தினந்தோறும் நூறு பேருக்கு உணவு!

கொளுத்தும் கோடை வெயிலின்போதும், கோவை காந்திபுரம் மேம்பாலத்தின் கீழ் சரியாக பிற்பகல் 1 மணிக்கு வரும் பர்ப்பிள் நிற ஸ்கூட்டியை அடையாளம் கண்டு அங்குள்ள உணவுத் தேவைப்படுபவர்கள் எழுந்து உணவு
தினந்தோறும் நூறு பேருக்கு உணவு!

கொளுத்தும் கோடை வெயிலின்போதும், கோவை காந்திபுரம் மேம்பாலத்தின் கீழ் சரியாக பிற்பகல் 1 மணிக்கு வரும் பர்ப்பிள் நிற ஸ்கூட்டியை அடையாளம் கண்டு அங்குள்ள உணவுத் தேவைப்படுபவர்கள் எழுந்து உணவு பெறத் தயாராகின்றனர். இதேபோல கோவை மாநகரின் பல்வேறு பகுதிகளில் வசிக்கும் ஏழைகள், வீடற்ற முதியவர்களும் வெண்ணிலாவை அடையாளம் கண்டு உணவு பெற்றுச் செல்கின்றனர். தினசரி உணவு அளிப்பது மட்டுமல்லாமல் அவர்களது நலனையும் விசாரித்து அவர்களுடன் சிறிது பேசி அவர்களது நிலை குறித்து அறிந்து வருவது வெண்ணிலாவின் வழக்கம்.

வெண்ணிலாவின் பூர்விகம் கேரள மாநிலம் கொழிஞ்சாம்பாறை. வேலைக்காக 20 ஆண்டுகளுக்கு முன்னர் கோவைக்கு குடிபெயர்ந்து தற்போது அங்கேயே நிரந்தரமாக வசித்து வருகிறார். கோவை காந்திபுரத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் விற்பனைப் பிரிவு மேலாளராகப் பணியாற்றி வரும் வெண்ணிலா, அதில் வரும் வருவாயைக் கொண்டு தினசரி குறைந்தது 35 பேருக்கு உணவு அளித்து வருகிறார்.

உழைப்பை மட்டுமே நம்பி வாழும் சாதாரண நடுத்தர குடும்பத்தில் பிறந்து வளர்ந்த வெண்ணிலா சிறு வயது முதலே அனைத்திற்கும் கஷ்டப்பட்டு முன்னேறியுள்ளார். பல நாள்கள் உணவின்றி தவித்ததாகவும், எனவே வாழ்வில் நல்ல ஊதியம் கிடைக்கும் நிலைக்கு வந்தால் நிச்சயம் நான்கு பேருக்கு உணவளித்து உதவ வேண்டும் என்று முடிவெடுத்ததாக கூறுகிறார். இதன்படி கடந்த 2014-ஆம் ஆண்டு முதல் தினசரி குறைந்தது 20 ஏழைகளுக்கு அல்லது வீடற்றவர்களுக்கு வெண்ணிலா உணவு அளித்து வருகிறார். மழை, வெயில் என எந்த சூழ்நிலையிலும் வெண்ணிலா தனது இந்த சேவையை நிறுத்தாமல் தொடர்ந்து செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து அவர் கூறுகையில், ""நான் பசியால் வாடியதுபோல என்னைச் சுற்றி யாரும் இருக்கக்கூடாது என்ற எண்ணத்தில் இதைச் செய்து வருகிறேன். இதற்காக எனக்கு தினசரி ரூ.200 முதல் ரூ.300 வரை மட்டுமே செலவாகிறது. எனது ஊதியத்தைக் கொண்டு இதை என்னால் சமாளிக்க முடிகிறது. தொடக்கக் காலத்தில் எனது அலுவலகப் பகுதியில் வசிக்கும் ஏழைகளுக்கு தினசரி உணவளிப்பது, பண்டிகைக் காலங்களில் அவர்களுக்கு இயன்றவரை புத்தாடைகள் வாங்கிக்கொடுப்பது போன்ற செயல்களிலும் ஈடுபட்டேன்.

இதையடுத்து ஒரு நாள் அலுவலகத்தில் இருந்து வீட்டுக்குச் செல்லும்போது சாலையில் ஏழைகள் பலர் உணவின்றி மயக்க நிலையில் இருப்பதைக் கண்டு மனம் வருத்தமடைந்தது. பின்னர் இவர்களுக்கு உதவ முடிவு செய்து, அலுவலகத்தைச் சுற்றி சுமார் 1 கி.மீ சுற்றளவில் வசிக்கும் ஏழைகள் குறித்து எனது இருசக்கர வாகனத்தில் சென்றவாறு கணக்கெடுத்தேன். அதில் சுமார் 15 முதல் 20 பேர் வரை இருப்பது தெரியவந்தது.

பின்னர் தினமும் காய்கறி, அரிசி வாங்கி இவர்களுக்கென சமைத்து அதை சிறிய பேக்கிங் பாக்ஸ்களில் போட்டு எனது வாகனத்தில் வைத்து அலுவலகத்துக்கு கிளம்பிச் செல்வேன். எனது உணவு இடைவெளியின்போது வாகனத்தை எடுத்துக்கொண்டு இப்பகுதியில் வசிக்கும் யாசகர்களுக்குச் சென்று உணவளிப்பேன்.

 என்னுடைய இந்த முயற்சியை அலுவலகத்தினர், அவர்களது நண்பர்களென என பலரும் கண்டு பாராட்டினர். இதுகுறித்து பொதுமக்களுக்கும் ஒரு ஆர்வம் ஏற்பட்டு தூண்டி அவர்களும் இந்த சேவையில் ஈடுபட வேண்டும் என்ற நோக்கில் முகநூலில் க்ஷங்ஞ்ஞ்ஹழ் ப்ங்ள்ள் ஸ்ரீண்ற்ஹ் என்ற பக்கத்தை துவங்கினேன். இதில் நான் தினமும் செய்யும் சேவையை சிறு விடியோ காட்சிகளாக செல்லிடப்பேசியில் பதிவு செய்து அதை பதிவேற்றி வந்தேன். இதைப் பார்த்த பலர் என்னைத் தொடர்பு கொண்டு பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ முன் வந்தனர்'' என்கிறார்.
வெண்ணிலாவின் இந்த சேவையைப் பாராட்டி திண்டுக்கல் "தாய்மை அறக்கட்டளை' மற்றும் "விடியல்' கலைக்குழுவினர் 2018, 2019-ஆம் ஆண்டுக்கான சமூக சேவகி விருது, கலைவேந்தர் விருது உள்ளிட்டவற்றை வழங்கி கெüரவித்துள்ளது.
 கரோனா நோய்த்தொற்று காலத்தில் பொதுமக்கள் பலர் அவதியுற்ற நிலையில் ஏழைகளின் நிலையோ மிகவும் மோசமடைந்தது. சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டிய கட்டாயம் ஏற்பட்ட காரணத்தால் உதவி செய்யக்கூட பொதுமக்கள் தயக்கம் காட்டினர். இந்நிலையில் இந்த இக்கட்டான சூழலிலும் வெண்ணிலா தனது சேவையைத் தொடர்ந்துள்ளார். பொது முடக்க காலத்தில் அலுவலகப் பணியும் இல்லாததால் வீட்டில் இருந்த வெண்ணிலா ஏழைகளுக்கு உணவளிப்பதற்கு கூடுதல் நேரம் ஒதுக்கீடு செய்துள்ளார்.
இதன் காரணமாக கடந்த 40 நாள்களுக்கும் மேலாக தினசரி 150-க்கும் மேற்பட்ட ஏழைகள், வீடற்ற ஏழைகளுக்கு உணவளித்துள்ளார். இதற்காக காலை 5 மணிக்கு எழுந்து சமையல் வேலைகளைத் தொடங்கி முடித்து, தனது நண்பர் ஒருவரின் ஆட்டோவில் உணவுப் பொட்டலங்களை ஏற்றிக் கொண்டு கோவை மாநகர் முழுவதும் வலம் வந்து உணவளித்துள்ளார்.
இதேபோல மற்றொரு சம்பவத்தில் மார்ச் 19-ஆம் தேதியன்று சேலத்தில் இருந்து கடலூர் செல்லும் பேருந்தில் ஏறுவதற்கு பதிலாக கோவை பேருந்தில் ஏறிய அஞ்சபுலி(78) என்ற முதியவர் கோவை வந்துள்ளார். பல இடங்களிலும் உதவி தேடி கிடைக்காததையடுத்து சாலையோரத்தில் தஞ்சம் அடைந்துள்ளார். 
இதுகுறித்து தகவலறிந்த வெண்ணிலா அவரைச் சந்தித்து அவரிடம் இருந்த ஆதார் நகலைக் கொண்டு அவரது சொந்த ஊரின் வட்டாட்சியரைத் தொடர்புகொண்டு அஞ்சபுலியின் நிலையை எடுத்துக்கூறி அவரது உறவினர்களுக்குத் தகவல் தெரிவிக்க முயற்சித்துள்ளார். அஞ்சபுலி குறித்து தகவலறிந்து அவரது உறவினர்கள் வருவதற்கு ஒரு மாதத்துக்கும் மேலாகியுள்ளது.  இந்த இடைப்பட்ட காலத்தில் அஞ்சபுலியை ஒரு காப்பகத்தில் தங்க வைத்த வெண்ணிலா ஒரு மாதத்துக்கும் மேல் அவரது பராமரிப்புச் செலவை ஏற்றுள்ளார்.
ஊரடங்கு காலம் முழுவதும் சாலையில் சந்திக்கும் ஏழைகளுக்கு உணவுடன் சேர்த்து முகக்கவசத்தையும் வெண்ணிலா அளித்து வந்துள்ளார். 
இவரது சேவையைப் பாராட்டி பணம் அளித்து உதவ வரும் நபர்கள், அமைப்பினரிடம் இருந்து வெண்ணிலா பணம் எதுவும் பெறுவதில்லை, அதற்கு பதிலாக சமையல் பொருள்களை வாங்கித் தருமாறு கூறி அந்த உதவியை ஏற்றுக்கொள்கிறார்.  ""கோவை மாநகரில் உணவின்றி யாரும் தவிப்பதில்லை என்ற நிலையை அடையும் வரை தொடர்ந்து சேவையாற்றுவேன்'' என்கிறார் வெண்ணிலா.
செய்தி: த.சித்தார்த்
படம் : சாய் வெங்கடேஷ்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com