பழகு பாரம்பரிய பயிர்த் தொழில்!

தனியார் பேருந்தின் உரிமையாளரை திருமணம் செய்து கொண்ட  அவர், கணவரின் பூர்வீகத் தொழிலான விவசாயத்தை தானும் மேற்கொள்வோம் என கனவிலும்  நினைக்கவில்லை.
பழகு பாரம்பரிய பயிர்த் தொழில்!

தனியார் பேருந்தின் உரிமையாளரை திருமணம் செய்து கொண்ட  அவர், கணவரின் பூர்வீகத் தொழிலான விவசாயத்தை தானும் மேற்கொள்வோம் என கனவிலும்  நினைக்கவில்லை.  இப்போது, பாரம்பரிய நெல் ரகங்களைத் தேடி, தேடி விதைத்து வருகிறார். இயற்கை விவசாயத்துக்கும், இளம் தலைமுறையினருக்கும் முன்னோடியாக திகழ்கிறார் சுபத்ரா கிருஷ்ணன் (44). எம்.காம். பட்டதாரியான சுபத்ரா திருச்சி மாவட்டம், துறையூரை பூர்வீமாகக் கொண்டவர். மண்ணச்சநல்லூர், நொச்சியம் அருகே நெற்குப்பையில் வேளாண் குடும்பத்தைச் சேர்ந்த கோபால கிருஷ்ணன் என்பவரை 2000-ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.  2008-ஆம் ஆண்டு கணவர் மாரடைப்பால் உயிரிழந்த பிறகு, அவர் விட்டுச் சென்ற தொழிலை கவனிக்க வேண்டிய நிர்பந்தம்.  12 ஏக்கர் விளை நிலத்தில் விவசாயம், டிராவல்ஸ் தொழில், கால்நடை வளர்ப்பு என உழவுக்குப் பூட்டிய இரட்டை மாடுகளைப் போன்று பயிர்த் தொழிலையும், டிராவல்ஸ் தொழிலையும் நேர்த்தியாக மேற்கொண்டு வருகிறார்.

ரசாயன உரங்கள், ஆந்திரா பொன்னி, கர்நாடக பொன்னி, வெள்ளை பொன்னி, ஐஆர்20, பிபிடி என இதர விவசாயிகளை போன்று தொடக்கத்தில் இவரும், பாரம்பரியத்தை தொலைத்த விவசாயத்தையே மேற்கொண்டு வந்தவர். நம்மாழ்வாரின் உரைகள் மீதான ஈர்ப்பும், அவரது காணொளியும்தான் பாரம்பரிய விவசாயத்தின் பக்கம் திரும்பச் செய்தது.  அவர் வழிகாட்டிச் சென்ற இயற்கை விவசாயத்தையும், பாரம்பரிய நெல் ரகங்களையும் மீட்டெடுத்து பெண் தொழில்முனைவோருக்கும், இயற்கை விவசாயத்தை மேற்கொள்வோருக்கும் முன்மாதிரியாக திகழ்கிறார்.

தொடக்கத்தில் சிரமமாக இருந்தாலும் இயற்கை விவசாயத்தின் மீதான தனது தேடுதலையும், ஆர்வத்தையும் இடைவிடாது கடைப்பிடித்து வந்ததால் அதிக செலவு இல்லாமல், கூடுதல் லாபம் பெற்று  சாதனைப் பெண்மணியாக நிற்கிறார்.  தனது அனுபவங்களை அவரே கூறுகிறார்:


""கணவர் மறைவுக்கு முன் எனக்கு விவசாயம் என்ற பெயரைத் தவிர்த்து வேறு ஏதுவுமே தெரியாது. விளைநிலம் எங்கிருக்கிறது என்பதில் கூட எனக்கு அதிக ஆர்வம் இருந்ததில்லை. ஆனால், அவரது மறைவுக்குப் பிறகு அதுதான் எனது வாழ்க்கையாகிப் போனது. தொடக்கத்தில் (2009) இதர விவசாயிகளைப் போன்று ரசாயன உரங்களை பயன்படுத்தி நெல் பயிரிட்டேன். 

பின்னர், 2013-இல் பரிசோதனை முயற்சியாக தூயமல்லி என்ற பாரம்பரிய ரகத்தை அரை ஏக்கரில் பயிர் செய்தேன். இதேபோல, சொர்ண மசூரி என்ற பாரம்பரிய ரகத்தையும் அரை ஏக்கரில் பயிரிட்டேன். விளைந்த நெல்களை விதை நெல்லுக்கும், மீதமுள்ளவற்றை வீட்டுத் தேவைக்கும் வைத்துக் கொண்டேன். பின்னர், கருங்குறுவை, சீரக சம்பா என பாரம்பரிய நெல் ரகங்களை தேடித், தேடி விதைக்க தொடங்கினேன். 

திருச்சியில் வேளாண்துறை சார்பில் நடைபெற்ற கண்காட்சி ஒன்றில் பெரும்பாலான ரகங்களை கண்டறிந்தேன். அதன் மூலம் கிடைத்த தொடர்புகளால் பாரம்பரிய ரகங்களை பெற்று நானே அதன் விதைகளை தயாரிக்கத் தொடங்கினேன். பெரும்பாலும் விதை நெல்லை அமாவாசை நாளில் மட்டுமே உலர்த்தி தயாரிப்பது வழக்கம். அமாவாசை தினத்தில் காலை 10 முதல் 12 மணிக்குள்ளாக விதை நெல்களை உலர்த்தி எடுத்துக் கொள்வேன். அதுதான் நமது முன்னோரின் நடைமுறை. அதேபோல, உரத்துக்காக அதிகம் செலவிட வேண்டியதில்லை. நான் வளர்க்கும் மாடுகளில் இருந்து கிடைக்கும் சாணம் போதுமானது.

அமிர்த கரைசல் தயாரிக்க 2 நாள் தேவைப்படும். மீன் அமிலம் தயாரிக்க 22 நாள் தேவைப்படும். கற்பூர கரைசல் தயாரிக்க 2 நாள் தேவைப்படும். இவை மட்டும்தான் உரமாக பயன்படுத்துகிறேன். கற்பூர கரைசல் மட்டும் தெளிப்பான் மூலம் தெளிக்க வேண்டும். மீதமுள்ள இரு கரைசலையும் பாசனத்தின்போது தண்ணீருடன் கலந்துவிட்டால் போதுமானது. இந்த முறையில் ஒரு ஏக்கரில் நெல் பயிரிட ரூ.22 ஆயிரம் வரை (விதை, கரைசல், கூலி ஆள் உள்பட) செலவாகிறது. அறுவடைக்கு பிறகு ஒரு ஏக்கருக்கு 18 மூட்டை நெல் என்றாலும் லாபம் மட்டும் ரூ.20 ஆயிரத்துக்கு மேல் (செலவு போக) கிடைக்கும்.

காவிரியிலிருந்து அய்யன் வாய்க்காலில் வரும் தண்ணீரை கிளைக் கால்வாய்களில் பெற்று பாசனம் செய்கிறேன். ஆழ்துளை கிணறும் உள்ளது. விளை நிலங்கள் அனைத்தும் கான்கிரீட் காடுகளாக மாறிவிட்டதால் வாய்க்காலில் அதிகளவு கழிவுநீர் கலந்துவிடுகிறது. நல்ல தண்ணீர் வசதி இருந்தால் பாரம்பரிய ரகமும், இயற்கை விவசாயமும் சாத்தியமே. யாராலும் சாதிக்க முடியும். ஆர்வமும், நம்பிக்கையும் அவசியம். இயற்கை முறையில் விளைந்த நெல்லுக்கு சந்தையிலும், மக்களிடமும் நல்ல வரவேற்பு உள்ளது.

பெண்கள் தங்களது குடும்பத்தில் ஆண்கள் மேற்கொள்ளும் தொழிலை கட்டாயம் அறிந்திருக்க வேண்டும். ஏனெனில், ஆண்கள் இல்லாத தருணத்தில் சுலபமாக அதனை எதிர்கொள்ள வேண்டும். 

"கேட்காத கடனும், பார்க்காத பயிரும் பாழ்' என்ற பழமொழியை மனதில் நிறுத்திக் கொள்ள வேண்டியது அவசியம். உழவு தொடங்கி அறுவடை வரையிலும் என்னால் தனியே மேற்கொள்ள முடியும். இருப்பினும், 25 விவசாய தொழிலாளர்களுக்கு வேலை அளித்து வருகிறேன். 100 நாள் வேலைத் திட்டம் வந்த பிறகு விவசாயக் கூலிக்கு ஆள்கள் பற்றாக்குறை என்பது நிதர்சனமாகிவிட்டது. எனவேதான், இயந்திர நடவு முறைக்கு மாறிவிட்டேன். இயந்திர நடவுக்கு ஹெக்டேருக்கு ரூ.5 ஆயிரம் மானியமாக அரசே வழங்குகிறது. இயந்திர நடவாக இருந்தாலும், கை நடவாக இருந்தாலும் இயற்கை விவசாயம் என்பதிலிருந்து ஒருபோதும் பின்வாங்கப் போவதில்லை'' என்கிறார் சுபத்ரா.

இவர், ரோட்டரி சங்கத்திலும் இணைந்து சேவையாற்றி வருகிறார். அதோடு மட்டுமல்லாது திருச்சி "லீடு எம்பவர்மெண்ட்'  அறக்கட்டளையின் செயலாளராகவும் இருந்து, பெண்களுக்கு இலவசமாக தையல்பயிற்சி, அழகுக்கலை பயிற்சி என பல்வேறு பயிற்சிகளை அளித்து இளம் தொழில்முனைவோரையும் உருவாக்கி வருகிறார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com