அழகிப்பட்டம்: சில நிமிடங்களில் இழந்த பெண்!

திருமதி  இலங்கை அழகிப் போட்டியில் வெற்றியாளராக  தேர்வு  செய்யப்பட்டு, கிரீடம்  சூட்டப்பட்ட  சில நிமிடங்களில்  அதே மேடையில் சூட்டப்பட்டவரிடமிருந்து கிரீடம்  பறிக்கப்பட்ட  சம்பவமானது  நடைபெற்றுள்ளது.
அழகிப்பட்டம்: சில நிமிடங்களில் இழந்த பெண்!


திருமதி இலங்கை அழகிப் போட்டியில் வெற்றியாளராக தேர்வு செய்யப்பட்டு, கிரீடம் சூட்டப்பட்ட சில நிமிடங்களில் அதே மேடையில் சூட்டப்பட்டவரிடமிருந்து கிரீடம் பறிக்கப்பட்ட சம்பவமானது இலங்கையில் நடைபெற்றுள்ளது. பட்டத்தை வென்ற பெண் திருமணமாகி மண முறிவானவர் என்று காரணம் கூறி அவரது பட்டம் பறிக்கப்பட்டுள்ளது.

"மிஸ்ஸஸ் ஸ்ரீலங்கா 2021' அழகிப்போட்டியின் இறுதிப் போட்டி கொழும்பு தாமரை தடாகம் அரங்கில் சமீபத்தில் நடைபெற்றது.

மிக பிரம்மாண்டமாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த நிகழ்வில் பல போட்டிகளுக்குப் பின் திருமதி இலங்கை அழகிப் பட்டத்துக்கு புஷ்பிகா டி சில்வா என்பவர் தேர்வு செய்யப்பட்டார்.

இவருக்கு, கிரீடம் சூட்டப்பட்ட ஓரிரு நிமிடங்களில், திருமதி உலக அழகு ராணியான கரோலின் ஜீரி, "இந்த கிரீடத்தை பெறுவதற்கு புஷ்பிகா தகுதியற்றவர். திருமணமாகி விவாகரத்தான பெண்ணொருவருக்கு இந்த கிரீடத்தை வழங்க முடியாது' என அறிவித்தார்.

இவ்வாறு கரோலின் ஜீரி அறிவித்த நிலையில், புஷ்பிகாவுக்கு அணிவிக்கப்பட்ட கிரீடத்தை மேடையிலேயே திரும்பப் பெற்றுக் கொண்டார். கிரீடத்தை திரும்பப் பெற்றுக் கொண்ட கரோலின் ஜீரி அதே மேடையில் இரண்டாவது இடத்தை பெற்றவருக்கு அந்த கிரீடத்தை அணிவித்தார்.

இந்த விஷயம் சமூக வலைத்தளங்களிலும் ஊடகங்களிலும் இன்று பேசுப் பொருளாக மாறியுள்ளது.

இந்த நிகழ்வை அடுத்து புஷ்பிகா , தனது ஃபேஸ்புக் பக்கத்தில் கருத்து வெளியிட்டுள்ளார்:

"உலக வரலாற்றில் உலக அழகி போட்டியில் வெற்றியீட்டிய ஒருவரிடமிருந்து கிரீடத்தை பறித்துக் கொண்ட சம்பவம் இதுதான் முதல்முறை.

இந்த பதிவை எழுதும் சந்தர்ப்பத்திலும் நான் தலை நிமிர்ந்து நிற்கிறேன். நான் நானாகவே உள்ளேன். இது எனக்கு நிகழ்ந்த ஒரு சம்பவம் மாத்திரமே. எனது தலையிலிருந்து கிரீடம் பறிக்கப்பட்டபோது ஏற்பட்ட காயங்கள், அதனால் மனதில் ஏற்பட்ட வேதனை ஆகியவற்றை விடவும், அம்மா, "தலையில் காயம் ஏற்பட்டுள்ளது அல்லவா? வலிக்கிறதா?' என எனது மகன் கேட்ட போது ஏற்பட்ட வலியே அதிகம்.

அதே போன்று தனித்து வாழும் பெண்மணியான எனக்கு உலகம் முழுவதும் உள்ள பெண்கள் மாத்திரமின்றி ஆண்களும் ஆதரவு தெரிவித்து வருகிறார்கள். இனம், மதம், கட்சி, நிறம் என்ற எந்தவொரு பாகுபாடும் இன்றி எனக்கு ஆதரவு வழங்கும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சந்தர்ப்பம் இது.

இந்த நிமிடம் வரை எனக்கு விவாகரத்து ஆகவில்லை. தனிப்பட்ட காரணங்களினால் என் பிள்ளையுடன் தனித்து வாழ்ந்து வருகிறேன்.

தனிமையில் வாழ்வது வேறு விவாகரத்து என்பது வேறு. நான் இந்த இடத்திற்கு தகுதியில்லை என்றால் ஆரம்பத்திலேயே என்னை நிராகரித்திருக்க வேண்டும். இப்படி இந்த இடத்திற்கு வரும்வரை அவர்கள் தூங்கிக் கொண்டா இருந்தார்கள்.

வரலாற்றில் முதல் தடவையாக கிரீடத்தை தலையில் அணிவித்து அடுத்த நொடியில் பறிக்கப்பட்ட முதலாவது திருமதி இலங்கை அழகு ராணி நான்தான்' என கூறியுள்ளார்.

புஷ்பிகா டி சில்வா விவாகரத்து பெறவில்லை என உறுதியாகியுள்ள நிலையில், மீண்டும் அவருக்குகிரீடத்தை வழங்க ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக ஏற்பாட்டு குழு தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com