மின்மினிப் பூச்சிகளால் கிடைத்த விருது!

மின்மினிப் பூச்சிகளால் கிடைத்த விருது!

மும்பை பன்வெல் பகுதியில் வாழும் 23 வயது இளைஞி, புகைப்படக் க லைஞர், கவிஞர், கதை சொல்லி, சொற்பொழிவாளர்,

மும்பை பன்வெல் பகுதியில் வாழும் 23 வயது இளைஞி, புகைப்படக் க லைஞர், கவிஞர், கதை சொல்லி, சொற்பொழிவாளர், ஆவணப்படத் தயாரிப்பாளர், பயணிப்பாளர், வர்ணனையாளர் போன்ற பன்முகத் திறமைகளைக் கொண்டவர் ஐஸ்வர்யா ஸ்ரீதர். 56 ஆண்டுகளாக சிறந்த வன இயல் படங்களுக்கு விருதுகள் வழங்கி வரும் லண்டன் இயற்கை வரலாற்று அருங்காட்சியகம், 2020- இன் "சிறந்த வன இயல் புகைப்பட கலைஞர்' விருதினை அவருக்கு வழங்கியிருக்கிறது.

இரண்டு முறை இந்தப் போட்டியில் கலந்து கொண்டு விருது பெறாத ஐஸ்வர்யா தனது மூன்றாம் முயற்சியில் விருது பெற தகுதி பெற்றுள்ளார். இந்த விருது பெறும் முதல் இந்தியப் பெண்மணி ஐஸ்வர்யாதான். 80 நாடுகளிலிருந்து 50000 புகைப் படங்கள் போட்டிக்காக வந்திருந்தன. அதில் தேர்வு பெறுவது ஒரு சவால் மட்டுமல்ல சாதனையும்தான்! சுமார் ரூ.10 லட்சம் பணமும், டிராஃபியும், சான்றிதழும் இந்த விருதில் அடங்கும். இது குறித்து அவர் நம்முடன் பகிர்ந்து கொண்டவை:

""மும்பையில் வாழ்ந்தாலும் தமிழ்நாடுதான் எங்களுக்குப் பூர்வீகம். அப்பா ஸ்ரீதர் ரங்கநாதன். அம்மா ராணி. அப்பா மும்பை இயற்கை வரலாற்றுக் கழகத்தில் உறுப்பினர். அவருடன் காடுகளில் டிரெக்கிங் செய்யும் வழக்கம் எனக்கு சிறுவயது முதலே உண்டு. அந்த அனுபவம்தான் இயற்கை அழகு, அதன் முக்கியத்துவம் குறித்து எனக்கு போதித்தது.

12 வயதிலேயே அப்பா எனக்கு காமிரா வாங்கிக் கொடுத்தார். செடிகள், பறவைகள், பூச்சிகள் எதையும் விட்டு வைக்க மாட்டேன். படம் பிடிப்பேன். இப்படித்தான் காமிரா மூலம் இயற்கையின் பல முகங்களை வார்ப்பதில் ஆர்வம் ஏற்பட்டது. மாஸ் மீடியா பட்டப்படிப்பு முடித்ததும் முழுநேர வன இயல் புகைப்படக் கலைஞராக மாறிவிட்டேன்.

வீட்டில் மாடியிலிருந்து இரவில் வெளியே நோட்டம்விடும் போது, மின்மினிப் பூச்சிகள் மின்னுவதை வெகுவாக ரசிப் பேன். மின்மினிப் பூச்சிகள் அழிந்துவரும் இனப்பட்டியலில் இடம் பெற்றுள்ளன.

காட்டுக்கு சென்றால் மின்மினிப் பூச்சிகளை அதிகமாகக் காணலாம் என்ற முடிவுடன் மகாராஷ்டிராவில் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியான பந்தர் தாரா காடுகளில் காட்டுவாசிகள் துணையுடன் இரண்டரை மணி நேரம் பயணம் செய்தேன். சிறுத்தைகளும், காட்டுப்பன்றிகளும், விஷப்பாம்புகளும் இருக்கும் காட்டின் நடுவே பின்இரவில் ஒரு மரம் வெளிச்சத்துடன் வானவில் வண்ணங்களுடன் மின்னி மினுங்கிக் கொண்டிருந்தது. பல்லாயிரக்கணக்கான மின்மினிப் பூச்சிகள் அந்த மரத்தை மொய்த்து முற்றுகை இட்டிருந்தன. ஆயிரக்கணக்கான மின்மினிப்பூச்சிகள் அந்த மரத்தில் அமர இடம் கிடைக்காமல் மரத்தைச் சுற்றிச் சுற்றிவந்தன.

அந்த அரிய காட்சியைப் படம் பிடிக்க காமிராவின் ஃபிளாஷையோ டார்ச் லைட்டின் வெளிச்சத்தையோ பயன்படுத்தவில்லை. நிலவு வெளிச்சம் வெகுவாகக் குறைவாக இருக்கும்போது அதைப் படம் பிடித்தேன். அந்தப் படத்திற்கு "பெருவிருப்பத்தின் பிரகாசங்கள்' என்று தலைப்பு கொடுத்து போட்டிக்காக அனுப்பினேன்.

விருது வழங்கப்பட்ட எனது படம் "பெருவிருப்பத்தின் பிரகாசங்கள்' லண்டனில் இயற்கை வரலாற்று அருங்காட்சியகத்தில் பொதுமக்கள் பார்வைக்கு காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. அதைப் பார்க்க என்னால் லண்டன் செல்ல முடியவில்லை.

லண்டன் வாழ் நண்பர்களிடம் அந்த காட்சியமைப்பைப் படம் பிடித்து அனுப்பி உதவுமாறு கேட்டுக் கொண்டுள்ளேன். வன இயலின் முக்கிய அம்சங்களான விலங்குகள், பறவைகள், மரங்கள், பூச்சிகள் என்று எனது சொந்தங்களை வளர்த்துக் கொண்டுள்ளேன்.

நவி மும்பைக்கு அருகில் அமைந்திருக்கும் "ஊரன்' மற்றும் "பஞ்சே' சதுப்பு நிலப்பகுதியை மனித பயன்பாட்டிற்காக மண்ணிட்டு மூடப்படுவது என்னைப் பாதித்தது. ஆயிரக்கணக்கான ஃபிளெமிங்கோ பறவைகளின் சரணாலயமாக விளங்கும் "பஞ்சே' சதுப்பு நிலத்தின் முக்கியத்துவம் குறித்து ஒரு செய்திப் படம் தயாரித்தேன்.

அது தூர்தர்ஷனில் வெளியானது. சதுப்பு நிலம் மாற்றப்படுவதை மும்பை உயர்நீதிமன்றம் தடை செய்ய எனது செய்திப் படம் உதவியது. இந்த பங்களிப்பிற்கு தமிழ் நாடு ஆளுநர் விருதும் எனக்கு வழங்கப்பட்டுள்ளது. சென்ற ஆண்டு எனக்கு "லண்டன் டயானா விருது'ம் வழங்கப்பட்டது.

கரோனா காலம் என்பதால் விருது வழங்கும் விழாவிற்கு என்னால் செல்ல முடியவில்லை. "2020-இன் சிறந்த வன இயல் புகைப்பட கலைஞர்' விருது எனக்கு "மெய்நிகர் விழா' மூலமாக வழங்கப்பட்டது'' என்கிறார் ஐஸ்வர்யா ஸ்ரீதர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com