பாதுகாப்பான இளம் பருவம் ஒரு வரம்!

பெண்களுக்குச் சம உரிமை, தரமான வாழ்க்கை, பாலின சமத்துவமிக்க சமுதாயத்தை உருவாக்குதல், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான வன்கொடுமைகளைச் தடுத்தல் உள்ளிட்ட பெண்கள் மற்றும் குழந்தைகள்
பாதுகாப்பான இளம் பருவம் ஒரு வரம்!


பெண்களுக்குச் சம உரிமை, தரமான வாழ்க்கை, பாலின சமத்துவமிக்க சமுதாயத்தை உருவாக்குதல், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான வன்கொடுமைகளைச் தடுத்தல் உள்ளிட்ட பெண்கள் மற்றும் குழந்தைகள் பிரச்னைகள் குறித்து சமுதாயத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்த "சர்வதேச பெண்கள் மற்றும் குழந்தைகள் நல அமைப்பு' இந்தியாவில் உள்ளது. இந்த அமைப்பின் இந்திய தலைவராக விருதுநகர் மாவட்டம் சாத்தூர் வட்டம் ராமலிங்காபுரத்தில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளி ஆசிரியை ஆர்.ரமாதேவி செயல்பட்டு வருகிறார். இவர் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியில் இந்திய மகளிர் அணித்தலைவியாக உள்ளார். ஐ.நா.சபையிலும், 18 நாடுகளிலும் பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு குறித்து பேசியுள்ள  இவர் பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு குறித்து நம்மிடம் பகிர்ந்து கொண்டதாவது:

""சர்வதேச பெண்கள் மற்றும் பாதுகாப்பு அமைப்பை இலங்கையைச் சேர்ந்த அன்டனி மடுதீன் என்பவர் 2015- ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 3 -ஆம் தேதி தொடங்கினார். அதே தேதியில் நான் இந்தியத் தலைவராக அறிவிக்கப்பட்டேன். இது ஒரு தனியார் தொண்டு நிறுவனமாகும். நான் வகிக்கும் பதவி கௌரவ பதவியாகும். தற்போது இந்த அமைப்பு அமெரிக்கா, மொராக்கோ, பெல்ஜியம், சிங்கப்பூர் உள்ளிட்ட 182 நாடுகளில் உள்ளது. பெண்கள் விண்வெளியையும் தங்களின் கைக்குக் கொண்டு வந்துவிட்டாலும், அவர்களுக்குப் பாதுகாப்பு என்பது கேள்விக்குறியாக உள்ளது. பொதுவாக பாலியல் சீண்டல்கள்  மட்டுமே அனைவரின் நினைவுக்கு வரும். உடல் நலப் பாதுகாப்பு, மன நலப் பாதுகாப்பு, சிறப்பான வாழ்க்கை இவையனைத்தும் சேர்ந்ததே பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான முழுமையான பாதுகாப்பு.

பாலின சமத்துவமின்மையே பெண்கள் மீதான அத்துமீறலுக்கு முக்கிய காரணமாக அமைகிறது. பாலின சமத்துவத்தில் இந்தியா 153 நாடுகளில் 112-ஆவது இடத்தில் உள்ளது என உலக சுகாதார அமைப்பு கூறுகிறது. பெண்கள் எத்தனை சாதனை புரிந்திருந்தாலும், பெரிய பதவியில் இருந்தாலும், ஆண்களுக்குச் சமநிலையில் வைத்து  பெண்களைப் பார்ப்பதில் லை. பெண் சிசுக் கொலை, வரதட்சிணைக் கொடுமை, குடும்ப வன்முறை, பாலியல் துன்புறுத்தல், அமில வீச்சு, கெüரவ கொலை என தொடர் தாக்குதலுக்கு பெண்களும் குழந்தைகளும் ஆளாகிக் கொண்டுதான் வருகிறார்கள். இந்தியாவில் 1961-இல் 1000 ஆண்களுக்கு 976 பெண்கள் என இருந்த விகிதாச்சாரம் 2020-இல் 1000 ஆண்களுக்கு 924 என சரிந்துள்ளது கவலைக்குரியது. இதற்கு முக்கிய காரணம் கருவில் இருக்கும் குழந்தை பெண்குழந்தை என்றால் கருவிலேயே அழித்து விடுகிறார்கள். வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள குடும்பத்தினரே இதனை அதிகமாகச் செய்து வருகிறார்கள். 

பாதுகாப்பான இளம் பருவம் என்பது ஒரு வரம். கூட்டுக் குடும்பமாக இருந்த சமுதாயத்தில் சாத்தியமான பாதுகாப்பான இளம் பருவ வாழ்க்கை, இன்றைக்கு தனிக்குடித்தனம் அதிகரித்த காரணத்தால் கேள்விக்குறியாகிவிட்டது. உலகம் முழுவதும் ஆண்களின் கொடூரக் கரங்களுக்கு பெண்களும், குழந்தைகளும் இலக்காவது அதிகரித்து வருகிறது. 

1844-இல் உலக அளவில் அடிமை முறை தடை செய்யப்பட்டது. ஆனால் முதன்முதலில் 1968-இல்தான் பெண்கள் உரிமைக்கான சர்வதேச மாநாடு ஐ.நா.வால் கூட்டப்பட்டது. கடந்த 150 ஆண்டுகளாக பெண்களுக்கு எதிரான கொடுமைகள் குறித்து பேசிக் கொண்டுதான் இருக்கிறோம்.

உலகெங்கிலும் பெண்ணுரிமை போராட்டங்கள் நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கின்றன. பெண் கொடுமைக்கு எதிராக சட்டங்கள் வந்துவிட்டாலும், குற்றங்கள் குறையவில்லை. ஏனெனில் அதன் வேர்கள் அறுக்கப்படவில்லை. இந்தியாவில் தேசிய குற்ற பதிவேடுகள் அமைப்பு, பெண்களுக்கு எதிரான வன்முறைகளில் பதிவு செய்யப்பட்ட வழக்குகள் 4,05,861 எனக்கூறுகிறது. இதில் 30.09 சதவீதம் கணவர் மற்றும் அவரது உறவினர்களால் துன்புறுத்தப்பட்ட வழக்காகும். 2018-ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்டுள்ள ஆள் கடத்தல் வழக்குகள் 1,08,025 ஆகும். இதில் பெண்கள் மற்றும் பெண் குழந்தை களுக்கான வழக்குகள் 84,921 ஆகும். அந்த ஆண்டு காணாமல் போனவர்கள் 3,80,526 ஆகும். அதில் 2,48,397 பெண்கள் மற்றும் குழந்தைகள் ஆகும். பெண்களுக்கு எதிரான குற்றங்களில் இந்தியாவில் உ.பி.மாநிலம் முதலிடம் வகிக்கிறது. தமிழகம் 19-ஆவது இடத்தில் உள்ளது. பெருநகரங்களில் சென்னை 16-ஆவது இடத்தில் உள்ளது. இதில் எதிலும் தமிழகம் முதல் மூன்று இடங்களில் இல்லை என்பது நமக்கு ஆறுதல். 

தமிழகத்தில் காவலர்கள் எண்ணிக்கை அதிகமாக உள்ளதே இதற்குக் காரணம் எனகூறலாம். வடமாநிலங்களில் போதுமான காவலர்கள் எண்ணிக்கை இல்லை. பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வுக் கூட்டங்கள் இந்தியா முழுவதும் நூற்றுக்கணக்கில் நடத்தி வந்துள்ளோம். பெண்கள் சுயபாதுகாப்புக்கு கராத்தே உள்ளிட்ட பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும். 2019 - ஆம் ஆண்டு மார்ச் மாதம் 8 -ஆம் தேதி முதல் தமிழகத்தில் "காவலன் செயலி' அறிமுகப்படுத்தப்பட்டு சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் மூலம் பெண்கள் பாதுகாப்பு உறுதி செய்யப்படுகிறது. இந்த செயலியை அந்தந்த மாநிலங்கள் அமல் படுத்த வேண்டும் என எங்கள் அமைப்பு வலியுறுத்தி வருகிறது. குழந்தைகள் பாதுகாப்பிற்கு 1098 என்ற தொலைபேசி எண் நடைமுறையில் இருந்தாலும் இது குறித்து போதிய விழிப்புணர்வு இல்லாதது வருந்தத் தக்க விஷயம். குழந்தைகளின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கு மாநில குழந்தைகள் பாதுகாப்பு ஆணையம், தேசிய ஆணையம், ஒருங்கிணைந்த குழந்தைகள் பாதுகாப்புத் திட்டம், மாநில குழந்தைகள் காப்பகம், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பகம் உள்ளிட்ட  அமைப்புகள் குறித்து பெண்களிடம் எங்கள் அமைப்பினர் பல கூட்டங்கள் நடத்தி விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம்.

சட்டங்கள் கடுமையாக உள்ளன. எனினும் நீதி கிடைப்பதில் தாமதமாகிறது எனவே குற்றங்கள் நடைபெறுகின்றன.

தன் அறிவால் ஆற்றலால், உலகை ஆளும் உரிமை ஆண்களைப்போல பெண்களுக்கும் உண்டு என்ற சிந்தனை உருவானால் பெண்களுக்கு முழு பாதுகாப்பு கிடைக்கும். ஆண்களுக்கு நிகராக  பெண்களுக்கு ஆளுமையை எந்த தேசம் கற்றுக் கொடுக்கிறதோ அந்த தேசமே வளர்ச்சி பெறும்'' என்றார் ரமாதேவி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com