பெண்களுக்கு  இலவசத் தங்குமிடம்!

காலம் எவ்வளவு தான் மாறிவிட்டாலும் பெண்கள் தனியாக வெளியே செல்வதற்கு இன்னும் பயப்படத் தான் செய்கின்றனர்.
பெண்களுக்கு  இலவசத் தங்குமிடம்!

காலம் எவ்வளவு தான் மாறிவிட்டாலும் பெண்கள் தனியாக வெளியே செல்வதற்கு இன்னும் பயப்படத் தான் செய்கின்றனர். நாளுக்கு நாள் பெண்களுக்கு எதிராக நடைபெறும் கொடுமைகளுக்கு எந்த குறைவும் இல்லை. பகலில் கூட பெண்களால் சில இடங்களில் தனியாக செல்ல முடியாத நிலை உள்ளது. அப்படி என்றால் இரவில் ஒரு பெண்ணால் தனியாக செல்ல முடியுமா என்பது கேள்விக்குறி தான். அவசர வேலைக்காக தனியாக செல்லும் பெரும்பாலான பெண்கள் உயிரை கையில் பிடித்துக் கொண்டு தான் ரயில்களிலோ, பஸ்களிலோ பயணம் செய்கின்றனர்.

தேர்வு எழுதுவதற்கோ, நேர்முகத்தேர்வு உட்பட்ட காரியங்களுக்காகவோ தனியாக வெளியூர் செல்லும் பெண்கள் ஒரு லாட்ஜுக்கு சென்று அறை எடுப்பது என்பது மிக சிரமமான விஷயமாகும். நம்பி எந்த லாட்ஜிலும் அறை எடுத்து தங்க முடியாத நிலை தற்போது உள்ளது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் கேரளாவில் தனியாக வரும் பெண்கள் அச்சமின்றி தங்குவதற்கு ஒரு புதிய வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

சமூகநீதித் துறை சார்பில் திருவனந்தபுரம் மற்றும் கோழிக்கோட்டில் தனியாக வரும் பெண்களுக்கு என்றே "என்டெ கூடு' என்ற பெயரில் பெண்களுக்கான ஒரு தங்குமிடம் தொடங்கப்பட்டது. இரவில் தனியாக வரும் பெண்கள் இங்கு இலவசமாக தங்கிக் கொள்ளலாம். இரவு 10 மணி வரை வரும் பெண்களுக்கு இலவசமாக உணவும் வழங்கப்படும். முதலில் திருவனந்தபுரத்தில் இந்த வசதி அறிமுகப்படுத்தப்பட்டது. பின்னர் கோழிக்கோட்டில் தொடங்கப்பட்டது.

இதில் இரவில் மட்டுமே பெண்கள் தங்க முடியும். இதனால் பகலிலும் பெண்கள் தங்குவதற்கு வசதி ஏற்படுத்த வேண்டும் என்று அரசுக்கு பல்வேறு மகளிர் அமைப்புகள் கோரிக்கை விடுத்தன.

இதையடுத்து திருவனந்தபுரத்தில் "ஒன்டே ஹோம்' என்ற பெயரில் புதிதாக மேலும் ஒரு தங்குமிட வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இங்கு தங்குவதற்கு கட்டணம் உண்டு. 24 மணி நேரமும் இங்கு பெண்கள் தங்கிக் கொள்ளலாம். தனி அறைக்கு தினசரி வாடகை 200 ரூபாயும், ஒரு படுக்கைக்கு 100 ரூபாயும் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.

பெண்களுடன் வரும் 12 வயதுக்குட்பட்ட குழந்தைகளும் இங்கு தங்கலாம். தங்குவதற்கு முன் அடையாள அட்டையை கண்டிப்பாக காண்பிக்க வேண்டும். அடையாள அட்டை இல்லாவிட்டால் போலீஸிடமிருந்து ஒரு அத்தாட்சி கடிதத்தை வாங்கி கொடுத்தாலும் போதும். திருவனந்தபுரத்தில் தற்போது 25 பேர் தங்கும் அளவுக்கு வசதிகள் உள்ளன. விரைவில் 50 பேர் வரை தங்குவதற்கான வசதிகள் ஏற்படுத்தப்பட உள்ளது. அறைகள் அனைத்தும் குளுகுளு வசதி செய்யப்பட்டுள்ளன. பொருட்கள் வைத்திருப்பதற்கு பாதுகாப்பு வசதியும் இங்கு உண்டு.

திருவனந்தபுரம் தம்பானூர் என்ற இடத்தில்தான் மத்திய பேருந்து நிலையமும், மத்திய ரயில் நிலையமும் உள்ளன. பேருந்து நிலையத்தின் எட்டாவது மாடியில் தான் இந்த "ஒன்டே ஹோம்' செயல்பட்டு வருகிறது. இதனால் பஸ்சிலோ ரயிலிலோ வரும் பெண்கள் நள்ளிரவு நேரமாக இருந்தாலும் கூட எந்தவித அச்சமும் இன்றி ஒரு சில நிமிடங்களில் இங்கு சென்று விடலாம்.

பெண்களிடையே இதற்கு நல்ல வரவேற்பு கிடைத்து இருப்பதால் திருவனந்தபுரத்தில் மட்டுமில்லாமல் எர்ணாகுளம், கோழிக்கோடு உள்பட பல நகரங்களிலும் இந்த "ஒன்டே ஹோம்' வசதி ஏற்படுத்த தீர்மானித்துள்ளதாக கேரள சமூகநலத் துறை அமைச்சர் கே.கே. சைலஜா கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com