எங்களுக்கு 194 நாடுகளுமே ஒன்றுதான்!

கடந்த சில மாதங்களாக கதிகலங்க வைத்திருக்கும் கரோனாவின் வெறியாட்டத்தால் கலங்கிப் போயிருக்கும் மக்களை பாதுகாக்கவும்,  தன்னம்பிக்கை அளித்து அவர்களைத் தேற்றவும் இரவு பகல்
எங்களுக்கு 194 நாடுகளுமே ஒன்றுதான்!

கடந்த சில மாதங்களாக கதிகலங்க வைத்திருக்கும் கரோனாவின் வெறியாட்டத்தால் கலங்கிப் போயிருக்கும் மக்களை பாதுகாக்கவும்,  தன்னம்பிக்கை அளித்து அவர்களைத் தேற்றவும் இரவு பகல் பாராமல் போராடி வருகிறது டபிள்யு.எச்.ஓ. என்கிற உலக சுகாதார அமைப்பு. இந்த அமைப்பின் தலைமை இயக்குநராக பதவி ஏற்றிருப்பவர் தமிழகத்தைச் சேர்ந்த மருத்துவர் சௌமியா சுவாமிநாதன். பிரபல வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதனின் மகள். இவர், "மகளிர் மணி'க்கு அளித்த தொலைபேசிப் பேட்டி:

உலகையே அச்சுறுத்தி வரும் கரோனா குறித்து சொல்லுங்களேன்...

கரோனா வந்து நான்கு மாதங்கள் ஆகின்றன. முதல்முறையாக சீனாவில் இருந்து நிமோனியா போன்று புது கிருமி ஒன்று வந்திருப்பதாக உலக சுகாதார அமைப்புக்கு தெரியப்படுத்தினார்கள். அதிலிருந்து இந்த கிருமியைப் பற்றி நிறைய அறிவியல் பூர்வமான விஷயங்களை தெரிந்து கொண்டு வருகிறோம். இன்னும் தெரிந்து கொள்ள வேண்டியது நிறைய இருக்கிறது.

இது கரோனா வைரஸின் குடும்பத்தைச் சேர்ந்தது என்பதை முதலில் கண்டுபிடித்தோம். இதற்கு முன்பு மனிதர்களுக்கு வெவ்வேறு காலக்கட்டத்தில் 6 விதமான கரோனா வைரஸ் பாதித்திருக்கிறது. அதில் நான்கு கரோனா வைரஸ்கள் சாதாரண சளி இருமலை மட்டும் கொடுத்துவிட்டு சென்றுவிட்டன. மற்ற 2 கரோனா வைரஸ்கள் சார்ஸ், மெர்ஸ் என்று அழைக்கப்படுபவை. அவை இரண்டும் கொஞ்சம் கடுமையான தீநுண்மிகள். அதில் சார்ஸ் 2004}இல் சீனாவில்தான் உருவானது. பின்னர் தென்கிழக்கு நாடுகளில் பரவி, பின்னர் கனடா போன்ற மற்ற நாடுகளுக்கு பரவியது. அதை இரண்டு மாதத்திற்குள் கட்டுப்படுத்திவிட்டோம். அதன்பின் அது மறுமுறை வரவில்லை. மெர்ஸ் என்பது மத்திய கிழக்கு நாடுகளில் ஏற்பட்ட சின்ட்ரோம் வைரஸ். 8}10 வருஷமாக நமக்கு அதைப்பற்றி தெரியும்.

இப்போது பரவி இருக்கும் கரோனா வைரஸ் அதே வகையைச் சார்ந்தது தானா?

பொதுவாக கரோனா வைரஸ்கள் வெளவால்களிடம் உருவாகி பின்னர் விலங்குகள் மூலம் மனிதர்களுக்கு பரவுகிறது. சார்ஸ் வைரûஸ பொருத்தவரை, வெளவாலில் உருவாகி ஒரு காட்டுப் பூனை மூலம் மனிதர்களுக்கு பரவியது. மெர்ஸ், ஒட்டகத்தின் மூலம் மனிதர்களுக்கு பரவியது. இந்த கோவிட் }19 கரோனா வைரûஸ பொருத்தவரை வெளவால் மூலம் உருவாகி, எந்த விலங்கின் மூலம் மனிதனுக்கு பரவியது என்பதை இன்னும் கண்டறிய முடியவில்லை. அதற்கான ஆராய்ச்சிகள் நடந்து வருகின்றன.

அது தெரிந்த பிறகுதான் மருந்து கண்டுபிடிக்க முடியுமா?

இதன் ஜெனடிக் சீக்குவன்ûஸ சீனாவைச் சேர்ந்த விஞ்ஞானிகள் ஜனவரி 11}ஆம் தேதியே ஒரு ஜெனரல் டேட்டா பேஸ் தயார்படுத்தி மருத்துவர்கள் ஒப்புதலுடன் கொடுத்துவிட்டார்கள். நம்மிடம் இப்போதுள்ள அறிவியலின் வளர்ச்சியினால் 15 நாள்களுக்குள்ளேயே இந்த வைரஸ் எப்படிப்பட்டது, இதன் தன்மை என்ன என்பதெல்லாம் தெரிந்துவிட்டது. அதனால் தடுப்பு மருந்து கண்டுபிடிப்புகளும் வேகமாக நடைபெற்று வருகின்றன. நமது இந்திய நாட்டிலும் 8}10 ஆராய்ச்சியாளர்கள் தடுப்பு மருந்து கண்டுப்பிடிப்புகளை மேற்கொண்டு வருகிறார்கள். உலக அளவில் 100}க்கும் மேற்பட்டோர் தடுப்பு மருந்து கண்டு பிடிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள். அதனால் நாம் நம்பிக்கையோடு இருக்கலாம். நம்மை பாதுகாக்க கண்டிப்பாக இதிலிருந்து ஒன்று அல்லது இரண்டு ஆராய்ச்சிகள் வெற்றியடையும் என்று நம்பலாம். மருந்து கண்டுபிடிக்கும் வரை நாம் எல்லாரும் கட்டுப்பாடுகளுடன் இருந்தாக வேண்டும்.

தடுப்பு மருந்து கண்டு பிடிப்பதில் உலக நாடுகள் எல்லாமே முயற்சித்து வரும் நிலையில் நம்பிக்கை அளிக்கும் தகவல் எதுவும் வந்திருக்கிறதா?

இதுவரை சீனா மற்றும் பிற நாடுகளிலிருந்து 8 மருந்துகள் பாஸிட்டிவ் ரிசல்ட் வந்திருக்கிறது. அதை பயன்படுத்திய பிறகு தான் அது எந்தளவுக்கு வெற்றி பெறும் என்று தெரியவரும். இந்த தடுப்பு மருந்து கண்டுப்பிடிப்பை பொருத்தவரை நாம் இன்னும் ஆரம்பக்கட்டத்தில்தான் இருக்கிறோம்.

அப்படியானால், மருந்து கண்டுபிடிக்க இன்னும் எத்தனை நாள்களாகும்?

பொதுவாக எந்தவொரு நோய்க்கும் மருந்து கண்டுபிடிக்கும்போது முதலில் லேப்பில் வைரஸின் மாதிரிகளை வைத்து ஆண்டிபாடி சோதனை செய்வார்கள். பின்னர், விலங்குகள் மூலம் அதாவது எலி அல்லது குரங்கள் போன்ற சில விலங்குகளுக்கு இந்த வைரûஸ செலுத்தி டெஸ்ட் செய்வார்கள். பின்னர்தான் மனிதர்களுக்கு செலுத்துவார்கள். ஆனால், இந்த வைரûஸப் பொருத்தவரை, விரைவாக செயல்பட வேண்டும் என்பதால், ஏற்கெனவே இதன் குடும்பத்தைச் சார்ந்த வைரஸ் கிருமிகளின் மூலம் நாம் சேகரித்து வைத்துள்ள ரத்த மாதிரிகளின் டேட்டா பேஸ் நம்மிடம் இருப்பதால் மிருகங்களை வைத்து சோதிக்காமல், நேரடியாக மனிதர்களுக்கே செலுத்தி சோதித்து வருகிறார்கள்.

அந்த முயற்சி எந்த அளவுக்கு வெற்றி பெற்றிருக்கிறது?

ஒரு மாதத்திற்கு பிறகு, அவர்கள் ரத்தத்தில் ஆண்டிபாடி ஏதாவது உருவாகியிருக்கிறதா, இந்த நோய்த்தொற்றை அது கண்ட்ரோல் செய்யுமா என பார்ப்பார்கள். அதன்பின் இரண்டாவது, மூன்றாவது கட்ட சோதனைகள் செய்வார்கள். இந்த தடுப்பு மருந்து கண்டுபிடிப்பைப் பொருத்தவரை, மூன்று கட்ட சோதனைகள் இருக்கின்றன. 7 பேருக்கு முதல் கட்ட பரிசோதனை நடந்து கொண்டிருக்கிறது. இது முடிய இன்னும் ஒரு மாதம் ஆகும். அதன்பிறகுதான் இரண்டாவது, மூன்றாவது கட்ட சோதனைகள் மேற்கொள்ள முடியும்.

சோதனைகளை வேகப்படுத்த முடியாதா?

இதற்காக உலக சுகாதார அமைப்பு மூலம் சில முயற்சி செய்து கொண்டிருக்கிறோம். தனித்தனியாக கண்டுபிடிப்பில் ஈடுபடும் போட்டிகள் இல்லாமல் இருக்க வேண்டுமென்று நினைக்கிறோம். உலக நாடுகளில் உள்ள சில முன்னணி விஞ்ஞானிகள் பலரை ஒன்றிணைத்து ஒரு குழுவாக சேர்த்து ஒரே இடத்தில் வைத்து மருந்து கண்டுபிடிப்பில் ஈடுபட்டால் இன்னும் விரைவாக செயல்பட ஏதுவாக இருக்கும் என முயன்று வருகிறோம். அதுபோன்று மருந்து கண்டுபிடித்தபிறகு எங்கு உற்பத்தி செய்வது என்று குழம்பாமல், மருந்து கண்டுபிடிப்பு ஆராய்ச்சியில் இருக்கும்போதே அதை எங்கு தயாரிக்க வேண்டும் என்பதையும் ஆலோசித்து வருகிறோம். ஏனென்றால் இந்த மருந்து நமக்கு மில்லியன், டிரில்லியன் கணக்கில் டோஸ்கள் தேவைப்படுகிறது. அதனால் அட்வான்ஸ் பிளானிங் தேவை. அந்த வகையில் நமது இந்தியா, இந்தோனேஷியா போன்ற நாடுகளில் மருந்து உற்பத்தி செய்வதற்கான வசதிகள் நிறைய இருப்பதால் அதையும் பரிசீலித்து வருகிறோம்.

கரோனா எப்போது முடிவுக்கு வரும்?

இப்போதைய சூழலில் கரோனா எப்போது முடியும் என்று நாம் சிந்திக்கக் கூடிய நிலையில் இல்லை. ஒருமுறை ஒரு வைரஸ் வந்துவிட்டால் அதன்பிறகு அது அப்படியே தான் இருக்கும். அதை நாம் எப்படி கட்டுப்படுத்தப் போகிறோம் என்பதைதான் நாம் இப்போது யோசிக்க வேண்டும். உதாரணமாக, இன்புளுயன்சா வைரஸ் இருக்கிறது. வருஷா வருஷம் அந்த ஃபுளூ வருகிறது, அதில் மக்கள் நிறைய இறக்கிறார்கள். ஆனால், அது இப்போது நமக்கு நார்மல் வைரஸôகிவிட்டது. அதுபோன்று இந்த கரோனாவும் இன்னும் கொஞ்சநாள்களில் நமக்கு நார்மலான ஒரு வைரஸôக மாறிவிடும். இப்போது அது புதுசாக இருப்பதாலும் உலக அளவில் பாதிப்புகளை ஏற்படுத்தி வருவதாலும் நமக்கு பயங்கரமான வைரஸôக இருக்கிறது. இது செப்டம்பரில் முடிந்து விடும், டிசம்பரில் முடிந்துவிடும் என்று சொல்வதற்கு எந்த அறிவியல் ரீதியிலான உத்தரவாதமும் இப்போதைக்கு இல்லை.

இந்த நோய் தொற்று சீனாவால் திட்டமிட்டு பரப்பப்பட்டதாக சொல்லப்படுவது உண்மையா?

அப்படி சொல்லப்படுவதில் உண்மையில்லை. அது அத்தனையும் கட்டுக்கதை, பொய். இதுவரை ஏற்பட்ட இந்த நோய்ப் பரவல், இறப்புகள் எல்லாவற்றையுமே சரியான முறையில் சீனாவில் பதிவு செய்திருக்கிறார்கள். இந்த நோய் உருவானது குறித்து ஆய்வுகள் தீவிரமாக நடத்தி வருகிறார்கள்.

மாதக்கணக்காக அறிவிக்கப்பட்டு வரும் ஊரடங்கினால் பசி கொடுமையால் ஒரு புறம் உயிரிழப்புகள் நிகழும் அபாயம் ஏற்பட்டிருக்கிறதே?

உண்மைதான். மற்றநாடுகள் என்ன செய்கிறார்கள் என்பதை பார்த்துவிட்டுத்தான் இந்தியா முடிவுகள் எடுத்திருக்கிறது. இதில் முக்கியமாக நாம் கவனிக்க வேண்டிய விஷயம். இந்தியாவைப் பொருத்தவரை, ரொம்ப மோசமாக ஆவதற்குள் ஊரடங்கை அறிவித்துவிட்டார்கள். இத்தாலி, ஸ்பெயின், பிரிட்டன் போன்ற நாடுகளைப் பார்க்கும் போது ரொம்ப பயங்கரமாக இருக்கிறது. அந்த அளவு நாம் பாதிக்கப்படவில்லை என்பது நமக்கு ஆறுதல் அளிக்கிறது. அதற்கு ஊரடங்கும் ஒரு முக்கியக் காரணம்.

ஊரடங்கால் பலர் பாதிக்கப்பட்டிருக்கிறார்களே?

இப்படி திடீர் ஊரடங்கு அறிவிக்கப்பட்டதால் வெளிமாநிலத்தவர், தினக்கூலிகள், சிறு வியாபாரிகள் போன்றோர் ரொம்பவே பாதிக்கப்பட்டிருப்பது உண்மைதான். அதனால், அவர்கள் பாதிக்கப்படாத வகையில், அரசுதான் அவர்கள் மீது கூடுதல் கவனம் செலுத்தி அவர்களுக்கு தேவையான இன்னும் சில சலுகைகளை செய்து தர வேண்டும். அதுபோன்று ஏழை மக்கள் யாரேனும் கரோனாவால் தொற்று ஏற்பட்டு 15 நாள் தனிமைப்படுத்தும் நிலை ஏற்பட்டால் பாதிக்கப்பட்ட அந்த நபரின் குடும்பத்துக்கு தேவையான உணவு மற்றும் அத்தியாவசிய தேவைக்கான பண உதவியோ அரசாங்கம் செய்து தர வேண்டும். அப்போதுதான் மக்களும் அறிகுறி இருந்தால் பயம் இல்லாமல் வந்து சொல்லுவார்கள். இல்லையென்றால் ஓடி ஒளிந்து விடுவார்கள். ஏனென்றால் ஏற்கெனவே மக்கள் இந்த நோய்த் தொற்றைக் கண்டு பயந்திருக்கிறார்கள். மற்றொரு புறம் உணவு இல்லாமல் குடும்பம் என்ன செய்யும் என்று பயப்படுகிறார்கள். அதற்கு அரசு அவர்களுக்கு நோய்த் தொற்று ஏற்பட்டாலும், குடும்பம் பாதிக்காது என்ற நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும்.

இந்த நோய்த்தொற்றுக்கு மருந்து இல்லாததால், மரணம்தான் முடிவா?

இந்த நோய்த் தொற்றைப் பொருத்தவரை, ஒருவருக்கு வந்ததுமே அவர் இறந்து போய்விடுவார் என்பதில்லை. 100 பேரில் ஒருவர் அதுவும் நோய் எதிர்ப்பு சக்தி மிகக் குறைவாக உள்ளவர்கள்தான் இறக்கிறார்கள். மற்றபடி இது சாதாரண சளி, காய்ச்சல் போன்றதுதான். சரியான சிகிச்சை எடுத்துக் கொண்டால் சரியாகிவிடும். உண்மையில் இது பயப்படக் கூடிய நோய் அல்ல. ஆனால், இது ரொம்ப சீக்கிரம் நிறைய பேருக்கு பரவுவதால் தான் தனிமைப்படுத்துகிறார்கள்.

கடந்த ஆண்டே இது போன்ற ஒரு வைரஸ் வரவுள்ளதாக உங்கள் நிறுவனத்திற்கு தெரிவிக்கப்பட்டதாக சமூக வலைதளங்களில் சொல்லப்படுகிறதே இது உண்மையா?

இந்த கோவிட் }19 வைரஸ் பற்றி தெரியாது. ஆனால், டாக்டர் டெட்ராஸ் கடந்த இரண்டு ஆண்டுகளாகவே ஏதோ ஒரு அபாயகரமான வைரஸ் விரைவில் உருவாகப்போகிறது என்று சொல்லிக் கொண்டிருந்தார். இதனால் எங்களின் ரிசர்ச் அன்ட் டெவலப்மெண்ட் புளு பிரிண்ட்டில் உள்ள 10 கொடிய நோய்களில் ஒரு நோய்க்கு டிசிஸ் எக்ஸ் (Disease X) என்று பெயர் வைத்திருந்தோம். அதனால் என்றைக்காவது ஒருநாள் இதுபோன்று வைரஸ் கிருமிகளால் விரைவில் ஒரு நோய் உருவாகப் போகிறது என்று அறிந்திருந்தோம். அது இந்த குறிப்பிட்ட கரோனா கோவிட் }19 வைரஸôக வரும் என்பதெல்லாம் தெரியாது. டிசம்பர் 31}ஆம் தேதி இதைப்பற்றி சீனா அறிவிக்கும் வரை இந்த வைரஸ் பற்றிய எந்த விவரமும் யாருக்கும் தெரியாது. அது இவ்வளவு வேகமாக உலகநாடுகள் முழுவதும் பரவும் என்றெல்லாம் தெரியாது.

அமெரிக்க அதிபர் தினம் தினம் ஒரு குற்றசாட்டை வெளியிட்டு வருகிறாரே.. அது குறித்து உங்கள் கருத்து என்ன?

அவரைப்பற்றி நான் எதுவும் சொல்ல விரும்பவில்லை. உலக சுகாதார அமைப்பு மெத்தனமாக இருந்து விட்டது. சீனாவுக்கு சப்போர்ட் செய்தது என்று சொல்லியிருக்கிறார். பொதுவாக, எந்த ஒரு பேரிடர் வந்தாலும் எங்கள் அமைப்பில் உடனே ஒரு டீம் உருவாகிவிடும். அந்த வகையில் டிசம்பர் 31}ஆம் தேதி சீனா சொன்னதுமே, உடனே ஒரு குழுவை அமைத்தோம். அதன் மூலம் எங்கள் தலைமையகமான ஜெனிவா, மற்றும் 6 பிராந்திய அலுவலகங்கள், தில்லியில் உள்ள தென்கிழக்கு அலுவலகம் என எல்லாருக்குமே உடனடியாக எச்சரிக்கை அனுப்பினோம். சீனாவில் ஏதோ ஆபத்தான வைரஸ் கிருமி உருவாகி இருக்கிறது. அதனால் எல்லாரும் ஜாக்கிரதையா இருங்கள் என்று தெரிவித்திருந்தோம்.

ஜனவரி 7}ஆம் தேதி இது ஒருவரிடமிருந்து மற்றவர்க்கு பரவுகிறது என்று எங்களுக்கு ரிப்போர்ட் வந்ததும் எங்கள் இணையதளம் மூலம் எல்லா உறுப்பு நாடுகளுக்கும் மீண்டும் தெரிவித்தோம்.

ஜனவரி 11}ஆம் தேதி அது கரோனா வைரஸ் என்று தெரிந்து விட்டது. அது தெரிந்ததுமே, இதற்கு முன்னால் இருந்த கரோனா வைரûஸ வைத்து இது இருமல், தும்மல் மூலம் பரவும் தன்மை உடையது. மூச்சதிணறல், நிமோனியா வரும் என ஒவ்வொரு தகவலாக வரவர, நாங்களும் எல்லா நாடுகளுக்கும் தெரிவித்துக் கொண்டே இருந்தோம்.

நீங்கள் சீனாவுக்கு ஆதரவாக இருப்பதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு பொய்யா?

நாங்கள் முன்கூட்டியே எச்சரிக்காததால்தான் இது மாதிரி ஆயிற்று என்கிறார் அதிபர் டிரம்ப். அடுத்து எங்கள் அமைப்பு சீனாவுக்கு ஆதரவாக இருப்பதாகச் சொல்கிறார். ஆனால், சீனா இதுபோன்று நோய்த் தொற்று ஏற்பட்டிருக்கிறது என்று தெரிந்தவுடனேயே, உடனடியாக ஊரடங்கை அறிவித்து என்ன செய்ய வேண்டுமோ அத்தனையும் செய்தார்கள். அதனால்தான் அங்கு விரைவில் நோய்த்தொற்று கட்டுக்குள் வந்தது. அதுபோன்று தகவல்களையும் அவ்வப்போது பரிமாறிக் கொண்டிருந்தார்கள். அதுமட்டுமல்லாமல், அவர்கள் மற்ற நாடுகளுக்கும் மருத்துவர்களை அனுப்புவது, உபகரணங்கள், சோதனைக் கருவிகள் கொடுப்பது என உதவினார்கள். எங்களை பொருத்தவரை 194 நாடுகளுமே ஒன்றுதான். தனியாக யாருக்கும் எந்த சலுகையும் தருவதில்லை.

உங்கள் நிறுவனத்துக்கு வழங்கும் நிதியை அதிபர் டிரம்ப் நிறுத்தி வைத்திருப்பது பாதிப்பை ஏற்படுத்தாதா?

தற்போது 20 சதவிகிதம் நிதியை நிறுத்திவிட்டார். இதனால் உலகத்துக்குகே பாதிப்பு இருக்கும். ஏனென்றால் போலியோ சிகிச்சை, நோய் எதிர்ப்பு திறன் வளர்த்தல், எமர்ஜென்சி போன்றவற்றிற்குதான் அவர் அளித்து வரும் நிதி உதவி வருகிறது. இதனால் எல்லாமே பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டிருக்கிறது. டிரம்ப் இப்படி பேசியதற்கு பிறகு மற்ற நாடுகள் எல்லாமே எங்களுக்கு ஆதரவு தெரிவித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். இத்தனை ஆண்டுகளாக எங்களுக்கு அமெரிக்காவுடன் ஒரு நல்ல உறவு இருந்து வருகிறது. உலக சுகாதார அமைப்பு மிக மிக தேவையான ஒன்று. அதுவும் இப்போதைய சூழலில் இப்படி குற்றம் சாட்டுவதும் நிதியை குறைப்பதும் செய்யாமல் இருந்தால் நல்லது. எங்களுடைய கடமையை நாங்கள் செய்து கொண்டுதான் இருப்போம்.

உலக சுகாதார அமைப்பின் தலைமை இயக்குநராக ஒரு தமிழ் பெண் என்றபோது தமிழ்நாடே பெருமையாக நினைத்தது. உங்களுக்கு அந்த தருணம் எப்படி இருந்தது?

நான் எப்பவுமே, தமிழ்நாட்டு மக்களுக்கு எந்த வகையிலாவது உதவ வேண்டும் என்று சிந்தித்துக் கொண்டே இருப்பேன். இப்போது உலக சுகாதார அமைப்புக்கு வந்தபிறகு, உலக நாடுகளுக்காக வேலை செய்யப்போகிறோம். இதன்மூலம் உலக மக்கள் எல்லாருக்குமே உதவி பண்ண முடியும் என்று நினைத்தபோது சந்தோஷமாக இருந்தது.

இக்கட்டான சூழலில் பதவி ஏற்றிருக்கிறீர்களே...

இந்த மாதிரி ஒரு எமர்ஜென்சி சூழ்நிலையில் நான் தலைமைப் பொறுப்பில் இருப்பேன் என்று யோசித்ததேதில்லை. இந்த சூழ்நிலையில் எனக்கு கிடைத்திருக்கும் வாய்ப்பை சரியான முறையில் மக்களுக்கு பயன்படுத்த வேண்டும் என்று செயல்பட்டு கொண்டிருக்கிறேன். என்னால் என்ன உதவிகள் செய்ய முடியுமோ அவை அத்தனையையும் செய்வேன். இன்னும் எவ்வளவு முடியுமோ அவ்வளவு உழைத்துக் கொண்டே இருப்பேன்.

மிகப்பெரிய குடும்பத்தில் பிறந்தவர் நீங்கள், உங்களது தாத்தா, பாட்டி, அப்பா, அம்மா குறித்து என்ன நினைக்கிறீர்கள்?

அப்பா எம்.எஸ். சுவாமிநாதனைப் பற்றி உங்கள் எல்லாருக்குமே தெரியும். பசுமை புரட்சி செய்த வேளாண் விஞ்ஞானி. அம்மா மீனா சுவாமிநாதன் கல்வியாளராக இருந்தவர், எங்கள் குடும்பத்தில் நாங்கள் 3 பெண்கள், ஆனால் ஒருநாள் கூட எங்கள் வீட்டில் பெண்கள், ஆண்கள் என்ற பேதம் பார்த்ததில்லை. அதனால் ஆணாக இருந்தால்தான் இதை செய்ய முடியும். பெண்ணாக இருந்து இதை செய்ய முடியாது என நொடி பொழுதுக் கூட நாங்கள் நினைத்தில்லை.
அதுபோல அப்பா விஞ்ஞானியாக இருந்ததால் வீட்டிற்கு எப்போதும் மற்ற விஞ்ஞானிகள் வருவதும் போவதுமாக இருப்பார்கள். சர்.சி.வி.ராமன் கூட எங்கள் வீட்டிற்கு வந்திருக்கிறார். மாணவ. மாணவிகள் வருவதும் போவதுமாக இருப்பார்கள். இதையெல்லாம் பார்த்துக் கொண்டும், கேட்டுக் கொண்டும் வளர்ந்தோம்.

அடுத்தது அம்மா நிறைய கிராமப்புற சமூக சேவைகள் செய்ய போகும்போதெல்லாம் எங்களையும் உடன் அழைத்துச் செல்வார். இதனால், சிறு வயதிலிருந்தே எனக்கு ஏழை மக்களுடன் பழகும் வாய்ப்பு இருந்ததால், அவர்களுடைய பிரச்னைகள் எல்லாம் அந்த வயதிலேயே எனக்கு புரிந்தது. அந்தளவுக்கு சுதந்திரமாகதான் எங்களது பெற்றோர் எங்களை வளர்த்தார்கள்.
பாட்டி மதுரம் ஒரு எழுத்தாளர். கிருத்திகா என்ற பெயரில் எழுதிவந்தார். அவர்மூலம் நிறைய நாவல்கள், மித்தாலஜி, கோயில் கட்டடக் கலைப் பற்றி எல்லாம் தெரிந்து கொள்ள வாய்ப்பு கிடைத்தது.

தாத்தா பூதலிங்கம் சுதந்திரம் பெற்றபோது, இந்தியாவின் அதிகாரிகள் கட்டமைப்பில் முக்கிய அதிகாரியாக இருந்தவர். அவர் மூலம் நிறைய கற்றுக்கொண்டோம். இப்படி நிறைய கற்றுக்கொள்ள வாய்ப்புகளாகதான் இளமைப் பருவத்தை கடந்து வந்தோம்.

ஊரடங்கு முடிந்த பிறகு உள்ள இயல்பு வாழ்க்கை குறித்து?

ஊடரங்கு முடிந்ததும் உடனடியாக நாம் முன்பு இருந்தது போன்று இயல்பு நிலைக்கு திரும்பி விட முடியாது. கொஞ்சம் கொஞ்சமாகத்தான் ஊரடங்கையே தளர்த்துவார்கள். அதுவும் அந்த ஏரியாவில் நோய்த் தொற்று பரவல் எப்படியிருக்கிறது என்பதை பொருத்துதான். அதுபோன்று இங்கு "ரெட் அலர்ட்', "கிரீன் அலர்ட்', "ஆரெஞ்ச் அலர்ட்' என பிரித்து கண்காணித்து வருவது மிகவும் வரவேற்கதக்கது. பாதிக்கப்பட்ட இடங்களில் கூடுதல் கவனம் செலுத்த வசதியாக இருக்கும்.

இரண்டாவது, மக்களுடைய பழக்க வழக்கம் கண்காணிக்கப்படும். முன்பிருந்த மாதிரி நார்மல் வாழ்க்கையை நாம இன்னும் கொஞ்ச நாள்களுக்கு வாழ முடியாது. வெளியே சென்றால் கண்டிப்பாக முகக் கவசம் அணிந்து கொள்ள வேண்டும். ஏனென்றால் அறிகுறி இல்லாமலேயே நிறைய பேருக்கு நோய்த்தொற்று ஏற்படுகிறது. எனவே, அவர்களுக்கு தெரியாமலேயே பேசும் போதும், இரும்பும்போது நம் கண்ணுக்கு தெரியாமல் வெளியேறும் நீர் துளிகள் மூலம் பரவும்.

எனவே, இனி வரும் காலங்களில் ஊரடங்கு தளர்த்தப்பட்ட பின்பும் முகக் கவசம் அணிவது, கை கழுவுதல், சமூக விலகல் போன்ற வற்றை நிச்சயம் கடைப்பிடிக்க வேண்டியிருக்கும். அதுவும் இந்திய போன்ற கூட்ட நெரிசல் அதிகம் உள்ள நாடுகளில் இதை நிச்சயமாக பின்பற்றிய ஆக வேண்டும்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com