
"பெண்கள் கிரிக்கெட்டில் 2021 உலகக் கோப்பை போட்டியில் கடைசி முறையாக பங்கு கொண்டு உலகக் கோப்பையை இந்திய அணி பெற முயற்சிப்பேன். அத்துடன் கிரிக்கெட்டிலிருந்து முழுமையாக விடை பெறலாம் என்று முடிவு செய்துள்ளேன்' என்கிறார் மித்தாலி ராஜ்.
மித்தாலிக்கு 37 வயதாகிறது. 2019 செப்டம்பரில் "டி 20' கிரிக்கெட் ஆட்டத்திலிருந்து ஓய்வு பெற்ற மித்தாலி "ஒரு நாள் சர்வதேச' கிரிக்கெட் ஆட்டத்தில் கவனம் செலுத்தி வருகிறார். 2021-இல் முற்றிலுமாக இந்திய பெண்கள் கிரிக்கெட்டிலிருந்து மித்தாலி விடை பெறுவார். 2017-இல் மித்தாலி தலைமையில் பெண்களுக்கான உலகக் கோப்பை போட்டியில் இறுதிச் சுற்றுக்குச் சென்றாலும் இங்கிலாந்து பெண்கள் அணியிடம் தோல்வி அடைந்தது. 2020 உலகக் கோப்பை போட்டியில் ஹர்மன்பிரீத் தலைமையில், இறுதிச் சுற்றில் இந்திய பெண்கள் அணி ஆஸ்திரேலிய அணியிடம் வெற்றியை இழந்தது.
மித்தாலி சொல்கிறார்:
""இறுதி போட்டி நடக்கும் போது "அழுத்தம்' இந்திய பெண் ஆட்டக்காரர்களைப் பற்றிக் கொள்கிறது. தொடக்கத்திலேயே தடுமாற்றம் தொடங்கிவிடுகிறது. அதுதான் தோல்விகளுக்கு காரணம். என்னை "மெதுவாக பேட்டிங்' செய்பவள் என்று சொல்கிறவர்கள் உண்டு.
கிரிக்கெட்டில் அறிமுகமானபோது நான்தான் முதலாவதாக பேட் செய்வேன். 2000-இல் உலகக் கோப்பைக்கான போட்டியில் மூன்றாவதாக பேட் செய்தேன். நன்றாக விளையாடினேன் என்று சொல்லிக் கொள்கிறமாதிரி ஓட்டங்களைக் கணிசமாக ஈட்டினேன். அப்போது எனக்கு தலைமைப் பொறுப்பு எதுவும் இல்லை. அதனாலோ என்னவோ என்னால் தைரியமாக விளையாட முடிந்தது. 40 பந்துகளில் 50 ஓட்டங்களுக்கு மேலாக எடுப்பவர்கள் வரிசையில் சேர்ந்தேன். மெதுவாக அல்லது நின்று அல்லது அதிரடியாக நான் பேட்டிங் செய்ய வேண்டும் என்பது குழுவின் தீர்மானம். குழு சொல்கிற மாதிரிதான் நான் ஆரம்பம் முதல் விளையாடி வந்திருக்கிறேன். குழுவின் வழிகாட்டலிலிருந்து நான் எப்போதும் விலகிப் போகவில்லை. அதனால்தான் என்னால் அதிக ஓட்டங்களை எடுக்க முடிந்தது.
தற்போது, இந்த கரோனா ஊரடங்கின் புதிய சூழ்நிலைக்குப் பொருந்திப்போவது மிகவும் சிரமமாக இருந்தது. விளையாட்டு வீரர்கள் பயிற்சிக்காக மைதானத்தில் இருக்க வேண்டும். வெளியே இருந்து பழகிவிட்டோம். அப்படி பழகியவர்கள் நான்கு சுவர்களுக்குள் ஒடுங்கி இருக்கணும் என்றால் மூச்சு முட்டும்தானே? விளையாட்டு வீரர்களைப் பொருத்தமட்டில் வீட்டுக்குள் இருக்கும். புதிய சூழ்நிலையை எதிர்கொள்வது என்பது சவாலான விஷயம். பலருக்கும் மனநிலையைப் பாதிக்கவும் செய்யலாம். ஆனால் புதிய சூழ்நிலைகள், சந்தர்ப்பங்களுக்குத் தகுந்தவாறு பொருந்திக் கொள்ள எங்களுக்கு பயிற்சிகள் தரப்பட்டுள்ளது. அதனால் வீட்டுக்குள் இருப்பதை என்னால் சமாளிக்க முடிந்திருக்கிறது.
பலருக்கும் வீட்டுக்குள் பயிற்சி செய்ய வசதி இருக்காது. வெளியே ஜிம்மிற்குப் போவார்கள். மைதானத்தில்தான் கிரிக்கெட் பயிற்சி செய்ய முடியும். ஊரடங்கில் வெளியே போக முடியாத போது ஜிம், மைதானப் பயிற்சிகளை நினைத்துப் பார்க்க முடியாது. பெரிய அடுக்குமாடி கட்டடத்தில் வசித்தால், வசதிகள் இருக்கும். நான் வீட்டிற்குள் சில பயிற்சிகளை செய்து கொள்கிறேன். நிச்சயமாக எனது ஃபிட்நஸ்ஸில் சரிவில்லாமல் இருக்காது. ஆனால் நிலைமை சரியாகி பொதுமுடக்கம் இல்லாமல் போகும் போது மைதானத்தில் தீவிர பயிற்சிகளை செய்து ஃபிட்டாக்கிக் கொள்வேன்.
கிரிக்கெட்டில் பிசியாக இருக்கும் போது பலவீனங்களை இனம் கண்டு கொள்ள நேரம் கிடைக்காது. இந்த ஊரடங்கு காலத்தில் எனது பலவீனங்களை அடையாளம் கண்டு அதை எப்படி கையாள வேண்டும் என்று சிந்திக்க நேரம் கிடைத்திருக்கிறது.
கிரிக்கெட் ஆட்டம் சிறப்பாக அமைய குழுவினருடன் ஆடி பயிற்சி செய்ய வேண்டும். குழுவுடன் பயிற்சி மைதானத்தில் மட்டுமே நடத்த முடியும். இப்போதைய சூழ்நிலையில் அது சாத்தியமில்லை. நிலைமை எப்போது சீராகும் என்று யாராலும் சொல்லவும் இயலாது என்ற நிலை ஏற்பட்டிருக்கிறது. ஆனால் நிலைமை மாறும் போது இந்திய அணி சுதாரித்துக் கொண்டு தயாராகிவிடும்' என்கிறார் மித்தாலி ராஜ்.