விமர்சனங்களே பாராட்டுகள்!

கனவுகள் இல்லாத மனிதர்கள் யாருமில்லை. தங்கள் கனவை மட்டும் நிறைவேற்றிக் கொள்வோர் வெற்றியாளர்கள் ஆகிறார்கள்.
விமர்சனங்களே பாராட்டுகள்!

கனவுகள் இல்லாத மனிதர்கள் யாருமில்லை. தங்கள் கனவை மட்டும் நிறைவேற்றிக் கொள்வோர் வெற்றியாளர்கள் ஆகிறார்கள். பிறரது கனவுகளும் மெய்யாகும்படியான செயல்களைச் செய்து சக மனிதர்களையும் உயர்வடையச் செய்வோர் சாதனையாளர் ஆகிறார்கள். அப்படியான சாதனைப் பெண்மணிதான் காயத்ரி. அவருக்குள் இருக்கும் நெருப்பே அவரை உயரத்திற்குக் கொண்டு போய் சேர்த்திருக்கிறது. கல்லூரிப் பேராசிரியராக, பதிப்பாளராக இலக்கிய உலகில் அறியப்படும் காயத்ரி என்ன சொல்கிறார்:

""உடுமலைப்பேட்டை அருகே கண்ணமநாயகனுர் என்ற கிராமத்தில் பிறந்து வளர்ந்தேன். உடுமலைப்பேட்டைக்குத் தான் படிப்புக்காக வரவேண்டியிருந்தது. சாதாரண நடுத்தரக் குடும்பம். அம்மா நிறைய புத்தகங்கள் படிக்கும் வழக்கம் உடையவர். அதனால் எங்களுக்கும் வாசிப்பு சிறு வயதிலேயே வந்துவிட்டது. ஆறாம் வகுப்புப் படிக்கும் பொழுதே ஷேக்ஸ்பியர் படிக்கும் அளவுக்கு அம்மா எங்களைத் தயார் செய்திருந்தார். 

டி பார்ம் எனும் மருந்தியல் படிப்பு படித்து முடித்தேன். திருமணம் குழந்தை என்று சராசரியாக இருந்த வாழ்க்கை. வேலை நிமித்தம் அசாம் குவாஹாத்தி செல்லும் நிலை. அங்கே இலக்கியம் படிக்க எனக்குள் எப்பொழுதும் இருந்த தாகம் ஆங்கில இலக்கியம் படிக்க தூண்டியது. இளங்கலை ஆங்கிலம் படித்து 
முடித்தேன். 

அங்கிருந்து, ஹைதராபாத் வந்தோம். அங்கே இரண்டு குழந்தைகளோடு குடும்பம் நன்றாகவே நடந்தது என்றாலும் எனக்குள் இருந்த மொழி ஆர்வம் பிரெஞ்சு மொழி படிக்கத் தூண்டியது. 

அதனையும் கற்றுக் கொண்டேன். அங்கிருந்து பணிநிமித்தம் சென்னை வந்து சேர்ந்தோம். பிரெஞ்சு கற்றுக் கொண்ட பிறகு அதிலே இன்னும் ஆழமாக இலக்கியம் படிக்க வேண்டும் என்ற எண்ணம் இருந்து கொண்டே இருந்தது. 

சென்னையில் பல்கலைக்கழகத்தில் பிரெஞ்சு படிக்க முடியும் ஆனால், பிள்ளைகள் சிறுவர்களாக இருந்ததால் படிக்க சில ஆண்டுகள் காத்திருக்க வேண்டியிருந்தது. பிள்ளைகள் வளர்ந்த உடன் பல்கலைக்கழகத்தில் எம்.ஏ பிரெஞ்சு படிக்க சேர்ந்தேன். என்னோடு படிக்கும் மாணவர்கள் எல்லாரும் என் பிள்ளைகள் போன்று இருந்தார்கள். படிப்பதற்கு வயது தடையில்லையே.. தொடர்ந்து எம்.பில் படித்து முடித்தேன். சென்னை ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் பிரெஞ்சு துறையில் பேராசிரியராக பணி கிடைத்தது.

கல்லூரி பேராசிரியராக ஆனது ...

எளிதாக என்று எதையும் சொல்லிவிட முடியாது. கிராமப்புறங்களில் நாம் பள்ளிப்படிப்பு கல்லூரி என்று படித்திருந் தாலும் நாலு வார்த்தை ஆங்கிலத்தில் பேச வராது. சரளமாகப் பேச முடியவில்லை என்பதாலேயே எதுவும் தெரியாதவர் என்பதைப் போல அலட்சியம் செய்வதை எதிர்கொண்டிருக்கின்றேன். மனதில் நிறைய கருத்துகள் இருக்கும். சிந்தனைகள் தோன்றும் ஆனாலும் அதை வெளிப்படுத்தத் தெரியாமல் திணறுவேன். 

அப்படியான சூழ்நிலையில் நான் படிக்கும் புத்தகங்களில் இருக்கும் சொற்கள், வாக்கிய அமைப்பு இவற்றை நோட்டில் எழுதி வைத்துக் கொண்டு திரும்ப திரும்பப் படித்துப் பார்ப்பேன். பேசும் பொழுது அந்த சொற்தொடர்களை அப்படியே பயன்படுத்துவேன். வெளி மாநிலங்களில் வசிக் கும் பொழுது ஆங்கிலம் ஹிந்தி போன்ற மொழிகள் அத்தியாவசியமாக இருக்கும். அப்படி பேசும் பொழுது நிறைய அவமானப்பட்டிருக்கிறேன்.

குழந்தைகள் பிறந்த பின் படிக்கும் ஆர்வத்தில் வகுப்புகளுக்குச் செல்வது, கல்லூரியில் சேர்ந்து படிப்பது என்று முடிவெடுக்கும் பொழுதெல்லாம் இந்த வயதில் இது தேவையா? என்ற கேள்வியை எழுப்பாதவர்களே கிடையாது. குடும்பம் குழந்தை என்று நிம்மதியாய் வாழ்வதை விட்டுவிட்டு ஏன் இப்படி கஷ்டப்பட வேண்டும்? என்ற கேள்விக்கு, இது என் விருப்பம், கற்றல் எனக்கு சுகம். அதற்கு இடையூறாக வருவன தான் எனக்குத் துன்பம் என்று பதில் சொல்லுவேன். பேராசிரியராக அமரும் வரை இந்தப் பேச்சுகள் இருந்து கொண்டே இருந்தன.

பதிப்பாளர் ஆனது எப்படி...

நான்கு ஆண்டுகளுக்கு முன் நானும் என் நண்பர்களும் புத்தகக் கண்காட்சிக்குப் போயிருந்தோம். அங்கே இருந்த சூழல், புத்தகங்கள் பற்றியெல்லாம் பேசும் பொழுது தோன்றிய எண்ணம் பதிப்பகமாக உருவெடுத்தது. நண்பர்  ராம்ஜியுடன் இணைந்து "ஸிரோ டிகிரி' என்ற பதிப்பகத்தைத் தொடங்கினேன். பதிப்பகத்தை நன்முறையில் கவனித்துக் கொள்ள என்னுடைய பேராசிரியர் பணியை விட்டுவிட்டேன். இப்பொழுது முழுநேர பதிப்பாளராக செயல் படுகிறேன்.

நீங்கள் பதிப்பித்திருக்கும் நூல்கள்...

இன்ன கருத்தியல் என்று இல்லாமல் தரமான இலக்கியப் படைப்புகள் வர வேண்டும் என்பதை மட்டுமே நோக்கமாகக் கொண்டு புத்தகங்களை தேர்ந்தெடுத்து வெளியிடுகிறோம். ஐந்து பிரிவுகளில் நாங்கள் புத்தகங்கள் வெளியிடுகிறோம். இலக்கியம் சார்ந்த புத்தகங்களே பெரும்பான்மை. விளையாட்டு, குழந்தைகளுக்கான புத்தகங்கள், துப்பறியும் கதைகள், திகில் கதைகள் போன்ற கற்பனை இலக்கியங்கள் என்று பல தளங்களில் இயங்குகிறோம்.

தமிழ், ஆங்கிலம் மட்டுமல்லாது மொழிபெயர்ப்பு நூல்களும் எங்கள் பதிப்பகத்தில் வெளியிடுகிறோம். இதுவரை, 300 நூல்களுக்கு மேல் பிரசுரித்திருக்கிறோம். 

புதிய முயற்சிகள்...

எங்கள் பதிப்பகம் வாயிலாக புதிய எழுத்தாளர்களை அடையாளம் காணவும் அவர்களுக்கு ஊக்கம் தரவும் விரும்பி இந்த ஆண்டு ஒரு நாவல் எழுதுவதற்கான போட்டியை ஏற்பாடு செய்தோம். அதிலே முதல் பரிசு பெறுபவருக்கு ஒரு லட்சம் ரூபாயும், இரண்டாம் பரிசுக்கு ஐம்பதாயிரம் ரூபாய், மூன்றாம் பரிசுக்கு இருபத்தைந்தாயிரம் ரூபாயும், இரண்டு ஆறுதல் பரிசுகளுக்கு தலா பத்தாயிரம் ரூபாயும் வழங்குகிறோம். மொத்தம் 81 புதிய நாவல்கள் வந்திருக்கின்றன. 

பெண்களுக்கு உங்கள் செய்தி...

எது செய்தாலும் அதை விமர்சிக்கவும் தடை சொல்லவும் ஒரு கூட்டம் நம்மைச் சுற்றி எப்பொழுதும் இருந்து கொண்டே இருக்கும். அதைப் பார்த்து பயந்து கொண்டிருந்தால் நம்முடைய ஆத்மார்த்த விருப்பங்களை நிறைவு செய்துகொள்ள முடியாது. துணிந்து செயல்பட்டால் வெற்றியை எட்டிப்பிடித்து விட்டால் விமர்சனங்கள் எல்லாம் பாராட்டுகளாக மாறிவிடும். தயக்கத்தை விடுங்கள் உங்களுக்கான உலகம் திறந்து கொள்ளும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com