கையில் வெள்ளிப் பதக்கம்... காதுகளில் ஒலிம்பிக்ஸ் வளையங்கள்!

சென்ற ஜூலை 23 -இல்  டோக்கியோ ஒலிம்பிக்ஸ்  போட்டிகள் தொடங்கினாலும்  இன்றுவரை  இந்தியாவிற்கு கிடைத்திருக்கும் பதக்கம் ஒன்றே ஒன்றுதான்.
கையில் வெள்ளிப் பதக்கம்... காதுகளில் ஒலிம்பிக்ஸ் வளையங்கள்!

சென்ற ஜூலை 23 -இல் டோக்கியோ ஒலிம்பிக்ஸ் போட்டிகள் தொடங்கினாலும் இன்றுவரை இந்தியாவிற்கு கிடைத்திருக்கும் பதக்கம் ஒன்றே ஒன்றுதான். அது மணிப்பூரைச் சேர்ந்த மீரா பாய் சானு பளு தூக்கும் போட்டியில் இரண்டாவதாக வந்ததற்கு வழங்கப்பட்ட வெள்ளிப் பதக்கம். 2000-இல் கர்ணம் மல்லேஸ்வரி ஒலிம்பிக்சில் வெண்கலப் பதக்கம் வென்றார். அதற்குப் பிறகு பளுதூக்குதலில் 49 கிலோ எடை பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்ற இரண்டாவது வீராங்கனை மீரா பாய் சானுதான்.

""ஒலிம்பிக்ஸ் 2020 துவங்கிய முதல் நாளில் இந்தியாவிற்கான முதல் பதக்கம் வென்றதில் எனக்கு மகிழ்ச்சி "பெருமை உண்டு. எனது பதக்கம் மட்டுமல்ல.. நானும் இந்தியாவிற்கு சொந்தமானவள்' என்று கூறியிருக்கும் மீரா பாய் சானு' வெள்ளிப் பதக்கம் கிடைக்கும் என்று நினைத்துக்கூடப் பார்க்கவில்லை.

ஒரு கட்டத்தில் பளு தூக்கும் போட்டியில் இனி என்னால் கலந்து கொள்ள முடியாது என்று நினைக்க வேண்டிய சூழ்நிலையில் இருந்தேன். இந்தப் பதக்கம் அந்த எதிர் எண்ண அலைகளில் இருந்து என்னை மீட்டுள்ளது. 2016-இல் ரியோ ஒலிம்பிக்ஸில் எனது பளு தூக்கும் அனுபவத்தில் மிக்க குறைந்த புள்ளிகளைப் பெற்றேன். மிக்க கடினமான பயிற்சிக்குப் பிறகும் என்னால் அதிகப் புள்ளிகளை பெற முடியவில்லை. அடுத்ததாக 2018-இல் நடந்த காமன்வெல்த் போட்டிக்கு முன்னதாக முதுகில் பலத்த காயம் ஏற்பட்டது. அதனால் போட்டிகளில் கலந்து கொள்ள முடியவில்லை. இனி போட்டிகளில் கலந்து கொள்ள முடியாது என்று நினைத்தேன் என்றாலும் மீண்டும் பயிற்சிகளை மேற்கொண்டேன். பயிற்சியாளர் யுக்திகளை மாற்றினார்.

டோக்கியோவில் போட்டி நடந்த முதல் நாள் எனக்கு மாதவிடாய் வந்துவிட்டது. பெண்களுக்கு சோர்வைத் தரும் அந்த நாட்களில் எப்படி பளுவைத் தூக்கப் போகிறேன் என்று சஞ்சலப்பட்டேன்.

ஆனாலும், இப்போது இல்லை என்றால் எப்போதும் இல்லை... அதனால் முழு மனதுடன் போட்டியில் கலந்து கொள்வது என்று முடிவு செய்தேன். போட்டியில் இரண்டாம் ஸ்தானத்தில் வெற்றி பெற முடிந்தது. எனது ஒலிம்பிக்ஸ் கனவும் நிறைவேறியது.

பிரதமர் மோடி அலைபேசியில் அழைத்து பாராட்டினார். எனது வாழ்க்கையில் இந்தியப் பிரதமர் என்னிடம் பேசுவார் என்று கனவு கூட கண்டதில்லை'' என்று சொல்லும் மீராவை மணிப்பூர் அரசு கூடுதல் போலீஸ் சூப்பிரண்டென்ட்டாக(விளையாட்டு) நியமித்துள்ளது. "

மீராபாய் சானு பங்கு பெற்ற பிரிவில் தங்கம் வென்ற சீன வீராங்கனைக்கு ஊக்க மருந்து சோதனை நடத்தப்பட்டுள்ளது. இதில் அவர் ஊக்கமருந்து பயன்படுத்தப்பட்டது உறுதியானால் அவரது பதக்கம் பறிக்கப்படும். இரண்டாவது இடத்தில் இருக்கும் மீராபாய் சானுவுக்கு தங்கம் கிடைக்கவும் வாய்ப்பு உள்ளது.

பளு தூக்கும் போட்டியின் போது மீரா காது மடல்களில் ஒலிம்பிக்ஸ் சின்னமான ஐந்து வளையங்கள் போன்று வடிவமைக்கப்பட்ட காதணியை அணிந்திருந்தார்.

"2016 ஒலிம்பிக்ஸின் போது, அம்மா தன்னிடமிருந்த நகை, சேமிப்பைப் போட்டு எனக்கு ஒலிம்பிக்ஸ் சின்னமான வளையங்கள் வடிவில் இருந்த காதணியை 2016 ஒலிம்பிக்ஸில் பதக்கம் வெல்ல வேண்டும் என்ற ஆசியுடன் அன்பளிப்பு செய்தார்.

ஆனால் வெற்றி நழுவி விட்டது. ஒலிம்பிக்ஸில் பதக்கம் பெற்றாக வேண்டும் என்று என்னை சதா நினைவு ப்படுத்திக் கொண்டு இருக்க வேண்டும் என்பதற்காக அம்மா தந்த காதணியை அணிந்தேன்.

உண்மையில் அம்மா என் கழுத்தில் அணிய தங்கச் சங்கிலி அன்பளிப்பு செய்ய நினைத்தார். "சங்கிலி வேண்டாம்மா ... பளு தூக்கும் போது கழுத்தில் தொங்கும் சங்கிலி இடையூறாக இருக்கும் என்று நான் சொன்னதால் ஒலிம்பிக்ஸ் வளைய வடிவ காதணியை அன்பளிப்பு செய்தார். அந்த காதணியை மறக்காமல் 2020 ஒலிம்பிக்ஸ் போட்டிகளில் அணிந்து கொண்டு பளு தூக்கினேன்.' மீரா, கையில் ஒலிம்பிக்ஸ் வெள்ளிப் பதக்கம், காதுகளில் ஒலிம்பிக்ஸ் 5 வளையங்கள் உள்ள காதணியுடன் இந்தியா திரும்பினார்.

மீரா டில்லி வந்து சேர்ந்ததும் முதல் வேலையாக தனக்கு ரொம்பவும் பிடித்த பீட்சா வாங்கி சாப்பிட்டார். "பயிற்சியின் போது பல நாட்கள் பீட்சா சாப்பிடவில்லை. எனது உடல் எடை கூடிவிடக் கூடாது என்பதற்கான முன் எச்சரிக்கையாக பீட்ஸாவைத் தொடவில்லை. ஒலிம்பிக்ஸில் வெள்ளிப் பதக்கம் கிடைத்த சந்தோஷத்தை பீட்சா சாப்பிட்டுக் கொண்டாடினேன்..' என்று வெள்ளந்தியாகச் சொன்ன மீராவுக்கு வாழ்நாள் முழுவதும் பீட்சா இலவசமாக வழங்க . டொமினோஸ் பீட்சா நிறுவனம் முன்வந்துள்ளது.

மீராவின் வெற்றிச் செய்தியை அறிந்ததும் மணிப்பூர் மக்கள் மீரா வீடு சென்று பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர். 26 வயதாகும் மீராவுக்கு மூன்று சகோதரிகள். இரண்டு சகோதரர்கள். மீராவின் பளு தூக்கும் சாதனைகளின் அடிப்படையில் வடகிழக்கு எல்லை ரெயில்வே டிக்கெட் சேகரிக்கும் வேலையை வழங்கியது. 2018 -இல் விளையாட்டு சிறப்பு அதிகாரியாக பதவி உயர்வை அளித்தது. ஒலிம்பிக்ஸில் வெள்ளிப் பதக்கம் வென்றதால், அரசு ஐம்பது லட்சமும் இந்திய ஒலிம்பிக்ஸ் சங்கம் நாற்பது லட்சமும், மணிப்பூர் அரசு ஒரு கோடியும் வழங்குகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com