கிராமத்திலிருந்து கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்துக்கு!

கல்வியைப் பொருத்த மட்டில் நகர்ப்புறத்தில் வசிக்கும் மாணவர்களுக்கு கிடைக்கும் வசதிகள் கிராமப்புறத்திலிருப்பவர்களுக்கு கிடைப்பதில்லை என்ற  குற்றச்சாட்டு பல  காலமாகவே உள்ளது.  
கிராமத்திலிருந்து கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்துக்கு!

கல்வியைப் பொருத்த மட்டில் நகர்ப்புறத்தில் வசிக்கும் மாணவர்களுக்கு கிடைக்கும் வசதிகள் கிராமப்புறத்திலிருப்பவர்களுக்கு கிடைப்பதில்லை என்ற குற்றச்சாட்டு பல காலமாகவே உள்ளது. ஆனால், வசிப்பது நகர்ப்புறத்திலாகட்டும் அல்லது கிராமப்புறத்திலாகட்டும் கிடைக்கும் வாய்ப்புகளை முறையாகப் பயன்படுத்திக் கொண்டு முன்னேற்றப் பாதையில் பீடு நடை போடும் மாணவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.

நீலகிரியிலுள்ள ஒரு குக்கிராமம் தேனாடு. அந்த கிராமத்திலிருக்கும் ஒரு மாணவிக்கு தற்போது இங்கிலாந்தின் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி படிப்பு படிக்கக் கூடிய வாய்ப்பு கிடைத்துள்ளது. மாணவி அனுப்பிரியா தான் அவர். அதுவும் உதவித் தொகையுடன் கூடிய படிப்பு என்பது கூடுதல் சிறப்பு. நீலகிரி மாவட்டத்திலிருந்தும், படகர் சமுதாயத்திலிருந்தும் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் படிக்கக் கூடிய வாய்ப்புப் பெற்றுள்ள "முதல் மாணவி' இவரே என்பது குறிப்பிடத்தக்கது. இவ்வாய்ப்பு குறித்து மாணவி அனுப்பிரியா நம்மிடம் பகிர்ந்து கொண்டதிலிருந்து...

""தேனாடு கிராமத்தைச் சேர்ந்த எனக்கு இத்தகைய வாய்ப்பு கிடைத்திருப்பது மிகவும் மகிழ்ச்சிக்குரியதாகும். உதகையில் கிரசண்ட் கேசில் பள்ளியில் 12- ஆம்வகுப்பு வரை படித்த பின்னர் கோவையில் ஒரு தனியார் பொறியியல் கல்லூரியில் எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங் பட்டப் படிப்பு படித்தேன். பள்ளியில் படிக்கும் போதே எனக்கு ஆராய்ச்சிகளில் ஈடுபடுவது மிகவும் பிடிக்கும். விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்த எனக்கு, இந்திய விவசாயிகளுக்கு உதவும் வகையில் ஏதாவது செய்ய வேண்டுமென்ற எண்ணம் தொடர்ந்து இருந்தது. 10- ஆம் வகுப்பில் பள்ளியின் முதல் மாணவியாகத் தேர்வு பெற்றதிலிருந்து இந்த ஆர்வம் மேலும் அதிகரித்தது. அதையடுத்து இதற்கான வாய்ப்புகள் கல்லூரியிலும் கிடைத்தன. அப்போது புதுப்பிக்கப்பட்ட எரிசக்தி தொடர்பாக நான் உருவாக்கிய ஒரு திட்டம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.

அதையடுத்து உழவர்களுக்காக ஒரு சிறப்பு செயலியை உருவாக்கியிருந்தேன். இது இந்திய அளவில் பாராட்டைப் பெற்றது.

கல்லூரியில் படிக்கும்போதே ஆராய்ச்சிகள் தொடர்பான பல்வேறு போட்டிகளிலும் பங்கேற்றிருந்தேன். இதன் காரணமாக இந்திய- ஐரோப்பிய கூட்டமைப்பின் சார்பில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொடர்பாக நடத்தப்பட்ட ஒரு போட்டியில் சிறப்பிடம் பெற்று எஸ்டோனியா நாட்டிற்கு சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டேன். அதைத் தொடர்ந்து தொழிற்கல்வி தொடர்பான இந்திய கூட்டமைப்பின் சிறப்பு விருதும் எனக்கு வழங்கப்பட்டது. அதேபோல, மகாத்மா காந்தி சிறப்பு கல்வி உதவித்தொகை, ராபர்ட் போஷ் நிறுவனத்தின் சிறப்பு விருது உள்ளிட்ட 25-க்கும் மேற்பட்ட விருதுகளையும் பெற்றுள்ளேன். அத்துடன் இந்திய அரசின் உணவு பதப்படுத்துதல் துறையின் சார்பில் குடியரசு தலைவர் விருதினையும், மத்திய மனித வள மேம்பாட்டுத்துறையின் சார்பில் அகில இந்திய தொழிற்நுட்ப கவுன்சிலின் சிறப்பு விருதினையும், தமிழக அரசின் வனத்துறையின் சிறப்பு விருதினையும் பெற்றுள்ளேன். இத்தகைய விருதுகள் என்னை மேலும் ஊக்குவிப்பதாகவே அமைந்துள்ளன.

சிறந்தவராக இருப்பது மட்டும் பெருமைக்குரியதல்ல; சிறப்பானவற்றை உருவாக்குவதிலும் தேர்ச்சி பெற்றவராக இருக்க வேண்டுமென்ற குறிக்கோளின் அடிப்படையில் செயலாற்றி வருகிறேன். பருவநிலை மாற்றம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு போன்றவற்றில் விவசாயிகளுக்கு உதவும் வகையில் எனது ஆராய்ச்சிகள் இருக்க வேண்டுமென்பதே எனது ஆசை. அதை நிறைவேற்றிக் கொள்ளும் வகையில்தான் தற்போதைய கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக வாய்ப்பும் எனக்குக் கிடைத்துள்ளது. கனடா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளிலிருந்தும் எனது ஆராய்ச்சிப் படிப்புகளுக்கு வாய்ப்பு கிடைத்திருந்த போதிலும் என்னை மேலும் செம்மைப்படுத்திக் கொள்ள கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்திற்கான வாய்ப்பினைத் தேர்வு செய்தேன். இதற்கு தொடக்க கல்வியும், பள்ளிப் பருவத்தில் கிடைத்த வாய்ப்புகளும் முக்கிய காரணமாக இருந்தன. பள்ளி, கல்லூரிகளில் எனக்கு உதவிய ஆசிரியர்களும் இந்த வாய்ப்பு எனக்குக் கிடைக்க முக்கியமான காரணமாவார்கள்'' என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com