Enable Javscript for better performance
மதுரை மக்களுக்கு  கஞ்சி ஊற்றிய குஞ்சரத்தம்மாள்..!- Dinamani

சுடச்சுட

  

  மதுரை மக்களுக்கு  கஞ்சி ஊற்றிய குஞ்சரத்தம்மாள்..!

  By - பிஸ்மி பரிணாமன்  |   Published on : 15th May 2020 04:24 PM  |   அ+அ அ-   |    |  

  mn2

  கரோனா வைரஸ் பரவலால் ஒன்றரை மாத ஊரடங்கு மக்களை வெகுவாக சோதித்துவிட்டது. வேலை வாய்ப்புகள் இல்லாமல் போகவே தினக் கூலிக்கு வேலை பார்த்துக் கொண்டிருந்தவர்கள் ஒண்டு குடித்தனம் நடத்தியவர்கள் வாடகை கொடுக்க வழியில்லாமல் பெட்டி சாமான்களைத் தூக்கிக் கொண்டு பல ஆயிரம் பேர்கள் சொந்த மாநிலங்களுக்கு நடைப் பயணம் மேற்கொண்டார்கள்.

  ஒவ்வொரு மாநிலத்திலும் மக்கள் அவல நிலைமையில் இருக்கிறார்கள். அலுவலகத்திற்குப் போக முடியாமல், உற்றார் உறவினர்களைப் பார்க்க முடியாமல், சம்பளம் இல்லாமல், தவித்து பலரும் வீடுகளில் முடங்கிப் போயுள்ளார்கள். அரசும், தன்னார்வத் தொண்டு நிறுவனங்களும் உதவுவதால் பட்டினிச் சாவுகள் கணிசமாகக் குறைக்கப்பட்டுள்ளன.

  எழுபதுகளில் வந்த அரிசிப் பஞ்சம் பல மாதங்கள் நீண்டது. ஆனால் பல ஆண்டுகள் நீடித்த "தாது' ஆண்டுப் பஞ்சம் தமிழகத்தை எப்படி பயமுறுத்தியது என்பதை பலர் அறிந்திருக்க மாட்டார்கள்.

  1875 முதல் 1880 வரை மாபெரும் பஞ்சம் தமிழகத்தை புரட்டிப் போட்டது. சாதாரண மக்கள் எலும்பும் தோலுமாய் ஒட்டி உலர்ந்து இருந்தார்கள். மார்பு, விலா எலும்புகளை எண்ணிவிடலாம். வயல் வரப்புகளில் எறும்புகள் தங்கள் புற்று வீடுகளில் சேமித்து வைத்திருந்த அரிசி, குருணைகளைக் கூட விடாமல் தேடி தோண்டி எடுத்து தின்கிற அளவுக்கு மக்களை விரட்டியது பஞ்சம். அதில் ஆறுதலாக இருந்தவை முருங்கை மரங்கள். முருங்கை இலைகளை பறித்து வேக வைத்து அதை மட்டுமே உண்டு பல நாள்கள், வாரங்கள்.. மாதங்கள் என்று ஓட்டியவர்களால் மட்டுமே தங்கள் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள முடிந்தது. உணவுக்கு எதுவும் கிடைக்காதவர்கள் கொத்து கொத்தாக செத்து மடிந்தார்கள்.

  ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் தாண்டவம் ஆடிய தாது பஞ்சத்தில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. ஆனால் மதுரை நகரைப் பொறுத்த மட்டில் ஒரு மணிமேகலை "குஞ்சரம்' என்ற பெயரில் தோன்றினார்.

  குஞ்சரம் அழகே உருவான மங்கை. உடல் முழுக்க தங்கம் பவளம் வைரம் முத்து நகைகள் அலங்கரித்தன. குஞ்சரம் கோயிலுக்கு செல்லும்போது அவள் நடை, உடை, நகை, கூந்தல் அழகினைக் காண ரசிக்க ஆயிரம் கண்கள் காத்திருக்கும். மதுரை வடக்கு ஆவணி மூல வீதியில் இரண்டு மாளிகைகள் குஞ்சரத்திற்குச் சொந்தம். அவர், தேவரடியார் ஆனதால் ஆடலும் பாடலும் எப்போதும் அந்த மாளிகைகளில் ஆட்சி செய்யும். எல்லா நாட்களும் விருந்து தடபுடல்தான். மாளிகைக்கு பெரும் செல்வந்தர்களின் வருகை குஞ்சரத்தின் முக்கியத்துவத்தையும் பிரபலத்தையும், குவியும் செல்வத்தையும் சுட்டிக் காட்டின.

  குஞ்சரம் கோயில் வேலைகளை செய்து வந்ததினால் பஞ்சம் பற்றி இம்மி அளவு கூட கவலைப் பட வேண்டிய அவசியம் இல்லை. "சாதாரண மக்கள் பஞ்சத்தினால் ஒன்றும் கிடைக்காமல் ஒட்டி உலர்ந்து "நீ சாவதை நான் பார்க்கணுமா.. இல்லை நான் சாவதை நீ பார்க்கிறாயா' என்று கணவன்- மனைவி, பெற்றோர் - பிள்ளைகள் பேச, கேட்கக் கூட சக்தியில்லாமல் ஒருவரை ஒருவர் பார்த்த நிலையிலேயே மடிந்து போகிறார்கள்' என்ற செய்தி குஞ்சரத்தின் செவிகளில் வெந்நீர் போல் இறங்கின. ஆடிப் போனார் குஞ்சரம். குஞ்சரமும் பெண் தானே ..!

  குஞ்சரத்தினுள் இருந்த தாயுள்ளம் விழித்துக் கொண்டது. பஞ்சத்தில் அடிபட்டு மக்கள் செத்து மடிவதிலிருந்து காக்க, பசியால் தவிப்பவர்களுக்கு ஒரு வேளை கஞ்சியாவது வழங்கத் தீர்மானித்தாள்.

  பெரிய வட்டையில் கஞ்சி காய்ச்சி வழங்க ஆரம்பித்தாள். சில நாட்கள் நகர்ந்தன. "குஞ்சரம் வடக்கு ஆவணி மூல வீதியில் பஞ்சத்தால் வாடும் மக்களுக்கு கஞ்சி வழங்குகிறா' என்ற செய்தி மதுரை சுற்றுவட்டாரத்தில் காட்டுத் தீயாகப் பரவியது. நடக்க வலுவில்லாதவர்கள் கூட உயிரைப் பிடித்துக் கொண்டு நகர்ந்து தவழ்ந்து வர ஆரம்பித்தனர். மக்கள் கூட்டம் அலைமோத .. ஒரு வட்டை கஞ்சி வழங்கி வந்த குஞ்சரம், இரண்டு வட்டை கஞ்சி காய்ச்சி வழங்கினார். சில நாட்களில் அது மூன்று வட்டையானது.

  இந்த கஞ்சி வழங்கல் செய்தியைக் கேட்ட மதுரை ஆட்சியரான ஜார்ஜ் பிராக்டர் ஆச்சரியப்பட்டுப் போனார். "ஒரு அரசாங்கம் செய்ய வேண்டிய கடமையை குஞ்சரம் செய்கிறாளே' என்று வியந்தார். "நாமும் ஏதாவது செய்ய வேண்டும்... இல்லையென்றால் நம்மை இழிவாகப் பேசுவார்கள்.. நாளைய சரித்திரத்திலும் பஞ்ச காலத்திலும் ஒன்றும் செய்யவில்லை என்று இகழ்ச்சியாகப் பதிவு செய்வார்கள்' என்று நினைத்து மூன்று கஞ்சித் தொட்டிகளை திறந்தார். ஆட்சியரின் கஞ்சி தொட்டிகளில் கஞ்சி குடித்தவர்களை மதுரையிலிருந்து பல ஊர்களுக்கும் செல்ல ரயில்பாதை அமைக்கும் வேலைகளில் ஈடுபடுத்தினார். அரசாங்க கஞ்சித் தொட்டிகள் வந்ததினால் குஞ்சரம் வழங்கும் கஞ்சியை வாங்க வரும் மக்களின் எண்ணிக்கை குறைந்தாலும் மொத்தமாக நின்றுவிடவில்லை. நாட்கள் நகர.. நகர .. கஞ்சி காய்ச்ச பணம் இல்லாது வந்த போது உச்சி முதல் பாதம் வரை அணிந்திருந்த நகைகளை விற்று கஞ்சி ஊற்றினாள். இடையிடையே சமையல்காரர்கள் வராமல் இருந்துவிடுவார்களாம். குஞ்சரம் சிரமம் பார்க்காமல் அவரே கஞ்சி காய்ச்சுவாரம். பஞ்சம் தொடர்ந்ததால் கஞ்சி வழங்குவதைத் தொடர, ஓட்டு வீட்டிற்கு மாறி, தனது இரண்டு மாளிகைகளையும் விற்றார். அந்தப் பணத்தில் இடைவெளி விடாமல் பதிமூன்று மாதங்கள் கஞ்சி வழங்கி வந்தார். இப்படி ஒரு ஆண்டு முழுவதும் கஞ்சி சலிக்காமல் ஊற்றி வந்த குஞ்சரம் நோய் வந்து இறந்தார்.

  குஞ்சரத்தின் இறுதிச் சடங்கில் அவர் வழங்கிய கஞ்சி குடித்ததினால் உயிர் பிழைத்த அனைவரும் கூடி அஞ்சலி செலுத்தினார்களாம். அஞ்சலி செலுத்த வந்த மக்கள் கூட்டத்தைப் பார்த்துவிட்டு அந்த வெள்ளைக்கார ஆட்சியர் ஜார்ஜ் பிராக்டர் "கோயில் திருவிழாவுக்குத்தான் மதுரையில் இப்படி மக்கள் கூடுவார்கள்... ஒருவர் இறந்ததற்காக மக்கள் இப்படி கூடியதை முதல் முறையாக பார்க்கிறேன்..' என்று பதிவு செய்தாராம்..!

  கரோனா பாதிப்பு அதிகமாகி ஊரடங்கு காலம் அதிகரிக்கப்பட்டால் மக்கள் பாடு படுதிண்டாட்டம் ஆகிவிடும். இந்த நேரத்தில் குஞ்சரத்தம்மாளை நினைகூறுவதன் மூலம் நன்றிகளைப் பதிவு செய்வோம் !

  (எழுத்தாளர் வெங்கடேசன் தனது "காவல் கோட்டம்' நூலில் குஞ்சரம் குறித்து குறிப்பைப் பதிவு செய்துள்ளார். )

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  kattana sevai