேனாகி அப்படியே பறந்து போய்விடுவேன்'' என்றார்கள்.

பெரியவர்களான நாம் குழந்தைகளாக இருந்தபோது இப்படி கற்பனைத் திறனுடனும், படைப்பாற்றலுடனும்தான் நாமும் இருந்திருப்போம். ஆனால் சமூகம் நம்முடைய கற்பனைத்திறனையும், படைப்பாற்றலையும், அறிவையும் வற்றச் செய்துவிட்டதைத்தான் இந்தக் கதை நமக்குச் சொல்கிறது.

இப்போது குழந்தைகளின் எல்லாத் தேவைகளையும் பெற்றோர்களே பூர்த்தி செய்துவிடுகிறார்கள். குழந்தைகள் தமக்கென்று செய்து கொள்ள எதுவுமில்லை. இந்த நிலை மாற வேண்டும். குழந்தைகளை நாம் சிந்திக்க விட வேண்டும். எல்லாவற்றையும் கற்றுக் கொள்ள அவர்களுக்கு நாம் வாய்ப்பளிக்க வேண்டும். இதை ஆங்கிலத்தில் WHOLE BRAIN PROGRAMME என்பார்கள். அதாவது குழந்தைகள் தங்களுடைய ஐம்புலன்களையும் பயன்படுத்துவதற்கு உதவும்விதமாக நாம் அவர்களுடையை கல்வியைவடிவமைக்க வேண்டும்.

"நான்கும் நான்கும் எட்டு' என்று கரும்பலகையில் எழுதி அவர்களுக்குச் சொல்லித் தருவதற்குப் பதிலாக, எட்டு பழங்களை அவர்களுடைய கைகளில் கொடுத்து நான்கு, நான்காக அவற்றைப் பிரித்து பின்னர் அவற்றைச் சேர்த்து எண்ணச் சொல்ல வேண்டும். இதன் மூலம் பழங்களைத் தொடுவது, பார்ப்பது, முகர்வது உட்பட பல வேலைகளை குழந்தைகள் செய்கிறார்கள். அவர்களின் ஐம்புலன்களும் வேலை செய்கின்றன.

கரோனா பொதுமுடக்க காலத்தில் குழந்தைகளின் விருப்பப்படி அவர்களை விளையாட அனுமதிக்க வேண்டும். தாயம், பல்லாங்குழி, பரமபதம், செஸ், கேரம் விளையாட்டு போன்றவை ஐம்புலன்களையும் பயன்படுத்த உதவுபவை.
காகிதத்தில் கப்பல் செய்வது நீண்டகாலமாக உள்ள ஒரு விளையாட்டு. அட்டையில் தவளை, வண்ணத்துப்பூச்சி, பொம்மைகள் செய்யும்படி குழந்தைகளிடம் சொன்னால் மிகவும் ஆர்வமாகச் செய்வார்கள். குழந்தைகள் கையால் செய்வது, அவர்களின் மூளை வளர்ச்சிக்கு மிகவும் உதவும்.

கரோனா பொதுமுடக்க காலத்தில் வெளியிலிருந்து எதையும் வாங்கிச் சாப்பிடுவது மிகவும் குறைந்துவிட்டது. இணையதளங்களில் நிறைய சமையல் குறிப்புகள் வெளியிடப்படுகின்றன. அவற்றைப் படித்து வீட்டிலேயே பல தின்பண்டங்களைச் செய்யலாம்.

குழந்தைகளையும் சமையல் வேலைகளில் ஈடுபடுத்த வேண்டும். உதாரணமாக சப்பாத்தி செய்யும்போது, குழந்தைகளைச் சப்பாத்திக்காக மாவை வட்டவடிவமாகத் தேய்த்துத் தரும்படி சொன்னால், ஆர்வமாகச் செய்வார்கள். வழக்கமாகச் சப்பாத்தி சாப்பிடாத குழந்தைகள் கூட தாம் செய்த சப்பாத்தியை விரும்பிச் சாப்பிடுவார்கள். செயலில் ஈடுபடுத்துவது குழந்தைகளின் அறிவை வளர்க்கும்.

இன்னொரு முக்கியமான விஷயம் குழந்தைகளை எதற்காகவும் பயமுறுத்தக் கூடாது. பூச்சாண்டி வரும் என்றோ, பல்லி சுவரிலிருந்து வந்து கடித்துவிடும் என்றோ எதையும் சொல்லி பயமுறுத்தக் கூடாது.

வெற்றியோ, தோல்வியோ எந்தப் போட்டியிலும் அவர்களைப் பங்கேற்க ஊக்குவிக்க வேண்டும். "பங்கேற்பதே வெற்றி' என்று சொல்ல வேண்டும்.

பத்து வயதில் குழந்தையை நாம் எப்படி வளர்க்கிறோமோ, அப்படித்தான் 20 வயதுக்குப் பிறகும் அவர்கள் இருப்பார்கள். பயமுறுத்தி வளர்த்தோம் என்றால் பயந்தாங்கொள்ளி ஆக இருப்பார்கள். தோல்வியே காணக் கூடாது என்று வளர்த்தோம் என்றால் சிறிய தோல்விக்கே மனம் உடைந்து போவார்கள்.

குழந்தைகளின் இயல்பான ஆர்வம் எதில் இருக்கிறது என்று கண்டுபிடித்து, அந்த ஆர்வத்திற்கேற்ற படிப்புகளை- அவர்கள் விருப்பத்திற்கேற்ற படிப்புகளை- அவர்களுக்குக் கற்றுக் கொடுத்தால் எதிர்காலத்தில் சாதனையாளராகமிளிர்வார்கள்'' என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com