கடல் கடந்து இலவச கலை!

நடனக்கலையின் எல்லா அம்சங்களையும் உள்வாங்கிக் கொண்டிருக்கிறார் கஸ்தூரி மாசிலன்.
கடல் கடந்து இலவச கலை!

நடனக்கலையின் எல்லா அம்சங்களையும் உள்வாங்கிக் கொண்டிருக்கிறார் கஸ்தூரி மாசிலன். இவர் இலங்கை தென்மராட்சியில் இசைப் பாரம்பாரியம் மிக்க பரம்பரையின் 5-ஆவது தலைமுறையைச் சேர்ந்தவர். ஈழத்தின் மூத்த பெருங்கலைஞரான பிரபல நாதஸ்வர இசைக்கலைஞர் கலாநிதி பஞ்சாபகேசனின் பேத்தி(மகளின் மகள்) என்பது குறிப்பிடத்தக்கது.

அதுதவிர ஈழத்தில் முதன்முதல் ஜோடி நாதஸ்வரம் வாசித்து புரட்சியை ஏற்படுத்தி ஒரு மரபை தோற்றுவித்தவரும், பல்லவி சுரம் வாசிப்பதில் இவருக்கு நிகர் இவரே எனப் பலராலும் பாராட்டு பெற்றவருமான பிரபல நாதஸ்வர இசைமேதை சண்முகம்பிள்ளையின் பேத்தியும் (மகனின் மகள்) ஆவார். இலங்கையில் பிறந்து தற்போது பின்லாந்து நாட்டில் வசிக்கிறார்.

எழுத்தாளர், இசைக்கருவி வித்வான், நடனக் கலைஞர் என பன்முகத் திறமை கொண்ட இவரிடம் பேசியதிலிருந்து:

இலங்கையில் உள்ள யாழ்ப்பாண மாவட்டத்தில் தென்மராட்சி ஒரு பகுதியாகும். அத்தென்மராட்சி பிரதேசத்தில் அமைந்த நகரம் சாவகச்சேரி அது தான் எனது சொந்த ஊர். சாவகச்சேரியில் அறிஞர்கள், கவிஞர்கள், கலைத்துறையினர், கைவினையாளர்கள் என எல்லாவிதமான மக்களையும் காணலாம். இங்கு தான் வரலாற்று சிறப்பு பெற்ற வாரிவனநாதபுரம் என்னும் சிவன் கோயில் உள்ளது. அத்தோடு நுணாவில் ஸ்ரீதுர்காதேவி தேவஸ்தானம், பெருங்குளம் வீரசக்தி விநாயகர் கோயில், மீசாலை சோலை அம்மன் கோயில் எனப் பல சிறப்பு பெற்ற தலங்கள் விளங்குகின்றன.

சாவகச்சேரியில் புகழ்பெற்ற பாடசாலையில் ஒன்றான இந்துக் கல்லூரியில்தான் எனது பாட சாலைக் கல்வி. வட இலங்கை சங்கீத சபையால் நடத்தப்படும் பரதநாட்டியத்தில் ஆசிரியர் தராதர சித்தி பெற்றமையால் "பரத கலா வித்தகர்' என்ற பட்டம் வழங்கப்பட்டது.

"நர்த்தனம்', "பரதநிருத்தம்' மற்றும் "பரதநாட்டியம்' ஆகிய நூல்களை வெளியிட்டேன். கொழும்பு விவேகானந்தா தேசிய பாடசாலையில் 2004-2008 வரை 5வருட காலமும் கொழும்பு இந்துக் கல்லூரியில் 1 வருட காலமும் ஆசிரியர் பணியை மேற்கொண்டேன். இரு கல்லூரியிலும் பணிபுரியும் காலத்தில் இந்து கலாசார அமைப்பினால் கொழும்பு கதிரேச மண்டபத்தில் நடைபெற்ற நவராத்திரி கலைவிழாவில் "நவசக்தி', "பொம்மலாட்டம்' மற்றும் "கிராமிய கலைக்கதம்பம்' போன்ற நிகழ்ச்சியை வழங்கியதற்காக பாராட்டப்பட்டது மறக்க முடியாதது.

2010-ஆம் ஆண்டுக்குப் பிறகு பின்லாந்து நாட்டில் பினிஷ் மொழியில் கற்பிக்கும் ஆசிரியர் பயிற்சியை நிறைவு செய்தேன். இதன் தொடர்ச்சியாக அந்நாட்டில் "பரத கலா மன்றம்' என்ற நடனப்பள்ளியை நிறுவி பினிஷ் மொழியில் பரத நாட்டியத்தை கற்பிக்கிறேன். இப்பள்ளியில் பின்லாந்து, ரஷ்யா, இந்தியா, இலங்கை மாணவர்கள் பயிற்சியை மேற்கொள்கின்றனர்.

இதையும் தாண்டி கொழும்புவில் அமைந்துள்ள பொன்னம்பலவானேசுவரர் கோயிலில் இலவசமாக நடன வகுப்புகளை எடுத்தேன். அதோடு அறநெறி பாட சாலைகளிலும் இலவச வகுப்புகள் எடுத்துள்ளேன். இலங்கையிலோ அல்லது பின்லாந்திலோ எந்த மாணவர்களிடமும் நடனப் பயிற்சிக்காக பணம் எதுவும் பெறுவதில்லை. அவர்களாக ஏதாவது கொடுத்தால் அதையும் வாங்கி கோயில் பணிகள் போன்றவற்றுக்கு கொடுத்துவிடுவேன்.

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் 2017-ஆம் ஆண்டு நடைபெற்ற உலகத்தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் 13-ஆவது பன்னாட்டு மாநாட்டில் எனது நாட்டிய நிகழ்வு சிறப்பு நிகழ்வாக இடம் பெற்று பலரது பாராட்டைப் பெற்றது'' என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com