புத்துயிர்  பெற்ற கொண்டி சேலைகள்!

கர்நாடக மாநிலம் பாகல் கோட் மாவட்டத்தில் உள்ள பல கிராமங்களில் ஒன்றான இல்கால் கிராமத்தில் உருவாகும் சேலைகள் பிரசித்திப் பெற்றவையாகும்.
புத்துயிர்  பெற்ற கொண்டி சேலைகள்!

கர்நாடக மாநிலம் பாகல் கோட் மாவட்டத்தில் உள்ள பல கிராமங்களில் ஒன்றான இல்கால் கிராமத்தில் உருவாகும் சேலைகள் பிரசித்திப் பெற்றவையாகும். 20 ஆயிரம் நெசவாளர்கள் வசிக்கும் இந்த கிராமங்களில் உருவாகும் சேலைகளை "கொண்டி சேலைகள்' எனக் குறிப்பிடுவார்கள். அப்படியென்ன இந்த சேலைகளின் சிறப்பு?

பருத்தி நூலிழைகளால் நெய்யப்படும் இந்த பாரம்பரிய இல்கால் சேலைகளின் தலைப்பு மட்டும் பட்டு நூலிழைகளால் நெய்யப்பட்டிருக்கும். இதுதான் இங்குள்ள நெசவாளர்களின் தனிச்சிறப்பாகும். இந்த சேலைகள் மன்னர்கள் காலத்திலிருந்தே, 8-ஆம் நூற்றாண்டில் இல்கால் கிராம நெசவாளர்களால் உருவாக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

பருத்தி நூலிழைகளைப் பிரித்து பட்டு நூலிழைகளுடன் இணைத்து சேலை தலைப்பை உருவாக்குவது பெரும்பாலும் நெசவாளிகளின் குடும்பத்தில் பெண்களின் பணியாகும். பருத்தி சேலையுடன் பட்டு தலைப்பைக் கொண்டுள்ளதால் இந்த சேலைகளை "கொண்டி ஸ்டைல்' என்றும், "இல்கால் சேலைகள்' என்றும் குறிப்பிடுவதுண்டு. இதன் சிறப்பு காரணமாகவே இச்சேலைகளுக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது.

இந்தப் புதுமையான பருத்திபட்டு இணைப்பு சேலைகள் தான் இங்குள்ள நெசவாளர்களின் வாழ்வாதாரமாக உள்ளது. இச்சேலைகளை விற்பனைக்காக அதிக அளவில் கொள்முதல் செய்வது மராட்டிய மாநிலம்தான். பாகல்கோட்டில் பல கிராமங்களில் கைத் தொழிலாக இச்சேலைகள் நெய்யப்பட்டாலும் முதலிடம் வகிப்பது இல்கால் கிராமம்தான்.

துவக்கத்தில் கையால் தறியில் நெய்யப்பட்டு வந்த இச்சேலைகள், கால மாற்றத்தால் விசைத்தறிகளுக்கு மாறியதோடு, பருத்தி இழைகளுக்கு பதிலாக சிந்தடிக் இழைகளும் இடம் பெற துவங்கிவிட்டன. இருப்பினும் பல நெசவாளர்கள் தங்கள் பாரம்பரிய நெசவுமுறையை விட்டுவிடாமல் கொண்டி சேலைகளை தயாரிக்கின்றனர்.

அன்றைய நெசவாளர்கள் இச்சேலைகளை உருவாக்குவதை பெருமையாக கருதினர். ஆனால் இன்றைய தலைமுறையினர் இது எங்கள் விதி என்று அலுத்துக் கொள்கின்றனர்.

ஏனெனில் நாள் முழுக்க உழைத்தாலும், ஒரு குடும்பம் 200 ரூபாய்க்கு மேல் சம்பாதிக்க முடிவதில்லை. இச்சேலைகளுக்கு புவிசார் குறியீடு கிடைத்த பின்னரும் தேவையான அளவு சம்பாதிக்க முடிவதில்லை என்பதால், நெசவாளர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. நாளொன்றுக்கு குறைந்தபட்ச ஊதியம் கேட்கும் இளைய தலைமுறையினர் நெசவுத் தொழிலை விட்டுவிட்டு வேறு வேலைகளுக்கு செல்லத் தொடங்கிவிட்டனர்.

நவீன தொழில் நுட்ப முறைகள் நெசவுத் தொழிலை கைத்தறியிலிருந்து விசைத்தறிக்கு மாற்றியதால், இந்த பாரம்பரிய நெசவுத் தொழிலில் ஏற்படுத்திய தொய்வை, அதே தொழில் நுட்பம் மீண்டும் இத்தொழிலுக்கு புத்துயிர் அளித்திருக்கிறதாம். இல்கால் சேலை மொத்த உரிமையாளரும், நெசவுத் தொழிலில் நான்காவது தலைமுறையை சேர்ந்தவருமான விஜயகுமார் கூறுகையில், ""தற்போது, மீண்டும் கொண்டி சேலைகளுக்கு உள்நாட்டில் மட்டுமின்றி உலக அளவில் மார்க்கெட் அதிகரித்துள்ளது. நவீன தொழில் நுட்பத்தை பயன்படுத்தி முகநூல் பக்கம், இணையதளம் ஆகியவற்றை உருவாக்கி இச்சேலைகள் பற்றிய தகவல்களை பகிர்ந்து வருவதுதான் மார்க்கெட் சூடு பிடித்ததற்கு காரணமாகும்'' என்கிறார்.

இவரது முன்னோர் 1875- இல் தொடங்கிய விற்பனை நிலையத்தை தொடர்ந்து நடத்திவரும் இவரது முயற்சியால் ஆன்லைன் விற்பனை அதிகரித்துள்ளதாம். நெசவாளிகளும் மகிழ்ச்சியடைந்துள்ளனர். உற்பத்தியும் அதிகரித்துள்ளது.

சோமய்யா கலாவித்யா என்ற கைவினைப் பொருள் விற்பனை நிலைய நிறுவனர் ஜூடி பிரடெர் என்ற பெண்மணி, நெசவாளர்களின் உழைப்புக்கேற்ற ஊதியம் கிடைப்பதில்லை என்பதை உணர்ந்து அவர்கள் குறைகளை நிவர்த்தி செய்ததோடு, அதிக அளவில் உற்பத்தியாகும் கொண்டி சேலைகள் விற்பனை உரிமையும் பெற்றுள்ளார்.

மேலும் நெசவாளர்களுக்கு புதிய வடிவமைப்புகள், அதற்கேற்ற வண்ண சேர்க்கைகள் போன்றவற்றில் பயிற்சி தரவும் ஏற்பாடு செய்துள்ளார். பத்தாண்டுக்கு முன்பு நலிவடைந்த இச்சேலை உற்பத்தி தற்போது புதுப் பொலிவுடன் மீண்டும் விற்பனையில் முதலிடத்தைப் பிடித்து வருகிறது.

பழைய பாரம்பரிய நெசவுத்தொழில் புத்துயிர் பெற்றுள்ளது. இன்றைய தலைமுறையினரும் பழையபடி பருத்தி இழைகளையே பயன்படுத்துகின்றனர். நெய்வதற்கு சுலபமாக பருத்தி இழைகளுக்கு கஞ்சி பசையை உபயோகிக்கின்றனர். நவீன காலத்திற்கேற்ப பெண்களை கவரும் வகையில் டிசைன்கள் உருவாக்கப்படுகின்றன.

இச்சேலைகளை கண்காட்சிகளில் அறிமுகப்படுத்துவதற்காக வாழ்க்கையின் நூலிழைகள் என்ற பெயரில் குழுவொன்று அமைத்துள்ளனர். உலக அளவில் மார்க்கெட்டைப் பிடிக்க அரசு ஒத்துழைப்பு அளித்தால் போதும் என்பதுதான் இன்றைய கொண்டி சேலை நெசவாளர்களின் கோரிக்கையாகும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com