குறள்வழி நடப்போம்!

ஈறடியால் உலகத்தை அளந்த திருவள்ளுவரின் கருத்துகளை கிராமங்கள் தோறும் சென்று இளம்பிஞ்சுகளின் மனதில் பதிவு செய்து வரும் புதுமுயற்சியில் இறங்கியுள்ளனர்  வள்ளுவர் கல்லூரியின் மாணவர்கள்.
குறள்வழி நடப்போம்!

ஈறடியால் உலகத்தை அளந்த திருவள்ளுவரின் கருத்துகளை கிராமங்கள் தோறும் சென்று இளம்பிஞ்சுகளின் மனதில்  பதிவு செய்து வரும் புது முயற்சியில் இறங்கியுள்ளனர் கரூர் மாவட்டத்தில் உள்ள வள்ளுவர் கல்லூரியின் மாணவர்கள். 

இக்கல்லூரி, வள்ளுவரின் பெயரால் இயங்குவதாலோ என்னவோ,  அதிக குறள்கள் ஒப்புவிக்கும் மாணவர்களுக்கு மூன்றாண்டுகளும் இலவசமாக பயிலும் திட்டத்தை கடந்த ஆண்டு முதல் அறிவித்துள்ளது கல்லூரி நிர்வாகம். அதேபோன்று இலவச படிப்புக்கு தேர்ந்தெடுக்கப்படும் மாணவர்களுக்கு முதலாம் ஆண்டு முதலே தமிழ்நாடு நடத்தும் அரசு தேர்வாணைய தேர்வுக்கான பயிற்சியையும்  இலவசமாக வழங்கி வருகின்றனர். இதற்காக  வள்ளுவர் குரல் குடும்பம்(வாய்ஸ் ஆஃப் வள்ளுவர் ஃபேமிலி) என்கிற அமைப்பு ஏற்படுத்தியுள்ளனர். 

இவர்களுக்கு, தமிழ் முதுகலை பயின்று தமிழ்நாடு குடிமைப்பணித் தேர்வை தமிழிலே எழுதி வெற்றிபெற்று ஒடிசா மாநில தலைமைச் செயலாளராக பணியாற்றி ஓய்வுபெற்ற பாலகிருஷ்ணன் மற்றும் ஐஆர்எஸ் அதிகாரியாக பணியாற்றி ஓய்வு பெற்ற ராஜேந்திரன் ஆகியோர் பயிற்சி வகுப்புகள்  நடத்தி வருகின்றனர்.  

மேலும், இக்கல்லூரி தொடங்கிய நாள் முதல் கல்லூரியைச் சுற்றியுள்ள மலைக்கோவிலூர், தென்னிலை உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராமங்களில் செயல்படும் அரசு பள்ளிகள், அரசு உதவிபெறும் தொடக்கப்பள்ளிகள், நடுநிலைப்பள்ளிகள், மேல் நிலைப்பள்ளிகளில் கல்வி கற்கும் மாணவர்களிடம் சேமிக்கும் பழக்கத்தை உருவாக்கி, அதன்மூலம் அவர்களின் எதிர்கால படிப்புக்கு குடும்பத்தை சாராமல் இருக்கும் வகையில் கல்லூரி சார்பிலே வங்கியில் சேமிப்புக்கணக்கு உருவாக்கி தருகிறார்கள்.  இதன்மூலம் இதுவரை சுமார், 2300 மாணாக்கர்கள் ரூ.30 லட்சம் வரை சேமித்துள்ளார்கள் என்பது இத்திட்டத்தின் சிறப்பு. 

அதேபோன்று,  தங்களது கல்லூரி மாணவர்களுக்கும், அரசு பள்ளி மாணவர்களுக்கும் இலவசமாக 5 கோழிக்குஞ்சுகளை வழங்கி, அவற்றை நன்கு வளர்த்த பின், அதற்கான சந்தையை கல்லூரி வளாகத்திலேயே ஏற்படுத்திக் கொடுத்து அவர்களின் பொருளாதாரத்தையும் உயர்த்தி வருகிறனர்.

இந்நிலையில், தற்போது மேலும் ஒரு முயற்சியாக கிராமங்கள்தோறும் சென்று, குறள் வழியில் இளைய தலைமுறையினரின் எதிர்கால சமுதாயத்தை உருவாக்கும் முயற்சியிலும் இறங்கியுள்ளனர். இதற்காக "குறள் வழி நடப்போம்' என்ற  அமைப்பை தொடங்கி, 50 மாணாக்கர்கள் கொண்ட குழுவையும் ஏற்படுத்தியுள்ளனர்.

இதுதொடர்பாக குழுவின் தலைவியும், கல்லூரியின் தமிழ் இளங்கலை வகுப்பின் மூன்றாமாண்டு பயிலும் மாணவியுமான வைஷ்ணவ தேவி கூறியதாவது:

""நாகரீகம் என்ற பெயரில் மனித சமுதாயம் அழிவை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. அதிலும் இளைய தலைமுறையினர் பலரும் இளம் வயதிலேயே போதை பழக்கத்துக்கு  அடிமையாகி மீள முடியாமல் முடிவில் தற்கொலை செய்யும் நிகழ்வுகளும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகின்றன.

இப்படி கூடா சகவாசத்தினால்,  கொடூர எண்ணங்கள் இளம்பிஞ்சுகளைப் பற்றிக்கொள்ளாமல் இருக்க,  சிறுவயதிலேயே  குறள்கள் மூலம் நல்லெண்ணங்களை விதைத்து,  அறிவார்ந்த இளைய தலைமுறையினரை உருவாக்குவதே குறள்வழி நடப்போம் திட்டத்தின் நோக்கம். 

தற்போது கரோனா தொற்றால் கல்லூரிகளுக்குச் செல்லாமல் வீட்டில் இருந்தே பாடம் கற்று வருவதால், சனி, ஞாயிறு இரு தினங்களும் இரு கிராமங்களுக்குச் சென்று அங்குள்ள அரசு பள்ளியில் பயிலும் 4-ஆம் வகுப்பு முதல் 8-ஆம் வகுப்பு வரையிலான மாணவ, மாணவிகளை ஒருங்கிணைத்து, கிராமங்களில் இருக்கும் கோயில்கள் முன்போ, சாவடிகள் முன்போ குறள் பயிற்சி வகுப்பு எடுக்கிறோம். எங்கள் குழுவைச் சேர்ந்த 50 பேரும், சனி, ஞாயிறு இருதினங்களில் மட்டும் சுமார் 750 பேருக்கு குறள் வகுப்பு எடுக்கிறோம்.

இந்த வகுப்பில் குறளை கூறி, அதற்கான விளக்கத்தையும் கூறி, குறளை பிழையின்றி கூறுவோருக்கு பென்சில், பேனா பரிசாக வழங்குகிறோம். 

133 அதிகாரத்திலும் உள்ள தேர்ந்தெடுத்த குறள்கள் மூலம்  மேற்கொள்காட்டி இளம்தளிர்கள் முன்னேற்றமடைய அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதோடு, தேர்வும் வைக்கிறோம். நல்ல மதிப்பெண்கள் எடுப்பவர்களுக்கு கல்லூரி சார்பில் வழங்கப்படும் அன்பளிப்புகளையும் கொடுக்கிறோம். இதனால் மாணவர்கள் ஆர்வத்துடன் கற்க முன் வருகிறார்கள். இது ஒரு சிறிய முயற்சியாக இருந்தாலும் எதிர்காலம் நல்ல சமுதாயமாக மாறும் என்பதில் எங்களுக்கு எந்தவித ஐயப்பாடும் இல்லை. 

அதிக குறள்கள் தெரிந்தால் இலவச கல்வியைக் கொடுத்து,  தங்குமிடத்தையும் கொடுக்கும் கல்லூரிக்கு நாங்கள் காட்டும் நன்றிக்கடன் மட்டுமல்ல, இளைய சமுதாயத்தை வள்ளுவன் வழியில் உருவாக்குகிறோம் என்கிற மன திருப்தியும் இதில் கிடைக்கிறது. 

ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாதது என்பது போல சிறு வயதிலேயே அவர்கள் குறள் வழி நடக்கும்போது, அவர்கள் மட்டுமல்லாது, அவர்களை சார்ந்த சமுதாயமும்  அறிவார்ந்த சமுதாயமாக மாறிவிடும்'' என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com