பெண்கள்  முன்னேற்றம் கிராம முன்னேற்றம்!

எளிய பட்டாச்சார்யாரின் மகளாகப் பிறந்து குக்கிராமத்தில் வாழ்க்கைப்பட்டு, பின்னர், தனது விடா முயற்சியால் ஊடகத்துறையில்  நுழைந்து, ஓர் இடத்தைப் பிடித்தவர் சாந்தி.
பெண்கள்  முன்னேற்றம் கிராம முன்னேற்றம்!


எளிய பட்டாச்சார்யாரின் மகளாகப் பிறந்து குக்கிராமத்தில் வாழ்க்கைப்பட்டு, பின்னர், தனது விடா முயற்சியால் ஊடகத்துறையில் நுழைந்து, ஓர் இடத்தைப் பிடித்தவர் சாந்தி. தொலைக்காட்சிகளில் நூற்றுக்கணக்கான சமையல் நிகழ்ச்சிகளை நடத்தி "சுவை அரசி' பட்டம் வென்றவர் இவர். எழுத்துத் துறையும் இவருக்கு கைவரப்பெற்றுள்ளது. சமையல் கலை சார்ந்த 4 புத்தகங்களையும் எழுதியுள்ளார். தனக்குக் கிடைத்த புகழை தன் சொந்த கிராமம் மற்றும் பெண்களின் மேம்பாட்டுக்காக மடைமாற்றி கிராமத்தின் வளர்ச்சிக்கு தன்னாலான முயற்சிகளை தற்போது மேற்கொண்டு வரும் இவர், தனது நீண்ட நெடிய அனுபவத்தை நம்மோடு பகிர்ந்து கொள்கிறார்:


உங்கள் குடும்ப பின்னணி..

இருபத்தைந்து பேருக்கும் மேல் உள்ள கூட்டுக் குடும்பத்தில் பிறந்தேன். அப்பா நரசிம்மாச்சாரியார், மாதவரம் பகுதியில் உள்ள சிவாவிஷ்ணு ஆலயத்தின் பிரசன்ன வெங்கடேசப் பெருமாளுக்குப் பூஜை செய்யும் பட்டாச்சார்யாராக இருந்தார். கல்லூரிப் படிப்பு முடிந்ததும் பத்தொன்பது வயதில் செங்கல்பட்டு மாவட்டத்தில் இருக்கும் குக்கிராமமான சிறுதாமூரில் வாழ்க்கைப்பட்டேன். வீடு, உறவுகள், சமையல் தவிர வெளி உலகத்தை அறியாத பெண்ணாக இருந்தேன்.

ஊடகத் துறைக்கு எப்படி வந்தீர்கள்?

கணவர் பணியிட மாற்றம் காரணமாக சென்னைக்கு வந்தோம். சமையல் தவிர எனக்கு வேறு எதுவும் தெரியாது. இந்நிலையில், "சமையலையே பயன்படுத்தி ஏதாவது செய்யேன்' என்று என் மாமியார் உற்சாகப்படுத்தினார். அந்தக் காலகட்டத்தில் தூர்தர்ஷன் மட்டுமே தொலைக்காட்சி. சமையல் நிகழ்ச்சியில் சமைத்துக் காட்டத் தேர்வு நடந்தது. அதில் கலந்து கொண்டு தேர்வானேன். தொடர்ந்து இருபத்தைந்து ஆண்டுகளுக்கும் மேலாக இன்றும் பல தனியார் சேனல்களில் சமையல் நிகழ்ச்சிகளை நடத்திக் கொண்டிருக்கிறேன். விஜய் டிவி நடத்திய "கிச்சன் கில்லாடிகள்' என்ற போட்டி நிகழ்ச்சியில் வெற்றி பெற்றதும் என்னை நாடு முழுவதும் அறிமுகப்படுத்தியது.

"சுவைஅரசி' பட்டம் பெற்றிருக்கிறீர்களே...

அவள் விகடனில் தொடர்ந்து பதினைந்து ஆண்டுகளுக்கு மேலாக எழுதினேன். அந்த நேரத்தில் என் கணவருக்கு வேலை சென்னையிலிருந்து மாற்றலாகிவிட்டது. ஆனாலும் தொடர்ந்து எழுதிக்கொண்டே இருந்தேன். அவர்கள் அங்கீகரித்து வழங்கியது "சுவை அரசி' மற்றும் சிறந்த பெண்மணி விருதுகள்.

பல பிரபலங்களோடு இணைந்து பணியாற்றியிருக்கிறீர்கள் மறக்க முடியாத அனுபவம்...

உண்மை தான். திரைத்துறையை சேர்ந்தவர்கள் ஊடகத்துறையை சேர்ந்தவர்கள் என்று பலரோடு பயணித்திருக்கிறேன். சமீபத்தில் தமிழ்நாடு அரசு சுகாதாரத் துறை சார்பில் "மதராசபட்டினம்' என்று பாரம்பரிய உணவு வகைகள், ஆரோக்கியமான உணவு முறை, இயற்கை முறை விவசாயம் அது சார்ந்த உணவு இவற்றுக்கான விழிப்புணர்வு கண்காட்சியை மூன்று நாள்கள் நடத்தினார்கள். அதிலே அரசு எனக்கென இரண்டு ஸ்டால்கள் இலவசமாக வழங்கியது. இயற்கைமுறை விவசாயத்தில் விளைந்த பொருள்களை வைத்து மசாலாப்பொருள்கள், குழந்தைகள் விரும்பி சாப்பிடும் நொறுக்குத் தீனி வகைகள், உணவு வகைகள் என்று செய்து வைத்திருந்தேன்.

கண்காட்சிக்கு முதல்வர், துணை முதல்வர் இருவருமே வந்திருந்தார்கள். சுகாதாரத் துறை அமைச்சர் முதல் பல அமைச்சர்களும் வந்திருந்தார்கள். என்னுடைய அரங்குக்கு வந்து என்னுடைய சமையல் மசாலாப்பொருள்கள் பற்றிப் பேசியதோடு தின்பண்டங்களை விரும்பி சுவைத்துப் பார்த்தார்கள். முதல்வர் எடப்பாடி பழனிசாமி, "அந்த நாளில் என் அம்மா கையால் செய்து தந்ததைப்போல மணமும் சுவையுமாக இருக்கிறது' என்று பாராட்டினார். என்னுடைய அனைத்து மசாலாப்பொருள்கள் மற்றும் நொறுக்குத் தீனி வகைகளை பணம் கொடுத்து வாங்கிக் கொண்டது மறக்கவே முடியாதது.

இதற்கெல்லாம் உங்கள் குடும்பத்தில் ஆதரவு இருந்ததா...

என் மாமியார் சீதா அம்மாள் நான் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகள், போட்டிகள் எல்லாவற்றிலும் என்னோடு உடன் வந்து நட்போடு துணை நின்று உற்சாகப்படுத்துவார். இன்றைய என் நற்பெயருக்கு முதல் காரணம் அவர்தான். செய்யும் வேலையில் நேர்த்தியும் நேர்மையும் வேண்டும் என்று சொல்லிக்கொடுத்து பழக்கப்படுத்தியவர் என் தாயார் செளந்தரம்மாள். என் கணவர் எங்கெல்லாம் வாய்ப்புகள் இருக்கின்றன என்று பார்த்து சொல்லுவார்.

உங்கள் புத்தகங்கள் பற்றி...

நான்கு புத்தகங்கள் வெளியிட்டிருக்கிறேன். இறையருளால் அவற்றுள் ஒரு புத்தகம் ஆங்ள்ற் நங்ப்ப்ங்ழ் என்று அங்கீகரிக்கப்பட்டிருக்கிறது. ஊடகம்,

சமையல்கலை என்றிருந்தவர் சமூக சேவைக்கு மாறியது எப்படி?

எங்கள் சிறுதாமூர் கிராமத்தில் அந்தக்காலத்தில் அரசுப் பள்ளிக்கூடம் வருவதற்கு முன் என் மாமனார் ஆரம்பப்பள்ளி ஒன்றை நடத்தினார். அவருக்குப் பிறகு என்னுடைய மாமியார் அந்தப் பள்ளிக்கூடத்தை நடத்தி வந்தார். பெண்கள் கல்வி கற்க வேண்டும் என்ற ஆர்வம் எங்கள் குடும்பத்திற்கே இருந்தது.

கணவரின் பணியிடமாற்றம், பிள்ளைகளின் படிப்பு, வேலை என்று பல ஊர்களிலும் வெளிநாடுகளிலும் வசிக்கும் படி நேர்ந்தது. ஊர் உலகமெல்லாம் சுற்றிவிட்டு எங்கள் சொந்த கிராமத்திற்கு வந்து பார்த்தால் மக்களுக்கான வசதி, வாய்ப்புகள் எதுவும் இல்லாமல் இருந்தது. நம் ஊருக்கு நம்மால் முடிந்த ஏதாவது செய்வோம் என்று கருதினோம். என் கணவர் தனது சக்திக்கு தகுந்தமாதிரி கோயில் குளம் சீரமைப்பு என்று ஆரம்பித்தார். எனக்கு பெண்கள் முன்னேறி விட்டால் கிராமம் முன்னேறிவிடும் என்ற எண்ணம். அதனால் பெண்களிடம் இருந்தே தொடங்கினேன்.

நம்முடைய வீடு மட்டுமல்ல நம் சுற்றுப்புறமும் நம்முடைய பொறுப்பு தான். அதனால் குப்பை இல்லாமல் சுகாதாரமாக வைத்துக் கொள்வதற்கு அறிவுறுத்தியதோடு அவர்களை ஒருங்கிணைத்து அதற்கான பணிகளையும் மேற்கொண்டோம்.

கிராமப் பெண்கள் வேலைவாய்ப்பு இல்லாமல் இருப்பது அவர்களின் பலவீனம். அதனால் அவர்களுக்கென்று ஏதேனும் தொழில் கற்றுக் கொடுத்தால் அதைக் கொண்டு அவர்கள் தங்கள் பொருளாதார நிலையை உயர்த்திக்கொள்வார்கள். முன்னேற்றம் தானே சாத்தியமாய்விடும் என்று பெயிண்ட் நிறுவனம் ஒன்றை அழைத்து பெண்களுக்குப் பயிற்சி கொடுத்தோம். பெயிண்ட் அடிப்பது சுலபமான வேலை இல்லை. ஆனாலும் பல பெண்கள் உற்சாகத்தோடு வந்து கற்றுக் கொண்டார்கள். சிலர் இப்போது அந்தத் தொழிலை திறம்பட செய்து சம்பாதிக்கிறார்கள்.

அதனால் இதை சமூக சேவை என்று சொல்லாமல் நம் வீடு பற்றிய பொறுப்புணர்வுக்கு அடுத்தபடியாக நம் ஊர் பற்றிய பொறுப்புணர்வு என்று சொன்னால் சரியாக இருக்கும் என்று நினைக்கிறேன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com