தோல்வி  பாதித்தது!

ரியோ ஒலிம்பிக்ஸில் வெள்ளி, டோக்கியோ ஒலிம்பிக்ஸில் வெண்கலம் என அடுத்தடுத்து இருமுறை பதக்கம் பெற்றமுதல் இந்திய வீராங்கனை என்ற சிறப்பைப் பெற்ற பாட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து
தோல்வி  பாதித்தது!


ரியோ ஒலிம்பிக்ஸில் வெள்ளி, டோக்கியோ ஒலிம்பிக்ஸில் வெண்கலம் என அடுத்தடுத்து இருமுறை பதக்கம் பெற்றமுதல் இந்திய வீராங்கனை என்ற சிறப்பைப் பெற்ற பாட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து, தான் எதிர்பார்த்த வெற்றி கிடைக்காமல் போனது குறித்து வருந்தியபோது. அவரது பயிற்சியாளர் சொன்னாராம் வெறுங்கையுடன் நாடு திரும்புவதை விட வெண்கல பதக்கமாவது கிடைத்ததே என்று சந்தோஷப்படு இது குறித்து சிந்து என்ன சொல்கிறார்?

""ரியோ ( 2016) ஒலிம்பிக்ஸின் போது வெள்ளி பதக்கம் கிடைத்த போதே. அடுத்த ஒலிம்பிக்ஸில் நிச்சயம் தங்கம் வெல்ல வேண்டுமென்று தீர்மானித்துக் கொண்டேன். அதற்கான கடுமையான பயிற்சிகளையும் மேற்கொண்டேன்.

எதிர்பார்க்கும் வெற்றி கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் டோக்கியோ ஒலிம்பிக்ஸில் களம் இறங்கி செமி பைனல் வரை முன்னேறினேன். ஆனால், எதிர்பாராத விதமாக தோல்வியை சந்தித்தது என்னை மிகவும் பாதித்தது. தங்கம் பெறுவதற்கான வாய்ப்பை இழந்ததற்காக வருத்தப்படுவதா வெண்கல பதக்கத்தைப் பெற மற்றொரு வாய்ப்பு கிடைத்திருப்பது குறித்து சந்தோஷப் படுவதா? என்ற குழப்பம் மனதில் எழுந்தது.

ஒலிம்பிக்ஸில் தங்கம் வெல்லுவது அத்தனை சுலபமல்ல. ஒவ்வொரு விளையாட்டு வீரருக்குமே அது ஒரு கனவு. என்னுடைய பயிற்சியாளர் என்னை தைரியபடுத்தி அடுத்த போட்டியில் ஆடும்படி உற்சாகப்படுத்தினார். வெறுங்கையுடன் நாடு திரும்புவதைவிட, ஒரு பதக்கம் கிடைப்பதற்குரிய வாய்ப்பு காத்திருக்கிறது. வாய்ப்பை நழுவவிடாதே என்று அறிவுறுத்தினார். தோல்வியை சந்தித்தப் பின் உடனடியாக மீண்டுமொரு போட்டியில் ஆடுவது சிரமம் என்றாலும், பயிற்சியாளரின் வார்த்தைகள் என் மனதில் ஆழமாக பதிந்தது. மனதை திடப் படுத்திக் கொண்டேன். முடிவு எப்படியிருந்தாலும் நம்முடைய நாட்டிற்காக ஆட வேண்டும் என்ற எண்ணத்துடன் போட்டியை எதிர் கொண்டேன். வெண்கல பதக்கம் பெற்றேன்.

ஒலிம்பிக்ஸ் போட்டியில் இருமுறை பதக்கம் பெற்ற முதல் இந்திய வீராங்கனை என்ற சிறப்பைப் பெற்றிருந்தாலும், தற்போது கிடைத்த பதக்கத்தின் மூலம் தோல்வியை மறப்பதென தீர்மானித்தேன். கிடைத்த பதக்கங்கள் வித்தியாசமானவை என்றாலும் இதுவும் ஒருவகையான அனுபவம்தான். அடுத்து பாரிஸில் நடக்கவுள்ள ஒலிம்பிக்ஸில் நிச்சயம் உங்களுக்கு தங்கம் கிடைக்க வாய்ப்பிருக்கிறது என்று என் மீது அக்கறை கொண்டவர்கள் வாழ்த்துகின்றனர். அந்த வார்த்தைகள் எனக்கு ஆறுதலாக இருந்தாலும், தற்போதைய சூழ்நிலையில் கிடைத்திருக்கும் வெற்றியை மகிழ்ச்சியோடு கொண்டாட தீர்மானித்துள்ளேன். இந்த முறை டோக்கியோ ஒலிம்பிக்ஸில் விளையாட்டு வீரர்கள் அனைவருமே பங்கேற்றதே உலகளவில் ஒரு வித்தியாசமான சூழல்தான். கடந்த ஆண்டு நடக்க வேண்டிய ஒலிம்பிக்ஸ், கரோனா, ஊரடங்கு போன்ற காரணங்களால் தள்ளி வைக்கப்பட்டது. இந்த ஆண்டும் நடக்குமோ நடக்காதோ என்று தினமும் ஒரு அறிவிப்பு வந்தது விளையாட்டு வீரர்களுக்கு அதிர்ச்சியாக இருந்தது. இந்த இடைவெளியை நான் முறையாக பயன்படுத்திக் கொண்டேன். தொடர்ந்து பயிற்சியில் ஈடுபட்டிருந்தேன். டோக்கியோ போய் இறங்கிய பிறகே போட்டிகள் நடக்குமென்பது உறுதியானது.

2019- ஆம் ஆண்டு நான் உலக சாம்பியன் தகுதி பெற்றபோது, என்னுடைய வாழ்க்கையை படமாக்க விரும்புவதாக தயாரிப்பாளர் சோனு சூட் அறிவித்தார். தற்போது மேலும் ஒரு பதக்கம் பெற்றுள்ளேன். இதுவே என்னுடைய வாழ்க்கைக்கு முடிவல்ல. தொடர்ந்து பல ஆண்டுகள் விளையாட தீர்மானித்துள்ளேன். பதக்கங்கள் வாங்கி குவிப்பேன்'' என்று நம்பிக்கையோடு கூறுகிறார் சிந்து.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com