விமானங்களைப் பராமரிக்கும் பெண் பொறியாளர்கள்!

அண்மையில்  சர்வதேச  விமானத் துறையில்  "பெண்கள்  தினம்' உலகம் முழுவதும்  அனுசரிக்கப்பட்டது.  
விமானங்களைப் பராமரிக்கும் பெண் பொறியாளர்கள்!


அண்மையில் சர்வதேச விமானத் துறையில் "பெண்கள் தினம்' உலகம் முழுவதும் அனுசரிக்கப்பட்டது. விமானத் துறையிலும் நிறைய பெண்கள் பணிபுரியவரவேண்டும் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக ஆண்டுதோறும் "கேர்ள்ஸ் இன் ஏவியேஷன் டே' கொண்டாடப்படுகிறது.

பொதுவாக விமானங்களைப் பழுது நீக்கி பராமரிக்கும் பணியில் அனைத்து விமான நிலையங்களிலும் ஆண்களையே அமர்த்துவதுண்டு, மாறாக பெங்களூரு கெம்பகவுடா சர்வதேச விமான நிலையத்தில் இரண்டு பெண்கள் விமான பராமரிப்புப் பணியில் சேர்ந்துள்ளனர். அவர்களைப் பற்றி தெரிந்து கொள்வோமா?

கோலார் மாவட்டத்தைச் சேர்ந்த அர்ச்சனா, உயர்நிலைப் பள்ளியில் படிக்கும்போதே விமானியாக வேண்டுமென்ற கனவுடனேயே வளர்ந்தவர், படிப்பை முடித்தவுடன், விமானி பயிற்சிக்கு பணம் செலவழிக்க தன் குடும்பத்தினரால் முடியாது என்பதை உணர்ந்தார். தன்னுடைய ஆசையை பூர்த்தி செய்ய முடியவில்லை என்றாலும், விமானம் தொடர்பான ஏதாவது ஒரு வேலையில் பயிற்சிப் பெற முடிவு செய்தார்.

விமான பராமரிப்பு பயிற்சிப் பெறத் தொடங்கியபோது, இவருடைய தோழிகள் ஒரு பெண்ணால் விமானத்தைப் பழுது பார்த்து பராமரிக்க முடியுமா? அதற்கு தேவையான உடல் வலிமை இருக்கிறதா? என்று கேட்டு பயமுறுத்தினார்களாம். அவர்களது சந்தேகங்கள் தவறு என்பதை நிரூபித்துக்காட்ட, கடுமையான பயிற்சிப் பெற்ற அர்ச்சனா, தன்னுடைய திறமையால் விமான என்ஜினைப் பொருத்திக் காட்டி "ஸ்கில் இந்தியா சேலஞ்ச்' தேசிய தங்கப்பதக்கம் பெற்றுள்ளார். இரண்டாண்டுகளாக இன்டிகோ ஏர்லைன்ஸ் நிறுவனத்தில் பராமரிப்பு பொறியாளராக பணியாற்றி வரும் அர்ச்சனாவுக்கு தற்போது 22 வயதாகிறது.

விமானம் வந்திறங்கியவுடன் தலைப்பகுதியிலிருந்து வால்பகுதி வரை முழுமையாக பரிசோதித்து எல்லாம் சரியாக இருக்கிறதா என்று இவர் உறுதியளித்த பிறகே மீண்டும் விமானம் கிளம்பும். ஏர்பஸ் ஏ320 என்ஜின் மட்டுமின்றி பறவைகள் தாக்குதலுக்குள்ளாகும் என்ஜின்கள், விசிறிகள் செயலற்றுப் போன இக்கட்டான சந்தர்பங்களில் கூட தனது திறமையால் பழுது பார்த்து அனுப்பும் அர்ச்சனாவுக்கு உள்ளுக்குள் விமானியாக முடியவில்லையே என்ற ஏக்கம் இருந்தாலும், என்றாவது ஒருநாள் விமானியாவேன் என்ற நம்பிக்கை இருக்கிறதாம்.

பிகார் மாநிலத்தைச் சேர்ந்த ஷிக்கா புஷ்ப், சிறுவயது முதலே விமானங்கள் மீது ஈடுபாடு இருந்த காரணத்தால், ஜாம்ஷெட்பூரில் ஏரோ நாட்டிகல் என்ஜினீயரிங் படிக்கும்போதே ஏர்கிராஃப்ட் சர்க்யூட், பேனல்ஸ் மற்றும் போர்டு கம்ப்யூட்டரில் தேர்ச்சிப் பெற்றார். 2012 - ஆம் ஆண்டு டெல்லி விமான நிலையத்தில் பணியில் சேர்ந்த இவர், 2016 -ஆம் ஆண்டு பிரிவில் சேர்ந்து பெங்களூரில் உள்ள ஏர்பஸ் டிரெயினிங் சென்டரில் பயிற்சியை முடித்தபோது, அந்த சென்டரில் பயிற்சிப் பெற்ற முதல் பெண் என்ற சிறப்பைப் பெற்றதோடு, விமானங்கள் பறப்பதற்கு தகுதி சான்றிதழ் அளிக்கும் உரிமம் பெற்ற பெண் பொறியாளர்களில் இவரும் ஒருவராக தேர்வு செய்யப்பட்டார்.

2017 - ஆம் ஆண்டு ஜெய்ப்பூர் விமான நிலையத்தில் பயிற்சிப் பெற்று வந்தபோது, அங்கு வந்திறங்கிய விமானமொன்றில் விண்ட் ஷீல்டுகளில் ஒன்று விரிசல் விட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. உடனடியாக விமானத்திற்குள் நுழைந்த ஷிக்கா புஷ்ப், லைட் சென்சார் ஒன்றை அதன் மீது பதித்து, பழுதை சரிசெய்தார். அப்போது ஏவியானிக்ஸ் பொறியாளராக பயிற்சியில் இருந்த அவரது சமயோசித செயல் அனைவரது பாராட்டுகளையும் பெற்றது.

2018- ஆம் ஆண்டு கெம்பகவுடா சர்வதேச விமான நிலையத்தில் இன்டிகோ ஏர்லைன்ஸ் நிறுவனத்தில் முதல் பெண் விமான பராமரிப்பு பொறியாளராக பணியில் சேர்ந்த ஷிக்காவுக்கு தற்போது 31 வயதாகிறது.

""நூற்றுக்கணக்கான சர்க்யூட்கள் கொண்ட விமான பேனலில் ஏற்படும் பழுதுகளை சரி பார்க்கும் பயிற்சி பெற வரும் பெண்கள் எண்ணிக்கை மிகவும் குறைவு. இந்தப் பணியில் எதையும் நுட்பமாக கவனிக்க பொறுமை முக்கியம். ஒரு சின்ன ஸ்க்ரூ விடுபட்டால் கூட நூற்றுக்கணக்கான உயிர்கள் பலியாக காரணமாகிவிடும் என்பதால் மிகவும் கவனமுடன் செயல்படுகிறேன்'' என்கிறார் ஷிக்கா புஷ்ப்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com