மாடித்தோட்டம்: அர்ப்பணிப்பு இருந்தால் ஜெயிக்கலாம்

நாம் என்னதான் டெக்னாலஜி தெரிந்து கொண்டாலும் உணவு பற்றிய விழிப்புணர்வு இல்லையென்றால் எதிர் கால தலைமுறையினரை அது பெரிதும் பாதிக்கும்.
மாடித்தோட்டம்: அர்ப்பணிப்பு இருந்தால் ஜெயிக்கலாம்


நாம் என்னதான் டெக்னாலஜி தெரிந்து கொண்டாலும் உணவு பற்றிய விழிப்புணர்வு இல்லையென்றால் எதிர் கால தலைமுறையினரை அது பெரிதும் பாதிக்கும். இன்றைய காலகட்டத்தில் ரசாயனம் கலந்த உணவினை சாப்பிடுவதால் என்னென்ன பாதிப்புகள் வருகிறது என்பதைக் கண்கூடாகப் பார்க்கிறோம். பெரும்பாலான பிரச்னைகளுக்குக் காரணம் உணவுதான். இதனால் அடுத்த தலைமுறையை காப்பாற்ற வேண்டிய கடமையும், பொறுப்பும் நமக்கிருக்கிறது- என்று கூறுகிறார் மாடித்தோட்டம் குறித்து பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் ஜெயஸ்ரீ கிருஷ்ணன்:

""நான் வசிப்பது ஓ.எம்.ஆர். பெருங்குடியில். பூர்வீகம் காஞ்சிபுரம். எம்.எஸ்.சி., எம்.பி.ஏ. படித்த எனக்கும் வேளாண்துறைக்கும் எந்த சம்பந்தமுமில்லை. படித்து வேலைக்கு போயிட்டு இருந்த எனக்கு, கல்யாணம் ஆனதும் குடும்பத்தை பார்க்க வேண்டும் என்ற சூழல். அதே சமயம் எனக்கு வீட்டில் சும்மா இருப்பது பிடிக்காது. இதனால் 15 ஆண்டுகள் டியூஷன் சென்டர் வைத்து நடத்தி வந்தேன். இதைத் தவிர, யோகா பயிற்சியாளர், பிராணிக் ஹீலர், ஃபேஷன் டிசைனர், இன்டீரியல் டெக்கரேட்டர், இன்டர் நேஷனல் ஸ்கூல் டீச்சர் எனப் பல துறைகளிலும் கவனம் செலுத்தினேன்.

சின்ன வயதிலிருந்தே தோட்டத்தின் மீது ஆர்வம் உண்டு. சொந்தமா வீடு கட்டி செடி, கொடிகளுடன் வாழ வேண்டும் என்று ஆசை.

இதற்காகவே, பெருங்குடியில் இடம் வாங்கி வீடு கட்டினோம். இந்த வீட்டின் பூமி பூஜை போடும் போதே பல வகையான பழ மரங்களை நட்டு வைத்தேன். வீட்டை கட்டியானதும் வீட்டைச் சுற்றிலும் இருந்த மீதி இடங்களில் காய்கறி செடிகளை வளர்க்கத் தொடங்கினேன்.

வெயில் காலத்தில் மொட்டை மாடியால் வீட்டினுள் சூடு அதிகம் இருந்ததால், அதைத் தவிர்க்க யோசித்தபோதுதான் மாடித் தோட்டம் பற்றி அறிந்தேன். அப்போது மாடித்தோட்டம் எல்லாம் அவ்வளவாக பிரபலமில்லாத நேரம். இருந்தாலும், தைரியமாக மாடியில் 25 தொட்டிகளை வைத்து, நிழல் வலையையும் பயன்படுத்தினேன். அப்போதே தனித்துவமான செடிகளைத் தேடித் தேடி வாங்கி வளர்க்கத் தொடங்கினேன். ஸ்பைஸ் வகைகளிலேயே 40 வகையான செடிகளை வைத்திருக்கிறேன். உதாரணமாக ஒரு செடியின் இலையை சிறிது எடுத்து பிரியாணி செய்யும்போது போட்டால் போதும், வேறு எந்த மசாலாப் பொருளும் பிரியாணிக்கு சேர்க்க தேவையில்லை. அவ்வளவு மணமாக இருக்கும். இப்படி பேஷனாக ஆரம்பித்ததுதான் இந்த மாடித்தோட்டம்.

அந்த சமயத்தில் 2013-இல் விவசாயம் தொடர்பாக நடந்த கண்காட்சி ஒன்றில் நண்பர்களுடன் சேர்ந்து செடிகளை வைத்து ஸ்டால் ஒன்று வைத்தேன். அதில் ஒரே நாளில் 40 ஆயிரம் ரூபாய் சம்பாதிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அப்போதுதான் அதை வியாபாரமாக்கலாம் என்று தோன்றியது. இது சம்பந்தமான அறிவும், அனுபவமும் தேவை என்பதை உணர்ந்து தீவிர தேடலில் இறங்கினேன். இதற்காக 2 ஆண்டுகள் இதைப் பற்றி நிறைய ஆராய்ச்சிகள் செய்தேன். நிறைய விவசாயிகளையும், எக்ஸ்போர்ட் செய்பவர்களையும் போய் நேரில் பார்த்து தெரிந்து கொண்டேன்.

அதன்பின் வீட்டில் செடிகளின் எண்ணிக்கையையும் அதிகப்படுத்தி, அதிலிருந்தே வியாபாரத்துக்கான செடிகளையும் உருவாக்கத் தொடங்கினேன். அதன்பிறகு அதில் உள்ள நுணுக்கங்களையெல்லாம் கற்றுக் கொண்டு பயணிக்கத் தொடங்கினேன்.

பின்னர் மாடித்தோட்டம் அமைக்கும் பயிற்சியை மற்றவர்களுக்கு அளிக்கத் தொடங்கினேன். சிட்டியில் மாசு, தூசு மற்றும் சீதோஷ்ண மாற்றம்... எனப் பல பிரச்னைகள் இருக்கிறது. இதை எல்லாம் மீறி அவர்களுக்கு பாசிட்டிவான ரிசல்ட்டை காண்பித்து, ஊக்கப்படுத்தி, இயற்கை விவசாயத்தில் அவர்களைக் கொண்டு வருவது சவாலான விஷயம்.

இந்த ஏழு ஆண்டுகளில் ஆயிரம் நபர்களுக்கு மேல் மாடித் தோட்டம் அமைப்பது குறித்த பயிற்சி அளித்து அவர்களும் தங்களின் வீட்டில் தோட்டம் அமைக்க உதவி செய்திருக்கிறேன்.

இதனையடுத்து, அண்ணா பல்கலைக்கழகத்தில் இருந்து என்னை அழைத்து மாடித்தோட்டம் குறித்து பேச சொன்னார்கள். அதைத்தொடர்ந்து, சென்னையில் உள்ள பெரும்பாலான கல்லூரிகளிலும், பள்ளிகளிலும், ஐ.டி நிறுவனங்களிலும் இயற்கை விவசாயம் பற்றிய விழிப்புணர்வும், பாடமும் நடத்தி வருகிறேன்.

இதனைத் தொடர்ந்து விவசாய பின்னணியில் சிட்டியில் வெற்றிகரமாக செயல்பட்டு வரும் தொழில்முனைவோராக நிறைய விருதுகள் கிடைத்திருக்கிறது.

தற்போது 750 சதுர அடியில், சுமார் 500 செடிகள் வைத்திருக்கிறேன். இதில் பல வண்ண பூச்செடிகள், பல வகையான கீரை, நாட்டுக் காய்கறிகள், 80 வகையான மூலிகை செடிகள், ஆரஞ்சு, சாத்துக்குடி, ட்ரேகன் பழம், நோனி, சப்போட்டா , திராட்சை முதலான பழ மரங்கள் வைத்திருக்கிறேன். தற்போது ஆப்பிள் மரம் வைத்து ஆராய்ச்சி செய்து வருகிறேன்.

எனது வீட்டு தோட்டத்தைப் பார்வையிட, அவ்வப்போது பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகள் வருவார்கள். கடந்த ஆண்டில் ஆப்கானிஸ்தானில் இருந்து 25 பேர் விவசாய மாணவர்கள் வந்து பார்வையிட்டு சென்றுள்ளார்கள். ரோபாட்டிக்ஸ் இன் ஆக்ரிகல்சர் மாணவர்கள், ஆராய்ச்சிக் கூடமாக என் தோட்டத்தை பயன்படுத்தியிருக்கிறார்கள்.

தற்போது கிச்சன் கார்டனிங் என்று ஆவடி, அம்பத்தூரில் இருந்து சோழிங்கநல்லூர் வரை 15 மாநகராட்சி பள்ளிகளில், அவர்கள் சத்துணவு சமைப்பதற்கு தேவையான காய்கறி செடிகளை வைத்து தோட்டம் அமைத்து கொடுத்திருக்கிறேன்.

அண்ணா பல்கலைக்கழகத்தில் தற்போது, மூலிகை தோட்டம் அமைத்துக் கொடுத்துள்ளேன்.

3 ஆண்டுகளுக்கு முன்பு விதைப் பிள்ளையார் என்ற கான்சப்ட் முதன்முதலில் சென்னையில் கொண்டு வந்தது நான்தான். பிள்ளையார் சிலைகளில் கீரை விதைகளை வைத்திருந்தேன். பூஜை முடிந்து பிள்ளையாரை செடியில் கரைத்ததும், விதைகள் முளைத்து 21 நாளில் கீரைகள் அறுவடைக்கு தயாராகிவிடும். அதற்கும் நல்ல வரவேற்பு இருந்தது.

இந்த பொதுமுடக்கம் காலத்தில் கூட நான் ஓய்வாக இல்லை. போன் மூலமாகவும், ஆன் லைன் மூலமாகவும் நிறைய விழிப்புணர்வு வகுப்பும், மாடித்தோட்ட பயிற்சியும் அளித்து வருகிறேன்.

மாடியில் தோட்டம் போட்டால் எடை தாங்குமா? நீர்க்கசிவு ஏற்படுமா? கட்டடம் பாதிக்குமா போன்ற கேள்விகள் இப்போதும் பலருக்கும் ஏற்படுகிறது. இதனாலேயே விருப்பம் இருந்தும் அதனை செயல்படுத்த முடியாமல் பலர் உள்ளனர். இனி அந்த பயம் தேவையில்லை. மொட்டை மாடியின் தரைத்தளத்திற்கு எவ்வித பாதிப்புமின்றி தோட்டத்தை வடிவமைக்கும் தொழில்நுட்பங்களும், தண்ணீர் பிரச்னைக்கு சொட்டு நீர் பாசனம் முறை மூலம் பயிர் வளர்க்கும் உபகரணங்கள், தோட்ட வேலைக் கருவிகள் என அனைத்தும் இப்போது மார்க்கெட்டில் வந்துவிட்டது. அதனால் எந்தவித பயமும் இல்லாமல் எல்லாருமே மாடித் தோட்டம் தொடங்கலாம்.

முதலில் மாடித்தோட்டம் என்றதும் காய்கறி செடிகளை முயற்சிக்காமல், கீரையில் தொடங்கி படிப்படியாக காய்கறிக்கு வந்தால் நிச்சயம் வெற்றி கிடைக்கும். அதுபோன்று ஆரம்பத்தில் ஐந்து செடிகள் வாங்கி, முறையே மாதம் ஐந்து செடிகள் என்று வைத்தால், ஒரு வருடத்தில் உங்கள் மாடியில் ஐம்பது செடிகளை நீங்கள் உற்பத்தி செய்யலாம். அடுத்தகட்டமாக உங்கள் தேவைகள் போக, அதை வியாபாரமாக்கலாம். எந்த அனுபவமும் இல்லாமல் என்னால் இந்தத் துறையில், சாதிக்க முடிந்தது என்றால் நிச்சயம் மற்றவர்களாலும் இதில் ஜெயிக்க முடியும். ஆனால் கொஞ்சம் அர்ப்பணிப்பு தேவை அவ்வளவுதான்''
என்றார் ஜெயஸ்ரீ.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com