பிறப்பின் அடிப்படையில்  இயங்கும்  கட்சி  திமுக!: வானதி சீனிவாசன்

ஆர்வம், முயற்சி, நம்பிக்கை இவற்றை மட்டுமே நம்பி அரசியல் களத்துக்கு வந்தவர் வானதி சீனிவாசன். மாறாத புன்னகை, எளிய தோற்றம்.
பிறப்பின் அடிப்படையில்  இயங்கும்  கட்சி  திமுக!: வானதி சீனிவாசன்

ஆர்வம், முயற்சி, நம்பிக்கை இவற்றை மட்டுமே நம்பி அரசியல் களத்துக்கு வந்தவர் வானதி சீனிவாசன். மாறாத புன்னகை, எளிய தோற்றம். சிந்தனை, செயல்பாட்டில் தளராத உறுதி இவை தான் வானதி சீனி வாசனின் அடையாளங்கள். எல்லாமும் என்னாலும் முடியும் என்ற நம்பிக்கையோடு வலம் வருபவர்.

முப்பத்துநான்கு ஆண்டு பொது வாழ்க்கை, இருபதாண்டு காலம் முழுநேர அரசியல் பணி, படிப்படியாய் முன்னேற்றம் என்று தன்னை உயர்த்திக் கொண்டவர். தற்போது பாரதிய ஜனதா கட்சியின் அகில பாரத மகளிரணித்
தலைவியாக உயர்ந்திருக்கிறார். அந்தமகிழ்ச்சியை, தன் அனுபவங்களை நம்மோடு பகிர்ந்து கொள்கிறார்:

கட்சியின் உயரிய பெரிய பதவி கிடைத்திருக்கிறது, எப்படி உணர்கிறீர்கள்?

பெரிய பொறுப்பு தரப்பட்டிருப்பதாக நினைக்கிறேன். தகவலைக் கேட்டவுடன் 34ஆண்டு கால உழைப்புக்கான அங்கீகாரம் என்ற மகிழ்ச்சி, இவ்வளவு பெரிய பொறுப்பை நல்லமுறையில் நடத்த வேண்டுமே என்ற பதற்றம், எதிர்பாராத ஒரு வாய்ப்பு என்று கலவையான உணர்வுகள் தான். மொத்தத்தில் மகிழ்ச்சி.

இன்றைய அரசியலுக்கு உங்களைத் தயார்ப்படுத்திக் கொண்டது எப்படி?

கல்லூரியில் படித்த பொழுது என்னுடைய ஆர்வத்தை முழுமையாக அரசியலின் பக்கம் திருப்பியது ஆர் எஸ் எஸ் இயக்கத்தின் மாணவர் அமைப்பான ஏபி வி பி அமைப்பு தான். விவேகானந்தரும் பாரதியும் என்னுடைய ஆதர்சங்கள். அவர்களின் எழுத்துகள் எனக்குள் ஓர் உத்வேகத்தை ஏற்படுத்தியிருந்தன. அந்த நேரத்தில் ஆர் எஸ் எஸ் -இன் சித்தாந்தங்கள் என்னை அரசியலின் முக்கியத்துவத்தை உணர வைத்ததோடு தீவிரமாகச் செயல்படவும் களம் அமைத்துக் கொடுத்திருந்தது.

அரசியலில் எந்த இடத்தைப் பிடிக்கவிரும்பினீர்கள் ?

மிக அதிக மக்களைச் சென்றடையவும் அவர்கள் வாழ்வில் மாற்றத்தை ஏற்படுத்தவும் அரசியல் தான் சரியான வழி என்பதைப் புரிந்து கொண்டேன். பொது வாழ்வில் இருக்க வேண்டும். அதற்கு ஒரு கட்சியில் இணைந்து பணியாற்ற வேண்டும் அவ்வளவு தான். அதற்காக பாரதிய ஜனதா கட்சியில் 1993-ஆம் ஆண்டில் என்னை இணைத்துக் கொண்டேன். முழுஅளவில் கட்சிப் பணியாற்றத் தொடங்கியது 2000-இல் தான்.

கட்சியில் தாங்கள் கடந்து வந்த பாதை பற்றி...

ஆரம்பத்தில் 1999-இல் மாவட்ட செயற்குழு உறுப்பினர். மாநகர மீடியா பொறுப்பாளர், 2003-லிருந்து ஆறு ஆண்டுகள் மகளிரணி மாநில பொதுச்செயலாளர், 2009- இல் மாநிலச் செயலாளர், 2013-இல் மாநில பொதுச் செயலாளர், 2015-இல் மாநில துணைத் தலைவர், 2016 - இல் மீண்டும் பொதுச் செயலாளர், 2020 மீண்டும் துணைத் தலைவர், இப்படி பல்வேறு பொறுப்புகளில் இருந்திருக்கிறேன். கட்சி என்ன சொல்கிறதோ அதனை செயல்படுத்துவதில் முழு முனைப்புக் காட்டியிருக்கிறேன். இன்றைக்கு அகில பாரத மகளிரணி தலைமைப் பொறுப்புக்கு வந்திருக்கிறேன்.

கட்சியைப் பொருத்தவரை என்று சொன்னால் உங்களுடைய குறிப்பிட்ட கட்சிப் பணிகள் என்னென்ன?

பிரதமர் பங்கேற்ற கூட்டங்களுக்குப் பொறுப்பாளராக இருந்து நல்ல முறையில் கூட்டங்களைக் குறைவின்றி நடத்தியிருக்கிறோம். பெண்களுக்கான பல புதிய திட்டங்களை நாங்கள் செயல்படுத்தி இருக்கிறோம்.

தனிப்பட்ட முறையில் உங்களது முயற்சிகள் என்று சொல்வதற்கு ஏதாவது இருக்கிறதா?

ஏன் இல்லை... ஒவ்வொரு நாடாளுமன்ற உறுப்பினரும் ஒரு கிராமத்தை தத்தெடுத்து அதன் முன்னேற்றத்தை உறுதி செய்ய வேண்டும் என்று சொன்ன போது நான் நாடாளுமன்ற உறுப்பினர் இல்லை என்றாலும் என்னுடைய சொந்த கிராமத்தைத் தத்தெடுத்து பல அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளையும் செய்து வருகிறேன். சகோதரி நிவேதிதையின் நூற்றைம்பதாவது ஆண்டு விழாவை இந்தியாவிலேயே பிரமாண்டமாய் அமைத்துக் காட்டியிருக்கிறேன். சகோதரி நிவேதிதை ரத யாத்திரை நடத்தி இரண்டரை லட்சம் கல்லூரி மாணவிகளைச் சந்தித்தோம்.

நீங்கள் "தாமரைசக்தி' என்று ஓர் அமைப்பை நடத்துகிறீர்கள். அதன் செயல்பாடு எப்படி இருக்கிறது?

2015 - இல் தாமரை சக்தி என்று ஓர் அமைப்பை உருவாக்கினேன். பெண்கள் பணியிடங்களில் வரும் பாலியல் தொந்தரவுகளுக்குத் தீர்வுகாண எங்கள் அமைப்பை நாடலாம். மின்னஞ்சல் தொலைபேசி அழைப்புகள் வழியாகவே பெண்கள் தங்கள் பிரச்னைக்கான ஆலோசனைகளைப் பெறலாம். தற்போதும் இந்த அமைப்பை நல்ல முறையில் செயல்படுத்திக் கொண்டிருக்கிறேன். இப்போது, கல்லூரிப் பெண்களுக்குத் தற்காப்புக்கலை பயிற்சியும் தருகிறோம்.

தேர்தல் அரசியலில், நீங்கள் ஏன் வெற்றி பெற முடியவில்லை?

தேர்தலில் நிற்பவர்கள் என்பதாலேயே வெற்றி பெற்றுவிட முடியாது. மக்கள் மன்றத்தின் கட்சியின் கொள்கைகளைக் கொண்டு சேர்ப்பதற்கும், வெற்றி பெற்றால் கட்சியின் சார்பில் மக்களின் பிரச்னைகளை அரசின் கவனத்திற்கு எடுத்துச் செல்வதற்கும் தேர்தல், அரசியல் தேவைப்படுகிறது. 2011-இல் சட்டமன்ற தேர்தலில் மயிலாப்பூர் தொகுதியில் நிற்க கட்சி கடைசி நிமிடத்தில் வாய்ப்பளித்தது. 5 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குகளைப் பெற்றேன்.

அரசியல் சம்பாதிப்பதற்கான வாய்ப்பாகப் பார்க்கப்படுகிறதே...

அப்படி ஓர் எண்ணம் பலருக்கும் இருக்கிறது. ஆனால் எங்கள் கட்சியில் தனிநபர் செலவுகளை அவரவரே தான் பார்த்துக்கொள்கிறோம். பயணங்களோ வேறு வேலைகளோ எதற்கும் கட்சி பொறுப்பேற்காது. மக்களுக்கு நன்மை செய்வதற்காக வரும் முன் நம்முடைய பொருளாதார நிலையை ஸ்திரப்படுத்திக்கொண்டு வருவது தான் நல்லது. நான் சில ஆண்டுகள் வக்கீல் தொழில் செய்தேன். ஏறத்தாழ பத்து ஜூனியர்கள் என்னிடம் இருந்தார்கள். அந்த நிலையில் தான் தொழிலை விட்டுவிட்டு கட்சிப் பணிக்கு வந்தேன். பொருளாதாரத்தில் நாமே நம் குடும்பத்தினரை சார்ந்து இருக்கும் பட்சத்தில் சிரமங்கள் அதிகம். தவிர்க்க முடியாததும் கூட. அரசியல் என்பது மக்கள் பணி.

உங்களைக் கவர்ந்த தலைவர்கள் யார் யார்?

நிர்மலா சீதாராமன் நன்கு உற்சாகப்படுத்துவார். எந்த ஒரு விஷயத்தையும் ஆழ்ந்த புரிதலோடு அணுகுவார். அதெல்லாம் நான் கற்றுக் கொண்டிருக்கிறேன். ஸ்மிருதி இரானி ஒரு சிறந்த போராளி. ஒரு தொகுதியில் எப்படி உழைக்க வேண்டும் என்பதை அவரிடமிருந்து தான் கற்றுக்கொண்டேன். 2014-இல் அமேதி தொகுதியில் வேட்பாளராக அவர் இருந்தபோது நானும் பிரசாரத்திற்குப் போயிருந்தேன். அவர்களுக்குள்ளிருக்கும் வேகத்தை நெருப்பைப் போல உணர்ந்தேன்.

தமிழகத்தில் உங்களை வழி நடத்திய தலைவர் யார்?

தமிழகத்தில் இல.கணேசன் ஒரு நவீன பாரதியார் என்பேன். எது பேசினாலும் அதிலே பெண்களுக்கு என்ன வாய்ப்பு என்று விசாரிப்பார். பெண்கள் செயல்பட ஊக்கம் தருவார். பொன்னார் அவர்கள் முழுநேர அரசியலுக்கு ஊக்கப்படுத்தி என்னை நம்பி மாநிலச் செயலாளர் பொறுப்பைத் தந்து நிறைய கற்றுக்கொடுத்தார். தீர்மானங்கள் எழுதுவது எந்த ஒரு விஷயத்தையும் எப்படிச் சொல்வது போன்றவற்றை ஹெச்.ராஜா அவர்கள் தான் பயிற்சி தந்து உதவியிருக்கிறார். பெண்களை எப்படி மதிக்க வேண்டும் என்பதை சி.பி.ராதாகிருஷ்ணன் அவர்களைப் பார்த்துத் தான் கற்றுக்கொண்டேன்.

தீ பரவுகிறது என்று உங்கள் கட்சிக்கு எதிரான கோஷம் பெரிதாய் இருக்கிறதே?

தமிழகத்தில் நாங்கள் ஆளும் கட்சியோ எதிர் கட்சியோ இல்லை. ஆனால் செல்வி ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் எங்களைத் தான் அவர்கள் போட்டியாகப் பார்க்கிறார்கள். அதனால் தான் திமுக எங்களை நோக்கியே அவர்களின் போராட்டங்களை வடிவமைக்கிறார்கள். தங்கள் அரசியல் வாழ்வைப் பாதுகாக்க பாரதிய ஜனதா கட்சியை எதிர்ப்பது அவசியம் என்று கருதுகிறார்கள். அவர்கள் எந்தத் திட்டங்களுக்கு எதிராகவெல்லாம் போராடுகிறார்களோ அதையெல்லாம் அவர்கள் தான் காங்கிரúஸாடு சேர்த்து கொண்டுவந்தவர்கள். மோடி எதிர்ப்பு என்ற ஒன்றை கட்டமைத்துத் தங்களை நிறுத்திக் கொள்ளப் பார்க்கிறார்கள். அப்படித்தான் பாராளுமன்ற தேர்தலில் வெற்றியும் பெற்றார்கள்.

பிரதமர் மோடியைத் தமிழின விரோதி என்று கூறுகிறார்களே?

தமிழுக்கு, தமிழனுக்கு எதிரி என்றார்கள். அவர் இந்தியா முழுவதும் இந்தியாவுக்கு வெளியே உலக அரங்கிலும் எங்கே பேசினாலும் பாரதியை, திருக்குறளை பேசுகிறார். தமிழின் புகழை தமிழனின் பெருமையை மோடி உலகுக்கு சொல்லிக் கொண்டிருக்கிறார். தமிழகம் அதனை உற்று நோக்கிக் கொண்டிருக்கிறது. திமுக கட்டமைத்த பிம்பமும் கலைந்து கொண்டே வருகிறது.

பாரதிய ஜனதா கட்சி சனாதனத்தை வர்ணபேதத்தை ஜாதிப்பிரிவுகளை ஆதரிப்பவர்கள் என்ற குற்றச்சாட்டுக்கு உங்கள் பதில் என்ன?

எங்கள் கட்சி எனக்கு பிறப்பின் அடிப்படையில் கட்சியில் பொறுப்புகள் தரவில்லை. யாருக்குமே அப்படி பிறப்பின் அடிப்படையில் பதவிகள் தரப்படுவதில்லை. ஆனால், பிறப்பின் அடிப்படையில் மட்டுமே கட்சிப் பொறுப்புகள் வழங்கப்படுவது தமிழகத்தில் திமுகவில்தான். திருமாவளவன் போன்றவர்கள் இந்தப் போராட்டங்களை நடத்த வேண்டியது திக, திமுகவிற்கு எதிராகத்தான். அவர்களின் போராட்டங்களுக்குச் சரியான இடம் அறிவாலயத்தின் முன்னும், சத்யமூர்த்திபவன் முன்னும் தான். நாங்கள் ஜனநாயகத்தை நம்புபவர்கள். பாரதிய ஜனதாவில் யாரும் எந்தப் பொறுப்புக்கும் பதவிக்கும் வர முடியும்.

பெண்களுக்கு எதிரான குற்றங்கள், பாலியல் வன்கொடுமைகள் அதிகமாகி வருகிறதே...

இவற்றையெல்லாம் தீர்க்க, பெண்கள் பற்றிய பார்வை மாற வேண்டும். காவல்துறை, நீதித்துறை செயல்பாடுகள் அரசின் நடவடிக்கைகள் ஒருபுறம் இருக்கின்றன. சட்டங்கள் கடுமையாக இருக்கின்றன என்றாலும் மக்களின் பார்வை, பெண்களைப் பற்றிய புரிதல் மேம்படாத வரை பிரச்னைகளும் இருந்து கொண்டே தான் இருக்கும். ஒட்டுமொத்த சமூகமும் மரியாதையோடு பெண்களைப் பார்ப்பதற்குரிய முயற்சிகளைச் செய்ய வேண்டும். அது தான் முழுமையான தீர்வு.

சினிமா முகங்கள் உங்கள் கட்சிக்கும் அவசியம் என்ற நிலை வந்து விட்டதா?

கட்சிக்கு சினிமா முகங்கள் என்பதை விட, இதுவரை சினிமா உலகம் யாரை நம்பியதோ அவர்களை விடுத்து பாரதிய ஜனதா கட்சியை நம்பி வருகிறார்கள் என்பது மாற்றத்தின் குறியீடு. பாரதிய ஜனதா கட்சியின் வளர்ச்சி என்று தான் பார்க்க வேண்டும்.

""ஏறத்தாழ கால் நூற்றாண்டு காலம் உழைத்து இந்த இடத்தை அடைந்திருக்கிறீர்கள், சிலர் எடுத்த எடுப்பில் பெரிய இடத்தைக் கட்சியில் அடைந்து விடுகிறார்களே...''

வெளியிலிருந்து பார்ப்பவர்களுக்கு அப்படித் தோன்றலாம். கட்சிக்குள் அப்படியில்லை. சீனியர்களுக்கான மரியாதை எப்போதும் அவர்களுக்கு இருக்கிறது. இங்கே அவரவர்க்கும் ஒரு வேலை இருக்கிறது. கலைத்துறை, கல்வித்துறை என அனைத்துத் துறைகளும் அவரவருக்கான பணியில் ஈடுபட்டிருக்கிறோம். ஊடகங்கள் தான் சினிமாத் துறையினருக்குக் கூடுதல் கவனம் தருகிறார்கள். கட்சிக்குள் எல்லாரும் சரியாகவே நடத்தப்படுகிறார்கள்.

அரசியலுக்கு வர விரும்பும் பெண்களுக்கு உங்கள் செய்தி தான் என்ன?

எங்கே எந்தெந்த அமைப்புகளில் கட்சிகளில் பெண்கள் மரியாதையோடு நடத்தப்படுகிறார்கள் என்று பாருங்கள். உழைப்புக்கும் திறமைக்கும் அங்கீகாரம் கிடைக்கும் இடத்தைத் தேர்ந்தெடுங்கள். குறுக்கு வழிகள் நிரந்தரமானவை அல்ல. உழைப்பை மட்டுமே நம்புங்கள். உயர்வு நிச்சயம் உண்டு.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com