கடவுள் அளித்த பரிசு!

""திரைப்படங்களில் மட்டுமே நடித்து வந்த என்னை பத்தாண்டு இடைவெளிக்குப் பின் மீண்டும் டிஸ்னி ஹாட் ஸ்டார் தயாரிப்பில் "ஆர்யா' என்ற வெப் சீரியலில் நடிக்க அழைத்தபோது, முதலில் தயக்கமாகவே இருந்தது.
கடவுள் அளித்த பரிசு!

""திரைப்படங்களில் மட்டுமே நடித்து வந்த என்னை பத்தாண்டு இடைவெளிக்குப் பின் மீண்டும் டிஸ்னி ஹாட் ஸ்டார் தயாரிப்பில் "ஆர்யா' என்ற வெப் சீரியலில் நடிக்க அழைத்தபோது, முதலில் தயக்கமாகவே இருந்தது. இதுவரை வெப் சீரியல்களில் நடித்ததில்லை. ஆனால் இந்தத் தொடர் வெற்றி பெற்றதோடு, பெங்காலி, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், மராத்தி ஆகிய மொழிகளிலும் டப்பிங் செய்யபட்டதை அறிந்தவுடன் என் மீதும், என் நடிப்பின் மீதும் நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. ரசிகர்களின் உற்சாக வரவேற்பால் "ஆர்யா -2' தொடரின் படப்பிடிப்பு ஜனவரி (2021)யில் தொடங்கவுள்ளது. இது மட்டுமின்றி எனக்கு அனுபவமில்லாத நிகழ்ச்சிகளில் பங்கேற்பதைத் தவிர்த்து வந்த நான், இப்போது பிரபல டிசைனர் மனிஷ் மல்ஹோத்ரா மற்றும் இளம் நகைச்சுவை நடிகர் மல்லிகா துவாவுடன் நானும் ஒரு நடுவராக பங்கேற்கும் "மைந்த்ரா பேஷன் சூப்பர் ஸ்டார்' என்கிற ரியாலிட்டி ஷோவிலும் பங்கேற்றுள்ளேன். இது எனக்கொரு புதுமையான அனுபவம் என்றே சொல்லலாம்'' என்று கூறும் சுஷ்மிதா சென் தான் கடந்து வந்த பாதை குறித்து நம்முடன் பகிர்ந்து கொண்டவை:

"" 1994 -ஆம் ஆண்டு மிஸ் யூனிவர்ஸ் போட்டியில் வெற்றி பெற்றபோது, பெண்ணாகப் பிறந்தது பற்றி என்ன நினைக்கிறீர்கள்? என்ற கேள்வியை என்னிடம் கேட்டபோது, பெண் என்பவள் அனைவராலும் போற்றக் கூடிய வகையில் கடவுள் அளித்த பரிசு என்று பதிலளித்தேன். அப்போதே இதை நிரூபிக்கும் வகையில் என்னுடைய 24-ஆவது வயதில் தனிமை தாயாக ரெனி என்ற பெண் குழந்தையைத் தத்தெடுத்து வளர்க்கத் தொடங்கினேன். பத்தாண்டுகளுக்குப் பின், அலிஷா என்ற மற்றொரு பெண் குழந்தையை தத்தெடுத்து வளர்க்கிறேன். இதனால் என்னுடைய தனிப்பட்ட வாழ்க்கையோ தொழிலோ இதுவரை பாதிக்கப்படவில்லை.

90களில் நான் "மிஸ்யூனிவர்ஸ்' பட்டம் பெற்றபோது, இன்டர்நெட், சோஷியல் மீடியா போன்ற வசதிகள் இல்லாததால், உலகப் பிரசித்திப் பெற்ற தயாரிப்புகள் பற்றி ஏதும் தெரிந்திருக்கவில்லை. நான் அமெரிக்கா சென்ற போதுதான் சர்வதேச தயாரிப்புப் பொருள்களுக்கு விளம்பர மாடலாக பணியாற்றும் வாய்ப்புகள் கிடைத்தன. அன்றைய நிலைமை இப்போது மாறிவிட்டது. இன்று உலகம் முழுவதும் பிரபல தயாரிப்புகள் குறித்த விழிப்புணர்வு மக்களிடையே ஏற்பட்டுள்ள நிலையில், நாம் விளம்பரத்திற்காக நடிக்கும்போது, அந்தப் பொருள்களின் உண்மைத் தன்மையை உணராமல் நடித்து, மக்களை ஏமாற்றுவது தவறு. அதனால் அது போன்ற விளம்பரங்களில் நடிப்பதைத் தவிர்த்து வருகிறேன்.

தகவல் தொழில்நுட்பம் வளர்ச்சியடைந்துள்ள இன்றைய காலகட்டத்தில் ட்விட்டர், இன்ஸ்டாகிராம் போன்ற வசதிகள் பெருகிவிட்டன. பிரபலமானவர்களைப் பற்றி விமர்சிப்பதும் அதிகரித்து வருகிறது. நான் என்ன உடை உடுத்துகிறேன்? அதையே எத்தனை முறை அணிகிறேன் என்பதையெல்லாம் கவனித்து விமர்சனம் செய்கிறார்கள். நான் உடைகளைத் தேர்ந்தெடுத்து அணிவது என்னுடைய விருப்பம் மட்டுமல்ல, வசதிக்காகவும்தான். ஆயிரக்கணக்கான ரூபாய் செலவழித்து உடைகளை தேர்ந்தெடுத்து அணிந்தபின், ஒரே நாளில் அதை அப்படியே தூக்கி எறிந்து விட முடியாது. அது மாபெரும் குற்றமாகும். அந்தத் தவறை நான் எப்போதும் செய்ததில்லை. ஆனால் சமூக வலைதளங்களில் இதுபற்றி கண்ணியக் குறைவாக விமர்சிப்பது சரியல்ல, அழகாக இருப்பவர்கள் எதைச் செய்தாலும் அது விமர்சனத்திற்குள்ளாவது தான் கொடுமை.

2014- ஆம் ஆண்டு ஹார்மோன் சுரப்பி பிரச்னையால் என் உடல் நலம் பாதிக்கப்பட்டது. எல்லாரையும் போல் எனக்கும் வயது கூடிக்கொண்டு போகிறது . உடலில் பிரச்னைகள் ஏற்படுகின்றன. இந்த நோய் பாதிப்பிலிருந்து எப்படிக் குணமடைவது? மீண்டும் பழைய ஆரோக்கியத்தை எப்படி மீட்டெடுப்பது? என்ற பயம் தோன்றியது.

எப்படியும் பழையபடி உடல் தேற வேண்டுமென்பதற்காக இயற்கை முறையில் யோகா, உடற்பயிற்சி, தியானம் போன்றவற்றை கடுமையாக மேற்கொண்டேன். இதை என்னுடைய இன்ஸ்டாகிராமில் வெளியிட்டபோது, பலர் வரவேற்கவில்லை. மாறாக உனக்கோ 40 வயதுக்கு மேல் ஆகிறது. இந்த வயதில் உடலை வருத்திக் கொண்டு யோகா, உடற்பயிற்சி எல்லாம் செய்யாதே, ஏதாவது எசகுபிசகாகி எலும்பு முறிவு, தசைப்பிடிப்பு ஏற்பட்டு பிரச்னை அதிகமாகலாம் என்று கூறி அதைரியப்படுத்தினர். ஆனால் நான் அந்த விமர்சனங்களைப் பொருட்படுத்தாமல், ஒரே மனதுடன் நம்பிக்கையோடு பயிற்சி செய்து பழைய உடல் வலிமையைப் பெற்று குணமடைந்தேன். கடவுளும் எனக்கு உறுதுணையாக நின்றார்.

என்னுடைய இரண்டு வளர்ப்பு மகள்களைப் பற்றிக் கூற வேண்டுமானால் இருவருமே வெவ்வேறு ரசனையும், குணமும் கொண்டவர்கள். ரெனியைப் பொருத்தவரை தன்னுடைய தேவை எதுவோ அதை அடைவதிலேயே குறியாக இருப்பாள். அலிஷாவுக்கு இரக்க குணம் அதிகம். இருவருமே எனக்குப் பொறுமையைக் கற்றுக் கொடுத்தனர். இருவருக்கும் உடை உடுத்துவதிலும், நாகரீகத்திலும் வேறுபாடு இருந்தாலும், ரெனியைப் போல் அலிஷா பகட்டாக உடை அணிவதோ, கவர்ச்சியாக தோற்றமளிப்பதையோ விரும்புவதில்லை. இவற்றை இவர்கள் எப்படி சமூக வலை தளங்கள் மூலம் கற்றுக் கொள்கிறார்கள் என்பது குறித்து நான் ஆச்சரியப்படுவதுண்டு. சில சமயங்களில் நான் உடுத்தும் உடைகளைப் பார்த்து இப்படியெல்லாம் அணியக்கூடாது என்று சொல்வதுண்டு. கல்வி கற்பது எவ்வளவு முக்கியம் என்பதை என் மகள்களுக்கு அறிவுறுத்தியுள்ளேன். வாழ்க்கையில் கல்வி மிகவும் முக்கியம். உதவிக்காக நீங்கள் யாரையாவது எதிர்பார்த்து வராவிட்டால், துணிச்சலுடன் நீங்களே முன்னேறப் பழகிக் கொள்ளுங்கள் என்று அவர்களை தைரியப்படுத்தியுள்ளேன். இது இந்தியப் பெண்கள் அனைவருக்கும் பொருந்தும்'' என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com