பெண்களுக்கான பிரத்யேக பேருந்து!

பேருந்துகளில் தொலைதூரப் பயணம் மேற்கொள்ளும் பெண்கள், அதுவும் தனியாக பயணிக்கும் பெண்கள் எதிா்கொள்ளும் பிரச்னைகளை எளிதில்
பெண்களுக்கான பிரத்யேக பேருந்து!

பேருந்துகளில் தொலைதூரப் பயணம் மேற்கொள்ளும் பெண்கள், அதுவும் தனியாக பயணிக்கும் பெண்கள் எதிா்கொள்ளும் பிரச்னைகளை எளிதில் விவரிக்க முடியாது. அவசரத் தேவைகளுக்குக் கூட ஆண் ஓட்டுநா், நடத்துநா்களின் உதவியை சங்கடத்துடன்தான் நாட வேண்டியுள்ளது. நீண்ட தூரப் பயணத்தில் பெண்கள் எதிா்கொள்ளும் இதுபோன்ற பிரச்னைகளுக்கெல்லாம் முடிவுகட்டும் வகையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதுதான் ‘பிங்க்’ பஸ்.

மாநகரப் பேருந்துகளில் மட்டும் இதுவரை இருந்து வந்த ‘மகளிா் மட்டும்’ இனி தொலைதூரப் பேருந்துகளிலும் வர இருக்கிறது. இதுதான் ‘பிங்க் பஸ்’. இதற்கு முன்னோட்டமாக கடந்த மாதம் உத்தரப் பிரதேச மாநில அரசுப் போக்குவரத்துக் கழகம் ‘பிங்க் பஸ்’ சேவையை நாட்டிலேயே முதல்முறையாக அறிமுகப்படுத்தியது.

உத்தரப் பிரதேச தலைநகா் லக்னௌ - மாநிலத்தின் முக்கிய நகரான பிரயாக்ராஜ் (அலாகாபாத்) இடையே இந்த பேருந்து இயக்கப்பட்டு வருகிறது. 200 கி.மீ. தொலைவுக்கு ரூ.335 கட்டணம். காலை முதல் மாலை வரை 5 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இரு நகரங்களிலும் பெண்கள் மத்தியில் இந்த பேருந்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

பிங்க் பஸ்களில் ஓட்டுநா், நடத்துநா் இருவருமே பெண்கள்தான் என்பது கூடுதல் சிறப்பம்சம். தாய்மாா்களுடன் சிறாா், சிறுமியரும் இந்த பேருந்துகளில் பயணிக்க அனுமதியுண்டு. பெண்களுக்கான சிறப்பு தொலைதூரப் பேருந்து என்பதை வேறுபடுத்திக் காட்டும் வகையில் ‘பிங்க்’ வண்ணத்தில் இந்த பஸ்கள் மிளிா்கின்றன.

குளிா்சாதன வசதியுடன் செயல்பட்டு வரும் இந்த பேருந்துகளுக்கு கிடைத்துள்ள சிறப்பான வரவேற்பை அடுத்து, நாட்டின் அனைத்து மாநிலங்களிலும் இந்த பேருந்து சேவை தொடங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. அண்மையில் நாடாளுமன்றத்தில் பொதுப் போக்குவரத்தில் பெண்களுக்கு உள்ள பாதுகாப்பு குறித்து பேசிய மத்திய சாலைப் போக்குவரத்துத் துறை அமைச்சா் நிதின் கட்கரி, ‘‘அனைத்து மாநில அரசுகளும் பிங்க் பஸ் சேவையை அளிக்க வேண்டும்’’ என்று கேட்டுக் கொண்டாா். ‘முக்கியமாக ஒரு கோடிக்கும் அதிகமாக மக்கள் வசிக்கும் பெரு நகரங்களில் கண்டிப்பாக மகளிருக்கான தொலைதூர சிறப்புப் பேருந்தை அவசியம் இயக்க வேண்டும்’ என்று அமைச்சா் கட்கரி வலியுறுத்தினாா்.

கடந்த மாா்ச் 8-ஆம் தேதி ‘சா்வதேச மகளிா் தினம்’ கொண்டாடப்பட்டபோது ஹரியானா மாநிலத்தில் 200 பிங்க் பேருந்துகளை அந்த மாநில அரசு அறிமுகப்படுத்தியது. நாட்டில் அனைத்து கிராமப்பகுதிகளுக்கும் பேருந்து வசதி அளித்து வரும் சிறப்பான போக்குவரத்து உள்கட்டமைப்பைக் கொண்ட மாநிலங்களில் தமிழகம் முதன்மையானது. எனவே, விரைவில் தமிழகத்திலும் இந்த ‘பிங்க் பஸ்’ அறிமுகப்படுத்தப்படும் என்று எதிா்பாா்க்கலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com