தூங்கா நகரத்து மிஸ் தமிழ்நாடு

புதுதில்லி ஆக்ராவில் உள்ள ரெட் ட்ரீட் ஓட்டலில் ஸ்டார் லைஃப்' எனும் அமைப்பு சார்பில் மிஸ்டர் இந்தியா' மற்றும் மிஸ் இந்தியா' 2020 -2021 ஆணழகன், அழகிப் போட்டிகள் ஆகஸ்ட் முதல் வாரத்தில் நடைபெற்றன.
தூங்கா நகரத்து மிஸ் தமிழ்நாடு

புதுதில்லி ஆக்ராவில் உள்ள ரெட் ட்ரீட் ஓட்டலில் ஸ்டார் லைஃப்' எனும் அமைப்பு சார்பில் மிஸ்டர் இந்தியா' மற்றும் மிஸ் இந்தியா' 2020 -2021 ஆணழகன், அழகிப் போட்டிகள் ஆகஸ்ட் முதல் வாரத்தில் நடைபெற்றன. மிஸ் இந்தியா பிரிவில் தமிழ்நாடு, கர்நாடகம், ஆந்திரம், கேரளம், தில்லி உள்ளிட்ட நாடு முழுவதும் இருந்து 30 பெண்கள் பங்கேற்றனர்.

தமிழகம் சார்பில் மதுரை புதுதாமரைப்பட்டியைச் சேர்ந்த கல்லூரி மாணவி மணிகா(22) பங்கேற்றார். ஒரு வாரம் நடைபெற்ற அழகிப் போட்டியில் முதல் கட்டமாக சுய மதிப்பீடு, கேள்வி பதில், தனித் திறமைகளை வெளிப்படுத்துதல், கான்செப்ட் போட்டோஷூட் உள்ளிட்ட பிரிவு போட்டிகளில் மணிகா சிறப்பாக செயல்பட்டு இறுதி சுற்றுக்கு தகுதி பெற்றார். ஆகஸ்ட் 5 -ஆம் தேதி நடைபெற்ற இறுதிச் சுற்றில் காஸ்டியூம் டிசைனர் வழங்கிய ஆடைகளை அணிந்து (கேட்வாக்) நடந்து சென்றும், கலாசார ஆடைகளில் மணிகா பார்வையாளர்களை வெகுவாக கவரும் வகையில் அசத்தினார். எனினும், அவருக்கு 4-ஆம் இடமே கிடைத்தது. இருப்பினும் இவரது சிறப்பான திறமைகளின் அடிப்படையில் "மிஸ் தமிழ்நாடு' பட்டம் வழங்கப்பட்டது. இது பற்றி மணிகா தனது அனுபவங்களை பகிர்ந்து கொள்கிறார்:

""மதுரை தனியார் பள்ளியில் பிளஸ் 2 வரை படித்து விட்டு, சென்னையில் உள்ள இந்துஸ்தான் பல்கலைக்கழகத்தில் பிடெக் தகவல் தொழில்நுட்பம் படித்துள்ளேன். எனது தந்தை செந்தில்குமார், பொறியியல் பட்டதாரி, தாய் மைதிலி செவிலியர். இருவரும் துபை நாட்டில் பணிபுரிந்து வருகின்றனர். நான் பிறந்து வளர்ந்து எல்லாம் மதுரையில்தான். தற்போது, புதுதாமரைப்பட்டியில் வசித்து வருகிறோம். எனக்கு ஒரு தங்கை விவித்தா. நானும், தங்கையும் தாத்தா குலசேகரன், பாட்டி நாராயணி ஆகியோரின் பராமரிப்பில் இருந்து வருகிறோம்.

எனக்கு நவீன உடைகள் அணிவது மிகவும் பிடிக்கும். நிறமாகவும், உயரமாக இருப்பதால், நவீன உடை அணிந்து செல்லும்போது, பலரும் என்னை வடமாநிலத்தவரா என்றும், மாடலிங் செய்கிறாயா என்றும் கேட்டனர். இதனால் மாடலிங் மீது எனக்கு ஆர்வம் ஏற்பட்டது. கடந்த ஆண்டுதான் மாடலிங் செய்ய முடிவு செய்தேன்.

2020- ஆம் ஆண்டு "மிஸ் இந்தியா' போட்டி நடப்பது குறித்து தங்கை என்னிடம் கூறியது மட்டுமன்றி, எனது பெயரை பதிவும் செய்துவிட்டார்.

சென்னையில் கல்லூரி இறுதியாண்டு படித்து கொண்டிருந்தபோது, மிஸ் இந்தியா போட்டி நடத்தும் "ஸ்டார் லைஃப்' அமைப்பிடம் இருந்து, நான் முதல் கட்ட தேர்வுக்கு தேர்தெடுக்கப்பட்டுள்ளதாக கூறி அழைப்பு வந்தது. முதல்கட்ட தேர்வே, எனது மாடலிங் தொடக்கத்தின் முதல்படி.

அழகிப்போட்டி முதல்கட்டத் தேர்வில் பங்கேற்றது குறித்து பெற்றோரிடம் தெரிவிக்கவில்லை. தேர்வான பிறகே தகவலை தெரிவித்தேன்.

ஆக்ராவில் நடந்த போட்டியில் பங்கேற்றபோது பலரும் என்னை தமிழ்நாடா என்ற சந்தேகத்துடன் பார்த்தனர். ஒருவாரம் நடைபெற்ற போட்டிகளில் முதல் இரண்டு நாள்கள் யாரும் என்னை பெரிதாக கண்டுக் கொள்ளவில்லை. பின்னர் நான் சிறப்பாக செயல்பட்டதை பார்த்து, சக போட்டியாளர்கள் பேசத் தொடங்கினர். பங்கேற்றவர்களில் என்னை தவிர மற்ற அனைவரும் இந்த துறையில் நன்கு கற்றுத் தேர்ந்தவர்கள். நான் இத்துறையை பற்றி அறியவில்லை என்றாலும், சக போட்டியாளர்களுக்கு ஈடுகொடுக்க வேண்டும் என்பதில் மட்டும் உறுதியாக இருந்தேன். அதுவே என்னை இறுதிச் சுற்றுக்கு தகுதி பெறச் செய்தது. இறுதிச் சுற்றில் 4-ஆம் இடம் கிடைத்தபோது, திறமையின் அடிப்படையில் மிஸ் தமிழ்நாடாக தேர்வு செய்யப்பட்டேன். முதல் முறையாக பங்கேற்று தமிழ்நாட்டுக்கு பெருமையை சேர்க்கும் வாய்ப்பு கிடைத்தது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது.

அழகிப்பட்டம் மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த வர்ஷாவுக்கு வழங்கப்பட்டது. அவர் கடந்த 4 முறையாக இந்த பட்டத்துக்கு போட்டியிட்டுள்ளார் என்பது அவரது அர்ப்பணிப்பை காட்டியது. அதைவிட முக்கியமானது அப்பெண் வாய்ப்பேச இயலாத, காது கேளாதவர். இதன் பிறகே மிஸ் தமிழ்நாடு பட்டம் எவ்வளவு பெரியது என்பதை உணர்ந்தேன்.

மாடலிங் துறையில் வெற்றியாளராக திகழ வேண்டும் என்பதே ஆசை. வருங்காலங்களில் உலகளவில் எனக்கு கிடைக்கும் வாய்ப்பை வெற்றியாக மாற்றி தமிழகத்துக்கு பெருமை சேர்க்க வேண்டும்.

தென்தமிழக பெண்கள் மாடலிங்கை தேர்வு செய்ய நான் முன் உதாரணமாக இருக்க வேண்டும். தற்போது கரோனா காரணமாக போட்டிகள் நடைபெறுவதில் சிக்கல் உள்ளது. 2022- ஆம் ஆண்டு அடுத்தக் கட்ட போட்டிகளில் பங்கேற்க உள்ளேன்'' என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com