
ஒரே ஒரு மாணவி தினமும் பள்ளிக்குச் சென்று வருவதற்காக மட்டும் ஒரு ரயில் வண்டி 2013 முதல் 2016 ஜனவரி வரை மூன்று ஆண்டுகளாக ஜப்பானில் இயங்கிக் கொண்டிருந்தது. இந்த செய்தியை கேட்டதும் "அந்த மாணவி அந்த அளவுக்கு பெரிய பணக்காரியா '
என்று உலகமே ஆச்சரியப்பட்டது. ஆனால், உண்மையில் அந்த மாணவி ஒரு குக்கிராமத்து விவசாயியின் மகள். அவளது படிப்பு தடைபடக்கூடாது என்பதற்காக ஜப்பானிய அரசாங்கம் ஒரே ஒரு மாணவிக்காக ரயிலை ஓட்டுவதால் ஏற்படும் பண நஷ்டத்தை ஒதுக்கி வைத்துவிட்டு ரயிலை மூன்று ஆண்டுகளாக அந்த ஒரே ஒரு மாணவிக்காக இயக்கி வந்ததை அறிந்த செங்கோட்டையைச் சேர்ந்த "வாஞ்சி இயக்கம்' ஜப்பானிய ரயில்வே துறைக்கு 2016 பிப்ரவரியில் தடபுடலாகப் பாராட்டு விழாவை அமர்க்களமாக நடத்தியது.
நெகிழ வைக்கும் இந்தச் சம்பவத்தைப் பற்றி அறிந்த வாசகர்கள் அனைவரும் "இந்தியாவில் இப்படி நடக்குமா' என்று நினைத்தனர். ஆதங்கப்பட்டனர்.
ஜப்பானிய சம்பவம் போன்று ஒரு சம்பவம் சமீபத்தில் கேரளத்தில் நிகழ்ந்துள்ளது. பிளஸ் டூ தேர்வுகள் எழுத எழுபது பேர்கள் அமர்ந்து பயணம் செய்யும் இயந்திரப்படகில் ஒரே ஒரு மாணவியை மட்டும் ஏற்றிக் கொண்டு தேர்வு நடக்கும் பள்ளியில் கொண்டு போய்ச் சேர்த்துள்ளது கேரள அரசின் படகு போக்குவரத்து துறையைச் சேர்ந்த படகு.
கேரளத்தில் பிளஸ் டூ தேர்வுகள் மார்ச் மாதம் துவங்கிவிட்டாலும், தேர்வுகள் நடந்து முடியும் முன்பே ஊரடங்கு அறிவிக்கப்பட்டதால் கடைசி இரண்டு தேர்வுகள் நடக்கவில்லை. அந்தத் தேர்வுகள் சென்ற மே மாதம் 29, 30 தேதிகளில் நடந்தன.
சான்ட்ரா பாபு. கேரளம் ஆலப்புழைக்கு அருகே குட்டநாட்டிற்கு அருகில் காஞ்சிரம் கிராமத்தைச் சேர்ந்தவர். உள்ளூர் பள்ளியில் பிளஸ் டூ மாணவி. ஆனால் சான்ட்ரா தேர்வு எழுத வேண்டிய பள்ளி கோட்டயத்தில் அமைந்திருந்தது. சுமார் 30 கிமீ தூரம். ஊரடங்கு காரணமாக போக்குவரத்து வசதிகள் எதுவும் இல்லை. கேரளத்தில் உப்பங்கழிகளில் செயல்படும் படகு போக்குவரத்தும் இல்லை. இயந்திர படகு மூலம் இதர பயணிகளுடன் பயணித்துதான் சான்ட்ரா மார்ச் மாதம் தேர்வுகள் எழுதியிருந்தார்.
""எந்தப் போக்குவரத்து வசதியும் இல்லாமல் எப்படி கோட்டயம் போய் தேர்வு எழுதுவது... என் அதிர்ஷ்டம் அவ்வளவுதான்.. இந்த தடவை பிளஸ் டூ தேர்ச்சி பெற முடியாது..' என்று கவலையுடன் இருந்த எனக்குள் ஒரு பொறி மின்னியது. எனது கிராமத்திலிருந்து கோட்டயத்திற்கு கேரள அரசு படகுப் போக்குவரத்து வசதி ஊரடங்கு காலத்திற்கு முன் இருந்தது. ஊரடங்கு காரணமாக பயணிகள் படகுப் போக்குவரத்து நிறுத்தி வைக்கப்பட்டது. அந்தத் துறையின் இயக்குநரைத் தொடர்பு கொண்டு பேசினால் ஒருவேளை வழி பிறக்கும் என்ற அரைகுறை நம்பிக்கையில், பெற்றோரிடம் சொன்னேன். "சரி முயற்சித்துப் பார்க்கலாமே' என்று பெற்றோர் கிராமத்திலிருந்த சமூக ஆர்வலரிடம் சொல்ல.. அவர் படகு போக்குவரத்துத்துறை அதிகாரியை தொடர்பு கொண்டு எனது நிலைமையைச் சொல்ல...',
"சான்ட்ரா மே 29 , 30 தேதிகளில் தேர்வு எழுத கோட்டயம் கொண்டு சென்று திரும்பவும் அழைத்து வர இயந்திரப் படகு ஒன்று வரும்' என்று படகுப் போக்குவரத்துத் துறை இயக்குநர் ஷாஜி நாயர் உறுதி அளித்தார்.
எங்களுக்கு இதை நம்ப கொஞ்ச நேரம் பிடித்தது. சில தருணங்களில் இறைவனின் அருளால் "மாயாஜாலம் நடக்கும் என்பது உண்மையானது. சொன்னது போலவே அந்த இரண்டு நாட்களில் எனது கிராமத்திற்கு இயந்திரப் படகு முற்பகல் பதினொரு மணிக்கு வந்து என்னை ஏற்றிக் கொண்டு கோட்டயம் பள்ளியிருக்கும் இடத்திற்கு அருகே உள்ள படகு நிலையத்தில் இறக்கி விட்டது. நான் தேர்வு எழுதி முடித்து திரும்பும் வரையில் காத்திருந்து மீண்டும் எனது கிராமத்தில் இறக்கிவிட்டது. படகு வருவதைப் பார்த்து ஏறுவதற்காக ஓடி வந்த இதர பயணிகளை ஏற்றிக் கொள்ளவில்லை. என்னிடம் டிக்கெட் கட்டணமாக போக, வர ஒரு நாளைக்கு பதினெட்டு ரூபாய் மட்டுமே படகு ஊழியர் பெற்றுக் கொண்டார்.
படகின் ஒரு வழி பயணத்திற்கு மட்டும் ஆகும் செலவு நான்காயிரம் ரூபாய். படகு ஊழியர்கள் ஓட்டுநர் அடக்கம் ஐந்து பேர்கள். இப்படி இரண்டு நாட்கள் கேரள அரசின் படகு எனக்காக மட்டும் இயங்கியது. எனது பயணத்திற்காகக் கேரள அரசு செலவு செய்தது மொத்தம் பதினாறாயிரம் ரூபாய்.
எனது பெற்றோர் கூலித் தொழிலாளர்கள். ஏழ்மையான குடும்பத்தில் பிறந்த என்னால் தேர்வுகள் எழுத முடியாமல் போயிருந்தால் ஒரு கல்வியாண்டு இழப்பாகியிருக்கும்'' என்கிறார் சான்ட்ரா பாபு.