கற்றல்... வளர்ச்சி... தீர்வு..!

சாமான்ய மனிதர்களுக்கே மற்றொருவரின் உதவி தேவையெனில் சற்றே வளர்ச்சி குறைபாடுடைய குழந்தைகள் இன்னும் அதிக கவனம் பெற வேண்டியவர்கள்.
கற்றல்... வளர்ச்சி... தீர்வு..!


சாமான்ய மனிதர்களுக்கே மற்றொருவரின் உதவி தேவையெனில் சற்றே வளர்ச்சி குறைபாடுடைய குழந்தைகள் இன்னும் அதிக கவனம் பெற வேண்டியவர்கள். அவர்களின் மகிழ்ச்சிக்கான பாதையை காட்டுவதே தன்னுடைய இலக்கு என்று பயணித்துக் கொண்டிருப்பவர் வசுதா. சிறப்புக் குழந்தைகள், கற்றல் குறைபாடுள்ள குழந்தைகள் மற்றும் வளர்ச்சி பாதிப்பு உள்ள குழந்தைகளுக்கு வழிகாட்டியாக வி.எக்ஸல் கல்வி அறக்கட்டளையை நிறுவி அதன் வழியே  இருபது ஆண்டுகளாக வழிகாட்டி வருகிறவர்தான் வசுதா. தன்னுடைய சேவைக்காக பல விருதுகள் பெற்றவர். அவரின் 
அனுபவங்களைப் பகிர்கிறார்.

""மும்பையில் பிறந்து வளர்ந்தேன். பத்திரிகை துறையில் படித்து மும்பையில் பத்திரிகையாளராகப் பணியில் இருந்தேன்.  திருமணம். அதைத்தொடர்ந்து அமெரிக்காவில் வாசம். அங்கு உளவியலில்  மேற்கல்வியைத் தொடர்ந்தேன். சிறப்புக் குழந்தைகள் தொடர்பான ஆராய்ச்சியில் ஈடுபட்டு முனைவர் பட்டம் பெற்றேன். கடந்த இருபது ஆண்டுகளாக இங்கே சிறப்புப் பள்ளியை நடத்தி வருகிறேன்.

வெளிநாட்டில் வாழ்ந்துவிட்டு இந்தியாவில் பள்ளியைத் தொடங்கியது பற்றி? 
வெளிநாட்டில் வசதிகள் அதிகம் இருக்கலாம். வாய்ப்புகளும் கிடைக்கலாம். என்றாலும், இந்தியாதான் என் வீடு. என் தாய் மண். இங்கே என் கவனம் நிலைபெறுவது தானே சரியாக இருக்கும். எனது கல்வியும் உழைப்பும் வாய்ப்பு தேவையான என்னுடைய மக்களுக்கு வழங்குவது தானே நியாயம். ஆராய்ச்சிக்காக அமெரிக்கா நியூஜெர்ஸியில் ரட்கர்ஸ் பல்கலைக்கழகத்தில் காரணம் கேட்ட பொழுதும்," என் கல்வியின் பயன் இந்தியாவிற்கே சேர வேண்டும்" என்று எழுத்தில் பதில் சொல்லியிருக்கிறேன்.

மன வளர்ச்சிக் குறைபாடுள்ள குழந்தைகளை சிகிச்சை மூலம் சரி செய்துவிட முடியுமா?

ஆட்டிசம் பாதிப்பு உள்ள குழந்தைகள், உடல் மன ஒருங்கிணைப்பில் குறைபாடுள்ள குழந்தைகள், கற்றல் குறைபாடுள்ள குழந்தைகள், மெதுவாகக் கற்கும் குழந்தைகள் என்று பல நிலைகளில் இருக்கிறார்கள். மெதுவாகக் கற்கும் குழந்தைகளுக்கு சிறு சிறு பயிற்சிகளில் அதனை சரி செய்து விடலாம். கற்றல் குறைபாடு என்பது வேறு. அவர்களுக்கு எழுதுவது படிப்பது என்று எல்லாவற்றிலும் சிரமங்கள் இருக்கும். ஆனாலும் புரிந்து கொள்ளும் தன்மை அதிகம். இவர்கள் நம்மை விடவும் சிறந்த அறிவாளிகள். நாம் ஒன்றைக் கற்றுக் கொள்ள பலமுறை படிக்க வேண்டியிருந்தால் அவர்கள் ஒரே முறை பார்த்த மாத்திரத்தில் அதனைப் புரிந்து கொள்வார்கள். சிறுவயதிலேயே அவர்களை அடையாளம் கண்டு அவர்களின் தேவைகளுக்கேற்ப பயிற்சிகளை நாம் வழங்க வேண்டும். அப்படி செய்யும் பட்சத்தில் கற்றல் குறைபாடுகளை சரி செய்து அவர்களை சாதாரண பள்ளிக்கூடங்களில் சேர்ந்து படிப்பதற்கு ஏற்ற வகையில் தயார் செய்து விட முடியும். அப்படி பல நூறு குழந்தைகள் எங்களிடம் தொடர்ந்து பயிற்சி பெற்று  தங்கள் பள்ளிப் படிப்பை முடித்திருக்கிறார்கள். தொழில் கல்வி பயின்று தொழில் செய்து சம்பாதிக்கிறார்கள். நல்ல முறையில் திருமணம் செய்து கொண்டவர்களும் இருக்கிறார்கள். 

ஆட்டிசம் போல சில குறைபாடுகளை நம்மால் நிவர்த்தி செய்ய முடியாமல் போகலாம். அவர்களுக்கு, பிறர் உதவி இல்லாமல் தங்களைத் தாங்களே கவனித்துக் கொள்வதற்கான பயிற்சி தந்து சுயமாக செயல்பட வைப்போம். உடல் மனம் இரண்டிற்குமான ஒருங்கிணைப்பில் இருக்கும் பிரச்னைகளை நாம் சரி செய்ய முயல வேண்டும்.  

பள்ளியைத் தொடங்கியது பற்றி...

சவுதி அரேபியாவில் ஆசிரியப்பணி மற்றும் அமெரிக்காவில் கற்றல் தொடர்பான ஆராய்ச்சிப் படிப்பு என்று இருந்ததால், இந்தியாவில் முதலில் 2001- இல் சென்னையில் பள்ளியைத் தொடங்கினோம். ஆட்டிசம் பாதித்த குழந்தைகளுக்குப் பயிற்சி அளிக்கும் ஆசிரியர்களை உருவாக்குவதில் கவனம் செலுத்தினேன். அதனால் எங்கள் பள்ளி, ஆசிரியர் பயிற்சி பள்ளியாகவே முதலில் இருந்தது. பின்னர், படிப்படியாக குழந்தைகளுக்கான பயிற்சி வகுப்புகள், அவர்களுக்கான உடல் மன சிகிச்சை பிரிவுகள் கல்வி மேம்பாட்டு பணிகள், தொழில் பயிற்சி, அவர்களை சமூகத்திற்கு மனதளவில் தயார் செய்வதற்கான ஆலோசனை பிரிவு என்று விரிவு படுத்தினோம். குழந்தைகள் பயனடைய வேண்டும் என்பது மட்டுமே நோக்கம். எங்களுக்கு உறுதுணையாக சிருங்கேரி சாரதா பீடம் இருக்கிறது. இன்னும் பல நல்ல உள்ளங்கள், பெரு நிறுவனங்களின் உதவி என்று இருபது ஆண்டுகளாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறோம்.

உங்கள் பள்ளியின் தனித்துவம் என்ன?

பதினோரு குழந்தைகளுடன் தொடங்கிய பள்ளி இன்றைக்கு ஏறத்தாழ முப்பத்தைந்தாயிரம் பேரின் வாழ்வில் மாற்றத்தைக் கொண்டு வந்திருக்கிறது என்பதே பள்ளியின் அர்ப்பணிப்பு உணர்வுக்கு சான்று. எங்களோடு இருக்கும் அனைவருமே வளர்ச்சிக் குறைபாடுள்ள குழந்தைகள் மற்றும் அவர்களின் பெற்றோரின் உணர்வுகளைப் புரிந்து கொண்டு அதற்கேற்ப தேவையான அனைத்துப் பயிற்சி வகுப்புகள் மற்றும் சிகிச்சை முறைகளை ஒரே இடத்தில் வழங்குகிறோம் என்பது தான். 

அதோடு கூட, சென்னையில் மட்டுமல்லாது திருநெல்வேலி, ஈரோடு, பொள்ளாச்சி, ஸ்ரீரங்கம் என்று பல நகரங்களில் இயங்கி வருகிறது. கும்பகோணத்தில் தொடங்குவதற்கான பூர்வாங்க பணிகளும் நடந்து வருகின்றன. மகாராஷ்டிரத்தில் சோலாப்பூர் மற்றும் நாசிக்கில் எங்கள் சேவையைத் தொடங்கி இருக்கிறோம். இத்தகைய குழந்தைகளை வைத்திருக்கும் பெற்றோர் அவர்களுக்கான சேவைகளுக்காக நீண்ட பயணங்களை மேற்கொள்ளாமல் அவர்கள் இருக்கும் பகுதிகளிலேயே சேவை வழங்க வேண்டும் என்பதே எங்கள் இலக்கு.

தொழில் பயிற்சி யாருக்கு எப்படி வழங்குகிறீர்கள்? 

கற்றல் குறைபாடுள்ள குழந்தைகளுக்கு அதனை நிவர்த்தி செய்து ஏதேனும் ஒரு கைவினைப் பொருட்கள் செய்வதற்கோ அல்லது சமையல் செய்வது போன்ற பயிற்சிகளை வழங்குகிறோம். சில இடங்களில் எங்களைப் போன்ற பிற தொண்டு நிறுவனங்களோடு சேர்ந்து இந்தப் பயிற்சியை கொடுக்கிறோம். அப்படி அவர்கள் உற்பத்தி செய்யும் பொருட்களை சந்தைப் படுத்துவதற்கும் ஏற்பாடுகள் செய்கிறோம். 

 சமீபமாக, முகக்கவசம் அணிவது கட்டாயமாக இருப்பதால் அதற்கான பயிற்சி தந்தோம். அவர்கள் தைத்துத் தரும் முகக்கவசங்களை நாங்களே விற்பனை செய்வதற்கும் ஏற்பாடுகள் செய்திருக்கிறோம்.  மயிலாப்பூர் லஸ் சாலையில் டிபன் டைம் நடமாடும் உணவு வண்டி எங்கள் மாணவர்களால் நடத்தப்படுகிறது. இப்படி அவர்கள் தங்கள் சொந்தக்காலில் நிற்பதற்கும் உதவுகிறோம்.

தரங் இசை நிகழ்ச்சி பற்றி...

எங்கள் பள்ளியில் தொடர்ந்து இசை கேட்டபடியே இருக்கும். சிறப்புக் குழந்தைகளுக்கு இசை ஆர்வம் அறிவு இரண்டுமே அதிகம். அவர்களைக் கொண்டு இசை நிகழ்ச்சிகள் நடத்துகிறோம். ஆண்டுக்கு ஒரு முறை ஒரு கொண்டாட்டமாகவே இதனைச் செய்கிறோம். தேர்ந்த இசைக் கலைஞர்களைக் கொண்டும் அவர்களுக்கு இசையை வழங்குகிறோம். இசை மட்டுமல்ல நாடகங்கள் கூட எங்கள் மாணவர்கள் மிகச் சிறப்பாக நடத்துகிறார்கள்.

சிறப்புப் பள்ளியை நடத்துவதில் உள்ள சிரமங்கள்?

சிரமங்கள் அதிகம். முழுமையாக இந்தப் பணிக்கு அர்ப்பணிப்பு உணர்வோடு வரும் ஆசிரியர்களை கண்டறிய வேண்டும். பயிற்சிக்கான செலவுகளும் அதிகம். வரும் குழந்தைகளோ வறுமை நிலையில் இருக்கும் குடும்பங்களில் இருந்தே பெரும்பாலும் வருகிறார்கள். சில குடும்பங்களில் இந்தக் குழந்தைகளும் தாயும் கைவிடப்படுகிறார்கள். அப்படி யானவர்களிடம் நாம் கட்டணம் எதையும் எதிர்பார்க்க முடியாது அதற்காக அவர்களைக் கைவிடவும் முடியாது. அத்தகைய குழந்தைகளுக்கு அவர்களின் சிகிச்சை மற்றும் பயிற்சிக்காக உதவும் ஆதரவாளர்களை எங்களால் முடிந்த அளவுக்கு தேடிக் கண்டுபிடிக்கிறோம். இன்னும் நிறைய குழந்தைகளைக் காக்க நல்ல உள்ளங்கள் தேவைப்படுகிறார்கள்' என்றார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com