சத்து மாவு சில ரகசியங்கள்!

பலவகை தானியங்களுடன் ஒரு சில பருப்பு வகைகள் மற்றும் கொட்டையுணவுகளைச்  சேர்த்து அரைக்கும் மாவையே சத்துமாவு என்று கூறுகிறோம்.
சத்து மாவு சில ரகசியங்கள்!

பலவகை தானியங்களுடன் ஒரு சில பருப்பு வகைகள் மற்றும் கொட்டையுணவுகளைச்  சேர்த்து அரைக்கும் மாவையே சத்துமாவு என்று கூறுகிறோம். லைசின் என்ற முக்கியமான புரதம் குறைபாடாகவும், மெத்தியோனைன் என்னும் புரதம் அதிகமாகவும் இருக்கும் தானியங்களுடன், லைசின் அதிகமாகவும், மெத்தியோனைன் குறைவாகவும் இருக்கும் பருப்பு வகைகள் சேர்க்கப்படும்போது, உடலுக்குச் சேரும் புரதத்தின் தரம் உயர்வாக இருப்பதுடன், நார்ச்சத்து, தாதுக்கள், வைட்டமின்கள்,  நல்ல கொழுப்பு அமிலங்கள் என்று அனைத்தும் ஒரு சேரக் கிடைக்கின்றன.   

சத்துமாவிற்கான பொருட்கள்:

தேசிய சத்துணவு நிறுவனமானது (சஐச), ஒரு நபருக்கு ஒரு நாளைக்கு 5 பங்கு தானியத்திற்கு 1 பங்கு பருப்பு வீதம் பரிந்துரைத்துள்ளது. இதனுடன் பிற உணவு வகைகளும் அடங்குவதால், ஒரு நாளைக்குரிய உணவு அளவீடுகளில் எவ்வித ஏற்றத்தாழ்வும் வராமல் இருக்க வேண்டுமெனில், அந்த அளவீட்டையே சத்துமாவு அரைப்பதற்கும் பயன்படுத்திக் கொள்ளலாம். அதன்படி, ஒரு கிலோ தானியத்திற்கு, 200 கிராம் பருப்புகள் மற்றும் 40 முதல் 50 கிராம்  அளவிற்கு கொட்டையுணவுகளும் சேர்த்துக்கொள்ளலாம். உதாரணத்திற்கு,

கேழ்வரகு, கம்பு - தலா ஒரு கிலோ
கோதுமை, சோளம் - தலா அரை கிலோ
வரகு, குதிரைவாலி, திணை, சாமை - தலா கால் கிலோ
முழுகடலை, முழு பச்சைப் பருப்பு, கொள்ளு, பட்டாணி - தலா அரை கிலோ                             
வேர்க்கடலை, பாதாம், முந்திரி, பிஸ்தா(கலந்தது) - 200 கிராம்
மேற்கூறிய அனைத்தும் சேர்ந்து தோராயமாக 5 கிலோவிற்கு வந்துவிடும். இவையனைத்தையும் அரைக்கும் நேரத்தில், வாசனைக்காக 10 ஏலக்காய்களை சேர்த்துக் கொள்வதுடன், சிறிதளவு சுக்கு, மிளகு, சீரகம்  போன்றவற்றுள் ஏதேனும்; ஒன்றை அல்லது அனைத்தையும் அல்லது தவறாமல் சுக்கு மட்டும் சேர்த்துக் கொண்டால், பருப்புகளால் வாயுத் தொல்லை  ஏற்படும் என்று கூறுபவர்களுக்கு, நன்மை கிடைக்கும், பொதுவாகவே, தானியம் மற்றும் பருப்பு கலவை என்பதால், எவராக இருப்பினும், கஞ்சியாகக் குடித்தவுடன், எந்தவிதமான சிக்கலும் இல்லாமல் எளிதில் ஜீரணம் அடைவதற்கு உதவியாக இருக்கும். எடுத்துக்காட்டிற்காகக் கூறப்பட்டுள்ள பொருட்கள் மட்டுமின்றி, பாரம்பரிய அரிசி வகைகள், மூங்கில் அரிசி, கருப்பு அரிசி, எள், பார்லி, ஓட்ஸ் போன்ற பொருட்களையும் சேர்த்துக் கொள்ளலாம். கழுவ வேண்டிய தானியங்கள் மற்றும் பருப்புகளை நன்றாகக் கழுவி, வெய்யிலில் காய வைத்து, அரைத்து, காற்றுப் புகாதவாறு மூடி வைத்துக்கொண்டு, தினமும் உபயோகப்படுத்தலாம். காய்ச்சிய சத்துமாவுக் கஞ்சியில், உடலின் தன்மைக்கேற்றவாறு உப்பு, வெல்லம், பசும்பால் அல்லது தேங்காய்ப்பால் என்று சேர்த்துக்கொள்ளலாம். 

நோயாளிகளுக்கேற்ப சத்துமாவு அரைக்கும் முறை

சத்துமாவில் பிரதானமாக இருப்பது தானியங்களிலிருந்து கிடைக்கப்பெறும் கார்போஹைடிரேட் என்பதாலும், அதற்கு அடுத்ததாக பெருமளவில் இருக்கும் சத்து, எந்தெந்த பொருட்கள் சேர்த்து அரைக்கப்படுகிறது என்பதைப் பொருத்தே அமைவதாலும், ஒரே சத்துமாவு, அனைவருக்குமான தனித்தனி ஊட்டத்தின் தேவை
களைப் பூர்த்திசெய்வது கிடையாது. அவ்வாறு இருக்கவேண்டுமெனில், அரைக்கும்போது  சேர்க்கப்படும் பொருட்களிலும், காய்ச்சியபின் சேர்க்கப்படும் பொருட்களிலும் பிற உணவுப்பொருட்களின் சேர்க்கையும், நீக்கமும்  கவனமாக செய்யப்படவேண்டும்.  

நோயிலிருந்து மீண்டு, உடல் நலம் தேறிக்கொண்டு வருபவர்கள், வயதிற்கேற்ற சரியான உடல் எடை இல்லாத குழந்தைகள், அதிக உடலுழைப்பைக் கொடுப்பதால், ஆற்றல் குறைபாட்டில் உள்ளவர்கள் சத்துமாவு அரைக்கும்போது, முழு கடலை, பச்சை பட்டாணி, சோயா பீன்ஸ் போன்றவற்றை தவறாமல் சேர்த்துக்கொள்வதால், உடல் எடையை அதிகரிப்பதற்கான புரதம் கிடைப்பதுடன், எள், பாதாம், முந்திரி, பிஸ்தா, வேர்க்கடலை போன்றவற்றின் அளவை 50 கிராம் அளவிற்கு சற்றே அதிகரித்துக்கொள்வதால், ஆற்றலும் அதிகரித்து, உடல் எடை கூடுவதற்கான கொழுப்பாகவும்  சேமிக்கப்படும்.  எலும்பு உறுதியில்லாமல் இருப்பவர்கள், கடினமான வேலைகளைச் செய்பவர்கள் கம்பு மற்றும் கேழ்வரகினை சற்று கூடுதலாகச் சேர்த்துக் கொள்ளலாம். 

நீரிழிவு, உயர்ரத்த அழுத்தம் மற்றும் உடற்பருமன் உள்ளவர்களுக்காக அரைக்கும் சத்துமாவினை மென்மையான மாவாக அரைக்காமல், கொரகொரப்பாக அரைக்கும்போது, தானியம் மற்றும் பருப்புகளில் இருக்கும் நார்ச்சத்து உடலுக்குக் கிடைக்கப்பெறுவதால், வயிறு நிரம்பிய உணர்வு கிடைப்பதுடன், அதிலிருக்கும் கார்போஹைடிரேட் மெதுவாகவே சர்க்கரையை ரத்தத்தில் கலக்க வைக்கிறது. இதனால், மிக விரைவாக செரிமானம் அடைந்து, ரத்த சர்க்கரை அதிகரிக்கும் நிலையும் தவிர்க்கப்படுகிறது.  இவர்கள், பிற பருப்புகளுடன் கொள்ளுவையும் சேர்த்து அரைக்கலாம். இவ்வாறு அரைப்பது மலச்சிக்கலையும் சரிப்படுத்துகிறது. 

வாயுத்தொல்லை மற்றும் மூட்டுவலி இருப்பவர்கள், தானியங்களை மட்டும் சேர்த்துக்கொண்டு, பருப்பு வகைகளைத் தவிர்த்துவிடவேண்டும். ஆனால், மாவை அரைக்கும்போது, பாதாம், பிஸ்தா மற்றும் வால்நட், பிளாக்ஸ் விதைகள் போன்றவற்றையும் சுக்கு மற்றும் மிளகு போன்றவற்றையும் கூடுதலாகச் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

உயர் இரத்த அழுத்தம், சிறுநீரக நோய்கள், கை கால் வீக்கம் போன்ற சிக்கல்கள் இருப்பவர்கள், சத்துமாவு கஞ்சியுடன் உப்பு சேர்க்கக்கூடாது. நீரின் அளவினை மருத்துவர் பரிந்துரைத்தபடி சேர்க்கும் நிலையில், தண்ணீரின் அளவினைக் குறைத்து, சற்றே கொழகொழப்பாக அரைதிட நிலையில் காய்ச்சலாம். 

நோய்த்தொற்று அல்லது காய்ச்சல், உள்ளுறுப்புகளில் நோய் ஏற்பட்டு, குமட்டல், வாந்தி, செரிமானமின்மை இருப்பவர்கள்  மிகவும் மென்மையான மாவாக அரைத்து, சற்றுக் கூடுதலாக தண்ணீர் சேர்த்துக் காய்ச்ச வேணடும். நேர இடைவெளி விட்டு, சிறிதளவே கொடுக்க வேண்டும். இதனால், விரைவாக செரித்து குடலுக்குள் தள்ளப்படுவதுடன், குமட்டல் மற்றும் வாந்தியின் வழியாகக் குடித்த அனைத்தும் வெளியில் வருவது தவிர்க்கப்படும். இதனுடன் மருத்துவரின் பரிந்துரைகளும் அவசியம். 

குழந்தைகளைப் பொருத்தவரையில், சத்துமாவு ஒரு மிகச்சிறந்த உணவு. ஆறு மாதக் குழந்தைக்கான இணையுணவாக சத்துமாவு அரைக்கும்போது மட்டும், கொட்டையுணவுகளின் அளவினை சற்றே குறைத்துக்கொள்ள வேண்டும்.குழந்தைகள் விரைவில் குண்டாக வேண்டுமென்று அதிக அளவில் பாதாம், முந்திரி போன்ற பொருட்களை தாய்மார்கள் சேர்த்துவிடுகின்றனர். இப்பொருட்கள் செரிமானமடைவதற்கு அதிக நேரம் எடுத்துக்கொள்ளுமென்பதால், சிறு குழந்தைகளுக்கு செரிமானக் கோளாறு ஏற்படுவதற்கு வாய்ப்புகள் அதிகம். மேலும், இவர்களுக்கு மூன்று அல்லது ஐந்து பொருட்களை மட்டுமே ஆரம்பத்தில் சேர்ப்பதும், மாவினை மிக மென்மையான அரைத்துக்கொள்வதும் நல்லது. வயது கூடும்போது, மேலும் இரண்டு பொருட்களை,  அவர்களின் உடல் ஒத்துக்கொண்டதா என்று பார்த்துவிட்டு சேர்க்க வேண்டும்.  

உணவு ஒவ்வாமையில் குறிப்பாக புரதம் ஏற்றுக்கொள்ளாதவர்கள், கோதுமையைத் தவிர்க்க வேண்டும். தைராய்டு நோய்கள் இருப்பவர்களுக்குக் கூட பல நேரங்களில் வரகு, சாமை போன்ற சிறுதானியங்கள் ஒவ்வாமையை ஏற்படுத்தும். தினமும் இப்பொருட்கள் சேர்த்த கஞ்சியினைக் குடிக்கும்போது, ஒருவேளை, அரிப்பு, தோல் சிவந்துவிடுதல், முகத்தில் வீக்கம், கை கால் வலி, மூட்டுவலி போன்றவை தொடர்ச்சியாக இருக்குமெனில், இப்பொருட்களால்தான் ஏற்படுகிறது என்பதைத் தெரிந்துகொள்ளாமலேயே தொடர்ந்து கொண்டிருக்க நேரிடும். அவ்வாறான வேளைகளில், இந்த சத்துமாவில் சேர்த்துள்ள பொருட்களையும் கவனிக்க வேண்டும். 

கடைகளில் விற்பனை செய்யப்படும் சத்துமாவில் என்னென்ன பொருட்கள் கலந்திருக்கிறார்கள் என்று சில நேரங்களில் குறிப்பிடுவது கிடையாது. அவ்வாறே குறிப்பிட்டு இருந்தாலும், சுத்தமாகத் தயார்செய்யப்பட்டதா என்றும், வேறேதேனும் பொருட்களைக் கலந்துள்ளார்களா என்றும், அது அனைவருக்கும் உகந்ததாக இருக்குமா என்றும் உறுதியாகக் கூறமுடியாது. இவற்றெயெல்லாம் தவிர்ப்பதற்கு, நாமே தயாரித்த சத்துமாவில் உணவுகளைத் தயார்செய்து, நமது ஆரோக்கியத்தைப் பாதுகாத்துக் கொள்ளலாம்.   

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com