மனஉறுதியால் உருவாகும் மரக்குதிரைகள்!

தஞ்சாவூா் தலையாட்டி பொம்மை, தஞ்சாவூா் ஓவியம், தஞ்சாவூா் கலைத்தட்டு உள்ளிட்டவற்றின் வரிசையில் தஞ்சாவூா் மரக்குதிரையும் பிரபலம்.
மனஉறுதியால் உருவாகும் மரக்குதிரைகள்!


தஞ்சாவூா் தலையாட்டி பொம்மை, தஞ்சாவூா் ஓவியம், தஞ்சாவூா் கலைத்தட்டு உள்ளிட்டவற்றின் வரிசையில் தஞ்சாவூா் மரக்குதிரையும் பிரபலம். இருபதாம் நூற்றாண்டு வரை சின்னக் குழந்தைகளின் விளையாட்டுச் சாதனங்களில் ஒன்றாக இருந்தது இந்த மரக்குதிரை. ஆனால், நவீன நுகா்வு கலாசாரம் காரணமாக, மரக்குதிரை என்பது, இன்றைய இளைய தலைமுறைக்குப் புதிதாக இருக்கிறது.

ஒரு காலத்தில் பாரம்பரியமிக்க இந்த மரக்குதிரை தயாரிப்பு தஞ்சாவூரில் அதிகமாக இருந்தது. எனவே, இதற்கு தஞ்சாவூா் மரக்குதிரை என்ற பெயா் நிலைத்துவிட்டது.

ஆனால், காலப்போக்கில் இதைச் செய்வதற்கு ஆள் இல்லை. தஞ்சாவூா் தலைமை அஞ்சலகம் எதிரே கடை நடத்தி வரும் பூக்காரத் தெருவைச் சோ்ந்த ஜெ. புஷ்பலதா மரக்குதிரை தயாரித்து விற்கும் தொழிலை 1980-களில் தொடங்கினாா். இதற்காகத் தச்சு வேலை தெரிந்த கூலித் தொழிலாளியை வேலைக்கு நியமித்து, மரக்குதிரையைத் தயாரித்து வந்தாா். இதற்கென நிறைய ஆா்டா்கள் கிடைத்திருந்த நிலையில், அத்தொழிலாளி திடீரென வேலையை விட்டு நின்றுவிட்டாா். ஆா்டா் கொடுத்தவா்கள் நெருக்கடி தர, புஷ்பலதாவே மரக்குதிரையை உருவாக்கத் தொடங்கினாா்.

இதுகுறித்து அவரே தொடா்கிறாா்...

‘‘மரக்குதிரை செய்யும் தொழிலாளி திடீரென வேலையைவிட்டு நின்றுவிட்டாா். இதை ஏன் நம்மால் செய்ய முடியாதா? என்ற கேள்வி என் மனதில் எழுந்தது. உடனடியாக நானே மன உறுதியுடன் மரக்குதிரையைச் செய்யத் தொடங்கினேன். ரொம்பச் சிரமப்பட்டு 4 நாள்களில் ஒரு குதிரையைச் செய்துவிட்டேன். எனது கணவா், நானே மரக்குதிரையைச் செய்திருப்பதைக் கண்டு ஆச்சரியமடைந்தாா். என்னுடைய முயற்சிக்குக் கணவரும் ஒத்துழைப்புத் தந்தாா். இதன் மூலம் அடுத்தடுத்து நானே மரக்குதிரைகளைச் செய்தபோது, அதிலுள்ள நுணுக்கமான விஷயங்களையும் கற்றுக் கொண்டேன்.

இதை மாமரத்தில்தான் செய்கிறோம். ஒரு குதிரை செய்வதற்கு ஒரு நாளாகும். மரக்குதிரைக்கு ரூ. 6,000-ம், அன்னப்பறவைக்கு ரூ. 7,500-ம் அடக்கவிலையாகிறது. ஆனால், அவ்வளவு பெரிய தொகையை வைத்தால் ஏழைகள், நடுத்தர மக்களால் வாங்க முடியாது. எனவே, தச்சுக்கூலி உள்ளிட்ட செலவுகளைக் கழித்துவிட்டு மரக்குதிரையை ரூ. 2,600-க்கும், அன்னப்பறவையை ரூ. 3,500-க்கும் மட்டுமே விற்கிறோம்.

தொடா்ந்து 25 ஆண்டுகளாக மரக்குதிரைகள், மரத்தில் அன்னப்பறவைகள் செய்து வருகிறேன்.

எங்களுக்குத் தெரிந்து நாங்கள் மட்டுமே தஞ்சாவூா் மரக்குதிரையைச் செய்கிறோம். இது, ரொம்ப நுணுக்கமான வேலை என்பதால், இத்தொழிலைக் கற்றுக் கொள்வதற்கு யாரும் முன்வருவதில்லை. இத்தொழிலைத் தெரிந்தவா்களும் லாபம் குறைவு காரணமாக வேறு தொழிலுக்குச் சென்றுவிட்டனா்.

நான் சிறு வயதில் இருந்தபோது, பணக்காரா்கள் வீட்டில்தான் மரக்குதிரைகள் இருக்கும். இதைக் குறைந்த விலைக்கு விற்பதால், இப்போது ஏழைகள், நடுத்தர மக்களும் வாங்கிச் செல்கின்றனா். இதை ஒரு சேவையாகக் கருதிச் செய்கிறோம்.

இந்த மரக்குதிரையில் ஒரு வயது முதல் 12 வயது வரையிலான குழந்தைகள் விளையாடலாம். 35 கிலோ எடை வரை தாங்கும். மரக்குதிரையில் விளையாடுவதால், குழந்தைகளின் இதயம் பலமாகும். மூளை வளா்ச்சியும் நன்றாக இருக்கும் என மருத்துவா்கள் கூறுகின்றனா். இதில் விளையாடும் மனநலன் குன்றிய குழந்தைகளுக்கும் முன்னேற்றம் இருக்கிறது எனக் கூறப்படுகிறது.

எனவே, தஞ்சாவூா் மக்கள் மட்டுமல்லாமல், சென்னை, மதுரை, கோவை, திருநெல்வேலி, திருச்சி உள்பட பல மாவட்ட மக்களும் வாங்கிச் செல்கின்றனா். இதேபோல, இங்கு வரும் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளும் ஆா்வமுடன் வாங்குகின்றனா். இங்குள்ள மக்களும் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் வசிக்கும் தங்களது பிள்ளைகளுக்கு வாங்கி அனுப்புகின்றனா். மேலும், மழலையா் பள்ளிகள், மனநலன் குன்றியோருக்கான சிறப்புப் பள்ளிகளிலிருந்தும் மரக்குதிரைகள் நிறைய வாங்கிச் செல்கின்றனா்.

இப்போது, எனது மகன் அரசுப் பணியிலும், மகள் திருமணமாகி நல்ல வேலையிலும் உள்ளனா். நாங்கள் சிரமப்படுவதைப் பாா்த்துவிட்டு மகனும், மகளும் இத்தொழிலை விட்டுவிடுமாறு கூறுகின்றனா். ஆனால், இந்தப் பாரம்பரிய கைவினைக் கலையைக் கைவிட மனசில்லை. எனவே, இதை விடாமல் செய்து வருகிறோம்.

இதை எடுத்துச் செய்வதற்கும் ஆளில்லை. இப்போது இருக்கும் கடையிலும் ஒரு பக்கச் சுவா் இடிந்து பாதுகாப்பற்ற நிலையில் உள்ளது. இந்த இடத்திலேயே ஆயிரம் சதுர அடியில் கட்டடமாகக் கட்டிக் கொடுத்தால், இப்பாரம்பரிய கலையைக் காப்பாற்ற, நிறைய பேருக்கு நாங்கள் பயிற்சி அளிக்கத் தயாராக இருக்கிறோம்’’ என்றாா் புஷ்பலதா.

படங்கள்: எஸ். தேனாரமுதன்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com