
ஆக்கப்பூர்வமாக நாளைகழிக்கிறேன்!
பிரபல சின்னத்திரை தொகுப்பாளர்களில் வி.ஜே ரம்யா குறிப்பிடத்தக்கவர். இவர், எப்போதும் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருப்பவர். தற்போது கரோனா பரவலைத் தடுக்கும் விதமாக அரசு அறிவித்துள்ள ஊரடங்கு உத்தரவு காரணமாக தனது வீட்டிலேயே பாதுகாப்பாக இருப்பதுடன் அவரது ரசிகர்களிடம் கரோனா குறித்த விழிப்புணர்வையும் ஏற்படுத்தி வருகிறார்.
இந்த பதிவுகள் எல்லாம் சமூக வலைதளங்களில் வைரலாகின. அந்தவகையில், சில நாட்களுக்கு முன்பு அவர் "மாஸ்டர்' படத்தின் "வாத்தி கமிங்...' பாடலுக்கு நடனம் ஆடிக்கொண்டே கையில் துடைப்பத்துடன் தனது வீட்டை சுத்தம் செய்யும் வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தார். ஐந்து லட்சத்திற்கும் அதிகமான ரசிகர்கள் இந்த வீடியோவை பார்த்திருக்கின்றனர். இதுகுறித்து ரசிகர்கள் அவரிடம் கேட்டதற்கு, ""நான் தினமும் தவறாமல் உடற்பயிற்சி செய்யும் பழக்கம் உடையவள். வீட்டைக் கூட்டி பெருக்குவதும் ஒரு உடற்பயிற்சிதான். பிறரைப் பற்றி பழி சொல்வது, புறம் பேசுவது , சாக்கு சொல்வது எல்லாம் எனக்கு எப்பவுமே பிடிக்காது. எனவே, ஆக்கப்பூர்வமான முறையில் ஒவ்வொரு நாளையும் கடந்துவருகிறேன் என்று'' கூறியுள்ளார்.
"மைம்' நிகழ்ச்சிகள்நடத்துவேன்!
விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகிய "கலக்கப்போவது யாரு' நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் கேப்ரில்லா. தற்போது பெரியத்திரையில் வாய்ப்புகள் கிட்ட அதிலும் கவனம் செலுத்தி வருகிறார். நயன்தாராவின் நடிப்பில் வெளிவந்த "ஐரா' படத்தில் நயன்தாராவின் சிறு வயது வேடத்தில் நடித்திருந்த கேப்ரில்லா, தற்போது "கருப்பழகி தியேட்டர் பேக்டரி' என்ற நாடகக் குழுவைத் தொடங்கியுள்ளார்.
இது குறித்து அவர் கூறியிருப்பதாவது: ""நான் திரைத்துறைக்கு வருவதற்கு முன்பு ஒரு "மைம்' கலைஞராகதான் இருந்தேன். அப்போதிருந்தே மைம் கலையை முறைப்படி மக்களுக்கு கொண்டு சேர்க்க வேண்டும் என்ற எண்ணம் இருந்து வந்தது. தற்போதுதான் அதற்கு வாய்ப்பு கிட்டியுள்ளது. மாணவர்களுக்கு நடிப்பு மற்றும் மைம் கலையை கற்றுத்தர ஒரு நாடகக் குழுவைத் தொடங்கியுள்ளேன். என்னைப் பொருத்தவரை, திரைப்படத்தையும், நாடகத்தையும் சமமாகவே கருதுகிறேன். ஊரடங்கு முடிந்ததும் என் நாடகக் குழுவின் மூலம் மாநிலம் முழுவதும் "மைம்' நிகழ்ச்சிகள் நிறைய நடத்த இருக்கிறேன்'' என்றார்.