எளிமையாய் இருப்போம் கைத்தறிக்கு மாறுவோம்!

சூழலியல் பருவநிலை மாற்றம் என்ற சொற்களை அன்றாடம் கேட்கிறோம் கடந்து செல்கிறோம்.
எளிமையாய் இருப்போம் கைத்தறிக்கு மாறுவோம்!

சூழலியல் பருவநிலை மாற்றம் என்ற சொற்களை அன்றாடம் கேட்கிறோம் கடந்து செல்கிறோம். ஆனால், சூழலியல் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக தான் பார்த்துக் கொண்டிருந்த வேலையே உதறிவிட்டு தன்னார்வலராக குக்கிராமங்களைத் தேடிச் செல்கிறார் பொன்மணி. "துவம்' என்ற சிறு தொழில் நிறுவனத்தை சூழலியல் சார்ந்த சிந்தனையோடு நடத்தி வருகிறார். தன் கருத்துக்களை நம்மோடு பகிர்ந்து கொள்கிறார். 

சூழலியல் குறித்த சிந்தனை எந்த வயதில் வந்தது?

தனியாக எங்கிருந்தோ கற்றுக் கொண்ட சிந்தனை என்று சொல்ல மாட்டேன். அன்றாடம் நம் குடும்பங்களில் நம்முடைய வாழ்வியலில் இருந்த விஷயம். அதிலிருந்து நகர்ந்து நெடுந்தூரம் சென்றுவிட்டோமோ என்ற எண்ணம் தோன்றிய நேரத்தில் மீண்டும் என்னை அதே பாதையில் திருப்பிக் கொண்டேன் அவ்வளவு தான்.

 நான் சிறுமியாக இருந்த பொழுது பாட்டி, வீட்டில் புடவைகள் கிழிந்து விட்டால் அவற்றை ஒருங்கிணைத்து கைகளால் மெத்தை போலத் தைத்துத் தருவார்கள். பழைய உடைகளை மறுவடிவமைப்பு செய்து வேறு உபயோகத்துக்குக் கொண்டு வருவார்கள்.

அப்பா பெத்துராஜ் மளிகைக் கடை வைத்திருக்கிறார். எப்போதும் காகிதத்தில் பொட்டலம் கட்டி அதை சணல் கொண்டு கட்டித்தான் வாடிக்கையாளர்களுக்குக் கொடுப்பார். விடாப்பிடியாக இன்றைக்கும் அப்பா அந்த முறையைப் பின்பற்றுகிறார்கள். நெகிழிப்பைகளைத் தவிர்த்து விடுவார். தானே தேடி வரும் நெகிழிப் பைகளை மறுசுழற்சிக்கு மறு உபயோகத்துக்கு  அனுப்பி வைப்பார். இதையெல்லாம் பார்த்து வளர்ந்ததால் அந்த சிந்தனை எனக்குள்ளும் இருந்திருக்கிறது.

சுற்றுச்சூழல் விழிப்புணர்வுப்பணிக்கு வந்தது பற்றி...

மதுரையில் பாலிடெக்னிக் முடித்து கோவையில் ஆடை வடிவமைப்புக் கலையில் இளங்கலை பயின்றேன். படிப்புக்கேற்ற வேலை என்று தேடி தமிழகத்தில் பல கிளைகளோடு செயல்படும் ஜவுளி நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்தேன். செயற்கை இழை உடைகளும் அதன் அலங்காரத்திற்குப் பயன்படுத்தும் பிளாஸ்டிக்கால் ஆன கற்கள் சமிக்கி போன்ற பொருட்களும் நம் உடலுக்கு ஏற்றதல்ல என்பதோடு அவை சுற்றுச்சூழலை பாதிப்பதில் பெரும்பங்காற்றுகின்றன என்ற எண்ணம் இருந்தது. அதோடு ஒவ்வொரு சிறிய நிகழ்வுக்கும் பெரிய அளவில் நெகிழிப் பயன்பாடு இருப்பதை மனம் ஒப்புக்கொள்ளவில்லை. அறியாமலே சுற்றுச்சுழலுக்குக் கேடு விளைவித்துக் கொண்டிருக்கிறோம் என்ற எண்ணம் அந்தப் பணியில் தொடர முடியாமல் தடுத்தது. 

சூழலியல் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் தன்னார்வத் தொண்டு நிறுவனத்தின் செயல்பாடுகளைக் கண்டு அதிலே என்னை இணைத்துக் கொண்டேன். கிராமப்புறக் குழந்தைகளுக்கும் பெண்களுக்கும் சூழலியல் பற்றிய புரிதலை ஏற்படுத்தும் தன்னார்வலராக கிருஷ்ணகிரி மாவட்டத்தில் புளியனுர் கிராமத்தில் பணியாற்றச் சென்றேன். கற்றுக் கொடுக்கச் சென்ற இடத்தில் நான் கற்றுக்கொண்டது ஏராளம். 

பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் சுகாதாரமின்மையால் ஏற்படும் விளைவுகளை விளக்குவது என்னுடைய பணி. அங்கே தான் பெண்கள் சூழலியல் குறித்தும் சுகாதாரம் குறித்தும் சிந்திக்க வேண்டுமெனில் அவர்களின் அன்றாட வாழ்க்கையின் பொருளாதாரத் தேவைகள் நிறைவு பெற வேண்டும். குறைந்த பட்சம், அவர்களுக்கென ஒரு வருமானம் வேண்டும் என்பதைப் புரிந்து கொண்டேன்.

அதிலே உங்கள் முதல் முயற்சி பற்றி...

பெண்களுக்கென தொழில் வேண்டும். அதே நேரத்தில் அது சூழலியலை மேம்படுத்தும் வேலையாகவும் இருந்துவிட்டால் நம் முயற்சி வெற்றி என்று கருதினேன். பெண்களைக் கொண்டு பருத்தி ஆடைகளை உற்பத்தி செய்தால் என்ன? என்று தோன்றியது. அதிலும் குறிப்பாக பெண்களுக்கான உள்ளாடைகள் தயாரிக்கலாம் என்றும் அதையும் புளியனுர் கிராமப் பெண்களைக் கொண்டே தயாரிக்கலாம் என்றும் "துவம்' என்ற சிறுதொழில் நிறுவனத்தைத் தொடங்கினேன்.  

"துவம்' எதிர்கொண்ட சவால்கள் பற்றி...

உள்ளாடைகள் என்றாலே பின்னலாடைகளில் செய்தது என்பதாக எண்ணம் இருக்கிறது. அதைக்காட்டிலும் எளிய பருத்தித் துணி செளகரியமானது ஆரோக்கியமானது என்பதைப் புரிய வைப்பதற்கான முயற்சி கடினமாக இருந்தது. எலாஸ்டிக் எனப்படும் முறை நம் உடலுக்கு ஏற்றதல்ல நாள் முழுவதும் இறுக்கத்தை இடுப்புப் பகுதிகளில் இவை ஏற்படுத்துவதால் நமக்கு வரக்கூடிய பாதிப்புகளை எடுத்துச் சொல்லி பல பொருட்காட்சிகளில் நம்முடைய பருத்தித் துணியாலான உள்ளாடைகளை காட்சிப் படுத்தி விற்பதற்கும் முயன்றோம். பயன்படுத்தியவர்கள் திரும்பி வந்தார்கள். இன்னும் பலருக்கும் அறிமுகப்படுத்தினார்கள். இன்னும் சிலர் கிராமப்புறப் பெண்களின் முயற்சியை ஊக்கப்படுத்த எங்கள் துணிகளை வாங்கினார்கள். ஓரளவுக்கு எங்கள் வாழ்க்கையும் முயற்சியும் ஸ்திரமாகின.

சூழலியல் விழிப்புணர்வுக்கான முயற்சிகள் பற்றி...

சிறு தொழில் எங்களுக்கு வாய்த்துவிட்டது. இதை எங்கள் சூழலியல் சிந்தனைக்குப் பயன்படுத்த வேண்டும் என்று அடுத்த முயற்சியை மேற்கொண்டேன். உள்ளாடைகள் தைக்கும் பொழுது வெட்டப்படும் துண்டுத் துணிகள் இருக்கின்றதே அதைக் கொண்டு பொம்மைகள் செய்யலாம் என்று முயன்றேன். கல்லூரியில் படித்த பொழுது கற்றுக் கொண்ட பொம்மைகளை செய்வதற்கு எங்கள் பெண்களுக்குக் கற்றுக் கொடுத்தோம். அனைத்தும் கைகளால் செய்யப்படும் பொம்மைகள். முதலில் மீன் போன்ற சிறிய பொம்மைகளைச் செய்தோம். மீன் வடிவில் பருத்தித் துணியில் தைத்து அதற்குள் துண்டுத் துணிகள் திணிக்கப்பட்ட பொம்மைகள். செயற்கை இழைகள் இல்லாமல் குழந்தை வாயில் வைத்து விளையாடினாலும் எதுவும் பாதிப்பில்லை. அன்றாடம் துவைத்துக் கொள்ளலாம் போன்ற பல வசதிகள் இருக்கின்றன.  ஓரளவுக்கு மக்களின் கவனத்திற்கு கொண்டு வந்தோம். 

இன்றைக்குக் குழந்தைகளின் மனதில் நாம் விதைக்கும் கருத்துக்கள் ஒரு காலத்தில் சமூகத்தின் இயல்பாக மாறிவிடும் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு. அதனால் அழிந்து வரும் விலங்கினங்கள் மற்றும் பறவைகளின் வடிவங்களைப் பொம்மைகளாகச் செய்வது என்று முடிவு செய்தேன். யானை, ஆந்தை என்று பிரத்யேகமாக வடிவமைக்கிறோம்.  இதை ஆன்- லைன் மூலம் விற்கிறோம்.

சூழலியல் என்கிறீர்கள், அதை எப்படிப் புரிந்து கொள்வது?

சூழலியல் என்பது மிகப்பெரிய விஷயம் என்றாலும் எளிதான விஷயமும்   தான். பெண்களுக்கான ஆடை வடிவமைப்பில் தற்போது செயற்கை இழைகள் அதிகமாகப் பயன்படுத்தப்படுகிறது. அதன் அலங்காரத்திற்குப் பயன்படுத்தும் மணிகள் கற்கள் என்று அனைத்துமே பிளாஸ்டிக் பொருட்கள் தான். முன்னாட்களில் நாம் உடை அலங்காரம் என்றால் துணியில் கைவேலைப்பாடுகள் நூல் கொண்டு எம்பிராய்டரி செய்வோம். அது இயற்கை முறை. இன்றைக்கு நம்முடைய துணிவகைகள் உடைகள் கூட மக்காத பொருட்களால் செய்யத் துணிந்துவிட்டோம். 

மண்ணை இப்படி பாழ் படுத்துவதில் அனைவருமே பங்கு கொள்ளத் தொடங்கிவிட்டால் எங்கே சென்று முடியும் யோசித்துப் பாருங்கள்? எளிய உடைகளை அணிந்த நம் பெண்கள் கம்பீரமாக இருக்கவில்லையா? நாமும் நம் பாரம்பர்யத்திற்குத் திரும்பிவிட்டால் நம்முடைய சூழல் காக்கப்படும் அல்லவா? 

சூழல் பாதுகாப்பு என்பதை நமக்கு சம்பந்தம் இல்லாத கருத்தியல் என்று எண்ண வேண்டாம்.  எளிய பருத்தி உடைகள் அணிவது சூழலியல் சிந்தனைக்கு நாம் எடுத்து வைக்கும் முதல் அடி. இதை அனைவருமே செய்ய முடியும். அதை இங்கே பெண்களிடம் ஒரு கோரிக்கையாகவே நான் பணிவோடு முன் வைக்கிறேன்.

ஆடம்பரங்களைத் தவிர்த்தால் பெருமளவில் சூழலைக் காப்பாற்ற முடியும். ஒரு குழந்தையின் பிறந்த நாள் கொண்டாட்டத்தில் எத்தனை பிளாஸ்டிக் பொருட்களைப் பயன்படுத்துகிறோம் என்று நினைத்துப் பாருங்கள். நான் சொல்வதின் உண்மை புரியும். வாழ்வை எளிமையாக்கிக் கொண்டால் சூழல் மட்டுமல்ல நாமும் ஆரோக்கியமாக இருப்போம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com