சமையல் சமையல்!

வாழைக்காயின் மேல் தோலைச் சீவி சதுரத் துண்டுகளாக நறுக்கி தண்ணீரில் போட்டு வைக்கவும். தேங்காய், மிளகு, உப்பு இவற்றை மசிய அரைத்துக் கொள்ளவும்.
சமையல் சமையல்!


வாழைக்காய் மிளகுக் கறி!

தேவையானவை:

வாழைக்காய் - 2
துருவிய தேங்காய் - கால் ஆழாக்கு
மிளகுத்தூள் - 1 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - 4 தேக்கரண்டி
கடுகு - கால் தேக்கரண்டி
கறிவேப்பிலை - 1 ஈர்க்கு

செய்முறை:

வாழைக்காயின் மேல் தோலைச் சீவி சதுரத் துண்டுகளாக நறுக்கி தண்ணீரில் போட்டு வைக்கவும். தேங்காய், மிளகு, உப்பு இவற்றை மசிய அரைத்துக் கொள்ளவும். வாணலியில் எண்ணெய்விட்டு சூடாக்கிக் கொண்டு கடுகு, கறிவேப்பிலையைச் சேர்த்து பின்னர் நறுக்கிய வாழைக்காய்த் துண்டுகளைச் சேர்க்கவும். இரண்டு நிமிடம் வதக்கி அரை டம்ளர் தண்ணீர் விட்டு அரைத்த விழுதைச் சேர்க்கவும். மூடி போட்டு மிதமான தீயில் நீர் சுண்டும் வரையிலும் வேகவைத்து இறக்கவும்.


வெண்டைக்காய் மசாலா கறி!


தேவையானவை:


வெண்டைக்காய் - அரை கிலோ
எண்ணெய் - தேவைக்கேற்ப
வெங்காயம் - 1 ( பொடியாக நறுக்கியது)
அரைத்துக் கொள்ளவும்:
காய்ந்த மிளகாய் - 6
துருவிய தேங்காய் - 2 தேக்கரண்டி
பொட்டுக்கடலை - 1 தேக்கரண்டி
பெருங்காயம் - சிறிதளவு
தனியா - 1 தேக்கரண்டி
சீரகம் - அரை தேக்கரண்டி
உப்பு - தேவைக்கேற்ப

செய்முறை:

குறைந்த அளவு தண்ணீர் சேர்த்து மேற்சொன்ன பொருட்களை அரைத்துக் கொள்ளவும். நீளவாக்கில் வெண்டைக்காயை துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். வாணலியில் எண்ணெய்விட்டு வெங்காயத்தை வதக்கி பிறகு வெண்டைக்காயையும் சேர்த்து வதக்கவும். பிசுபிசுப்பு நீங்கியதும். அரைத்த கலவையைச் சேர்த்து நன்கு கெட்டியாக வரும்வரை வதக்கவும்.


பச்சைப் பட்டாணிக் கறி!


தேவையானவை:


பச்சைப் பட்டாணி - கால் கிலோ
எண்ணெய் - தேவைக்கேற்ப
உப்பு - தேவையான அளவு
பெரிய வெங்காயம் - 1
பூண்டு - 3
பச்சை மிளகாய் - 4
தேங்காய்த் துருவல் - 2 தேக்கரண்டி

செய்முறை: வெங்காயம், பூண்டு, பச்சைமிளகாய், தேங்காய்த் துருவல் ஆகியவற்றை சற்று கரகரப்பாக இடித்துக் கொள்ளவும். பட்டாணியை நன்றாக வேக வைத்து வடித்துக் கொள்ளவும்.

வாணலியில் எண்ணெய்விட்டு காய்ந்ததும் இடித்தப் பொருள்களை பச்சை வாசனை நீங்கும் வரை வதக்கி பிறகு பட்டாணி, உப்பு சேர்தது மூன்று நிமிடங்கள் கிளறவும். பச்சைப் பட்டாணிக் கறி ரெடி.

பீட்ரூட் மசாலா கறி!

தேவையானவை


பீட்ரூட் - 2
வெங்காயம் - 1
எண்ணெய் - 4 தேக்கரண்டி
சாம்பார்ப் பொடி - அரை தேக்கரண்டி
தேங்காய்த் துருவல் - 1 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு

செய்முறை:

உப்பு, சாம்பார் பொடி, தேங்காய்த் துருவல் மூன்றையும் சேர்த்து தூளாக்கிக் கொள்ளவும். வெங்காயம், பீட்ரூட் இரண்டையும் தோல் நீக்கிப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

வாணலியில் எண்ணெய்யைச் சூடாக்கி கடுகு, உளுந்தம் பருப்பு சேர்த்துப் பொரித்ததும் வெங்காயத்தைப் பொன்னிறமாக வதக்கவும். சிறிது நீருடன் பீட்ரூட்டை சேர்த்து மூடி வைக்கவும். நன்கு வெந்து நீர் சுண்டிய பின் தூளாக்கிய பொருட்களைச் சேர்த்து நன்கு கலந்து அடுப்பிலிருந்து இறக்கி விடவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com