ஊரடங்கின் போது ஒரு புதிய முயற்சி

ரோனா காரணமாக ஊரடங்கில் எல்லோரும் வீட்டுக்குள்ளே முடங்கிக் கிடக்கும் நேரத்தில் ஒரு சிலர் மட்டும், வீட்டில் சும்மா இருக்கப் பிடிக்காமல், ஏதாவது புதுமையான முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறார்கள்.
ஊரடங்கின் போது ஒரு புதிய முயற்சி

ரோனா காரணமாக ஊரடங்கில் எல்லோரும் வீட்டுக்குள்ளே முடங்கிக் கிடக்கும் நேரத்தில் ஒரு சிலர் மட்டும், வீட்டில் சும்மா இருக்கப் பிடிக்காமல், ஏதாவது புதுமையான முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறார்கள். அவர்களில் ஒருவர் கர்நாடக இசைக் கலைஞர் சுதா ரகுநாதன். 

சென்னை எத்திராஜ் கல்லூரியில் பொருளாதாரத்தில் முதுகலைப் பட்டம் பெற்றவரான அவர், கர்நாடக இசைத்துறையில் சங்கீத கலாநிதி, பத்ம பூஷண்  உள்ளிட்ட பல்வேறு சீர்மிகு கெüரவங்களைப் பெற்றவர். தனது "சமுதாயா பவுண்டேஷன்' மூலமாக பல்வேறு சமூகப் பணிகளிலும் ஈடுபட்டு வருகிறார். இந்த ஊரடங்கின்போது, அவர் ஈடுபட்ட புதிய முயற்சி "எக்ஸ்பிரஷன்ஸ் எக்ஸ்பிரஸோ' ( Expressions Expresso)  என்ற பெயரில் ஒரு யூடியூப் சானல் மூலமாக பிரபலங்களை பேட்டி காண்கிறார்.  சுதா ரகுநாதனின் இந்த புதிய முகம் குறித்து அவருடன் ஒரு பேட்டி:

இந்த ஐடியாவின் ஆரம்பப் புள்ளி எது?

நேரத்தைப் பொன்னாக மதிக்கிறவள் நான். சும்மா இருப்பது என்பது எனக்குத் துளியும் பிடிக்காத விஷயம். பத்தாம் தேதி ஒரு கச்சேரி, இருபதாம் தேதி இன்னொரு கச்சேரி என்றால், பத்தாம் தேதி கச்சேரி முடித்தவுடன், அப்பாடா! என்று ஓரிரு நாட்கள் ரெஸ்ட் எடுத்துக் கொண்டு, அதன் பிறகு இருபதாம் தேதி கச்சேரிக்கு தயார் ஆக ஆரம்பிக்கலாம். ஆனால் நான் அப்படிச் செய்யமாட்டேன். பதினொன்றாம் தேதி காலையிலேயே, இருபதாம் தேதி கச்சேரிக்குத் திட்டமிட ஆரம்பித்துவிடுவேன். அதுதான் என் சுபாவம். அப்படிப்பட்ட  நான், இந்த ஊரடங்கின்போதும்  பிசியாக இருக்க விரும்பினேன். நான் செய்வது இசை, கலை தொடர்புடையதாக இருந்தால், அது எனக்கு கூடுதலான மகிழ்ச்சியைத் தரும் என யோசித்தபோது, இன்றைய தொழில்நுட்ப வசதிகளையும் பயன்படுத்த விரும்பினேன். அப்போதுதான் ஐடியா தோன்றியது. கர்நாடக இசை, சினிமா, சபா என்று கலையோடு தொடர்புடைய பிரமுகர்களை, மனம் விட்டுப் பேச வைத்தால், அவர்களின் அனுபவங்களும், கருத்துகளும் வீட்டிலேயே முடங்கிக் கிடக்கும் மக்களுக்கு உற்சாகமும், ஊக்கமும் அளிப்பதாக இருக்கும் அல்லவா? இந்த  எண்ணமே தொடக்கப்புள்ளி.

முதல் எபிசோடு அனுபவம்?

கிருஷ்ணா ஸ்வீட்ஸ் முரளிதான் முதல் விருந்தினர். இனிப்பான பிசினஸ் செய்யும் அவர் கலைகளின் போஷகர். நாள்தோறும் சென்னை நகரத்தில் ஒரு நல்ல நிகழ்ச்சியை நடத்தி வருபவர். நகர சபாக்களில் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடத்துவதற்கு உதவுபவர். எனவே, அவரையே முதல் விருந்தினராகத் தேர்வு செய்தேன். அது  ஊரடங்கு ஆரம்பித்த நேரம். எத்தனை வாரங்களுக்கு, மாதங்களுக்கு அது நீடிக்கும் என்று நிச்சயமாகத் தெரியாத கடுமையான சூழ்நிலை. நோய்த் தொற்று ஒரு பக்கம் என்றால், இன்னொரு பக்கம் பொருளாதார ரீதியாகவும் கடுமையான  பாதிப்பு இருக்கும் சூழ்நிலையில், முரளியைப் போல ஒரு பெரிய பிசினஸ்மேன் தன் கருத்துகளைப் பகிர்ந்துகொள்வது பொருத்தமாக இருக்கும் என்றும் நினைத்தேன். அவரும் மகிழ்ச்சியோடு சம்மதித்தார். தன் கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டார். அதில் குறிப்பிடத்தக்க அம்சம் என்னவென்றால், தற்போது நிலவும் நிச்சயமற்ற சூழ்நிலையிலும் அவரது வார்த்தைகள் மிகவும் பாசிட்டிவாக, எதிர்காலம் குறித்து ஒரு நம்பிக்கையை ஏற்படுத்தும் வகையில் இருந்தது. அதுவே, இந்த முயற்சிக்கு நல்லதொரு துவக்கமாக அமைந்தது.

அடுத்து எந்தெந்த பிரமுகர்கள் இடம்பெற்றார்கள்?

ஆரம்பித்தபோது, வாரம் ஒரு பிரமுகர் என்று ஆறு வாரங்களுக்கு இதைச் செய்ய நினைத்தேன். கர்நாடக இசைக் கலைஞர் செüமியா, நாரத கான சபாவின் ஹரிசங்கர், நாட்டியக் கலைஞர்கள் அலர்மேல் வள்ளி, மற்றும் மாளவிகா சருக்கை, மூத்த கர்நாடக இசைக் கலைஞர் ஆர். வேதவல்லி, மிருதங்க வித்வான் உமையாள்புரம் சிவராமன், திரைப்பட இயக்குநர் வஸந்த் சாய், மற்றும் கெüதம் வாசுதேவ மேனன் என்று பலரும் இடம் பெற்றிருக்கிறார்கள். 

பாடகி செüமியாவும் நானும் இணைந்து ஒரு அமைப்பினை நடத்தி வருகிறோம். அதன் மூலமாக, இந்த ஊரடங்கு  காலகட்டத்தில் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட கலைஞர்கள் குறிப்பாக நாதஸ்வர, தவில் கலைஞர்களுக்கு எப்படி உதவி செய்யலாம் என்பது உள்ளிட்ட பல்வேறு முக்கியமான விஷயங்கள் குறித்து நாங்கள் உரையாடினோம். 

இயக்குநர்கள் வஸந்த், கெüதம் ஆகியோர் என்ன சொன்னார்கள்?

இயக்குநர் வஸந்த், இந்த ஊரடங்கு தனக்கு ஒரு வரப்பிரசாதம் என்று குறிப்பிட்டார். நிறைய புத்தகங்கள் படிப்பது, திரைப்படங்கள் பார்ப்பது, எழுதுவது என்று நேரம் உருப்படியாக செலவாகிறது என்று குறிப்பிட்டார். மொத்தத்தில் ஊரடங்கு தன் கிரியேடிவிட்டிக்கு மிகவும் உதவியது என்றார். ஜாலியாக பாட்டுப் பாடியபடியே பேட்டியைத் துவக்கிய கெüதம், நன்றாகப் பாடக்கூடியவர் என்பது எனக்கு அப்போதுதான் தெரிய வந்தது. 

நிகழ்ச்சிக்கு வரவேற்பு எப்படி?

அபாரம். ஒவ்வொரு எபிசோடுக்கும் ஆயிரக்கணக்கான பார்வையாளர்கள். அடுத்து பங்கேற்கப் போகிற பிரபலம் யார் என்று ஏகப்பட்ட விசாரிப்புகள். என் ஆத்ம திருப்திக்காக ஆரம்பித்த இந்த முயற்சிக்கு, இவ்வளவு பெரிய அளவில் வரவேற்பு கிடைத்திருப்பது நான் எதிர்பார்க்காத ஒன்று.

நிகழ்ச்சியில் ஆங்கிலத்தில் பேசாமல், தமிழில் பேசலாமே?

நீங்கள் சொல்வது போல வேறு ஒரு சிலர் கூட ஆரம்பத்தில் என்னிடம் கேட்டார்கள். ஆனால், உலகத்தின் எல்லா பகுதிகளிலும் இருக்கும் கலை ரசிகர்களுக்கும் இந்த நிகழ்ச்சி,  சென்றடைய வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். கர்நாடக மற்றும் நாட்டியக் கலைஞர்களுக்கு பல்வேறு நாடுகளிலும், தமிழ் தெரியாத ஏராளமான அமெரிக்க, ஐரோப்பிய ரசிகர்கள் இருக்கிறார்கள்.  அந்தக் கலைஞர்களின் கருத்துகள் அவர்களையும் சென்றடைய வேண்டும் என்பதுதான் எனது நோக்கம். எனவேதான், சில பிரமுகர்களோடு ஆங்கிலத்திலும் உரையாட நேர்கிறது. 

எதிர்காலத் திட்டம்?

ஆரம்பத்தில் திட்டமிட்டதையும் தாண்டி தற்போது நீண்டு கொண்டே இருக்கிறது. ரசிகர்களிடம், இதற்கு ஒரு எதிர்பார்ப்பும், வரவேற்பும் இருக்கிறது. நிகழ்ச்சியில் கொஞ்சம் தொய்வு ஏற்படுவதாக எனக்குத் தோன்றினாலும், உடனே நிறுத்திவிடுவேன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com