முகப்பு வார இதழ்கள் மகளிர்மணி
850 முறை பரீட்சை எழுதியவர்!
By - ராஜிராதா | Published On : 29th July 2020 06:00 AM | Last Updated : 29th July 2020 06:00 AM | அ+அ அ- |

கல்லூரிப் படிப்பு முடித்து பல ஆண்டுகள் ஆகிவிட்டன. இருந்தும் இப்போதும் கல்லூரிகளுக்குச் சென்று கொண்டிருக்கிறார் புஷ்பா ப்ரியா. எதற்கு .. பரீட்சை எழுததான். ஆனால் அது அவருக்காக அல்ல... மற்றவர்களுக்காக கரோனாவுக்கு பின், கர்நாடக அரசு சமீபத்தில் இரண்டாம் வருட பியூசி பரீட்சையை நடத்தியது. மற்ற மாணவர்களும், புஷ்பா ப்ரியாவும் வந்து உட்கார்ந்து எழுதினார். இந்த ஒரு மாதத்தில் இப்படி 4 பேருக்காக பரீட்சை எழுதியுள்ளார்.புஷ்பா தொடர்கிறார்:
""அவர்கள் சொல்வதை கேட்டு. உள்வாங்கி பரீட்சை எழுத வேண்டும். இதில் பொறுமை மிகமுக்கியம்.
கூறுபவர் மாஸ்க் அணிந்திருப்பார். கேட்பவரும் மாஸ்க் அணிந்திருக்க வேண்டும். போதுமான இடைவெளியும் பராமரிக்க வேண்டும் . கூறுபவர் பெஞ்சின் ஒரு முனையில் இருப்பார், அவருக்காக எழுதுபவர், மற்றொரு முனையிலும் அமர்ந்து எழுத வேண்டும். இதனால் அவர் கூறுவதை கூர்ந்து கேட்டு எழுத வேண்டும். மாஸ்க் அணிந்திருப்பதால் அவர் பேசுவதைக் கேட்டு எழுதுவது மிகவும் கஷ்டமான வேலைதான்.
எழுதுகிறேன் என வந்து விட்டு பொறுமை காட்டாவிட்டால் எப்படி என தனக்குத்தானே கூறிக் கொள்வேன்.
சமீபத்தில் பிறவி முடக்குவாதம் கொண்ட ஒருவருக்காக பரீட்சை எழுதினேன். அவரால் கைகளைக் கூட அசைக்க முடியாது. கஷ்டம்தான். இருந்தும் சமாளித்தேன்.
இப்படி, தொடர் வியாதியால், வலுவிழந்தவர்கள், கண் பார்வை இல்லாதவர்கள், விபத்தில் பாதிக்கப்பட்டவர்கள் என பலருக்கு ஹிந்தி, ஆங்கிலம் மற்றும் கன்னடத்தில் பரீட்சை எழுதியுள்ளேன். ஒரே ஒரு நபருக்காக தெலுங்கிலும் எழுதியுள்ளேன்.
சமீபத்தில் ஒரு பிச்சைக்காரருக்காக பரீட்சை எழுதினேன். அவருக்கு கூடுதலாக யானைக்கால் நோய் வேறு.
பி.ஏ. இரண்டாம் வருட பரீட்சையை எழுத அவர் வந்திருந்தார். அவர், பரீட்சை ஹாலுக்குள் அனுமதிக்கப்படவில்லை. மாறாக இரு அறைகளுக்கு நடுவே உள்ள பாதையில் அவரை உட்கார வைத்தனர். நானும் அவருக்கு அருகில் அமர்ந்து எழுதினேன். முடிவில் அவருக்கு 200 ரூபாய் பணம் கொடுத்து டெலிபோன் நம்பரையும் பகிர்ந்து கொண்டேன். நம்பினால் நம்புங்கள். இப்படி 850 பேருக்கு பரீட்சை எழுதி உதவியுள்ளேன்'' என்றார் புஷ்பா ப்ரியா.
பலன் இவருக்கு 2019-ஆம் ஆண்டின் "நாரி சக்தி புரஸ்கார் விருது' கிடைத்தது.