நாமசங்கீர்த்தனத்தால்  கிடைத்த வரவேற்பு!

நாமசங்கீர்த்தனத்தால்  கிடைத்த வரவேற்பு!

சிவஸ்ரீ ஸ்கந்த ப்ரசாத், நடனம், இசை, நாமசங்கீர்த்தன வித்துவான் என்று பன்முகக்கலைஞர். சில ஆண்டுகளாக தேர்ந்த ஓவியக்கலைஞராகவும் அவதாரம் எடுத்துள்ளார்.

சிவஸ்ரீ ஸ்கந்த ப்ரசாத், நடனம், இசை, நாமசங்கீர்த்தன வித்துவான் என்று பன்முகக்கலைஞர். சில ஆண்டுகளாக தேர்ந்த ஓவியக்கலைஞராகவும் அவதாரம் எடுத்துள்ளார். சாஸ்த்ரா பல்கலைக்கழகத்தில் தொழில்நுட்பம் பயின்ற என்ஜினீயர். சமூக வலைத்தளத்திலும் புகழ் பெற்றவர். இசைப் பாரம்பர்யம் மிக்க குடும்பத்தில் பிறந்தவர் என்றாலும் தனக்கென ஓர் இடத்தை கலை உலகில் தன் திறமையால் வளர்த்துக் கொண்டிருப்பவர். எளிமையும் இனிய சுபாவமும் இவரது அடையாளம். இணைய வழியில் நிகழ்ச்சிகள் வகுப்புகள் என்று சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருப்பவர், தன் அனுபவங்களை நம்மோடு பகிர்ந்து கொள்கிறார்:

நடனமும் பாட்டும் ஒரே நேரத்தில் கற்றுக் கொள்ள ஆரம்பித்தீர்களா?

ஆம். மூன்று வயதில் கற்றுக் கொள்ளத் தொடங்கினேன். நடனம் கிருஷ்ணகுமாரி நரேந்திரனிடமும், பாட்டு என் தந்தை மிருதங்க வித்துவான் ஸ்கந்த ப்ரசாத்திடமும் கற்றுக் கொள்ள ஆரம்பித்தேன். பின்னர், கலைமாமணி ரோஜா கண்ணனிடம் நடனமும், வித்துவான் ஏ.எஸ் முரளியிடம் பாட்டும் கற்றுக் கொண்டேன். என் தாத்தா கலைமாமணி சீர்காழி ஆர் ஜெயராமன், பாட்டி சாந்தி ஜெயராமன் இருவருமே வாய்ப்பாட்டுக் கலைஞர்கள். அப்பா மிருதங்க வித்துவான். அம்மாவின் பூர்வாசிரம தந்தையார் தென்னாங்கூர் ஹரிதாஸ் ஸ்வாமிகளுக்குப் பின் மடாதிபதியான நாமானந்த கிரி ஸ்வாமிகள். குடும்பத்தில் வீட்டில் இசை பிரிக்க முடியாத அங்கமாக இருப்பதால் இயல்பாகவே இசை எனக்குள்ளும் வந்துவிட்டது.

முதல் நடன நிகழ்ச்சி பற்றி...

கலைமாமணி ரோஜாகண்ணனின் வழிகாட்டுதலில் பத்து வயதில் அரங்கேற்றம். அரங்கேற்றம் நடந்த இடத்திலேயே நடன நிகழ்ச்சிக்கு அழைப்பு வந்தது. பிரம்மகான சபாவில் புத்தாண்டு அன்று நிகழ்ச்சி. அரங்கேற்றத்தின் பொழுதே அமெரிக்காவின் க்ளீவ்வேலன்ட் தியாகராஜ உத்சவத்திற்கு நடனம் ஆடுவதற்காக குமாரி கமலாவின் சகோதரர் என்னைத் தேர்வு செய்தார். அமெரிக்காவிலும் என் குருவோடு சென்று நடனம் ஆடினேன். அரங்கேற்றத்திலேயே நிகழ்ச்சிகளுக்கு அழைப்புகள் வந்தது தெய்வ அனுகிரகம் தானே. தொடர்ந்து இன்று வரை வாய்ப்புகளும் வருகின்றன.

இந்திய கலாசாரத் தொடர்பு கவுன்சில் (ஐ.சி.சி.ஆர்) மூலம் அரசின் சார்பில் கலைநிகழ்ச்சிகளில் இந்தியாவின் பிரதிநிதியாக உலக அரங்கில் நடனம் ஆடுவதற்கான வாய்ப்பு என்று தொடர்ந்து கொண்டிருக்கிறேன்.

நடனக் கலைஞராக வலம் வருபவர் இசைக் கச்சேரிகள் செய்வதிலும் புகழ் பெற்றது எப்படி?

ஹனுமந்தபுரத்தில் ராகவேந்திரசுவாமி சந்நிதியில் அவருடைய ஆராதனைக்காகப் பாடினேன். அது எனக்குப் பாடகியாக முதல் அனுபவம். அதிலிருந்து வாய்ப்புகள் வந்து கொண்டே இருக்கின்றன. கடந்த ஐந்து ஆண்டுகளாக கச்சேரிகள் செய்து வருகிறேன். நாம சங்கீர்த்தன நிகழ்ச்சிகள் வருடம் முழுவதும் நடந்து வருகின்றன. நாமசங்கீர்த்தனத்தில் மக்கள் மத்தியில் கிடைக்கும் அன்பும் வரவேற்பும் சொல்லிமுடியாது.

பொதுமுடக்கக் காலத்தில் எப்படி செயல்படுகிறீர்கள்?

இறைவனின் கருணையைப் பாருங்கள். இந்த கரோனா பரவலுக்கு முன் ஜனவரியில் ஒரு நாள் மயிலாப்பூரில் மார்கழி மாத வீதி பஜனையில் கலந்து கொண்டேன். அதை யார் வீடியோ எடுத்து சமூகவலைத்தளங்களில் பரப்பினார்களோ தெரியவில்லை. உலகம் முழுவதும் ஒரே நாளில் பிரபலமாகிவிட்டேன். வெளிநாடுகளில் இருப்போர் எங்களுக்கும் உங்கள் கச்சேரிகளைக் கேட்கும் வாய்ப்பு வேண்டுமே இணையத்தில் ஆன்லைன் கச்சேரி செய்யுங்களேன் என்று கேட்டார்கள். அதற்குப் பலர் ஏற்பாடும் செய்தார்கள். இணையத்தில் கச்சேரி செய்ய ஆரம்பித்த சில நாட்களில் பொதுமுடக்கம் வந்துவிட்டது. எனக்கு இறைவன் வழிகாட்டி ஆற்றுப் படுத்தியதாக உணர்ந்தேன்.

2020 முழுவதும் ஆன்லைன் கச்சேரிகள் தொடர்ந்து இருந்தன. யூடியூபில் நேரடி நிகழ்ச்சிகள் நடத்தியது சான்றோர்கள் முதல் பாமர மக்கள் வரை அனைவரிடமும் என்னைக் கொண்டு சேர்த்திருக்கிறது. தங்கள் விருப்பங்களை அவர்கள் என்னிடம் நேரடியாகத் தெரியப்படுத்துவதற்கும் ரசிகர்கள் விருப்பத்தை ஏற்று அவர்கள் விரும்புவதைப் பாடுவதும் என்று இந்த அனுபவம் சிறப்பானதாக இருக்கிறது. சமூக வலைத்தளங்களில் வாய்ப்புகளும் ரசிகர்களும் ஏராளம். ரசிகர்களைச் சென்றடைவதும் எளிதாகிறது. தமிழ் பாடல்கள், காவடி சிந்து, மராத்திய அபாங் போன்றவற்றை மக்கள் அதிகம் விரும்பிக் கேட்கிறார்கள்.

சிவாலயம் பற்றி...

இணைய வழியில் இயங்கும் என்னுடைய பள்ளி. இது இசை நடனம் இரண்டும் கற்றுக் கொடுக்கிறேன். மாணவர்கள் விரும்பி வருகிறார்கள். அன்றாடம் இரண்டு கலைகளுக்குமான வகுப்புகள் நடக்கின்றன. நேரடியாக நானே அவர்களுக்குக் கற்றுக் கொடுக்கிறேன். உரையாடுகிறேன். அனுபவங்களைப் பகிர்ந்து கொள்கிறேன். இந்தப் பள்ளிக்கு அப்பா துணையாக இருக்கிறார். நான் படித்த சாஸ்த்ரா பல்கலைக்கழகம் எனக்கு வழிகாட்டியாயிருக்கிறார்கள். சிவாலயம் வெற்றிகரமாக செயல்படுகிறது. அதிக நேரம் செலவிட வேண்டிய அவசியம் இருக்கிறது என்றாலும் மனநிறைவும் இருக்கிறது.

ஓவியக்கலையில் ஈடுபாடு பற்றி...

மன மகிழ்ச்சிக்காக எனக்குத் தெரிந்த வகையில் ஓவியங்கள் வரைவதுண்டு. வேலைப்பளுவோ வேறு எந்த அழுத்தமானாலும் ஓவியம் வரையத் தொடங்கிவிட்டால் மறந்து விடும். மனம் ஒருமுகப்பட்டு தியானம் போல அமைந்து விடும். தெய்வ வடிவங்கள் வரைவதில் மிகுந்த ஆர்வம் உண்டு. ஒவ்வொரு படம் வரையும் பொழுதும் இறைவன் எழுந்தருள்வதை தரிசிப்பது போல தெய்வீக அனுபவமாக இருக்கும். நிறைய விதங்களில் காஞ்சி மகாஸ்வாமிகளை வரைந்து வருகிறேன். பலரும் தங்கள் பூஜை அறையில் வைத்துக் கொள்வதற்காக வரைந்து தரச் சொல்லிக் கேட்கிறார்கள். அதற்காகவும் வரைந்து தருகிறேன். முத்துஸ்வாமி தீக்ஷிதர் ஓவியம் கூட வரைந்திருக்கிறேன். கடந்த நான்கு ஆண்டுகளில் அம்பாள், பெருமாள் என்று தெய்வ வடிவங்கள் வரைந்து கொண்டே இருக்கிறேன். சமூக வலைத்தளத்தில் என் படங்கள் பரவத் தொடங்கிய பிறகு தேடி வந்து படங்கள் வரைந்து தருவதற்குக் கேட்கிறார்கள்.

யுவ சம்மான் விருது பற்றி...

இளம் கலைஞர்களுக்கு வழங்கும் விருது. எனக்கும் வழங்கியிருக்கிறார்கள். தொடர்ந்து உள்ளூர் வெளியூர் வெளிநாடுகளில் என்று நிகழ்ச்சிகள் வழங்கி வருவது, நாமசங்கீர்த்தன நிகழ்ச்சிகளை தொய்வின்றி ஏற்று நடத்துவது என்று என் செயல்பாடுகள் அடிப்படையில் இந்த விருதுக்கு என்னைத் தேர்வு செய்திருப்பதாகச் சொல்கிறார்கள். இறைவன் அருள் என்று ஏற்றுக் கொள்கிறேன். இன்னும் இதற்காக என்னைத் தகுதி படுத்திக்கொள்ள உழைக்க வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com