வெற்றியின் இலக்கு: முயற்சி!

ஆசிரியர் என்றால் அடுத்த தலைமுறைக்கான வழிகாட்டி என்று  பொருள் கொள்ளலாம்.
வெற்றியின் இலக்கு: முயற்சி!


ஆசிரியர் என்றால் அடுத்த தலைமுறைக்கான வழிகாட்டி என்று  பொருள் கொள்ளலாம்.  வேதியியல் துறையில் தூத்துக்குடி காமராஜர் கல்லூரிப் பேராசிரியராக இருக்கும் வான்மதி, சமூகம் மற்றும் மாணவர்கள் மீதான அக்கறையோடு மேற்கொண்டு வரும் பணிகள் அளப்பரியன. மாணவர்கள் அறிவியல் அறிஞர்களாக உருவாக வேண்டும் என்ற நோக்கத்தோடு செயல்பட்டு வருபவர் வான்மதி. தொடர்ந்து தன்னுடைய செயல்பாடுகளில் மாணவர்களையும் இணைத்துக் கொண்டு தானும் சிறந்து தன் மாணவர்களையும் சிறக்கச் செய்யும் முயற்சிக்காக ஐக்கிய நாடுகள் சபையோடு தொடர்புடைய அமைப்பில் "சிறந்த பெண்மணி விருது' பெற்றிருக்கிறார். 

தன்னுடைய அனுபவங்கள் பற்றி நம்மிடம் பகிர்ந்து கொள்கிறார். 

 உங்கள் குடும்பம் பற்றி...

எங்கள் குடும்பத்தில் தாத்தா பாட்டி ஆசிரியராக இருந்தவர்கள். என் தந்தையார் ஞானசேகரன் அறிவியல்துறையில் காரைக்குடி சிகிரியில் ஞானசேகரன் விஞ்ஞானியாக இருந்தார். அப்பாவைப் பார்த்தே எனக்கும் சிறுவயது முதல் அறிவியல் ஆராய்ச்சி என்று ஈடுபாடு ஏற்பட்டுவிட்டது. வேதியியல் படித்தேன். கடல்சார் ஆராய்ச்சியில் ஈடுபட்டு முனைவர் பட்டம் பெற்றேன். தூத்துக்குடி காமராஜர் கல்லூரியில் பேராசிரியராக இருக்கிறேன். 

உங்கள் கல்விப் பணி மற்றும் ஆராய்ச்சி பற்றி... 

இந்திய அணுசக்தித் துறையின் உதவியுடன் வேதியியல் ஆராய்ச்சிகளை மேற்கொண்டு எங்கள் ஆராய்ச்சிக்கு காப்புரிமை பெற்றிருக்கிறோம். மருந்து தயாரிக்கும் தொழில் நுட்பத்தில் எங்கள் கண்டுபிடிப்பு மிகுந்த முக்கியத்துவம் பெற்றது. வேதிப்பொருட்களைக்  குறைந்த அளவில் பயன்படுத்துவதோடு குறைவான செலவில் நிறைவான பலனைத் தருவன எங்கள் ஆராய்ச்சி முடிவுகள்.

மாணவர்களுக்கான பயிற்சி முகாம்கள் பற்றி...

அறிவியல் கண்டுபிடிப்புகள் ஒரு நாட்டின் பொருளாதாரம் மற்றும் அந்தஸ்தை உயர்த்தும். நன்கு படிக்கும் மாணவர்கள் அறிவியல் மற்றும் ஆராய்ச்சியில் தங்கள் கவனத்தையும் ஆர்வத்தையும் திருப்ப வேண்டும் என்பதற்காக மத்திய அரசு பல திட்டங்களை வகுத்துள்ளது. 

அதன் அடிப்படையில் மத்திய அரசின் நிதி உதவியுடன் மாணவர்களுக்கான அறிவியல் மற்றும் ஆராய்ச்சி குறித்த முகாம்களை ஆண்டுதோறும் நடத்தி வருகிறேன். இதன்மூலம், ஒவ்வொரு ஆண்டும் நூற்றுக் கணக்கான மாணவர்கள் பயனடைகிறார்கள். 

அதிலும் குறிப்பாக கிராமப்புற மாணவர்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் அவர்களுக்கு மேற்படிப்புக்கான வழிகாட்டுதல்கள் கிடைக்க வேண்டும் என்பதில் கவனமாக இருப்பேன். 

நூற்றுக்கும் மேற்பட்ட பள்ளிகளோடு தொடர்பு கொண்டு சிறந்த மாணவர்களைத் தேர்ந்தெடுத்து இந்த முகாமில் சேர்த்துக் கொள்கிறோம். 

மாணவிகள் அதிக அளவில் கலந்து கொள்கிறார்கள் என்பது மகிழ்ச்சியான விஷயம். ஐந்து நாட்கள் நடைபெறும் இந்த முகாமில் அறிவியல் தொழில்நுட்ப துறை அங்கீகரித்துள்ள  பல ஆராய்ச்சியாளர்கள், வல்லுநர்கள் கலந்து கொண்டு மாணவர்களுக்கு வழிகாட்டுகிறார்கள். 

அதோடு ஆய்வுக்கூடங்கள், ஆராய்ச்சி நிலையங்களுக்கு மாணவர்களை அழைத்துச் சென்று அவர்கள் ஆர்வம் பெறும் வகையில் முகாமை நடத்துகிறேன். பள்ளி மாணவர்களுக்கு இவ்வாறு ஊக்கமூட்டும்  முகாம் நடத்தி வருகிறோம். கல்லூரி மாணவர்களுக்கும் இது போல பிரத்யேக பயிற்சி முகாம் நடத்தியிருக்கிறேன். அறிவியல் அகாதெமி வழிகாட்டுதலில் இந்த நிகழ்ச்சிகள் நடக்கின்றன. இந்த நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்து நடத்தியிருக்கிறோம். 

நீர் மேலாண்மை பற்றிய செயல்பாடு பற்றி...

அறிவியல் தொழில்நுட்பத் துறையின் ஒரு பிரிவு அறிவியல் குறித்த விழிப்புணர்வு பொது மக்களிடம் ஏற்படுத்துவதற்கான மத்திய அரசின் திட்டத்தில் இதுவும் ஒன்று. மக்கள் நீர்மேலாண்மை பற்றியும் நன்னீர் நிலைகளை பாதுகாப்பதற்கான வழிமுறைகள், மழைநீரை சேமிக்க வேண்டியதன் அவசியத்தை உணர்த்துவது என்று களத்துக்கு நேரடியாகச் சென்று மக்களிடம் பேசுவது, கிராமப் பஞ்சாயத்துத் தலைவர்களை சந்தித்து சுற்றுச் சூழல் சுகாதாரம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த மக்களை ஒருங்கிணைத்து அவர்களோடு உரையாடுவது என்று நூற்றுக்கும் மேற்பட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தியிருக்கிறோம். இதற்கும் எனக்கு நல்ல அங்கீகாரமும் விருதும் கிடைத்தன. 

நாட்டுநலப் பணித்திட்ட செயல்பாடுகள் குறித்து...

நாட்டுநலப் பணித்திட்டம் என்ற சநந அமைப்பின் வழியாக மாணவிகள் மட்டும் கொண்ட குழு ஒன்றை வழிநடத்தி வந்தேன். இந்தத் திட்டத்தின் மூலம் எப்போதும் வென்றான் ஊருக்கு அருகில் காட்டுநாயகன் பட்டி கிராமத்தைத் தத்தெடுத்து அந்த கிராமத்தில் பல நலப்பணிகள் மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தினோம். 

மூன்றாண்டுகள் தொடர்ந்து அங்கே செயல்பட்டோம். மருத்துவ முகாம்கள், கால்நடை மருத்துவ முகாம்கள், பெண்களுக்கான தற்காப்புக் கலை அடிப்படைகளை சொல்லிக் கொடுத்தோம். உணவே மருந்து, சுகாதாரத்தின் தேவை என்று பெண்களுக்கு வல்லுநர்களை அழைத்துப் போய் கற்றுக் கொடுத்தோம். 

மாணவிகளின் ஆர்வத்தையும் முக்கியமாகச் சொல்ல வேண்டும். கிராமத்தில் பெரிய மாற்றங்களை ஏற்படுத்தியதற்காக என் மாணவிகளும் விருது பெற்றார்கள். பத்து நாட்களுக்கு கிராமத்தில் வளரும் பெண் பிள்ளைகளை வைத்துக் கொண்டு சமூகப் பணியாற்றுவது பெரிய பொறுப்பு. அதைத் திறம்பட செய்ததற்காக எனக்கும் சிறந்த நாட்டுநலப் பணித்திட்ட அதிகாரி விருது கிடைத்தது. என்னுடைய அணியே சிறந்த அணி விருதும் பெற்றது.

பரிசுத் தொகையும் வழங்கினார்கள். அதைக் கொண்டு மாணவர்களுக்கும் களப் பணிக்குத் தேவையான உபகரணங்களும் வாங்கி எங்கள் பணியைத் தொடர்ந்தோம். இதைத் தொடர்ந்து பல்துறை பணிக்காக சிறந்த பெண்மணி விருதும் 2018- இல் வழங்கியது மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகம். 

இவ்வளவு பணிகளில் உங்கள் அனுபவம்...

பதின்பருவ பிள்ளைகளை வைத்து அவர்களை வழிநடத்துவது எளிதல்ல. அதோடு பல முட்டுக்கட்டைகள் நிகழ்ச்சிகளை நடத்தும் பொழுது ஏற்படும். பாதுகாப்பு முதல் சரியான வல்லுநர்களைத் தேர்ந்தெடுப்பது வரை நிகழ்ச்சிகளை ஒருங்கிணைப்பது மிகுந்த சவாலான பணி. என்றாலும் மாணவர்கள் விழிப்புணர்வு பெறுவதும் அவர்களின் கல்வி சிறப்பதையும் கண்முன் காணும் பொழுது பட்ட சிரமங்கள் எல்லாம் மறந்து விடும்.

சர்வதேச விருது பெற்றிருக்கிறீர்களே...

ஆமாம். இதுவரையிலான எனது செயல்பாடுகள் குறித்து அறிந்த யுனிசெப் அமைப்போடு தொடர்புடைய அமைப்பு சர்வதேச சிறந்த செயல்பாடு கொண்ட பெண்மணி என்று என்னை அங்கீகரித்து 2021 ஜனவரி மாதத்தில் "இன்டர்நேஷனல் உமன் எக்ஸலன்ஸ்" விருது வழங்கினார்கள்.

இந்த ஊரடங்கு நாளில் என்ன செய்கிறீர்கள்?

கல்லூரி இணைய வழியில் நடைபெறுகிறது. நிறைய நேரம் இருக்கிறது. அதனால் மாடித் தோட்டம் அமைத்து அதிலே சிறந்த மகசூல் பெறுவதற்கான ஆராய்ச்சியையும் செய்து வருகிறேன். செய்வதற்கு நிறைய வேலை இருக்கிறது. பெண் முனைந்துவிட்டால் முடியாதது என்ன இருக்கிறது?

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com