மனவலிமையை அளிக்கும் ஓவியங்கள்!
By - பூர்ணிமா | Published On : 04th August 2021 06:00 AM | Last Updated : 04th August 2021 06:00 AM | அ+அ அ- |

நான் ஓவியம் வரைய பயன்படுத்தும் ஒவ்வொரு வண்ணத்தையும் நேசிக்கிறேன் என்று கூறும் கரிஷ்மா கண்ணன் (29) நான் வரையும் ஓவியங்களில் உள்ள வண்ணங்கள் ஏற்படுத்தும் அதிர்வுகள் தனக்கு மனவலிமையையும், தைரியத்தையும் அளிக்கிறது என்கிறார்.
இவரது ஓவியங்களை வாங்க அமெரிக்கா, ஐரோப்பா, ஆஸ்திரேலியா மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளில் ஏராளமான வாடிக்கையாளர்கள் உள்ளனர். அப்படியென்ன இவரது ஓவியத்தில் விசேஷம்?
கரிஷ்மா கண்ணன் டவுன் சின்ட்ரோம் எனப்படும் மனநலிவு நோயால் பாதிக்கப்பட்டவர். இந்த நோய் பாதிப்புள்ள குழந்தைகளை ஸ்பெஷல் சில்ரன் என குறிப்பிடுவார்கள். தான் வரையும் ஓவியங்கள் விற்பனை மூலம் கிடைக்கும் பணத்தை, தன்னைப் போல் பாதிப்படையும் குழந்தைகள் நலனுக்காக கொடுத்து உதவுகிறார்.
சென்னையில் பிறந்த கரிஷ்மா, நான்கு மாத குழந்தையாக இருந்தபோதே மனநலிவு நோய் பாதிக்கப்பட்டிருப்பதை உணர்ந்த இவரது அம்மா கல்பனா, சிகிச்சை அளிக்க மருத்துவர்களை அணுகினார். சென்னையில் உள்ள "டவுன் சின்டரோம் பெடரேஷன் ஆஃப் இந்தியா'
வின் தமிழ்நாடு பிரிவின் தலைவராக இருந்த டாக்டர் ரேகா ராமசந்திரன், கரிஷ்மாவுக்குத் தேவையான சிகிச்சையை அளித்ததோடு, கரிஷ்மாவைப் போலவே பாதிக்கப்பட்ட குழந்தைகளின் பெற்றோர்களுக்கு அறிமுகப்படுத்திய தெரபிஸ்ட்களை கல்பனாவுக்கும் அறிமுகப்படுத்தி வைத்தார். கவுன்சிலிங் அளிக்கவும் உதவி செய்தார்.
ஆசிர்வாத் என்ற சமூக தொண்டு மையத்தின் நிறுவனர் தெராபிஸ்ட் டாக்டர். எம்.சி.மேத்யூ என்பவர் கரிஷ்மாவின் இளம் பிராயத்தில் தேவையான மன உறுதியையும், தைரியத்தையும் வழங்கினார். இது கரிஷ்மாவின் மனதில் ஆழமாக பதிந்ததோடு, தன்னைப் போல் பாதிக்கப்பட்டுள்ள குழந்தைகளுக்கு ஏதாவது ஒரு வகையில் உதவ வேண்டுமென்ற எண்ணத்தையும் கூடவே வளர்த்துக் கொண்டார்.
சென்னையில் மனநலிவு நோய் பாதித்த குழந்தைகளுக்காக நடத்தப்படும் "ரமண சன்ரித்யா ஆலயம்' என்ற சிறப்பு பள்ளியில் சேர்ந்து கல்வி, கற்பனை திறன் மற்றும் பரதநாட்டியம் ஆகியவற்றைக் கற்றுக் கொண்ட கரிஷ்மா, ஆண்டுவிழா நடன நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு பாராட்டினைப் பெற்று வந்தார்.
2009-ஆம் ஆண்டு கரிஷ்மாவின் பெற்றோர் பணி நிமித்தம் காரணமாக வியட்நாம் குடியேறினர். அங்கு பள்ளியில் சேர்ந்த கரிஷ்மா, சுற்றுச் சூழலையும், தொட்டு உணரும் திறனையும் பெற்றார். அந்தப் பள்ளியில் இருந்த பிரிட்டிஷ் ஓவிய ஆசிரியை சிண்டி பியூமோன்ட் கொடுத்த உற்சாகத்தால் கரிஷ்மா ஓவியங்களை வரைய ஆரம்பித்தார்.
இவர் வரைந்த 40-க்கும் மேற்பட்ட ஓவியங்களை பார்த்தவர்கள் ஓவிய கண்காட்சியொன்றை நடத்தும்படி கல்பனாவிடம் கூறினர்.
அந்த நேரத்தில் அங்கு மனநலிவு நோயால் பாதிக்கப்பட்ட சிறுவனொருவனைப் பார்த்த கரிஷ்மா, அவனைப் பற்றி விசாரித்தார். அவனுக்கு இதய நோய் இருப்பதும், அறுவை சிகிச்சை மூலம் குணப்படுத்த பணவசதியில்லை என்பதும் தெரிந்தது. உடனே ஓவிய கண்காட்சி ஒன்றை நடத்தி, ஓவியங்கள் விற்பனை மூலம் கிடைக்கும் தொகையை அச்சிறுவன் மருத்துவ செலவுக்கு கொடுத்துதவலாம் என்ற யோசனையை தன் அம்மா கல்பனாவிடம் கூறினார் கரிஷ்மா. இவரது ஓவியங்கள் நல்ல விலைக்குப் போயின.
இவரது தொண்டு உள்ளத்தை அறிந்த பல வெளிநாட்டினர் ஓவியங்களை வாங்க முன்வந்தனர். கிடைக்கும் பணத்தை தொடர்ந்து மனநலிவு பாதித்த குழந்தைகள் நலனுக்காக கொடுத்து வந்தார்.
இவரது ஓவியங்களை வாங்கும் வெளிநாட்டினர் மூலம் கரிஷ்மாவின் சேவை பல நாடுகளில் பரவியது. 2019- ஆம் ஜெனிவாவில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையில் நடந்த உலக மனநலிவு விழிப்புணர்வு மாதம் தொடர் நிகழ்ச்சியில் உரையாற்றும் வாய்ப்பினைப் பெற்றார்.
தற்போது தன் பெற்றோருடன் பெங்களூரில் வசித்து வரும் கரிஷ்மா, தொடர்ந்து தன் கற்பனைத் திறனால் ஓவியங்களை வரைந்து விற்பனை செய்து கிடைக்கும் பணத்தை சென்னை, பெங்களூரு, வியட்நாமில் உள்ள மனநலிவு குழந்தைகள் சிறப்பு மையங்களுக்கு வழங்கி வருகிறார்.
இது மட்டுமின்றி இவரது தந்தை கண்ணன் மற்றும் தாய் கல்பனா இருவரும் சேர்ந்து பெங்களூரில் ஸ்டுடியோ 21 மட என்ற தொண்டு நிறுவனமொன்றை துவங்கி, வளர்ந்த மனநலிவு நோயாளிகளுக்கு சுயமாகவும், சுதந்திரமாகவும் செயல்பட விழிப்புணர்வு முகாம்களை நடத்தி வருகின்றனர். இதில் சமையல், நீச்சல், யோகா, நடனம், கலந்துரையாடல் போன்ற நிகழ்ச்சிகளை நடத்தி பயிற்சியளிக்கின்றனர். ஓவியம் வரைந்து நிதி திரட்டுவதோடு, இந்நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டு மனநலிவு நோயாளிகளை உற்சாகப்படுத்திவரும் கரிஷ்மாவின் குறிக்கோள் இதுதான் "என்னால் முடியும், உன்னால் முடியும், நம்மால் முடியும்'.