கரோனாவாக இருந்தாலும் பாலூட்டலாம்!

கரோனா தீநுண்மி நோய்த்தொற்றால் பெரும்பாலான உலக நாடுகள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் பல கருவுற்ற மகளிரும் நோய் தொற்றுக்கு உள்ளாகி இருக்கிறார்கள்.
கரோனாவாக இருந்தாலும் பாலூட்டலாம்!

கரோனா தீநுண்மி நோய்த்தொற்றால் பெரும்பாலான உலக நாடுகள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் பல கருவுற்ற மகளிரும் நோய் தொற்றுக்கு உள்ளாகி இருக்கிறார்கள். வயது முதிர்ந்தவர்கள், சர்க்கரை நோய், இதய நோய், உயர் ரத்த அழுத்தம், ஆஸ்துமா நோய் உள்ளவர்களுக்கு அதிக ஆபத்து எனக் கண்டறியப்பட்டுள்ளது. கர்ப்பிணிகளும் இந்த வரையறையில் சேர்கிறார்கள் என்கிறார் டாக்டர் நா.கங்கா, கும்பகோணத்தைச் சேர்ந்த மகப்பேறு மருத்துவராக விளங்கும் இவர் கரோனா பாதித்தவர்கள் குழந்தைக்கு பாலூட்டுவது குறித்து விளக்குகிறார்:

வேறு எந்த நோய்களும் இல்லாத கர்ப்பிணிகளுக்கு ஆபத்து குறைவு என்று வரையறுக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு வழக்கம்போல கருவுற்ற காலத்தில் 3, 5 ,7, 8, 9, 10 மாதங்கள் என்ற அடிப்படையில் மொத்தம் ஆறு முறை மருத்துவப் பரிசோதனை தேவை என்றும் அறிவுறுத்தப்படுகிறது. வேறு நோய்கள் இருந்தால் தனிப்பட்ட கவனம் தேவை.

ஒவ்வொரு முறையும் அவர்கள் பரிசோதனைக்கு வரும்போது அடிக்கடி கைகளைச் சுத்தப்படுத்துதல், சமூக இடைவெளி குறித்த அறிவுரை வழங்கப்பட வேண்டும். மருத்துவமனைக்கு வரும்போது முகக்கவசம் அணிந்துவர வேண்டும்.

கருவுற்ற பெண்களுக்கு கரோனா தீநுண்மி சோதனை செய்யப்பட வேண்டியதும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இவர்களுக்கு கரோனா தீநுண்மி நோய்த்தொற்று இருந்தால் தகுந்த முன்னேற்பாடுகளுடன் மகப்பேறு நடைபெற வேண்டும். நோய்த்தொற்று இருக்கிறது என்பதாலேயே அறுவை சிகிச்சை கட்டாயம் செய்ய வேண்டும் என்பதில்லை.

பிறக்கும் சிசுவுக்கும் நோய்த்தொற்று இருக்கிறதா என்று பரிசோதனை செய்யப்படுகிறது. கொவைட் 19 தீநுண்மி பாதிப்புக்கு உள்ளாகி இருக்கும் தாய், கட்டாயம் குழந்தைக்குத் தாய்ப்பால் தர வேண்டும் என்று உலக சுகாதார நிறுவனம் அறிவுறுத்துகிறது. கருவில் உள்ள குழந்தைக்குத் தாயிடமிருந்து கொவைட் 19 தீநுண்மி பரவுவதாக இதுவரை உறுதிசெய்யப்படவில்லை.

தாய்க்கு கரோனா தீநுண்மி நோய்த்தொற்று இருந்தாலும் பனிக்குட நீரில் அந்தத் தொற்று காணப்படுவதில்லை. இந்த கொவைட் 19 வகை தீநுண்மி நோய்த்தொற்று தாய்ப்பாலில் இதுவரை கண்டறியப்படவில்லை. இது குறித்த தீவிர ஆராய்ச்சிகள் தொடர்கின்றன.

சில ஆண்டுகளுக்கு முன்பு பரவிய நோய்களில் இதே வகையைச் சேர்ந்த சார்ஸ், மெர்ஸ் போன்ற தீநுண்மிகள் தாய்ப்பாலில் வெளிவரவில்லை என்பதையும் நாம் கவனத்தில் கொள்ளவேண்டும். ஆனாலும், தாயின் மூச்சுக்காற்று மூலம் குழந்தைக்கு நோய்த்தொற்று பரவும் வாய்ப்பு உண்டு.

எய்ட்ஸ் நோய்த்தொற்றுள்ள தாயின் பாலில், ஹெச்.ஐ.வி. தீநுண்மிகள் வெளியாவது தெரிய வந்தது. எனினும், தாயின் உடல்நிலை மற்றபடி நலமாக இருந்தால் ஆறு மாதம் வரை தாய்ப்பால் தரலாம் என உலக சுகாதார நிறுவனம் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது. அந்தக் கிருமிகள் குழந்தைக்கு எய்ட்ஸ் நோயை ஏற்படுத்த ஓரளவு வாய்ப்பு இருக்கிறது என்றாலும், தாய்ப்பாலின் நன்மையைக் கருத்தில் கொண்டு இந்த அறிவுறுத்தல் முன்வைக்கப்படுகிறது.

மற்ற பால் வகைகளைக் கொடுப்பதால் ஊட்டச்சத்து இன்றி பல நோய்களுக்கு குழந்தை உள்ளாகி மரணமடைவதைத் தடுக்கவே இந்த அறிவுரை. மேலும், ஹெச்.ஐ.வி. தொற்று உள்ள தாய்க்குத் தரப்படும் மருந்துகளும் தாய்ப்பாலுடன் வெளியாவதால் அதுவும் குழந்தையைப் பாதுகாக்கக் கூடும்.

தாய்ப்பாலில் 20-க்கும் மேற்பட்ட நோய் எதிர்ப்புக் கூறுகள் உள்ளன. இவை முக்கியமாக மூச்சுப்பாதை, நுரையீரல் தொற்றுகள், உணவுப் பாதை தொற்றுகள், தோலில் ஏற்படும் தொற்றுகள் ஆகியவற்றைத் தடுக்கின்றன.

இந்த நோய் எதிர்ப்புப் பொருள்கள் சீம்பாலில் அதிகமாகக் காணப்படுகின்றன. இதன் காரணமாகவே சிசுவின் முதல் உணவாகவும் தடுப்பு மருந்தாகவும் தாய்ப்பால் போற்றப்படுகிறது.

காது - மூக்கு - தொண்டையில் ஏற்படும் தொற்றுகள், மூச்சுப்பாதை, நுரையீரலில் ஏற்படும் நிமோனியா தொற்று, நுரையீரல் இடைத்திசு அழற்சி ஆகியவற்றை ஏற்படுத்தும் கிருமிகளை எதிர்க்கும் குணம் கொண்ட உயிரி வேதிப் பொருள்கள் தாய்ப்பாலில் செறிந்திருக்கின்றன.

தாய்ப்பால் தருவதால் குழந்தைகளுக்கு ஆஸ்துமா நோய் ஏற்படுவதும் ஓரளவு கட்டுப்படுத்தப்படுகிறது.கொவைட் 19 தொற்று முக்கியமாக மூச்சுப்பாதையைத் தாக்குவதால், தாய்ப்பால் தரும் நோய் எதிர்ப்புச் சக்திகள் முதிராத இளம் குழந்தைக்கு பாதுகாப்பபுக் கவசமாக அமைகிறது. குழந்தையின் வளர்ச்சியையும் நோய் எதிர்ப்புச் சக்தியையும் தாய்ப்பால் அதிகரிக்கும்.

பாலூட்டும் தாய் சில தடுப்பு நடவடிக்கைகளைக் கட்டாயம் மேற்கொள்ளவேண்டிய வழிகாட்டுதல்களை உலக சுகாதார நிறுவனம் மார்ச் 2020-இல் அறிவித்துள்ளது.பாலூட்டும்போது கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும். குழந்தையின் முகத்துக்கு நேரே இருமுவது, தும்முவது ஆகியவற்றைத் தவிர்க்க வேண்டும். ஒவ்வொரு முறையும் குழந்தையைத் தொடுவதற்கு முன்பும் பின்பும் 20 விநாடிகள் கைகளைச் சுத்தம் செய்ய வேண்டும்.

தாய் தொடும் அனைத்துப் பொருள்களையும் இடங்களையும் கிருமிநாசினி கொண்டு சுத்தப்படுத்த வேண்டும்.

தொற்றுள்ள தாய் சரியான மருத்துவ சிகிச்சை பெறும் நிலையில் குழந்தையைத் தூக்கலாம், மார்போடு அணைத்துக் கொள்ளலாம். ஒரே அறையில் தாயும் குழந்தையும் 24 மணி நேரமும் இருக்கலாம். ஆனால், மேற்சொன்ன வழிகாட்டுதல்களை முறையாகக் கடைப்பிடிக்க வேண்டும்.

தாயுடன் சேர்ந்து இருப்பது தாய்க்கும் குழந்தைக்கும் பாசப்பிணைப்பை அதிகரிக்கிறது. இவற்றுக்குக் கணவர், வீட்டில் உள்ள மற்ற நபர்கள், மருத்துவப் பணியாளர்கள் ஊக்கமும் ஆதரவும் தர வேண்டும். தாய்க்கு நோயின் பாதிப்பு அதிகமாக இருந்தால், முடிந்தால் தாய்ப்பாலை எடுத்துக் கொடுக்கலாம். மற்ற மகளிரின் தாய்ப்பாலையும் தரலாம், தாய்ப்பால் வங்கியின் உதவியை நாடலாம். தாய் குணமடைந்த பின் மருத்துவரின் அறிவுரைப்படி தாய்ப்பாலைத் தொடரலாம்.

கரோனா தீநுண்மி தொற்றுள்ள தாய்க்கு, கருவுற்ற காலம் முதல் தாய்ப்பால் தரும் காலம் வரை அதிகமான ஊட்டச்சத்துதேவை. பாலூட்டும் காலத்தில் சாதாரணமாக ஒரு பெண் சாப்பிடுவதைவிட அதிகமாக 300 கலோரியும் 25 கிராம் புரதமும் தேவை.

இரண்டு டம்ளர் பால், ஒரு முட்டை, ஒரு கரண்டி சாதம், ஒரு கரண்டி பருப்பு, ஒரு கரண்டி பச்சைக் காய்கறிகள் இவற்றைக் கூடுதலாக சேர்த்துக் கொள்வதால் இந்த அதிகத் தேவை பூர்த்தியாகும்.

கரோனா தீநுண்மி தொற்றுள்ள தாய்க்கு நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்க வைட்டமின் ஏ,சி அடங்கிய பழங்கள், பச்சைக் காய்கறிகள், இரும்புச் சத்துள்ள கீரைகள், வெல்லம், சிறுதானியங்கள், பேரீச்சை, துத்தநாகம் - தாமிரம் போன்றவை செறிந்த முந்திரி, பாதாம், திராட்சை முதலானவற்றை தினமும் அளிக்கவேண்டும். மருத்துவரின் ஆலோசனைப்படி மற்ற மருந்துகளை எடுத்துக் கொள்ளலாம்.

தாய்ப்பால் குழந்தைக்கு இப்போதும் பிற்காலத்திலும் ஒரு மிகப் பெரிய பாதுகாப்பு அரண்.

தாய்க்கும் நாட்டுக்கும் சுற்றுச்சூழலுக்கும் தாய்ப்பால் சிறந்தது. எனவே, கொவைட் 19 தொற்றுள்ள தாய்க்குப் பிறந்த குழந்தையானாலும், அதற்கும் கட்டாயம் தாய்ப்பால் தரப்பட வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com