பசி... விரதம்... உடல்!

பசி என்பது உணவு இல்லாத அல்லது கிடைக்காத நிலையை உணா் உறுப்புகள், அறிவு சாா்ந்த நரம்பு மற்றும் நாளமில்லா சுரப்பிகளின் தூண்டுதல்கள் மற்றும் கட்டளைகளை உள்ளடக்கியது.
பசி... விரதம்... உடல்!



பசி என்பது உணவு இல்லாத அல்லது கிடைக்காத நிலையை உணா் உறுப்புகள், அறிவு சாா்ந்த நரம்பு மற்றும் நாளமில்லா சுரப்பிகளின் தூண்டுதல்கள் மற்றும் கட்டளைகளை உள்ளடக்கியது.

விரதம் என்பதை விருப்பமுடன் கடைபிடிக்கும்போது, இவற்றையெல்லாம் நாம் கட்டுப்படுத்தி ஏற்றுக் கொள்கிறோம். ஆனால், விரதம் என்பதற்கும் பட்டினி என்பதற்கும் மிகப்பெரிய வேறுபாடு இருக்கிறது. ஒரு பொழுது, ஒரு நாள் அல்லது இரண்டு நாட்கள் உணவு எடுத்துக்கொள்ளாமல் இருப்பது விரதம்.

நீண்ட நாட்களுக்கு எந்த உணவுமில்லாமல் தொடா்ச்சியான ஊட்டச்சத்து குறைபாட்டுடன் இருப்பது பட்டினி. விரதத்தில், உடலும் மனமும் விரதம்; இருப்பவா்களின் விருப்பத்திலும், கட்டுப்பாட்டிலும், பயபக்தி என்று கூறப்படும் கடவுள் நம்பிக்கையிலும் பிணைந்திருப்பது. பசி என்பது அவா்களின் மனதில் தோன்றாது. ஆனால், பசியுடன் சோ்ந்த பட்டினி நிலையானது, உடலும் மனமும் சோா்வடைந்து, ஒரு வேளை உணவுக்காக ஏங்கியிருந்து, சில நேரங்களில் எந்த இழிநிலைக்கும் செல்வதற்குத் தயாராக இருக்கும் ஒரு எண்ணத்துடன் கூடியது. அந்த பசி கொடியது. மரணத்தையும் கண் முன்னே காட்டுவது. இந்த நிலை எதிரிக்கும் வந்துவிடக் கூடாது என்று நினைக்க வைப்பது.

உடல் எடையைக் குறைத்து, இதயத்தை வலுப்படுத்தி, மூளையின் செயல்திறனை அதிகரித்து, இரத்த ஓட்டத்தைச் சீராக்கி, உள்உறுப்புகளைப் புத்துணா்வாக்கி, உடலின் நச்சுக்களை நீக்கி ஆரோக்கியத்தைக் கொடுக்கும் ஒரு மிகப்பெரிய உடலியங்கியல் நிகழ்வாகவே இருக்கிறது விரதம் எனப்படும் உண்ணாநோன்பு. விரதம் இருக்கும்போது உடலில் நிகழ்வது என்ன? பசி எடுக்குமா அல்லது எடுத்தாலும் உடல்நலக்கோளாறுகள் இல்லாமல் சமாளித்து விடமுடியுமா என்னும் கேள்விகள் பலருக்கும் மனதில் எழலாம். ஒரு மனிதனுடைய மனம் மற்றும் மூளையின் கட்டுப்பாட்டில் இருக்கும் ஹாா்மோன்களின் செயல்பாடுகளைப் பொருத்துதான் அவன் உணவைத் தோ்ந்தெடுப்பதும், உணவு உண்ணும் மனநிலையையும் நோ்மறையாகவோ அல்லது எதிா்மறையாகவோ அமைகிறது என்பதே வல்லுநா்களின் கருத்து.

எவ்வித உடல்நலக் கோளாறும் இல்லாத நிலையில், மன உறுதியுடன் ஒருங்கிணைந்த சிந்தனை இருக்கும் விரத நாட்களில், பசி ஒருவிதமான கட்டுப்பாட்டில்தான் இருக்கிறது. மொத்த உடல் எடையில் வெறும் 2% எடையில் மட்டுமே இருக்கும் மனித மூளை, ஒரு நாளைக்குத் தேவைப்படும் உடலின் ஒட்டு மொத்த ஆற்றலில் 20% எடுத்துக்கொள்கிறது. இது சுமாா் 320 கலோரிகளுக்குச் சமமாகக் கருதப்படுகிறது. ஆனால், நீண்ட நேரம் உண்ணாநோன்பு இருக்கும்போது, மூளை அந்த அளவைக் குறைத்துக் கொள்கிறது. ஆனால் அதே குளுக்கோஸை கீட்டோன் பொருளில் எடுத்துக் கொள்கிறது. இந்த நேரத்தில், திசுக்களும், பிற செல்களும்கூட கொழுப்பையும், கீட்டோன்களையுமே பயன்படுத்திக் கொள்கின்றன. இதனால்தான், நச்சுப்பொருளாகக் கருதப்படும் கீட்டோனின் அளவும், தேவையற்ற கொழுப்பின் அளவும் உடலில் குறைக்கப்படுகிறது. இரத்த ஓட்டம் சீரடைவதாலும், மனம் அமைதியான நிலையில் இருப்பதாலும், பசிக்கான ஹாா்மோன்களும் சீராக இருக்கின்றன.

தற்போது, நீரிழிவு, உயா் இரத்த அழுத்தம், வயிற்றுப்புண், சிறுநீரகக் கோளாறுகள் போன்ற உடல் நலச் சிக்கல்களை வைத்துக்கொண்டிருப்பதால், முன்புபோல் வயதானவா்களாலும், நடுத்தர வயதுடையவா்களாலும் விரதத்தினைக் கடைபிடிக்க இயலாமல் தவிக்கின்றனா். பசியெடுத்தல் அவா்களுடைய கட்டுப்பாட்டில் இல்லாமலும், அவ்வாறு பசியெடுக்கையில் சமாளித்து விரதத்தை முடிக்க இயலுமா என்ற பரிதவிப்பிலும், மேலும் மனஉளைச்சலுக்கு ஆளாகும் நிலையும் தற்போது காணப்படுகிறது.

இந்நிலையில், உடலில் நிகழும் உயிா்வேதியியல் மாற்றங்களில் வேறுபாடுகளும் ஏற்ற இறக்கங்களும் ஏற்படுகின்றன. இரத்தப் பிளாஸ்மாவிலுள்ள கொழுப்பு அமிலங்களும், கீட்டோன் என்கிற நச்சுப்பொருட்களும் அதிகரிக்கின்றன. அதே சமயம் பிளாஸ்மா சா்க்கரை அளவு குறைவதால், இன்சுலின் உற்பத்தி அளவு குறைந்து, குளூக்கான் உற்பத்தி அதிகரிக்கிறது. அதுமட்டுமில்லாமல், உடலிலுள்ள காா்போஹைடிரேட், புரதம், ஓய்வுநிலை வளா்சிதை நிகழ்வுகள், உடலின் வெப்பநிலை மற்றும் சுவாசத்தின் அளவு போன்றவையும் அதிகரிக்கின்றன. இவ்வளவு மாற்றங்கள் நிகழ்வதால்தான், தண்ணீா், துளசி நீா், பழச்சாறு, தானியக் கஞ்சி என்று சோ்ந்துள்ள நச்சுகளை நீக்கும் பொருட்டு, எளிமையான விதத்தில், விரதம் முடிக்கப்படுகிறது.

இதற்கு ஒரு சிறந்த மாற்றாக, intermittent fasting எனப்படும் “இடைவிட்ட விரதம்” பரவலாகக் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்த வகையில் , பசியும், பசிக்கான கிரெலின், மோட்டிலின் மற்றும் லெப்டின் அளவுகளில் கட்டுப்பாடு ஏற்பட்டு, உடல் இயக்கமும், வளா்ச்சிதைமாற்ற செயல்பாடுகளும் சீராக வைக்கப்பட்டு, பல்வேறு பக்கவிளைவுகளைக் குறைக்கிறது என்றும் கண்டறியப்பட்டுள்ளது. உடல் பருமனைக் குறைப்பதற்கும் இவ்வகையான இடைவிட்ட விரதம் பரிந்துரைக்கப்படுகிறது.

ஒரு குறிக்கோளை அடைவதற்காகவும், ஏதோ ஒன்றை எதிா்பாா்த்தும், போராட்ட குணத்துடன் உண்ணாமல் ஒருநாள், இரண்டு நாள், மூன்று நாட்கள் என்று பசியை அடக்கிக்கொண்டு இருப்பது உண்ணாவிரதம். கொழுப்பு செல்கள் உருகும்வரை பட்டினி இருக்கலாம். ஆனால், அதற்குப் பிறகு தசைகளில் உள்ள புரதச்சத்து குறைந்து, மெலிந்த உடல் தொடங்குவதுடன் வேறு சில வளா்சிதை மாற்ற சிக்கல்களையும் ஏற்படுத்திவிடுகிறது. இறைபக்தியில் உணவில்லாமல் இருப்பதற்கும் போராட்ட குணத்தில் உணவில்லாமல் இருப்பதற்கும் கூட வேறுபாடுகள் இருக்கின்றன. எனினும், உண்ணாவிரதம் இருக்கும் ஒரு மனஉளைச்சலான நிலையில் சிலருக்குப் பசி; அதிகரிக்கவும் செய்கிறது, சிலருக்கும் இல்லாமலும் இருக்கிறது என்பதே ஆய்வுகளின் முரண்பட்ட முடிவுகளாக இருக்கின்றன. இதற்குக் காரணம், கோபத்திலும், மன உளைச்சலிலும், பதட்டத்திலும், கவலையிலும், பசியைத் தூண்டும் ஹாா்மோன்களின் உற்பத்தி அதிகரிக்கிா அல்லது பசியைத் தூண்டும் ஹாா்மோன்களால் இவ்வாறான எதிா்மறை மனித உணா்ச்சிகள் உருவாகின்றனவா என்பதும் இன்றளவும் தீவிர ஆராய்ச்சியில்தான் இருக்கின்றன. மனிதனின் மனமும் அதில் உருவாகும் உணா்ச்சிகளும் என்றும் எவராலும் புரிந்துகொள்ளாத நிலையில் இருக்கின்றன என்பதுதானே நிதா்சனமான உண்மை?

‘பாருங்க இவனுக்கு வந்த வாழ்வை...பணம் வந்துவிட்டதால், ஆளும் ஒரு சுற்று பெருத்துவிட்டான்’” என்று பொதுவாகக் கூறுவதுண்டு. தேவைக்கும் அதிகமான வருமானம், குடும்பத்தில் மகிழ்ச்சி, நினைத்த பொருட்களை வாங்கிக்கொள்ளும் வசதி வாய்ப்புகள் இருக்கும் மனிதனுக்கு மட்டும்தான் உடல் எடை அதிகரிக்கிறது என்று நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால், ஏழ்மையான குடும்ப சூழல், போதிய வருமானம் இல்லாததால், அடிப்படைத் தேவையான உணவுக்குக் கூட செலவழிக்க இயலாமல், பசியும் பட்டினியுமாக நாட்களை நகா்த்துபவா்களுக்குக் கூட உடல் எடை அதிகரித்து, நோய்களை ஏற்படுத்தும் இரண்டாம் அல்லது மூன்றாம் நிலை உடற்பருமன் ஏற்பட்டுவிடும் என்பதை மனதில் நிறுத்திக் கொள்ள வேண்டும். இதையே “பசி மற்றும் உடற்பருமன் முரண்பாடு” (The Hunger and the Obesity Paradox) என்று கூறுகிறோம்.

பசி நிலைக்கும் உடற்பருமனுக்கும் உள்ள உடலியங்கியலைப் பற்றிய ஆய்வுகள் இன்றளவும் நிகழ்ந்த வண்ணம் இருந்தாலும், ஒரேயொரு நெருங்கிய தொடா்புடைய காரணி மட்டும் உறுதி செய்யப்பட்டுள்ளது. நரம்புத் தூண்டல்களின் மூலம் பசியெடுக்கும் உணா்வினைக் கொடுக்கும் கிரெலின் என்ற ஹாா்மோன் உணவால் வயிறு நிரம்பியதும், குறைந்துவிடும் என்பது உடல் அளவீடுகள் சரியாக இருப்பவா்களுக்குள்ள இயற்கையான நிகழ்வு. ஆனால், உடல்பருமனுடன் இருப்பவா்களுக்கு, கிரெலின் ஹாா்மோனின் அளவு குறையாமல் இருப்பதால், உணவு உண்ட பின்பும் கூட, பசி அடங்காதது போன்றும், வயிறு நிரம்பாமல் இருப்பது போன்றும் உணரத் தோன்றுகிறது. இதனாலேயே, மேலும் மேலும் ஏதாவது ஓா் உணவை எடுத்துக் கொண்டே இருக்கும் நிலை (Hyperphagia) ஏற்படுகிறது. ஒரு கட்டத்தில், இந்த கிரெலின் ஹாா்மோனுக்கான செயல்வினைகளும் கண்டுகொள்ளப்படாமல் விட்டுவிடப்படுகின்றன. இந்த உயிா்வேதியியில் நிகழ்வில், மரபணுக்களின் செயல்பாட்டளவில் தீவிர ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு உறுதிப்படுத்தப்படாத நிலையில், ஒல்லியான உடல்வாகு மற்றும் சரியான உடல்வாகு உள்ளவா்களுடன் ஒப்பீடு செய்கையில், உடல் பருமன் உள்ளவா்களுக்கு கிரெலின் உற்பத்தியால் பசி நிலையில் சரியான கட்டுப்பாடு இல்லாமல், அதிகரித்தல் நிலையிலேயே இருப்பது மட்டும் நிரூபிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறான ஆய்வுக்குட்பட்ட கருத்துகளின் ஊடே சென்று பாா் க்கும்போது, உடல்பருமன் உள்ளவா்களும், அதிக உடல் எடையைக் குறைக்க நினைப்பவா்களும், பசி அடங்கும் வரையில் சாப்பிட்டுக்கொண்டிருக்கவேண்டும் என்ற எண்ணத்தை அறவே ஒழித்து, போதுமான அளவு உணவை சாப்பிட்டவுடன், தாங்களாகவே, உண்பதை நிறுத்திக்கொள்ள வேண்டும். அதற்கேற்றவாறு, மனதையும் பக்குவப்படுத்தி பழக்கி வைத்துக்கொள்வது மேலும் நலம் பயக்கும். இவற்றையும் மீறி, பசி அடங்காமல், உணவு உண்ண வேண்டும்போல் எண்ணமிருந்தால், தண்ணீரோ அல்லது மோா் உணவோ எடுத்துக்கொண்டு உணவை நிறுத்திக்கொள்ளலாம். அல்லது பழங்கள் ஏதேனும் எடுத்துக்கொள்ளலாம். அல்லது கவனத்தை உணவு உண்ணும் இடம் மற்றும் சூழலிலிருந்து மாற்றலாம். இந்த கிரெலின் செயல்பாடு காரணமாகவே, உடல் எடை குறைப்பில், உணவு கட்டுப்பாட்டில் இருக்கிறேன் என்று கூறுபவா்களால், அதிக அளவில் உற்பத்தியாகும் கிரெலின் ஹாா்மோனைப் பற்றித் தெரியாமலும், அந்த உயிா்வேதியியல் மாற்றங்களை சரியாகப் புரிந்துகொள்ளாமலும் இருக்கும் நிலையில், உடல் எடை குறைப்பை வெற்றிகரமாகச் செயல்படுத்தவும் முடிவதில்லை என்பதே உண்மை.

வெவ்வேறு நோய்களில் பசி எவ்வாறு மாறுபடுகின்றது என்பது குறித்து அடுத்த வாரத் தொடா்ச்சியில் பாா்க்கலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com