குடும்ப வன்முறை விழிப்புணர்வு குறும்படம்!

நந்திதா தாஸ். வயது 50. நடிகை, எழுத்தாளர், இயக்குநர் என்று முத்திரை பதித்த பெண்மணி. டெல்லி பல்கலைக் கழகத்தில் சமூகப் பணியில் முதுகலைப் பட்டம் பெற்றவர்.
குடும்ப வன்முறை விழிப்புணர்வு குறும்படம்!

நந்திதா தாஸ். வயது 50. நடிகை, எழுத்தாளர், இயக்குநர் என்று முத்திரை பதித்த பெண்மணி. டெல்லி பல்கலைக் கழகத்தில் சமூகப் பணியில் முதுகலைப் பட்டம் பெற்றவர்.  தமிழ் உட்பட பத்து இந்திய மொழி திரைப்படங்களில் நடித்திருக்கிறார். "அழகி', "கன்னத்தில் முத்தமிட்டால்', "நீர்ப்பறவை' ஆகியவை அவர் நடித்த தமிழ்ப்படங்கள். நடிகை என்ற முறையிலும், இயக்குநர் என்ற முறையிலும் இந்தியாவிலும், அயல்நாட்டு திரைப்பட விழாக்களிலும் விருதுகள் பெற்ற சிறப்புக்குரியவர். குழந்தைகள் திரைப்படக் கழகத்தின் தலைவராகவும் இவர் இருந்திருக்கிறார். குழந்தைகள் மற்றும் பெண்கள் தொடர்பான பிரச்னைகளுக்காக தொடர்ந்து குரல் கொடுத்து வருபவர் நந்திதா தாஸ். தாபா மேத்தாவின் சர்ச்சைக்குரிய "ஃபயர்', "எர்த்' ஆகிய படங்களில் நடித்தவர் நந்திதா தாஸ்.

கரோனா தொற்று காரணமாக பொதுமுடக்கம் அமல் படுத்தப்பட்டவுடன், வீட்டில் சும்மா இருக்காமல், ஒரு குறும்படத்தை எடுத்திருக்கிறார் நந்திதா தாஸ். அந்த ஏழு நிமிட குறும்படம் குடும்ப வன்முறை பற்றிப் பேசுகிறது. இந்தப் படத்தின் ஒரே ஒரு பிரதான கதாபாத்திரம் மட்டுமே இடம் பெறுகிறது. பொதுமுடக்கம் காரணமாக, வீட்டிலிருந்தபடியே அலுவலகப் பணியை செய்யும் ஒரு குடும்பத்தலைவியின் கதாபாத்திரம் அது. அந்தப் பாத்திரத்தை ஏற்று நடித்திருப்பதுடன்,  நந்திதா தாஸ் அந்தக் குறும்படத்தை எழுதி இயக்கியும் இருக்கிறார். நந்திதா தாஸின் வீட்டுக்குள்ளேயே அவரது ஐ போனைப் பயன்படுத்தியே இந்தப் படத்தை அவர் எடுத்திருக்கிறார். இன்னொரு போன் மூலமாக வசனங்களைப் பதிவு செய்தாராம். இந்தப் படத்தை எடுத்து முடிக்க மூன்று நாட்கள் ஆனதாம். இந்த படம் எடுக்க உதவியவர்கள் என்று தன் மகன் விகானையும் சமையல்காரர் பரத்தையும் குறிப்பிடுகிறார் நந்திதா.

நந்திதா தாஸ், தன் வீட்டில் இருந்தபடியே, மடிக்கணிணியை வைத்துக் கொண்டு, காணொலி மூலமாக தன் அலுவலக வேலையைப் பார்த்துக் கொண்டிருக்கிறார். அப்போது அவருக்கு எதேச்சையாக ஒரு போன் வருகிறது. பெண்கள் பிரச்னைகளுக்காக பணியாற்றிக் கொண்டிருக்கும் தொண்டு நிறுவனமா? என்று அழுதபடியே கேட்கிறார் மறு முனையில் இருக்கும் பெண். பின்னணியில், அவரது கணவர், அந்தப் பெண்மணியை அடித்துத் துன்புறுத்துவது கேட்கிறது. அந்தப் பெண்ணுக்கு உதவ வேண்டும் என்ற நல்ல எண்ணத்துடன் உடனே காவல் நிலையத்துக்கு தகவல் சொல்லி, அந்தப் பெண்ணின் தொலைபேசி எண்ணை  கொடுத்து, உடனடியாக அந்த பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு உதவும்படிக் கேட்கிறார். ஆனால், போலீஸ் தரப்பில், "பெண்கள் உதவி மையத்துக்கு போன் செய்யுங்க' என்று அலட்சியமாக பதில் வருகிறது. பெண்கள் உதவி மைய தொடர்பு தொலைபேசி எண்ணுடன் படம் முடிகிறது. இந்தக் குறுப்படத்தின் எடிட்டிங் பலமுறை தேசிய விருது பெற்ற நம் ஊர் எடிட்டரான ஸ்ரீகர் பிரசாத்.

இந்தப் படம் குறித்து என்ன சொல்கிறார் நந்திதா தாஸ்? "இந்தியாவில் குடும்ப வன்முறைக்கு ஆளாகும் பெண்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகமாகி வருகிறது. இந்த பொதுமுடக்கம்  நேரத்தில், அது இன்னமும் அதிகரித்துள்ளதாக தெரிய வந்தபோது, என் மனம் மிகவும் வேதனை அடைந்தது.பொதுமுடக்கத்தில் வீட்டுக்குள்ளே முடங்கிக் கிடக்கும் நேரத்தில், இந்த விஷயம் பற்றி ஒரு குறும் படம் எடுக்கும் எண்ணம் தோன்றியது. பொதுவாகவே, நம் ஊரில் குடும்பத் தலைவிகளின் பங்களிப்பு உரிய அங்கீகாரம் பெறுவதில்லை. வீட்டில் இருக்கும் ஒரு பெண்மணி, நாள் முழுக்க வீட்டின் பல்வேறு பொறுப்புக்களையும் கவனித்துக் கொள்கிறாள். வேலைக்குப் போகிற பெண்ணோ, தன் அலுவலகப் பணிச்சுமையுடன் கூட வீட்டு வேலைகள் அனைத்தையும் அவளேதான் செய்ய வேண்டி இருக்கிறது. இந்தச் சூழ்நிலையிலும், அவள் உழைப்பை மதிக்காமல், அவள் மீது வன்முறை கட்டவிழ்த்து விடப்படுகிறது. இந்த சமூகப் பிரச்னை குறித்த எனது சிறிய பங்களிப்புதான் இந்தக் குறும்படம்' என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com