சானியாவின் சாதனை!

பெடரேஷன் கோப்பை இருதய விருதை (பெட் கப் ஹார்ட்) வென்ற முதல் இந்திய டென்னிஸ் வீராங்கனை என்ற சிறப்பை பெற்றுள்ளார் சானியா மிர்ஸா.
சானியாவின் சாதனை!

பெடரேஷன் கோப்பை இருதய விருதை (பெட் கப் ஹார்ட்) வென்ற முதல் இந்திய டென்னிஸ் வீராங்கனை என்ற சிறப்பை பெற்றுள்ளார் சானியா மிர்ஸா.
உலகின் பிரபலமான விளையாட்டுகளில் ஒன்றாகத் திகழும் டென்னிஸில் ஆடவருக்கு ஏடிபி, மகளிருக்கு டபிள்யுடிஏ சார்பில் பல்வேறு போட்டிகள் நடத்தப்படுகின்றன.
சர்வதேச டென்னிஸ் சம்மேளனம் (ஐடிஎஃப்) சார்பில் ஆடவருக்கு டேவிஸ் கோப்பை, மகளிருக்கு பெடரேஷன் கோப்பை போட்டிகள் ஆண்டுதோறும் நடத்தப்படுகின்றன. இவற்றில் மட்டும் தனிநபர்களாக இல்லாமல் ஒரு நாட்டின் அணியாக இணைந்து ஆடுவது சிறப்பாகும்.
பெடரேஷன் கோப்பை போட்டியில் ஐரோப்பா-ஆப்பிரிக்கா, ஆசிய-ஓசேனியா, அமெரிக்கா, தகுதிச் சுற்று என 4 பிரிவுகளாக அணிகள் இடம் பெற்று ஆடுகின்றன.
கடந்த 1963-ஆம் ஆண்டில் இருந்து மகளிர் பிரிவில் உலகின் முதன்மையான போட்டிகளில் ஒன்றாக நடத்தப்படும் பெடரேஷன் கோப்பை ஐடிஎஃப் 50-ஆவது ஆண்டை கொண்டாடும் வகையில் தொடங்கப்பட்டது.
மொத்தம் 99 நாடுகளின் அணிகள் இடம் பெற்றுள்ள இதில் அமெரிக்கா அதிகபட்சமாக 18 முறை வென்றுள்ளது. மொத்தம் 16 அணிகள் இறுதிச் சுற்றுக்கு தகுதி பெறும்.
1963-இல் முதல்   கோப்பையை அமெரிக்காவும், 2019-இல் கடைசியாக பிரான்சும் சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளன.
பெட் கப் ஹார்ட் கோப்பை: பெட் கப் ஹார்ட் கோப்பை எனப்படும் இவ்விருது கடந்த 2009-ஆம் ஆண்டு முதல் வழங்கப்படுகிறது. ஒரு நாட்டின் அணியில் இடம்பெறும் வீராங்கனையின் சிறந்த ஆட்டத்திறன், மைதானத்தில் ஆடும் திடம், அணியின் வெற்றிக்காக அவரது சிறப்பான பங்கு போன்றவற்றின் அடிப்படையில் இவ்விருது வழங்கப்படுகிறது. ஐடிஎஃப் நிர்வாகிகள், ஆட்ட நடுவர்கள், அமைப்பாளர்கள் 4 மண்டலங்களில் இருந்தும் விருதுக்கு தகுதியானவர்களை பரிந்துரைப்பர். அப்பட்டியலை ஐடிஎஃப் தலைவர் டேவ் ஹாகர்டி, மற்றும் ஊடகத்தினர், முன்னாள் வீரர்கள் அடங்கிய குழு சுருக்கி, ஆன்லைன் வாக்குப்பதிவுக்கு வழங்கும்.
மெலடின் ஒடினுக்கு முதல் விருது: 2009-இல் பெட் கப் ஹார்ட் முதல் விருதை அமெரிக்க வீராங்கனை மெலடின் ஒடின் வென்றார். அதன் பின் வெவ்வேறு ஆண்டுகளில் ஜெலனா ஜன்கோவிக், பெட்ரா குவிட்டோவா, லீ நா, சிமோனா ஹலேப், கரோலின் கார்ஸியா, பியான்கா ஆண்ட்ரிஸ்கு வென்றுள்ளனர். கடந்த 2019-இல் உலகின் முதல்நிலை வீராங்கனை ஆஷ்லி பர்டி, சிமோனா ஹலேப், ஜோஹன்னா கொண்டா, உள்ளிட்டோர் வென்றது குறிப்பிடத்தக்கது.
முதல் இந்திய வீராங்கனை சானியா மிர்ஸா: நிகழாண்டு 2020-இல் ஆசிய-ஓசேனியா மண்டலத்தில் இருந்து இந்தியாவின் சானியா மிர்ஸா,  இந்த விருதுக்கு தேர்வு செய்யப்பட்டார். தகுதிச் சுற்று பிரிவில் இருந்து அனஸ்டஜா செவஸ்டோவா, அமெரிக்க மண்டலத்தில் இருந்து பெர்ணான்டா கோம்ஸ், ஐரோப்பா-ஆப்பிரிக்க மண்டலத்தில் இருந்து அனெட் கொண்டவிட் ஆகியோர் தேர்வு செய்ய்பட்டுள்ளனர்.
இந்த விருதைப் பெறும் முதல் இந்திய டென்னிஸ் வீராங்கனை என்ற சிறப்பை பெற்றுள்ளார் சானியா மிர்ஸா. இதற்காக நடைபெற்ற ஆன்லைன் வாக்கெடுப்பில் மொத்தம் பதிவான வாக்குகளில் 60 சதவீதத்தை பெற்றார் சானியா.
ஹைதராபாத்தை பூர்வீகமாகக் கொண்ட சானியா இந்திய மகளிர் டென்னிஸ் அமைப்பை மாற்றி அமைத்ததில் முக்கிய பங்கு வகித்தவர். தொடக்கத்தில் ஒற்றையர் பிரிவில் சிறப்பாக ஆடிய அவர், பின்னர் இரட்டையர் பிரிவில் சிறந்து விளங்கினார். 
தனது டென்னிஸ் வாழ்க்கையில் 6 கிராண்ட்ஸ்லாம் சாம்பியன் பட்டங்களை வென்றார். இரட்டையர் பிரிவில் உலகின் நம்பர் ஒன் வீராங்கனையாக இருந்த பெருமையும் அவர் வசம் உள்ளது.
பாகிஸ்தான் பிரபல கிரிக்கெட் வீரர் ஷோயிப் மாலிக்கை மணந்த சானியா, கடந்த 2018-இல் குழந்தைப்பேறு காரணமாக விலகினார். ஆண் குழந்தை பிறந்த நிலையில், நிகழாண்டு 2020-இல் ஹோபர்ட் சர்வதேச போட்டியில் முதன்முதலாக களமிறங்கி 2 ஆண்டுகள் கழித்து பட்டம் வென்றார்.  எனினும் ஆஸ்திரேலிய ஓபன் போட்டி சறுக்கலாக அமைந்தது.
பெடரேஷன் கோப்பையில் எழுச்சி: இந்நிலையில் கடந்த மார்ச் மாதம் துபையில் நடைபெற்ற பெடரேஷன் கோப்பை தகுதிச் சுற்று ஆட்டத்தில் கொரியா, இந்தோனேஷியா, சீன தைபே, உஸ்பெகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளின் அணிகளை இந்தியா வெற்றி கண்டது. 4 ஆண்டுகள் கழித்து மீண்டும் பெடரேஷன் கோப்பையில் களம் கண்ட ôர் சானியா, குறிப்பாக இந்தோனேஷியாவுக்கு எதிரான ஆட்டத்தில் இரட்டையர் பிரிவில் சக வீராங்கனை அங்கிதா ரெய்னாவுடன் இணைந்து சானியா மிர்ஸா அற்புதமாக ஆடி 3-0 என கணக்கில் வெற்றி பெறச் செய்தார். இதனால் உலகச் சுற்றுக்கு இந்தியா முன்னேறியது குறிப்பிடத்தக்கது.
பெட் கப் ஹார்ட் விருது பெற்றது குறித்து சானியா மிர்ஸா கூறுகையில்: ""இந்த விருது முதன்முறையாக வென்றது மிகவும் பெருமை தருகிறது. இந்த விருதை நாட்டுக்கும், எனது ரசிகர்களுக்கும் அர்ப்பணிக்கிறேன்.  இந்த விருதுடன் கிடைத்த ரூ.1.5 லட்சம் ரொக்கப் பரிசை தெலங்கானா முதல்வரின் கரோனா நிதிக்கு வழங்குகிறேன்''  என்றார் சானியா. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com