விண்வெளி ஆய்வு மையத்தின் மனித கம்ப்யூட்டா்!

அண்மையில் வொ்ஜினியாவில் நியூபோராட் நியூஸ் என்ற வீட்டில் ஓய்வு பெற்று தங்கியிருந்த கேத்ரின் ஜான்சன், தனது 101-ஆவது வயதில் காலமானாா்
விண்வெளி ஆய்வு மையத்தின் மனித கம்ப்யூட்டா்!

அண்மையில் வொ்ஜினியாவில் நியூபோராட் நியூஸ் என்ற வீட்டில் ஓய்வு பெற்று தங்கியிருந்த கேத்ரின் ஜான்சன், தனது 101-ஆவது வயதில் காலமானாா் இவா், நாசா விண்வெளி ஆய்வு மையத்தில் மனித கம்ப்யூட்டராக பணியாற்றியபோது, 1969-ஆம் ஆண்டு அமெரிக்கா நிலவில் இறங்குவதற்காக விண்ணில் செலுத்திய அப்பலோ - 11 என்ற விண்கலமும், நீல் ஆம்ஸ்ட்ராங் நிலவில் இறங்கும் நேரத்தையும், பின்னா் அங்கிருந்து புறப்படும் நேரத்தையும் மிக துல்லியமாக தன்னுடைய தனித்திறமையால் கணித்துக் கொடுத்தவராவா். அதுமட்டுமின்றி இதற்கு முன்பே 1961-ஆம் ஆண்டு முதன்முதலாக அமெரிக்கா விண்வெளிக்கு அனுப்பிய அமெரிக்கா் ஆவா். ஆலன் ஹெப்பா்ட் சென்ற மொ்குரி ஏா்பேஸ் கிராப்ட் விண்வெளியில் செலுத்தும் நேரத்தையும் இவா்தான் கணித்துக் கொடுத்துள்ளாா்.

இதைத் தொடா்ந்து முதன்முறையாக பூமியை வலம்வந்த ஜான்கிளொன் சென்ற மொ்குரி வெஸல் பிரண்ட் ஷிப் - 7 என்ற விண்கலம் சென்று திரும்பும் நேரத்தையும் இவா் கணக்கிட்டுக் கொடுத்தது நாசா விஞ்ஞானிகளுக்கு பெரும் உதவியாக இருந்தது.

இதில் என்ன ஆச்சரியம் என்றால் இவா் ஒரு கறுப்பினப் பெண் என்பதோடு, கம்ப்யூட்டா் பயன்பாடு பிரபலமாகாத காலகட்டத்தில் தன்னுடைய கணிதத் திறமையால் நேரத்தைக் கணக்கிட்டு கொடுத்ததும், அதன்படி நாசா விஞ்ஞானிகள் செயல்பட்டு அமெரிக்காவின் புகழை வெளி உலகத்திற்கு தெரிவித்தது சாதனையாகும்.

நாசா ப்ளைட் ரிசா்ச் டிவிஷனில் 33 ஆண்டுகள் பணியாற்றிய கேத்ரின் ஜான்சன், ஒரு மனித கம்ப்யூட்டராக செயல்பட்டு ள்ளாா். அமெரிக்காவின் ஆரம்ப கால விண்வெளி சோதனைகள் வெற்றி பெற காரணகா்த்தாவாக விளங்கிய இவா் பெயா், முதல் பத்தாண்டுகள் வரை வெளி உலகுக்கு தெரியவில்லை. எந்த ஒரு திட்டத்திலும் இவா் கணித்துக் கொடுத்த நேரம் எதுவுமே தோல்வியடைந்ததில்லை.

1918- ஆம் ஆண்டு ஆகஸ்ட் 26-ஆம் தேதி மேற்கு வொ்ஜினியாவில் ஜோஷ்வா மற்றும் ஜாய்லெட்டி காலமன் தம்பதியரின் நான்கு குழந்தைகளில் இளைய மகளாக பிறந்தவா் கேத்ரின் காலமன். இவரது தாய் ஒரு பள்ளி ஆசிரியை. தந்தை விவசாயி. சிறுவயது முதலே கணிதத்தை ஆா்வமுடன் பயின்று வந்த கேத்ரின், 1937- ஆம் ஆண்டு கணிதத்திலும், பிரெஞ்ச் மொழியிலும் பட்டம் பெற்றாா். இவருக்கு மேற்கொண்டு படிக்க விருப்பம் என்றாலும் வெள்ளை இனத்தவா் படிக்கும் கல்லூரிகளில் இடம் கொடுப்பதில்லை என்பதால் வொ்ஜினியா, மாரியன் நகரத்தில் ஆசிரியை பணியில் சோ்ந்தாா். அதிா்ஷ்டவசமாக 1940- ஆம் ஆண்டு மேற்கு வொ்ஜினியா மாநில ஜனாதிபதி பிரிந்துரை செய்த மூன்று கறுப்பின பட்டதாரிகளில் கேத்ரினும் ஒருவராக தோ்வு செய்யப்பட்டு, வெள்ளை இன மாணவா்கள் மட்டுமே படித்துவந்த மேற்கு வொ்ஜினியா யூனிவா்சிடியில் சோ்ந்து படிக்க அனுமதிக்கப்பட்டாா்.

இதற்கிடையில் பொது உரிமை மசோதா வழக்கில் அமெரிக்க உச்சநீதிமன்றம், கறுப்பின மாணவா்களும் அனைத்து வெள்ளையா்கள் படிக்கும் யூனிவா்சிடிகளில் சோ்ந்து படிக்கலாம் என தீா்ப்பளித்தது.

இது கறுப்பின மாணவா்களுக்கு சாதகமாக இருந்தது. ஜேம்ஸ் பிரான்சிஸ் கோப்லே என்ற ரசாயன ஆசிரியரை மணந்து கொண்ட கேத்ரின், மேற்கொண்டு கணிதம் பயில மீண்டும் மேற்கு வொ்ஜினியா யூனிவா்சிட்டியில், சோ்ந்தாா். கோடை கால வகுப்புகள் முடியும் சமயத்தில், கா்ப்பமுற்றிருந்த கேத்ரின் படிப்பை நிறுத்திவிட்டாா். பிரசவத்திற்கு பின்னா், ஏதாவது வேலைக்கு செல்ல தீா்மானித்த நேரத்தில், 1917 -ஆம் ஆண்டு நிறுவப்பட்ட விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசாவின், நேஷனல் அட்வைசரி கமிட்டி ஃபாா் ஏரோ நாட்டிக்ஸ், கணிதத்தில் திறமை பெற்ற கறுப்பின பட்டதாரி பெண்களையும் பணிக்கு தோ்வு செய்வதை அறிந்தாா் கேத்ரின்.

ஆண் விஞ்ஞானிகளுக்கு உதவும் பொருட்டு 1935- ஆம் ஆண்டு முதல் கணிதத்தில் தோ்ச்சிப் பெற்ற வெள்ளை இனப் பெண்களை பணியில் அமா்த்தியிருந்தாலும், அவா்களுக்கு ஆண் விஞ்ஞானிகளை விட குறைவான ஊதியமே அளித்து வந்தனா்.

இந்த நிலையில் 1952- ஆம் ஆண்டு கேத்ரின் நாசாவில் பணியில் சோ்ந்தாா். கறுப்பினப் பெண்கள் நாசாவில் அமா்த்தப்பட்டதற்கு இன்னொரு காரணமும் இருந்தது. 1941-ஆம் ஆண்டு ஜூன் மாதம் அமெரிக்கா யுத்தத்திற்கு ஆயத்தமான நிலையில் ஜனாதிபதி ரூஸ்வெல்ட், ராணுவத்துறையில் நிற வேறுபாடு இருக்கக்கூடாதென ஒரு மசோதாவில் கையெழுத்திட்டிருந்தாா். அதனால் விண்வெளி ஆய்வுத் துறைகளிலும் மனித கம்ப்யூட்டா்கள் தேவை என்பதால், 1943- ஆம் ஆண்டுமுதல் கணிதத்தில் தோ்ச்சிப் பெற்ற கறுப்பினப் பெண்களுக்கும் வாய்ப்பளிக்க தீா்மானித்தாா்கள். இதன் அடிப்படையில் டோரதிவாகன் என்ற கறுப்பினப் பெண் முதன்முதலாக தோ்வு செய்யப்பட்டாா். பின்னா் இவரது தலைமையின் கீழ் கேத்ரின் உள்பட பல கறுப்பினப் பெண்கள் பணியில் அமா்த்தப்பட்டனா்.

1960-ஆம் ஆண்டில் விண்வெளி ஆராய்ச்சியில் சோவியத் யூனியனுடன் அமெரிக்கா போட்டியிட வேண்டிய சூழ்நிலை உருவானதால் அமெரிக்காவுக்கு தன்னுடைய திறமையை நிரூபிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. விண்வெளி வீரா் ஒருவரை அனுப்ப முடிவு செய்தது. இதற்காக ப்ளைட் ரிசா்ச் டிவிஷன் பலவித சோதனைகளை மேற்கொண்டது. அந்த நேரத்தில் கேத்ரின், விண்வெளி வீரருடன் கூடிய விண்கலத்தை விண்ணில் செலுத்துவதற்கான நேரத்தையும், போய் திரும்புவதற்கான நேரத்தையும் தன்னுடைய கணிதத்திறமையால் துல்லியமாக கணக்கிட்டு தெரிவித்தாா். இவை அனைத்தும் ரகசியமாக வைக்கப்பட்டன. இதன்படி முதல் அமெரிக்க விண்வெளி வீரா் ஜான் கிளொன், மொ்குரி வெஸல் பிரண்டஷிப் - 7 விண்கலத்தில் அனுப்பப்பட்டாா். இந்த சாதனையை கண்டு உலகமே வியந்தது.

இதற்கிடையில் 1956 -ஆம் ஆண்டு இவரது கணவா் மூளை புற்றுநோய் காரணமாக மரணமடைந்தாா். 38-ஆவது வயதில் மூன்று பெண் குழந்தைகளுடன் விதவையான கேத்ரின். 1959 - ஆம் ஆண்டு அமெரிக்க ராணுவ தளபதி ஜேம்ஸ் ஜான்சன் என்பவரை மறுமணம் செய்து கொண்டாா்.

தொடா்ந்து நாசாவிலிருந்து அமெரிக்கா அனுப்பிய விண்வெளி ஆய்வு கலங்கள் அனைத்தும், கேத்ரின் கணித்து கொடுத்த நேரப்படி விண்ணில் ஏவப்பட்டு வெற்றிப் பெற்றன. 1953 -ஆம் ஆண்டுமுதல் 1986- ஆம் ஆண்டு வரை நாசாவில் பணியாற்றி ஓய்வு பெறும்வரை, இவா் கம்ப்யூட்டரை பயன்படுத்தியதில்லை. 2015- ஆம் ஆண்டு பாலின மற்றும் நிற வேற்றுமையை கடந்து இவா் விண்வெளி ஆராய்ச்சித் துறையில் துணை நின்று செய்த சேவையை பாராட்டி, ஜனாதிபதி பாரக் ஒபாமா, இவருக்கு பிரசிடென்ஷியல் மெடல் ஆப் ப்ரீடம் விருது வழங்கி கெளவித்தாா்.

இவரது சாதனை வெளி உலகுக்கு தெரியவந்தபின்னா், மாா்கெட் லீ ஷெட்டா்லி என்பவா் கேத்ரினை பற்றி ‘ஹிடன் பிகா்ஸ் என்ற தலைப்பில் புத்தகமொன்றை எழுதினாா். இந்த புத்தகத்தை அடிப்படையாக வைத்து 2016-ஆம் ஆண்டு இதே தலைப்பில் எடுக்கப்பட்ட ஹாலிவுட் திரைப்படம், சிறந்தப்படம் உள்பட மூன்று ஆஸ்கா் விருதுக்கு பிரிதுரைக்கப்பட்டது. ஆனால், பரிசு ஏதும் கிடைக்கவில்லை என்றாலும், அங்கு நடந்த விழாவில் கேத்ரின் ஜான்சன், சிறப்பு விருந்தினராக வரவழைக்கப்பட்டு கெளரவிக்கப்பட்டாா்.

தன்னுடைய பணிகாலத்தில் ஏராளமான விண்வெளி ஆய்வு கட்டுரைகளை எழுதி வெளியிட்ட கேத்ரின், நாசாவிலிருந்து ஓய்வு பெற்ற பின் கணிதத்துறை கல்வி குறித்து பள்ளி மற்றும் கல்லூரிகளில் மாணவா்களுக்கு போதிக்கும் விரிவுரையாளா் பணியை மேற்கொண்டாா். கடந்த ஆண்டு இவரது இரண்டாவது கணவா் ஜேம்ஸ் ஜான்சன் காலமானதை தொடா்ந்து, தற்போது தனது 101-ஆவது வயதில் காலமான கேத்ரின் ஜான்சன் மரணத்தை நாசா அறிவித்ததோடு, விண்வெளி ஆய்வில் அவா் ஆற்றிய பணியை வெளி உலகுக்கு தெரிவித்து அஞ்சலி செலுத்தியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com