
மாம்பழ அல்வா
தேவையானவை:
மாம்பழம் - 3
பால் - 500 மி.கி
சர்க்கரை - 250 கிராம்
நெய் - 100 கிராம்
முந்திரிப்பருப்பு - 15
செய்முறை: முந்திரிப் பருப்பைப் பொடித்து நெய்விட்டு வறுத்து எடுத்துக் கொள்ள வேண்டும். மாம்
பழத்தைச் சாறாக பிழிய வேண்டும். அடிகனமானப் பாத்திரத்தில் மாம்பழச்சாறு, பால், சர்க்கரை சேர்த்து நிதானமான தீயில் வைத்து கொதிக்கவிட்டு கிளறிக் கொண்டே இருக்க வேண்டும். கெட்டியானதும். சிறிது சிறிதாக நெய்விட்டுக் கிளற வேண்டும். பாத்திரத்தில் ஒட்டாமல் சுருள வரும்பொழுது நெய் தடவிய தட்டில் கொட்டிப் பரப்ப வேண்டும். வறுத்து வைத்துள்ள முந்திரிப் பருப்பைத் தூவி அலங்கரிக்க வேண்டும். சூடு ஆறிய பிறகு கத்தியால் துண்டுகள் போடவும்.
மாம்பழ பர்பி
தேவையானவை:
மாம்பழம் - 2
தேங்காய் - 1
பால் பவுடர் - 100 கிராம்
சர்க்கரை - 200 கிராம்
ஏலக்காய்ப் பொடி - 1 தேக்கரண்டி
நெய் - 2 மேசைக்கரண்டி
செய்முறை: மாம்பழத்தை சாறாக்க வேண்டும். அடிகனமானப் பாத்திரத்தில் நெய்விட்டு அடுப்பில் வைத்து மாம்பழச்சாறை சேர்த்து கிளறவேண்டும். சாறு கெட்டியானதும் இறக்கி வைத்து அதில் தேங்காய்த்துருவல், சர்க்கரை, பால்பவுடர் எல்லாம் சேர்த்துக் கிளறி மீண்டும் அடுப்பில் வைத்து மிதமான தீயில் நன்றாகக் கிளறி நெய்விட வேண்டும். மாம்பழச்சாறு சுண்டி பாத்திரத்தில் ஒட்டாமல் வரும் பொழுது ஏலக்காய்ப் பொடி போட்டு நெய்தடவிய தட்டில் விட வேண்டும். லேசாக ஆறியதும் துண்டுகள் போட வேண்டும்.
மாம்பழ பாயசம்
தேவையானவை:
மாம்பழம் - 4
சர்க்கரை - 100 கிராம்
பால் - 500 மில்லி
முந்திரிபருப்பு - 5
உலர்ந்த திராட்சை - 5
ஏலக்காய்ப் பொடி - 1 மேசைக்கரண்டி
செய்முறை: மாம்பழங்களைச் சுத்தம் செய்து ஆவியில் வேகவைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். சூடு ஆறியதும் தோல், கொட்டை நீக்கி சாறெடுத்து ஒரு டம்ளர் தண்ணீர் சேர்த்து சர்க்கரையும் சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும். நன்றாகக் கொதித்ததும் இறக்கி வைத்து வறுத்த முந்திரி, கிஸ்மிஸ் வகைகளையும் சேர்த்து ஆற வைக்க வேண்டும். பாலில் கொஞ்சம் தண்ணீர் சேர்த்து நன்றாக கொதிக்கவிட்டு இறக்கி வைக்க வேண்டும். மாம்பழச்சாறு சூடு ஆறியதும் பாலுடன் கலந்து ஏலக்காய்ப்பொடியைத் தூவி கலக்கி பரிமாறலாம்.
மாம்பழ சாம்பார்
தேவையானவை:
துவரம் பருப்பு - 100 கிராம்
மஞ்சள் பொடி - 1 மேசைக் கரண்டி
சாம்பார் பொடி - 50 கிராம்
பச்சைமிளகாய் - 4
தேங்காய் - அரை மூடி
எண்ணெய் - தேவையானவை
நடுத்தர அளவு மாம்பழம் - 2
மிளகாய் வற்றல் - 2
கடுகு - 1 தேக்கரண்டி
புளி - 25 கிராம்
உளுந்தம் பருப்பு - 1 மேசைக்கரண்டி
கடலைப்பருப்பு - 1 தேக்கரண்டி
கறிவேப்பிலை - சிறிது
உப்பு - தேவைக்கேற்ப
செய்முறை: பருப்பை மஞ்சள் பொடிபோட்டு குழைய வேக வைத்து எடுத்துக் கொள்ளவும். புளியை தண்ணீர்விட்டு கரைத்து தேவையான உப்பு போட்டு சாம்பார் பொடி போட்டு கரைத்து பருப்பில்விட்டு கொதிக்க வைக்க வேண்டும். பச்சைமிளகாயைப் பிளந்து சாம்பாரில் போடவும். தேங்காயை வறுத்து அரைத்து அதில் போட வேண்டும்.
மாம்பழத்தை இரண்டு பக்கமும் பிளந்தவாறு நறுக்கி கொதிக்கிற சாம்பாரில் போட்டு மூடி வைக்க வேண்டும். வாணலியில் ஒரு கரண்டி எண்ணெய் விட்டு அடுப்பில் வைத்து காய்ந்ததும் மிளகாய் வற்றலை கிள்ளிப் போட்டு, கடுகு, உளுந்தம் பருப்பு, கறிவேப்பிலை தாளித்து சாம்பாரில் போடவும். பெருங்காயப் பொடி, கொத்துமல்லி தழையைப் போட்டு மூடி வைத்து பிறகு பயன்படுத்தினால் ருசியாக இருக்கும்.