Enable Javscript for better performance
உண்மை கதைகளை இயக்க சரியான நேரம் வேண்டும்!- Dinamani

சுடச்சுட

  

  உண்மை கதைகளை இயக்க சரியான நேரம் வேண்டும்!

  By - பூர்ணிமா  |   Published on : 15th May 2020 04:40 PM  |   அ+அ அ-   |    |  

  n7

  "நான் வருங்கால தலைமுறையினருக்காகவே படங்களை இயக்குகிறேன். எதிர்காலத்தில் என்னுடைய படங்கள் மக்களுக்கு புரிகிறதோ அல்லது என்னைப் பற்றி நினைப்பார்களா என்பது பற்றி கவலையில்லை. என் படத்தில் இடம் பெறும் கதாபாத்திரங்கள் அவர்கள் நினைவில் இருக்க வேண்டும் என்பதற்காகவே, கதைகளுக்கேற்ற பாத்திரங்களை உருவாக்குகிறேன்' என்று கூறும் பாலிவுட் பெண் இயக்குநர் அஸ்வினி ஐயர் திவாரி, இதுவரை இயக்கிய "நில் பட்டே சன்னதா', "பேரிலி கி பார்பி', "பங்கா' ஆகிய படங்கள் அனைத்துமே வெற்றிப் பெற்றுள்ளன. அதனால் இவரது இயக்கத்தில் படம் தயாரிக்க தயாரிப்பாளர்கள் ஆர்வமுடன் உள்ளனர். தனக்கேற்பட்ட அனுபவங்களை இங்கு கூறுகிறார் அஸ்வினி ஐயர் திவாரி:

  ""திரைப்படத்துறையில் ஏற்பட்டுள்ள மாற்றங்களை ஏற்றுக் கொள்ளும் பக்குவம் இன்றைய இளம் தலைமுறையினருக்கு ஏற்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது. குறிப்பிட்ட இயக்குநர் படங்களை அடுத்து பார்க்கலாமா? வேண்டாமா? என்று முடிவெடுப்பதற்கு முன், நாம் எதிர்பார்க்கும் கதையம்சம் இருக்குமா என்று யோசிக்கின்றனர். இதனால் இயக்குநர் தன் பரிசோதனை முயற்சியை அவர்கள் மீது திணிக்க முடியாது, என்பதற்காகவே ஒவ்வொரு முறையும் வித்தியாசமான கதைகளைத் தேர்வு செய்கிறேன். ஒவ்வொரு படத்திலும் கதாசிரியர்கள் நம் ஆத்மாவின் ஒரு பகுதியாவர்.

  என்னைப் பொருத்தவரை என்னுடைய படங்கள் என் குழந்தைகளைப் போன்றவை. உங்களுக்கு ஒரு குழந்தை இருந்தாலும் சரி. பல குழந்தைகள் இருந்தாலும் சரி. பெற்றெடுக்கும்போது ஏற்படும் வலியும், பிறந்தவுடன் குழந்தையின் முகத்தைப் பார்க்கும்போது ஏற்படும் மகிழ்ச்சியும் முதன்முறை ஏற்படும் அனுபவம் போலவே இருக்கும்.

  என் படத்தை பார்த்தவுடன் மக்கள் தெரிவிக்கும் ஆதரவான கருத்துகள் எனக்கு உறுதித் தன்மையை அளிக்கிறது. நான் இயக்கிய படம் இன்றைய தலைமுறையினரிடம் சென்றிருப்பது, அடுத்து படத்தை இயக்குவதற்கான நம்பிக்கையை தருகிறது.

  உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து "பங்கா' படத்தை தயாரித்த
  போது, அதில் நடித்த கங்கனா ரணாவத், எனக்கு சரியான ஒத்துழைப்பு தரவில்லை என சிலர் வதந்தியை பரப்பினர். அப்படி ஏதும் எங்களுக்குள் கருத்து வேற்றுமை ஏற்பட்டதில்லை.

  கங்கனா ரணாவத் ஒரு திறமையான நடிகை. "பங்கா'வில் நடிக்க அவரை நான் அணுகிய போது, ஏற்கெனவே அவர் நடித்துக் கொண்டிருந்தத "மணிகர்னிகா', "திகுயின் ஆஃப் ஜான்சி' படத்தின் இயக்குநருடனான பிரச்னையால்.. அவரே மேற்கொண்டு படத்தை இயக்க ஒப்புக் கொண்டிருந்தார். கங்கனாவைப் பொருத்தவரை நாம் எதிர்பார்ப்பதைவிட திறமையாக நடித்துக் கொடுக்கும் ஆற்றல் மிக்கவர், நான் கதையை சொன்னவுடன் உடனடியாக நடிக்க ஒப்புக் கொண்டார். அவரைப் பற்றி மற்றவர்கள் என்ன சொன்னாலும் அதைப்பற்றி எனக்கு கவலையில்லை. ஒருவருக்குகொருவர் பழகும்போது நம்பிக்கையும், புரிதலும் முக்கியம். நாங்களிருவரும் ஒரே துறையில் இரண்டாண்டுகளாக பழகி வருவதால் எங்களுக்குள் எந்த பிரச்னையும் எழுந்ததில்லை. படப்பிடிப்பின்போது என்றுமே அவர் குறுக்கிட்டதில்லை. "பங்கா'வில் அவர் நடித்த கபடி காட்சியைத் தவிர, பிற காட்சிகளை அவர் மானிட்டரில் பார்த்ததில்லை. அத்தனை நேர்மையானவர்.

  கதைக்கு வலுவூட்ட நடிகர் - நடிகைகள் முக்கியம் என்பதால் கதாபாத்திரங்களுக்கு யார், யார் பொருந்துவார் என்பதை முடிவு செய்த பின்னரே அவர்களை அணுகுவேன். ஒவ்வொருவரின் பிரச்னையை புரிந்து கொண்டு நடிக்க வைப்பதால் எந்த பிரச்னையும் ஏற்படுவதில்லை. மேலும் அவர்களிடமும் நான் கருத்துகளை கேட்பதுண்டு அதனால் ஈகோ பிரச்னையும் எழுவதில்லை.

  ஒவ்வொரு தயாரிப்பாளருமே தன்னுடைய படம் "பாக்ஸ் ஆபிஸ் ஹிட்' ஆக வேண்டுமென விரும்புவதுண்டு.இயக்குநர் என்ற முறையில் என்னுடைய தயாரிப்பாளரின் நேரம் மற்றும் பணத்துக்கு நான்தான் பொறுப்பு என்ற உணர்வு எனக்குள் இருக்கும். அதனால் வருங்கால தலைமுறையினருக்காகவும், ரசிகர்களுக்காகவும் நான் எடுக்கும் படங்களால், எதிர்காலத்தில் அவர்கள் என்னை நினைக்காவிட்டாலும், என் கதைகளில் வரும் கதாபாத்திரங்களை நினைவுபடுத்திக் கொண்டால்போதும்.

  அடுத்து இன்போசிஸ் நிறுவனர் நாராயண் மற்றும் சுதா மூர்த்தி தம்பதியரின் வாழ்க்கையை ஏக்தா கபூருடன் இணைந்து படமாக்கும் எண்ணம் இருக்கிறது. அவர்களிருவரும் 60-65 வயதிலும் மகிழ்ச்சியோடும் நம்பிக்கையோடும் வாழ்கிறார்கள், பணியாற்றுகிறார்கள். நமக்கு கிடைத்திருப்பது ஒரு வாழ்க்கை அதை பயனுள்ளதாக வாழ்ந்து காட்ட வேண்டும். இதுபோன்று பல அழகான உண்மை கதைகள் உள்ளன. அவற்றை திறமையாக இயக்கி வெளிப்
  படுத்த சரியான நேரம் கிடைக்க வேண்டும் என்கிறார் அஸ்வின் ஐயர் திவாரி.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  kattana sevai