கலையின் பெருமையும்; பாரம்பரியமும்! 

ஆடைகளின் வணிகத்தில் தொழிற்புரட்சிக்கு முந்தைய காலத்திலேயே இந்தியா புகழ்பெற்று விளங்கியது.
கலையின் பெருமையும்; பாரம்பரியமும்! 


ஆடைகளின் வணிகத்தில் தொழிற்புரட்சிக்கு முந்தைய காலத்திலேயே இந்தியா புகழ்பெற்று விளங்கியது. சுல்தானியர்கள் காலத்தில் மிக நேர்த்தியான ஆடைகளைப் பற்றிய விரிவான விவரங்களை "இபின்பதூதா' போன்ற வெளிநாட்டுப் பயணிகள் எழுதிச் சென்றுள்ளனர். பழங்காலத்தில் சீனாவிலும், இந்தோனேஷியாவிலும், ரோமானிய உலகிலும் இந்தியத் துணிகள் விற்கப்பட்டுள்ளன. ரோமானிய வணிகக் கப்பலுக்குப் பிறகு அரபு வணிகர்களும், வாஸ்கோடகாமாவின் இந்திய வருகையை அடுத்து 15-ஆம் நூற்றாண்டின் கடைசியில் போர்த்துகீசியர்களும் இந்தியாவில் வணிகம் செய்தனர். கால ஓட்டத்தில் 16-ஆம் நூற்றாண்டில் ஐரோப்பிய கம்பெனிகள் இந்தியத் துணைக்கண்டத்தில் தளம் அமைத்து லாபகரமான வணிகத் தொடர்பின் அங்கமாயினர். துணிகளை ஏற்றுமதி செய்யும் மிகப்பெரிய தேசமாக இந்தியா ஆனது, துணி வணிகம் 18,19-ஆம் நூற்றாண்டுகளில் உச்சத்தைத் தொட்டது. 

இந்தியா ஆன்மிகத்தில் செழித்துள்ள ஒரு நாடு என்று அடிக்கடி விவரிக்கப்படுகின்றது. வரையப்பட்ட மற்றும் அச்சிட்ட வழிபாட்டு கொடிகளில் இருந்து பெறப்பட்ட இந்தியாவின் பெரும்பான்மையான துணிகள் புத்தரின் செய்தியை கிழக்குலகிற்கு எடுத்துச் சென்றன. 

பளபளக்கும் தங்க இழைகளால் பின்னப்பட்டு புனித சுலோகங்களைக் கொண்ட பட்டுத்துணிகள் கோயில்களில் தெய்வங்களை அலங்கரித்தன. மன்னர்களின் தோள்களை அலங்கரித்தன. இனை புனிதத் தன்மைகளின் அம்சங்களோடு இணைத்துப் பார்க்கப்பட்டன. 

ஒரு மணப்பெண்ணுக்கான புடவையின் விளிம்புகளில் நீண்ட  மகிழ்ச்சியான மணவாழ்க்கைக்கான ஆசிர்வாதம் நெய்யப்பட்டது. காவியப் பாடல்களின் வரிகள் பின்னப்பட்டன. 

ஒடிசாவின் இகட் கைத்தறி புடவைகளின் முந்தானைகளில் எளிய பஜனைப் பாடல்கள் இடம் பிடித்திருந்தன. இந்தியாவில் எந்த ஒரு தருணத்திலும் ஆசிர்வாதம் என்பது புனிதமானதாக இருக்கிறது. ஒரு மகள் முதன் முதலாக தான் சம்பாதித்த வருவாயில் தனது தாய்க்கு கைத்தறிப் புடவையை வாங்குதல் என்பது நன்றி மற்றும் மரியாதை அடிப்படையிலான ஒரு பாரம்பரிய புனிதக் கடமையைச் செய்வதாகவே அமைகிறது. 

இந்தியா, பாகிஸ்தான், பாரசீகம் ஆகிய நாடுகளின் பாரம்பரிய உடைகள், திரைச்சீலைகள் போன்றவற்றில் தங்கம், வெள்ளி இழைகளால் நேர்த்தியாக நெய்யப்பட்ட வழவழப்பான நூல் இழை அமைப்பே ஜரிகை எனப்படுகிறது. 

இந்தியாவில் நான்கு வகைப்பட்ட ஜரிகைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. அவையாவன - உண்மையான நல்ல ஜரிகை, பாதி உண்மையான ஜரிகை, போலித்தோற்ற ஜரிகை, பிளாஸ்டிக் ஜரிகை ஆகியனவாகும். உண்மையான ஜரிகை வெள்ளியினால் உருவாக்கப்பட்டு அதில் தங்கமுலாம் பூசப்பட்டிருக்கும். பாதி உண்மையான ஜரிகையானது தாமிரத்தால் உருவாக்கப்பட்டு வெள்ளி, தங்க முலாம்கள் பூசப்பட்டதாக இருக்கும். இந்தியாவில் ஜரிகைத் தொழிலின் இருப்பிடம் சூரத் நகரமாகும். வாரணாசி, ஆக்ரா, ஹைதராபாத், லக்னௌ, வதோரா, லாத்தூர், ஜெய்ப்பூர், பார்மர் ஆகியவை ஜரிகை உற்பத்தி செய்யப்படும் மற்ற இடங்களாகும். 

பொருட்களும், சிறப்புடைய ஊர்களும் - நுணுக்கமான வேலைப்பாடுடைய காது வளையங்கள் 4000ஆண்டுகளுக்கு முற்பட்ட  பண்டைய நுட்பமாகும். வெள்ளி வேலைப்பாடுகள் செய்யும் இரண்டு முக்கியமான தொகுப்புகள் ஆந்திராவின் கரீம் நகரிலும், ஒடிசாவில் கட்டக்கிலும் இருக்கின்றன. கரீம் நகரில் நடைபெறும் இந்தத் தொழில் இரண்டு நூற்றாண்டுகள் பழமையானது. எனினும் ஆந்திராவில் வாராங்கலிலும் இந்தத்தொழில் உள்ளது. வெள்ளிக்கம்பிகள், நகல் எடுக்கும் காகிதங்கள், செம்பு, கரி, நீர்த்த நிலையில் இருக்கும் கந்தக அமிலம் ஆகியவை இதற்குத் தேவைப்படும் முக்கியமான மூலப்பொருள்களாகும். 

நூலினாலும் பிற பொருள்களினாலும் ஆடைகளில் பூவேலைகளும், அழகுபடுத்தும் வேலைகளும் செய்யப்படுகின்றன. லக்னௌவில் சிக்கன்காரி, சர்தோசி, வங்காளத்தில் கதா, பஞ்சாபில் புல்கரி, குஜராத்தில் கட்ச் பூவேலை, காஷ்மீரில் காஷிதகாரி ஆகிய பூவேலைகள் செய்யும் தொகுப்புகள் இந்தியாவில் உள்ளன. 

லக்னௌவில் பாரம்பரியமாக பிரபலமாக இருந்துவரும் சர்தோசி பூவேலைகள் சர்தோசியைச் சுற்றிலும் உள்ள பராபங்கி, உன்னா, சிதாபூர், ரேய்பரேலி, ஹர்தோய், அமேதி ஆகிய மாவட்டங்களில் மேற்கொள்ளப்படுகின்றன. 

ஆபரணங்கள் செய்வது இந்தியாவில் மிகவும் தனித்துவமான உயரிய கைவினைக் கலையாகும். கைகளால் செய்யப்படும் நகைகளில் பாரம்பரிய நவீன வடிவங்கள் இரண்டிலும் இந்தியா நன்கு நிலைநாட்டப்பட்ட திறமைகளைக் கொண்டதாக இருக்கிறது. 

டெல்லி. மொராதாபாத், சம்பல், ஜெய்ப்பூர், கொஹிமா(பழங்குடியினத்தவர் நகைகள்) நெல்லூர், மைசூர், நலகொண்டா, நிசாமாபாத் போன்றவை கைகளால் செய்யப்படும் நகைகளுக்கான பெரிய மையங்கள் ஆகும். 

ஏறத்தாழ ஐந்து லட்சம் பொற்கொல்லர்களும், ஆறாயிரம் வைர நகை செய்வோரும் இந்தியாவில் இருப்பதாகக் கணக்கிடப்பட்டுள்ளது. கம்பள உற்பத்தியில் உலகில் உள்ள முன்னணி நாடுகளில் ஒன்று இந்தியா, நம்தா கம்பளங்கள், மரவிரிப்புக் கம்பளங்கள், பருத்தி ஜமக்காளங்கள் போன்றவை இந்தியாவில் தயாரிக்கப்படுகின்றன.  

உத்திரப்பிரதேசத்தில் ஆக்ரா, பதோய், மிர்சாப்பூர், ராஜஸ்தானில் ஜெய்ப்பூர், ஹரியானாவில் பானிபட், காஷ்மீர் ஆகிய இடங்களில் கம்பள உற்பத்தி அதிக அளவில் நடைபெறுகிறது. ஜமக்காள உற்பத்தி மண்டலமாக பானிபட், தமிழ்நாட்டில் பவானி, கர்நாடகாவில் நாவல்குன்ட், ஆந்திராவில் வாரங்கல், ராஜஸ்தானில் ஜைசால்மர், பார்மர் ஆகிய பகுதிகள் அறியப்படுகின்றன.         

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com