சேவை செய்யும் மனம் வேண்டும்!

இன்று வலைதளங்களில் மிகப் பிரபலமானவர் சுப்ரியா. இவர், ஒரு ஜவுளிக் கடையில் விற்பனைப் பிரிவில் "சேல்ஸ் உமனாக' வேலை செய்கிறார்.
சேவை செய்யும் மனம் வேண்டும்!

இன்று வலைதளங்களில் மிகப் பிரபலமானவர் சுப்ரியா. இவர், ஒரு ஜவுளிக் கடையில் விற்பனைப் பிரிவில் "சேல்ஸ் உமனாக' வேலை செய்கிறார். அனைவரும் பேசும்படி அப்படி என்ன செய்துவிட்டார் சுப்ரியா ? இனி சுப்ரியா தொடர்கிறார் :

திருவல்லா நகரில் செயல்படும் ஜவுளிக் கடையில் வேலை முடிந்து நான் வீடு திரும்பிக் கொண்டிருந்தேன். சாலையின் நடுவே கண் பார்வை இல்லாத முதியவர் ஒருவர் எங்கே போவது, எப்படிப் போவது என்று தெரியாமல் தவித்துக் கொண்டிருந்தார். சாலையில் பயணிக்கும் வாகனங்கள் அவர் மேல் மோதாமல் இருக்கச் சிரமப்பட்டன.

இதை பாதசாரிகள் யாரும் சட்டை செய்யவில்லை. முதியவர் திண்டாடி சிரமப்படுவதைப் பார்த்ததும் எனக்கென்னவோ மனம் அடித்துக் கொண்டது.

அவர் அருகே சென்று அவரது கையைப் பிடித்து, சாலை ஓரம் கொண்டு வந்தேன். "அப்பா, சாலையைக் கடந்து அந்தப் பக்கம் போகணுமா..' என்று கேட்டேன். "இல்லேம்மா ... எனக்கு "மஞ்சாடி'க்கு (ஊர் பெயர்) போக பஸ் ஏறணும். அதுக்காக திருவல்லா பஸ் ஸ்டாண்ட் வரை போகணும்' என்றார்.

அந்த சமயம் பார்த்து பஸ் ஸ்டாண்ட் போகும் பஸ் வந்தது. நான் கை காட்டியதும் பஸ் சற்று தூரம் சென்று நின்றது. "அய்யா இங்கேயே நில்லுங்கள்.. ஓட்டுநரிடம் பேசிவிட்டு உங்களை பஸ்ஸில் ஏற்றி அனுப்புகிறேன்' என்று சொல்லிவிட்டு பஸ்ஸை நோக்கி ஓடிச் சென்றேன். நடத்துநரிடம் "கண் தெரியாத முதியவர் சாலை ஓரம் நிற்கிறார். அவர் மஞ்சாடி ஊருக்கு போகணும்... அவரை இந்த பஸ்ஸில் ஏற்றிவிடுகிறேன்... பஸ் ஸ்டாண்டு சென்றதும் தயவு செய்து அவரை மஞ்சாடிக்குப் போகும் பஸ்ஸில் ஏற்றிவிட்டு விடுங்கள்..' என்று கேட்டுக் கொண்டேன். அவரும் "சரி' என்றார்.

உடனே முதியவரை நோக்கி ஓடினேன். முதியவரை கையைப் பிடித்து அழைத்து பஸ் அருகில் வந்தேன்.

எங்களை பார்த்ததும் நடத்துநர் பஸ் கதவைத் திறக்க முதியவர் பஸ் படிகளில் ஏற்றிவிட... நடத்துநர் அவரை கைப் பிடித்து உள்ளே அழைத்து இருக்கையிலும் அமர உதவி செய்தார்.

நான் முதியவருக்கு உதவியதை ஜோஷுவா என்பவர் அடுத்துள்ள கட்டடத்தின் நான்காம் மாடியிலிருந்து தனது அலைபேசியில் காணொளியாகப் படம் பிடித்திருக்கிறார். அது எனக்கு அப்போது தெரியாது.

காணொளியை சமூக வலைதளங்களில் அவர் பதிவேற்றம் செய்ய .. அது சிறிது நேரத்தில் வைரலானது.

இரவு ஒன்பதரை மணிக்கு தோழி என்னை அழைத்து "சமூக வலை தளங்களில் உன்னைப் பற்றித்தான் பேச்சு.. .. நீ பார்க்கலையா..' என்று கேட்டதும்தான் விஷயம் புரிந்தது.

என்னிடம் காணொளி பார்க்கும் தரமுள்ள அலைபேசி இல்லை. கணவரிடம் அந்த வசதி உள்ள அலைபேசி இருந்ததால் நான் முதியவருக்கு உதவி செய்யும் காணொளியைப் பார்த்தேன். சந்தோஷமாக இருந்தது.

அத்துடன் அதனை மறந்து வீட்டு வேலைகளில் ஈடுபட்டேன். அடுத்த நாள் கடைக்கு வேலைக்குச் சென்றதும் ஆள் ஆளுக்குப் பாராட்ட ஆரம்பித்தார்கள். நானும் சிரித்துக் கொண்டே வேலையில் ஈடுபட்டேன். படம் பிடித்ததுடன் பதிவேற்றமும் செய்து ஒரே இரவில் என்னைப் பிரபலமாக்கிய ஜோஷுவாவைச் சந்தித்து நானும் கணவர் அனூப்பும் நன்றி தெரிவித்தோம்.

"நான் உதவி என்று நினைத்துச் செய்யவில்லை. அந்த நடத்துநர் முதியவர் பஸ்ஸில் ஏறவும், இருக்கையில் அமரவும் உதவி செய்தார். நான்காம் மாடியிலிருந்து படம் பிடித்ததால் பஸ்ஸூக்குள் நடத்துநர் உதவி செய்த காட்சிகள் காணொளியில் பதிவாகவில்லை. பேருந்து நிலையம் சென்றதும் பஸ் டிரைவர் முதியவரை பஸ்ஸிலிருந்து இறக்கி மஞ்சாடி வழியாகச் செல்லும் பஸ்ஸில் ஏற்றிவிட்டிருக்கிறார். அவர்கள் செய்த உதவியுடன் ஒப்பிடும் போது நான் செய்தது ஒன்றும் இல்லை.

"இந்தக் காணொளியை எல்லா சேனல்களும் ஒளிபரப்பின. காணொளி வைரல் ஆனதும் டாக்டர் ஒருவர் கடிகாரம் ஒன்றை பரிசளித்தார். சிலர் ஆடைகள் வழங்கி பாராட்டினார்கள். நான் வேலை பார்க்கும் கடை ஜோய் ஆலுக்காஸ் நகை நிறுவனத்தின் தலைவரான ஜோய் ஆலுக்காஸ் என்னை அலைபேசியில் அழைத்துப் பாராட்டினார். "பிறருக்கு உதவும் எண்ணத்தை மட்டும் மறந்துவிடாதே' என்று கேட்டுக் கொண்டார். ஒரு வாரம் கழித்து திருச்சூரிலிருக்கும் தலைமை அலுவலகத்திற்கு சுப்ரியா வர வேண்டும். அங்கே சுப்ரியாவுக்காக ஓர் ஆச்சரியம் காத்திருக்கிறது..' என்று சஸ்பென்ஸýடன் சொன்னார்.

"ஜுலை 19 ஞாயிறு திருச்சூர் ஜோய் ஆலுக்காஸின் அலுவலகம் சென்ற போது அங்கிருந்த அனைவரும் எங்களை பலத்த கைத்தட்டலுடன் வரவேற்றார்கள். ஜோய் ஆலுக்காஸ் சார் குடும்பத்தினரும் இருந்தார்கள்.

வாடகை வீட்டில் இருக்கும் எனக்கு சொந்தமாக வீடு கட்டித்தருவதாக அறிவித்தார். சொந்த வீடு இப்போதைக்கு எங்களால் நினைத்துப் பார்க்க முடியாத ஒன்று. அந்த சூழ்நிலையில் "வீடு கட்டித்தருகிறேன்' என்று நற்செய்தியுடன் ஒருவர் என் முன் நின்றால் எப்படி இருக்கும்?... நான் புல்லரித்துப் போனேன்' என்கிறார் சுப்ரியா.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com