தன்னந்தனியாக ஒரு மூதாட்டி

உலகின்  பல நகரங்களில்  ஜனத்தொகை  பிதுங்கி   வழிகிறது.  ஆனால்,  அமெரிக்காவில்  உள்ள   ஒரு நகரில்,  ஒரே ஒரு  மூதாட்டி  மட்டும் வசித்து வருகிறார்.
தன்னந்தனியாக ஒரு மூதாட்டி


உலகின் பல நகரங்களில் ஜனத்தொகை பிதுங்கி வழிகிறது. ஆனால், அமெரிக்காவில் உள்ள ஒரு நகரில், ஒரே ஒரு மூதாட்டி மட்டும் வசித்து வருகிறார்.
அமெரிக்காவில் அந்நாட்டு மக்களுடன், பிறநாட்டவரும் அதிகம் குடியேறியுள்ளனர். அவர்களில் பலரும் நாளடைவில் அமெரிக்காவின் நிரந்தர வசிப்புரிமை பெற்று அங்கேயே வாழ்ந்து வருகின்றனர். ஆனால், அமெரிக்காவில் நெப்ராஸ்கா பகுதியில் உள்ள மோனோவி எனும் சிறிய நகரத்தில் எல்சி எய்லர் என்ற 84 வயது மூதாட்டி மட்டுமே தனியாக வாழ்ந்து
வருகிறார்.
மக்கள் இல்லாத இடத்தில் ஒருவர் மட்டும், அதுவும் வயதான மூதாட்டி எப்படி தனியாக வசிக்கிறார்? அதற்கு எல்சி எய்லர் பதில் கூறுகிறார்:
""இப்பகுதியில் நான் மட்டுமே வசிக்கிறேன். இங்கு இருந்தவர்கள் அனைவரும் இடம் பெயர்ந்து சென்று விட்டனர். எனது பெற்றோர் இந்த நகரத்தைத் தாண்டி உள்ள விவசாய நிலப் பகுதியில் பணிகளை மேற்கொண்டு, வந்தனர். அவர்களுக்குப் பின் நான் இங்கேயே வசிக்க விரும்பினேன். எனக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர். அவர்கள் வெளியூரில் வசித்தாலும், மோனோவியிலேயே இருப்பதையே விரும்புகிறேன் என்பதை உணர்ந்தனர்.
நான் கடந்த 1971-ஆம் ஆண்டு முதல், காப்பி, டீ போன்ற அத்தியாவசியப் பொருட்களை விற்பனை செய்யும் கடை ஒன்றை நடத்தி வருகிறேன். இந்தக் கடையைத் திறந்தபோது, இப்பகுதியில் இருந்த தபால் நிலையமும், சிறிய மளிகைக்கடையும் மூடப்பட்டன. இந்தப் பகுதியில் உள்ள சாலையின் வழியே செல்லும் பல டிரக்குகள், வியாபாரிகள், தற்போது எனது கடையின் வாடிக்கையாளர்களாக மாறி உள்ளனர். அதுமட்டுமின்றி கூடுதல் பொறுப்பாக, எந்தவித போட்டியுமின்றி இந்தப் பகுதியின் மேயராகவும் நான் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளேன். இந்நிலையில் என்னை பார்ப்பதற்காகவே சிலர் வருகின்றனர். தனிமையில் இருந்தாலும், நான் எவ்வித மன வருத்தமும் இன்றி இங்கு மகிழ்ச்சியாகவே இருக்கிறேன்'' என்கிறார் எந்தவித அச்சமுமின்றி தைரியமாக வசித்தும் வரும் இந்த மூதாட்டி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com